Search This Blog

Oct 31, 2018

நேற்று-இன்று - நாளை

நேற்று-இன்று - நாளை 

நேற்று நடந்ததை யோசி 
அது அளித்த பாடத்தை சுவாசி
இன்று நடப்பதை நேசி 
சிறு  துன்பங்கள்-  அவை  தூசி ! 
நாளை நன்றாய் விடிய 
இறைவனைப் பணிந்து யாசி.


அன்புடன் 

ரமேஷ் 

Oct 28, 2018

பூமாலையும் பாமாலையும்






செடிகளை நிறைக்கும்  வண்ணத்துப் பூக்கள்
மனதினை  நிறைக்கும் எண்ணத்துப் பூக்கள்
வண்ணத்துப்   பூக்களைக்  கோர்த்தால் பூமாலை
எண்ணத்துப் பூக்களைச்   சேர்த்தால் பாமாலை
பூமாலை மணமே பாரெங்கும் வீசும்
பாமாலை தமிழின் பெருமையைப் பேசும் .


அன்புடன் 

ரமேஷ் 

Oct 9, 2018

போனாப் போகட்டும்


போனாப் போகட்டும் 




நித்தம்நித்தம் நீர்பாச்சி
நான்வளத்த தென்னமரம்
பக்கத்து வீட்டுப்பக்கம்
தலைசாச்சு குலபோட
குலபோட்ட காயையெல்லாம்
களவு செஞ்சானே !- அதை
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே









மாங்கன்னை நான்நட்டு                       
மல்கோவா மரம் வளத்தேன்.
மதில்தாண்டி மரக் கிளைகள்
அவன்வீட்டு மாடியிலே
பழமாக பழுத்துத் தொங்க
பரிச்சு தின்னானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே






வேலிக்குப் பக்கம் நட்ட                            
எலுமிச்சஞ் செடியினிலே 
பச்சமஞ்ச நிறமாக  
காச்சிருந்த பழமெதையும் 
மிச்சம்மீதி வெக்காமல் 
பறிச்சுக் கொண்டானே - அதயும் 
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே 






தேரிழுத்து தவமிருந்து                            
மாரியம்மன்  அருளாலே
காத்திருந்து பெத்துப்போட்டு 
பாசமா வளத்தபொண்ணை
வீடுதாண்டி கூட்டிப்போயி
ஓடிப் போனானே - அதத்தான்
போனாப்போ கட்டுமின்னு
விடமுடி யலையே!




கவிதை  எழுதியது  :  கனித்தோட்டம்  ரமேஷ் 

Oct 6, 2018

பிரதோஷப் பாடல் -12

இன்றைய சனிப் பிரதோஷத்தன்று ஒரு சிறு பிரதோஷப் பாடல் !

அன்புடன் 

ரமேஷ் 

பிரதோஷப் பாடல் -12






திருப்புங் கூர்த் தலத்தில்
தரிசனம் செய்ய வந்து
இடபச் சிலையொன் