Search This Blog

Showing posts with label nigazhvugal. Show all posts
Showing posts with label nigazhvugal. Show all posts

Apr 19, 2026

எந்தன் மகனே கோவிந்தா-----

 எந்தன்  மகனே கோவிந்தா-----

இது தேர்தல் நேரம். இந்த வாரத்திறுதியில் தமிழகத்தில் தேர்தல். 

இந்தத் தருணத்தில், பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிப் பதித்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஓட்டுப் போடப் போகும் ஒரு தந்தை தன் மகனுக்கு தேர்தலைப் பற்றி சொல்லித் தருவதாக எழுதினேன்.

எவ்வளவு ஆண்டுகள் ஆனால் என்ன? நிலமை அதேதான்!

இதோ அந்தப் பாடல்.

அன்புடன்

ரமேஷ்





மகன்
அப்பா இந்தக் காலையிலே
---எங்கே நீயும் போகின்றாய்?
நானும்  கூட வரலாமோ?
--- வீட்டில் பொழுதே போகலையே


தந்தை
எந்தன்  மகனே கோவிந்தா, நான்
---ஓட்டுப் போடப் போகின்றேன்
வந்தால்  நீயும் என்னுடனே 
---இடைஞ்ச  லாக இருந்திடுமே.


மகன்
இடைஞ்சல் எதுவும் செய்யாமல் நான்
---நல்ல பையனாய் இருக்கின்றேன்
முடியா  தென்று சொல்லாதே !
---மீண்டும் கெஞ்சிக் கேட்கின்றேன்.


தந்தை
சரிதான், என்னுடன் நீயும் வா ; 
---நாளை  இந்நாட்டின் தலைவன் நீ .. 
தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள 
-----பாடம்   உனக்கே சொல்வேன்நான்.


மகன்
தேர்தல் என்றால் என்னப்பா?
----புரியும் படியே சொல்நீயே!


தந்தை
சேரர்,  பாண்டியர்  சோழரென 
---மன்னர் இருந்தது அக்காலம்.
யாரும்  மன்னர்  ஆகிடலாம் 
----இதுதான் குடியர சுக்காலம்.
நாமோர்  பெரிய   குடியரசு;
----நாட்டின் மன்னர் நாம்தானே!.
நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
---தேர்தலில்   மந்திரி  ஆக்கிடுவோம்.


மகன்
மன்னர்கள் ஆட்சி செய்கையிலே
---கப்பம் கேட்பார் எனக்கேட்டேன் ;
மந்திரி   ஒருவர்   வந்தபின்னே
---அவர்க்கும்  கப்பம் கட்டணுமோ ?


தந்தை
காரியம் நமக்கு  நடக்குமுன்னே,
----கப்பம் நிச்சயம் கட்டணுமே..
இப்போ இதற்கு பெயர்மாற்றி
----லஞ்சம் என்றே வெச்சாச்சு.


மகன்
மன்னர் ஆட்சி மட்டும்தான்  
---தலைமுறை  தோறும்  தொடருமென்பார்
மந்திரி   இவர்கள்  ஆட்சியுமே
---தலைமுறை  ஆகத்  தொடர்வதென்ன?


தந்தை
தந்தை தாத்தா முன்னோர்கள் 
---ஊழல் செய்து குவித்தபணம்
இருக்கும் வரையில் தேர்தலிலே
---இவர்கள் தோற்க வழியில்லை.


மகன்
ஓட்டுப் போடும் இடத்தைநாம்
---சாவடி என்பது எதனாலே?


தந்தை
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு
---வந்தபின்  அடுத்த தேர்தல்வரை
ஓட்டுப் போட்ட மக்களையே 
---"சாவ   டிக்கிறார்" அதனாலே.


மகன்
எனக்கும் ஓட்டுப் போட்டிடவே  
---ஆசை,  அருமை அப்பாவே .
எப்போ நானும் போட்டிடலாம் ?
----பதிலைச் சொல்நீ இப்போதே

 
தந்தை
அவசரம் வேண்டாம், இதற்குள்ளே !
----அன்பு மகனே கோவிந்தா.
அகவை பதினெட் டெட்டிடுவாய் ,
-------சட்டம் இதுவே  பொறுத்திடுவாய் .


மகன்
பதினெண்  வயது வேண்டுவது 
----நாட்டில்  நிலவும்  சட்டமென்றால்
எதனால் இந்த சட்டதிட்டம்? 

----எனக்கதை நீயே சொல்வாயா?

தந்தை
ஓட்டுப் போடணும் என்றாலே 
-----முழுதாய் முட்டாள் ஆகணுமாம்.
முழுதும் முட்டாள் ஆகிடவே 
-----பதினெட்   டாண்டுகள் பிடித்திடுமே!.


மகன்
ஆகா ! அடுத்த தேர்தலுக்குள் 
-----பதினெண் வயதை எட்டிடிடுவேன்
முழுவதும்  முட்டாள் ஆகிவிட்டு   
-----ஒட்டு உரிமையைப் பெற்றிடுவேன்.

Apr 14, 2026

பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து

 பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து 

முன் குறிப்பு:

இந்தப் புத்தாண்டின் பெயர் பரபாவ ஆண்டா அல்லது பராபவ ஆண்டா?  நான் கீழே கொடுத்துள்ள தமிழ்ப்பெயர்கள் பட்டியலின் படி இதன் பெயர்  பரபாவ ஆண்டு. பஞ்சாங்களில்  குறிப்புட்டுள்ளபடி இது பராபவ  ஆண்டு. நான் இந்தப் பாடலில் பரபாவ ஆண்டு என்றே குறிப்பிட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் , பாடலில்  கூறப்பட்டுள்ள கருத்துகளும், எண்ணக்கிடக்கைகைகளும், எதிர்பார்ப்புகளும் மாறாதவையே!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.

அன்புடன் 

ரமேஷ் 


உலக நிறை*வென்ற விசுவாசு ஆண்டிங்கு 

கலகங்கள் பலநிறைந்த ஆண்டாக முடிவடைய 

அருள்தோற்றம்* என்கின்ற பரபாவ ஆண்டின்று 

தரையிறங்கும் வேளையிலென் புத்தாண்டு வாழ்த்துக்கள் 


குறுகியதோர் கடலிடுக்குக் கால்வாயில் கப்பல்கள் 

மறுபடியும் தடையின்றித் தவழ்ந்திடவே வாழ்த்துக்கள் 

கால்வாயை விடமிகவும் குறுகிய மனமுடையோரின் 

கோல்மால்கள் குறைந்தொழிய கவிஞன் என் வாழ்த்துக்கள் 


டிரம்ப் போன்ற கோமாளித் தனத்தோரை விட்டெறிந்து 

திறம்படைத்தோர் ஆட்சியினை அமெரிக்கர் பெற்றிடவும்  

நடுகிழக்கு நாடுகளில் உக்ரேனில் ருஷ்யாவில் 

நடக்கின்ற கடும்போர்கள் முடிந்திடவும் வாழ்த்துக்கள்  


எரிவாயு எண்ணெய் கரி இவைசார்ந்த ஆலைகளை 

சரிபாதி அளவேனும் குறைத்துஅணு சக்தியொடு 

வளிஒளியைச் சார்ந்த உற்பத்தித் திறன்பெருக்கும் 

வழிகண்டு நாம் விரைவில் வளம் பெறவும் வாழ்த்துக்கள் 


சகோதரத்  துவம்பெருகி சமதர்மம் நிலைத்திடவும் 

விகாரங் கள்விலக்கி வாழ்வாங்கு வாழ்ந்திடவும் 

பரபாவப் புத்தாண்டில் பாரதம்பெரும் வளம்பெறவும் 

அரன்,அரி பிரம்மன்எனும் முத்தேவர் அருள்புரிக 



* உலக நிறைவு= விசுவாசம் ; அருள்தோற்றம்= பிரபாவம் - இவை சென்ற, இந்த ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள். முழு அறுபது ஆண்டுகளின் தமிழ்ப்  பெயர்கள் இதோ!



Nov 1, 2025

தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

உடலில் தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

இன்று   (1-11-2025)டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி!

முழுவதும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர்க்கலம் ( toilet cistern ) புகழ் பெற்ற Sotheby என்னும் ஏலம் விடும் நிறுவனத்தாரால் ஏலம் விடப்பட இருக்கிறது! 

இதை அந்த நிறுவனம் " கலையின் வெளிப்பாட்டிற்கும் வணிக மதிப்பிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய கூர்மையான விமர்சனம் " (an incisive commentary on the collission of artistic production and commodity value ) என்று விவரத்திருக்கிறது !படிப்பவர்க்குப் புரிந்தால் சரி!

ஏலத்தின் ஆரம்பத்  தொகை சுமார் 90 கோடி ரூபாய்! இதற்கு மேலும் பணம் கொடுத்து வாங்கத்  தயாராக இருக்கும் பைத்தியக்காரப் பணக்காரர்களும் இருப்பார்கள்தான்!

இது குறித்து ஒரு குறும்புக் கவிதை - லிமெரிக் வடிவில்- படித்துச் சிரிக்க !

அன்புடன் 

ரமேஷ் 




தங்கத்தாலே செஞ்ச ஒரு பாத்திரம் 

கழித்திடவே தினம் மலஜல மூத்திரம்!

விடு வாராம்  ஏலம்!

உலகம் போற கோலம்!!

நினைச்சாலே பொங்கிவருது ஆத்திரம்! 


Aug 15, 2025

சுதந்திர தின வாழ்த்துகள்

 சுதந்திர தின வாழ்த்துகள் 




மதமினம் பற்பல   மொழிகள் என்றும் 

----வடகுட குணதென்* திசைகள் என்றும்

விதவித வெவ்வெவ் வேறு பிரிவுகள் 

----பலவு மிருந்தும்  அனைவரும் ஒன்றாய் 

இதந்தரும் இனியவிச் சுதந்திர நாளில் 

----இணைந்து  பாரதத் தாயினைப் போற்றி 

சதம்பல யுகம்** இனும் சிதறுதல் இன்றி 

----சிறப்புடன் இருந்திட வாழ்த்துகள் சொல்வோம் .


எல்லைக்  கோட்டின் இருபுறங் களிலும்   

----தொல்லை யளிக்கும் தெருநறை ^ அழிக்கும்  

      ----வல்லமை பெற்றவள் விளங்கிட வாழ்த்து! 

வரம்புகள் மீறி வம்புகள் செய்யும்   

---- டிரம்பின் காப்பு வரிகளை*** எதிர்த்து 

      ---- திறம்பட மாற்றுகள் கண்டிட வாழ்த்து 

நித்தம் நித்தம் புத்தம் புதிதாய் 

---- பற்பல தொழில்வகை  வித்துகள் விதைத்து 

    ---- இந்திய இளைஞர் எழுந்திட வாழ்த்து 

சிறுதொழில் செய்வோர் சிறந்திட வாழ்த்து 

-----பெருந்தொழில் செய்வோர் பெருகிட வாழ்த்து 

     ----உழவுத் தொழிலோர் உயர்ந்திட  வாழ்த்து

மொத்த உள்நாட்டு ஆக்கத்  திறனை# 

----மெத்த உயர்த்தி மூன்றாண்டுகளில் 

    ----மூன்றாம் இடத்தைப் பிடித்திட வாழ்த்து 


அன்புடன் 

ரமேஷ் 


^ தெருநர் = பகைவர் 

* வடகுட குணதென் = North India, Western India, Eastern India and South India divisions

**  சதம் பல யுகம் = பல சத  யுகங்கள் என்று படித்தறிக 

*** காப்பு வரிகள் = tariffs

# உள்நாட்டு ஆக்கத்  திறன் =  GDP




Jul 26, 2025

சதுரங்க வேட்டை --சாதனை படைக்கும் இந்திய பெண்கள்

சதுரங்க வேட்டை --சாதனை படைக்கும் இந்திய பெண்கள்  

இப்போது நடைபெற்று வரும் உலக மகளிர் சதுரங்கப் போட்டியின்  இறுதிச் சுற்றில்  முதல் முறையாக இரு இந்தியப்  பெண்கள் மோதுகிறார்கள்- கொன்னூரு ஹம்பியும் , திவ்யா தேஷ்முக்கும் .

 இதைப்  பாராட்டி ஒரு சிறு பாடல் வெண்பா வடிவில்!

அன்புடன்

ரமேஷ் 

பின் குறிப்பு : இதைப் பதிக்கும் இந்நேரத்தில்  வந்த செய்தி ----  ஹம்பி இறுதிப் போட்டியில் வென்று விட்டார்.




பன்னாட்டு பெண்டிர் சதுரங்கப் போட்டியிலே 

கொன்னூரு ஹம்பியுடன் முன்னேறி மோதுகிறாள்   

இன்னாளில் இன்னுமொரு   இந்தியப்பெண்* ;  ஈவர்க்கு 

கண்ணேறு நேராமல் வேண்டு. 

                                                                    (பலவிகற்ப இன்னிசை வெண்பா) 

* திவ்யா தேஷ்முக் 

Jun 19, 2025

தியானம்

தியானம் 



மண்மீது பாய்விரித்து கண்மூடிக் கால்மடித்து 
எண்கணக்கில் என்மூக்கால் உயிர்வளியை உள்ளிழுத்து 
நுரையீரல் தனைநிரப்பி, உள்நிறுத்தி, வெளியேற்றி
சுவாசத்தின் சுழற்சியிலே என்னைநான் இழக்கின்றேன்
மவுனத்தில்  முழுகுகிறேன்; அமைதியினைத் தழுவுகிறேன் 
கவனங்கள் வழுவாமல்  தியானத்தைப் பழகுகிறேன் 

உடலெனும் உடையிழந்து, எண்ணத்தின்   எடையிழந்து 
புவியீர்ப்பின் தடையிழந்து வானத்தில் மிதக்கின்றேன்
இறக்கைகள் இல்லாமல் பறக்கின்றேன்- இவ்வுலகின் 
இணைப்புகள் யாவையும் துண்டித்துத் துறக்கின்றேன்.
மோனப் பெருவெளியில்  மவுனத்தின் அவயத்தில்*  
நானிங்கு நிறைகின்றேன்;  மனக்கவலை மறக்கின்றேன் 

உள்ளிழுத்து உள்நிறுத்தி வெளியேற்றும் சுழற்சியிலே 
என்மனதின் சிந்தனையின் இயக்கத்தை  இழக்கின்றேன் 
பேரண்ட ஆற்றல் பரப்பினொரு  சிறுதுளியே
நானென்று உணருகிறேன்; அதில்மூழ்கிப் புணருகிறேன் 
என்னுள்ளே இருக்கின்ற எனையுணர முயலுகிறேன். 
இத்தேடல் வெற்றியுற தியானத்தைப் பயிலுகிறேன். 


* அவயம் = இரைச்சல் 

அன்புடன் 

ரமேஷ் 




 

 

May 28, 2025

geetha 80

என்னுடைய சித்தி கீதாவின் இன்றைய 80-ஆவது பிறந்தநாளன்று நான் எழுதிப் பகிர்ந்த ஒரு வாழ்த்துப் பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


கீதா -80

எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் எங்கள் அருமை கீதாவே 

இந்நன்னாளில் உன்னை வாழ்த்தி இந்தப்பாடல் எழுதுகிறேன் 

ஐந்து பேர்களில் கடைக் குட்டி ; அவர்களுள் இவளே படு சுட்டி! 

வாய் பேசுவதில் வெகு  கெட்டி; அனைவரும் கேட்பார் கைகட்டி!

தனித்துவத் தன்மை படைத்தவளாம்,  சரியெனப் படுவதை செய்பவளாம் 

எந்த எல்லைக் கோட்டுள்ளும்  இவளை வரையிட  இயலாதே. 

வாழ்க்கைப் பாதையில் வழுக்கல்கள்  பலவும்  இருந்தது உனக்கெனினும்    

வீழ்ந்து விடாமல் எழுந்திட்டு  வாழ்ந்து அவற்றை வென்றிட்டாய். 

மகனும் மகளும் உறவுகளும் உனக்குத் துணையாய்  இருக்கையிலே 

மகிழ்வுடன் மிகப்பல நாளின்னும் வாழ்ந்திட வாழ்த்துகள் பாடுகிறோம்

தடைகளை உடைக்கும் திட மனதை விடைவா கனத்தான் அருளிடுவான்!

உடலுறு குறைகள்  விடுபடவே உமையொரு பாகன் உதவிடுவான்!


 



 

ராமகிருஷ்ணன் - அகிலா தம்பதியருக்கு வாழ்த்துகள்

எனது நீண்ட நாள் நண்பன் ராமகிருஷ்ணனின் 50 தாவது திருமணநாள் நிகழ்வன்று  ( 22-5-2025)  - தம்பதிகளுக்கு நான் எழுதிப்  படித்த வாழ்த்துப்  பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


ராமகிருஷ்ணன் - அகிலா தம்பதியருக்கு வாழ்த்துகள் 


காதல் மனைவியின் கைத்தலம் பற்றி 

மாதினைப் பாதியாய் மனதில் ஏற்றி 

மேதினி யோர்க்கு மாதிரி யாக 

ஆதர வாக ஒருவரோ டொருவர்

புரிதல் பெருக்கி   இருதயம் ஒன்றி  

இருமனம் இணைந்து இனிதே வாழ்ந்து 

அரைநூ றாண்டுகள் ஆகும்   இந்நாள்  

நிறைவுடன்  சிறக்க  நண்பனென்  வாழ்த்து!


அன்புடன் 

ரமேஷ் 

 




 

பெற்றவர் இருவரும் பெருங்களிப் படைய 

வெற்றிபெற் றவரும்  வாழ்வினில் சிறந்தார்!

 

எடுத்த கடமைகள் அனைத்தையும் நன்றாய் 

முடித்தபின் மீண்டும் தொடங்கிய வாழ்க்கை

உடல்திடம் மனநலம் நிம்மதி யோடு 

தொடர்ந்திட இறைவன் நல்லருள் புரிக!

May 1, 2025

ஐ.பி.எல் போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும்

ஐ.பி.எல்  போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும் 

நேற்று நடந்த போட்டியில் மீண்டும் வெற்றிகரமாகத் தோல்வியுற்று சி.எஸ்.கே அணி இறுதிக் கட்ட ஆட்டங்களுக்குப் போகும் வாய்ப்பை இழந்தது.

இது குறித்து ஒரு பாடல்!

இது நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சொற்பமான பந்துகளிலேயே  சதமெடுத்து சாதனை புரிந்தார்! 

இது பற்றியும் ஒரு பாடல்!

இரண்டும் வெண்பா வடிவில்.

அன்புடன் 

ரமேஷ் 



வந்தாரை வாழவைக்கும் சென்னைநகர் பண்பினையே 

பந்தாட்டப் போட்டியிலே காட்டுவதேன்? - நொந்துமிக

நூல்தன்னைப் போலானார் மாநகரின்  மக்களெலாம்!

பால்தன்னைப் பத்தாம்நாள் ஊற்று

                                                                                (இருவிகற்ப இன்னிசை வெண்பா)




பால்வடியும் தோற்றத்தால்  ஏமார்ந்தே போகாதே!

'பால்'^அடிக்கும் மட்டை  பலத்தால் எதிரணியை                        ^ ball

பாழடிக்கும்  *"வைப(வ்)"வத்தை பார்த்தேநாம் பூரிப்போம்  * vaibhav

வாழட்டும் **சூர்யகுலத் தான்!                                                             ** suryavanshi

                                                                               (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

Apr 26, 2025

பெகல்காம் படுகொலை

எல்லை கடந்து வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெஹல்காம் பள்ளத்தாக்கில் செய்த படுகொலைகளுக்கு , இன மத வேறுபாடுகளின்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்துக்களை மட்டுமே கொலைசெய்து    இந்தியாவில்  மதக் கலவரத்தை தூண்ட முயலும் தீவிரவாதிகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். 

ஜெய் ஹிந்த் !

ரமேஷ்  




பட்டப் பகலில் பெகல்காமின் பள்ளத்தில் 

திட்டமிட்டுத் தாக்கியே சுட்டுக்  கொலைசெய்தார்

இந்துக் களைமட்டும் -  இந்தச் செயலெதிர்த்து  

இந்தியனே பொங்கி எழு !


ஆதார  அட்டைகளில் பேர்பார்த் ததன்பின்னும்

போதாமல்  உள்ளுறுப்பை சோதித்த பாவிகள்-தன்

மாற்று மதத்தாரை மட்டும் இனம்கண்டு 

கூற்றுக் கிரையாக்கி கொன்ற கொடுஞ்செயலை 

ஏற்காது  எம்பார தம்


பெற்றிட்ட பிள்ளைகள் கட்டிய தோர்தாரம்

உற்ற உறவினர் மற்றவர் முன்னாலே  

ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொலைசெய்த 

பாவிகளைத் தேடிக்கொல் வோம் 








Apr 25, 2025

IPL -2025 -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி ??

IPL -2025  -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ஒப்பாரி??!


ஆறாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது : 

சேறிலே கால்புதைந்து ஒடத் தவிப்பவனைப் போல் 

ஆறிலே ஒன்றை மட்டும் இன்றுவரை வென்றதாலே 

மாரிலே சந்தனம்போல் மணக்கின்ற நிலைமை மாறி 

ஆர்.ஐ.பி. எழுதும் நிலைமை அய்யகோ வந்ததிங்கே !

ஏழாவது ஆட்டத்தின் வெற்றிக்குப்  பின் எழுதியது 

கருமேகக் கூட்டத்தின் விளிம்பினொளிக் கீற்றைப்போல்  
சரிபாதி ஆட்டங்கள் முடிகின்ற தருவாயில் *                * 7 out of 14
பரிதாப நிலைசற்றே மாறியதே ! இனிமேலே
ஒருவேளை பெருவாகை பெறும்வேளை வந்ததுவோ? 
 
எட்டாவது ஆட்டத்திற்குப் பின் எழுதியது

விழுந்து கிடக்கின்ற சி.ஸ்.கே இனியேனும் 
எழுந்து நிற்குமிவ் வெட்டாவது  ஆட்டத்தில் 
என்ற நினைப்பினிலும் மண்விழுந்து மூடியதே 
வென்றதே மும்பை அணி!

இன்று ஒன்பதாம் ஆட்டத்திற்கு முன்பு 

பத்தாம் இடத்திலே பசைபோட்டு அசையாமல் 
கெத்தாய் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் சி.ஸ்.கே
ஒன்பதாம் இடத்துள்ள காபித்தூள் குழுமத்தை*      * sunrisers  
இன்றேனும் காட்டுமோ வென்று?

அன்புடனும்,எதிர்பார்ப்புடனும் 

ரமேஷ் 



Jan 31, 2025

GCT 70 நண்பர்களின் கூடல்

GCT 70 நண்பர்களின் கூடல் 

கோவை அரசினர் பொறியியற்கல்லூரில் இருந்து 1970 -ம் ஆண்டு பட்டம் பெற்று நாங்கள் வெளியே வந்து இப்போது 55 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிகழ்வை நினைகூறும் விதமாக நண்பர்கள் பலரும் மைசூரில் ஒன்று கூட ஆயத்தமாகி வருகிறோம். 

ஐந்து  ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பொன் விழாக் கூடலுக்குப் பிறகு, பெரிய அளவில் நண்பர்கள் இணையப்  போகும் இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தவும், அதற்கான மொத்தச் செலவையும் தானே ஏற்கவும் முன்வந்திருக்கிறார் நண்பர்                                எம்.ஜீ.எம் போர்ஜிங் பாரத் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான  முரளிதர்  பகவத். 

இந்நிகழ்ச்சியைப் பற்றியும், நண்பர் முரளியின் நேர்த்தியான செயலுக்கு நன்றியுரைக்கும்  விதமாகவும் ஒரு சிறு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 



தந்தைவழி தாய்வழியும்  கைப்பிடித்த கன்னிவழி 

வந்தடைந்த சொந்தங்கள் மட்டும் உறவல்ல

ஒன்றிணைந்து கல்வியினைக் கற்றிட்ட நண்பர்கள் 

என்றும் உறவென் றறி.


ஆண்டுகள் ஐம்பத்து ஐந்து  கழிந்தபின் 

மீண்டும் முரளியின் முன்னெடுப்பால்  - ஈண்டிங்கு

பண்டுநாட் பல்கதைகள் பேசிக் களிக்கவே

நண்பர்கள் சேர்வார் பலர்.                 


வெவ்வேறு நாடுகள் வெவ்வே  றிடங்களில் 

எவ்வெவர் எங்கெங் கிருப்பினும் -  அவ்வவர் 

தந்தேகத்  தொந்தரவை  சற்றும் கருதாமல்  

சந்திப்பில் சேரவரு  வார்


தங்க இடத்தோடு உண்ண அறுசுவையும்

எங்களுக் கன்போ டளிப்பவன் - தங்கத்தை 

ஒத்த மனத்தினன் நண்பன்  முரளிக்கு

மெத்தவும் நன்றியுரைப் போம் 


   



Dec 10, 2024

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்!

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்!

வயது கூடக்  கூட , நாம் நமது  குழந்தைப் பருவத் தூய்மைகளையும் , அப்பருவத்திற்கே உரிய குதூகலங்களையும் தொலைத்துவிட்டு உழலுகிறோம்.  நம்மில் பலரும் அவ்வப்போது உணரும் இந்த உணர்வை  ஒரு  பாடலாக வடித்திருக்கிறேன்! 

சற்று நீளமான பாடல்! இருந்தாலும் கேட்டும்  படித்தும்   ஒத்துணர்வீர்கள் என்று நம்புகிறேன்!

அன்புடன் 
ரமேஷ் 

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை 
எங்கோ தொலைத்து விட்டேன்!




என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 

  

சின்னச் சின்ன குறும்புகள் செய்து மகிழ்ந்ததை மறந்து  விட்டேன் 

வன்மம் நில்லா வெள்ளை மனதை வெளியே துறந்து  விட்டேன்

துள்ளல் சிரிப்பை உள்ளக்  களிப்பை  என்றோ  துறத்தி  விட்டேன்  

கள்ளம் கபடம் இல்லா உள்ளம்  எங்கோ  விரட்டி  விட்டேன்

       என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

      உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 

 

விழுந்து காயம் பட்ட இடத்தில் அப்பா  முத்தம் இட்டால்     

விலகிடும் வலிகள் என்று  நம்பிய அப்பா வித்தன உறுதி  !  

புத்த கத்தில்   பத்திர மாக பதுக்கி வைத்த மயிலிறகு

சத்தியமாக  போடும் மறுநாள் குட்டி என்ற நம்பிக்கை!      

இத்தகு   உறுதியும்  நம்பிக் கைகளும்  இருந்த வெள்ளை மனதை  

          என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

          உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


ஏமாற் றங்கள் ஏற்பட் டாலும் அதையே மனதில் நிறுத்தி  

ஏமா ராமல்* உடனே அடுத்த  அனுபவம்  தேடும் குணங்கள்  

சூழ்ச்சி களங்கம் குற்றம்  இவைகள் எதுவும் இல்லா மனது   

தாழ்த்துதல் உயர்த்துதல் காழ்ப்புகள் இனப்பிற குணமெதும்  சேராப்  பண்பு  

வாழ்க்கையின் உயரிய  இத்தகு  முறைமைகள்  நிறைந்து  இருந்த மனதை   

          என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

          உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


வண்ணப் பூச்சிகள் பறப்பதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்த   காலம்  

விண்ணில் மின்னும் விண்மீன்களை  எண்ணி வியந்த நேரம் 

நண்பர் களுடன் நேரம் தெரியாமல் பேசிக் கழித்த பருவம்  

கொண்டாட் டங்கட்கு  குறைவில் லாமல் குதித்துக் களித்த காலம்   

இவைகளை நினைவில் நிறுத்திச் சிரித்துக் களித்த காலம் கடந்து  

கவலைகள் மட்டும் ஏனோ மனதில் நிலைகொண் டிருக்குமிந்  நேரம்

எல்லாம் இருந்த போதும் எதுவோ குறைந்ததைப் போல் தோன்றும் 

எதுவும் புரியா தேனெனத் தெரியா நெஞ்சை   நெருடிடும் பாரம்

         என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

         உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


இன்றையப்  பொழுதை   இனிதாய்க் கழித்து இருப்பதை  முற்றும் மறந்து

முன்தினம் நடந்து முடிந்த  ஒன்றை   மனதில் இருத்தி வருந்தி 

நாளையப் பொழுதின் நடப்புகள் நினைத்து கவலையில் மூழ்கிக் கழித்து

நாளின் றிதையே  நன்றாய் கழிப்பதை    நானே மறந்து விட்டேன். 

        என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

       உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


என்னுள் எங்கோ புதைந்து கிடைக்கும் சின்னக் குழந்தை மனதை 

இன்றே தேடி எடுத்து அதனை மீண்டும் மீட்டு  வருவேன் 

எங்கும் இன்பம் எதிலும் இன்பம் காணும் அந்த மனதை 

தங்கல்** தவிர்த்து எந்தன் மனதில் இன்றே உயிர்க்க வைப்பேன்.

 

ஏமாராமல் = மனம் கலங்காமல்

**தங்கல்=தாமதித்தல்



 



 





 


Nov 4, 2024

வலிகள்

வலிகள் 

சில நாட்களாக சயேடிகா (scicatica) என்னும் நரம்பு வலியால்  பாதிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் இருக்கும் போது எழுதிய பாடல்! வலிகள் அளித்த  ஒரு வெகுமதி!

அன்புடன் 

ரமேஷ் 







வலிகள் 

இரவின் மடியில் இருளின் பிடியில் 

இரண்டாய் பெருகும் உடல் வலிகள் 

முதுகில் தொடங்கி முட்டியின் வழியே 

கணுக்கால் அடையும் வலித்  துளிகள்

நிலத்தின் மேலே பலமாய்க் காலை 

ஊன்றி நடக்க விடா வலிகள் 

பலவகை மருந்துகள்  தினமும் விழுங்கியும் 

விலகா திருக்கும் கால்  வலிகள்

நரகம் இன்று இங்கு வந்ததென 

நம்ப வைத்திடும் நீள் வலிகள் 


வலிகள் பலநாள் அகலா ததனால்  

அதையே விதையாய் விதைத் ததனின்

விளைவாய் மனதில் முளைத்த கருத்தை    

எழுத்தாய்  எழுதிய இக் கவிதை

ஒலிமொழி வழியே உனைவந் தடையுமுன் 

வலிகள் எனைவிட் டோடிடுமோ? - இ(ல்)லை 

இன்னும் பலநாள் தொடர்ந்தே எந்தன் 

வாழ்க்கையின் நிறத்தை மாற்றிடுமோ? 


 







Sep 25, 2024

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை 

புடாபெஸ்ட்  நகரில் உலக நாடுகளுக்கிடையே நடைபெற்ற சதுரங்க ஒலிம்பிக்  போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவு, பெண்களுக்கான பிரிவு இரண்டிலும் இந்திய அணிகள் முதலிடத்தைப் பெற்று தங்கக்  கோப்பைகளைப் பெற்றனர்!

ஆண்கள் அணி,  ஆடிய பதினோரு ஆட்டங்களில் பத்து ஆட்டங்களை வென்றது; ஒரு ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி சம நிலையில் முடிந்தது. மொத்தம் 21 புள்ளிகளை எடுத்து கோப்பையை வென்றது.

பெண்கள் அணி பதினோரு ஆட்டங்களில், ஒன்பது  ஆட்டங்களை வென்றது; ஒன்றில் தோற்றது: மற்றொன்று வெற்றி-தோல்வி இன்றி சம நிலையில் முடிந்தது. மொத்தப் புள்ளிகள் 19 ஐ எடுத்து கோப்பையை வென்றது.

ஒரே நாட்டைச் சேர்ந்த இரு அணிகளும் ஒரே நேரத்தில் இந்தக் கோப்பைகளைத் தட்டிச் சென்றது ஒரு மிகப் பெரிய சாதனை. 

இதனுடன் கூட, இரு அணியைச் சேர்ந்த சில விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தனிப் பரிசாக தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த சாதனையைப் பாராட்டும் முகமாக ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 






சதுரங்க வேட்டையில் ஆண்கள் அணி    போட்டி 

பதறாமல் ஆடித்  தம் திறமையைக் காட்டி 

"பதினொன்றில் பத்து"என வெற்றியை ஈட்டி 

வென்றாரை  வரவேற்போம் மலர்மாலை சூட்டி.




ஆண்கட்கு  பெண்கள் சளைத்தவர் இல்லை  - இதைக் 

காண்பிப்போம்  எம்திறமைக் கிங்கேது  எல்லை - என  

அறைகூவி  வென்றார்   தங்கத்தில் வில்லை*   

பறைசாற்றி னார்இன்று மங்கையர்  மல்லை**    


* வில்லை = பதக்கம், badge 
**மல்லை = பெருமை, greatness   

 






 

Sep 12, 2024

நான் வசிக்கும் குடியிருப்பில் இருக்கும் நண்பரது மகளின் வளைகாப்பு , சீமந்த விழாக்களில் கலந்து கொள்கையில் எழுதிய பாடல்கள்! நண்பருடனும் அவரது குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொண்டேன்! 

எனது கனித்தோட்டத்தில் நான் எழுதிய கவிதைகளின் நிறைவு குறித்து பதிவு செய்கிறேன். பதிப்பிற்கு  மட்டுமே!  பகிரவில்லை!

அன்புடன் 

ரமேஷ் 

வளைகாப்பன்று 


வளர்பிறையில் இந்நன்னாளில் அன்னையிவள் கருவறையில் 

வளர்கின்ற இளம்பிறையை  வரவேற்கும் முகமாக 

மங்களப் பெண்டிர் பலர் பிரியமுடன் அணிவகுத்து 

மங்கையிவள் தளிர்க்கரத்தில் வளையடுக்கும் நாளின்று  

எங்கள் இதயம்நிறை வாழ்த்து!


சீமந்தத்தன்று 


சீவிச் சிங்காரம் செய்து 

நன்பட்டில் ஆடை யுடித்தி 

 

பூவைத்து  பொட்டும் வைத்து 

பெண்ணவளை மணையில் ஏற்றி 


நாவிட்டு வேதியர்கள் 

நான்மறைநல் மந்திர மோதி 


நெய்விட்டு தீ வளர்த்து 

தேவியரின் அருளை  வேண்டி 


சீமந்தம்  காணும் பிரியா   

சீரும் சிறப்புடன் இருக்க

 

நாமிங்கு அனைவரும் கூடி 

நல்வாழ்த்துக் கூறிடு வோமே .




Aug 30, 2024

தக்காளியில் எக்காளம்

தக்காளியில் எக்காளம் 

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் தக்காளிகளை ஒருவர் மேல் எறிந்தும், தக்காளிகளைப்  பிழிந்தெடுத்த சாற்றில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தும் ஒரு குதூகலக் கொண்டாட்டம் (???) நடைபெறுமாம்! 

இது குறித்து, என் நண்பர் ஒருவர் படத்துடன் அனுப்பிய செய்தித் துணுக்கு இது!  இந்தப் படத்தின் உந்துதலால் நான் எழுதிய ஒரு குறும்(புப்) பாடல்-வெண்பா வடிவில் !

அன்புடன் 

ரமேஷ் 






தக்காளிச்  சேற்றினிலே  முங்கிக் குளித்தபடி 

எக்காளம் இட்டிடுவார் கட்டிப் பிடித்திட்டு  

வெட்கிச் சிவக்கவில்லை கன்னியிவள் கன்னங்கள் 

தக்காளிச் சாறுபட் டே   .  

                                                                                  (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 

Aug 8, 2024

குறள் மேல்வைப்பு வெண்பா - 24

 குறள் மேல்வைப்பு வெண்பா - 24

இரண்டு நாட்களுக்கு முன் இந்திய மங்கை வினீத் போகாத், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்  பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் தற்போதைய உலக சாம்பியனை  வென்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தது. தங்கப் பதக்கத்தை அவர் தட்டிச் செல்வார் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். ஆனால் அடுத்த நாளே "அவர் எடை பரிசோதனையில் கேவலம் ஒரு 100 கிராம் அளவு மட்டும் 50 கிலோவை மிஞ்சியதால், போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்" என்ற செய்தி பேரிடியாக வந்தது.

இந்த செய்தி எனக்கு வலியறிதல் அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறளை நினைவு படுத்தியது.

அதன் விளைவாக ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 



 

மயிரளவே   கூடியதால்    தங்கம்   இழந்து   

துயருற்றாள் தோகையாள்  போகாத் - பயிற்பாடம் 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 

சால மிகுத்துப் பெயின்  

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

விளக்கம் : மென்மையான மயிலிறகு தான் என்றாலும், ஒரு சிறிய அளவுகூட, தாங்கும் அளவுக்கு மேல் ஏற்றினால், வண்டியின் அச்சு முறியும் . அதுபோலவே இங்கு 50 கிலோவுக்கு மேலே 100 கிராம் மட்டுமே அதிகம் என்றாலும், (0.2 சதவீதம்) போகாத் பதக்கத்தை இழக்க நேர்ந்தது!  

 


May 17, 2024

வலிகளை விலக்கும் வழி?

வலிகளை விலக்கும் வழி?

"வலியுடன் வாழக் கற்றுக்கொள்" என்ற என் பாடலைப் பதிவிட்ட பின் பல நண்பர்கள் , வலி நீக்குவதற்கு பல விதமான  வழிகளை எனக்குச் சொன்னார்கள். ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர், மெடிடேஷன் , ரேக்கி  என்று இத்யாதி இத்யாதி அறிவுரைகள்! "எல்லாமே என் வலி தீர வேண்டும்" என்ற நல்லெண்ணத்துடன் கூறப்பட்டாலும், எதை பின்பற்றுவது என்ற குழப்பத்தில் என் தலை சுற்றியது! 

இது குறித்து ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 









வலிகளை  எளிதாய் விலக்கிடும்  வழிகளை  

பலரும் உரைப்பார்  பரிந்து - நம்நலனை 

விரும்பி   அவர்தரும் யோசனை எல்லாம்

அரிதாம் செயல்முறை யாக்க !


மேலை நாட்டு மருத்துவங் கள்எதுவும்  

வேலைக்கு ஆகாது என்பார் -காலையும்  

மாலையும் ஆயுர் வேதத்தின் எண்ணெயை 

தோலின்மேல் தேய்த்தூறச் சொல்வார் 


ஹோமியோ பதிதான் ஒரேவழி  இதற்கென்று

சாமிமேல் சத்தியம் செய்வார்- பூமியில்

நிகரிதர்க் கில்லை நிச்சயம் இதுவெனப் 

பகருவார் பலருமிங் குண்டு                                                                   பகருவார்= சொல்லுவார்


வயதான பின்னே வலிகள் வருவது 

இயற்கையே பொறுத்திடெனக்  கூறித் - தயங்காமல் 

நானெழுதிய பாட்டை# எனக்கே மேற்காட்டி 

தேனொழுக ஆறுதல் சொல்வார்


*நுண்துளைக் குத்தூசி **தொடுகைப் பரிகாரம் 

^ உள்மன தறிதுயில்  சிகிச்சை - வேறு 

எண்ண அலைநிறுத்தி ^^ ஆழ்நிலைத் தியானம்

என்றுபல பரிகாரம் உரைப்பார்                                                       


வலிநீக்க  பற்பல  மருத்துவ வகைகளை 

பலருமே பரிந்தெனக் குரைக்க  - எந்த

வகையைநான்  பின்பற்று வேனென்று எண்ணியே  

திகைத்தே தலைசுற்றி நின் றேன். 


# - வலியுடன் வாழப் பழகிவிடு  என்ற எனது கவிதை. இதை 

https://kanithottam.blogspot.com/2024/05/blog-post.html என்ற இணைப்பில் காணலாம்.

* நுண்துளைக் குத்தூசி = accupuncture 

**தொடுகைப் பரிகாரம் = Reiki 

^ உள்மன தறிதுயில்  சிகிச்சை = Hypnosis 

^^ ஆழ்நிலைத் தியானம் = meditation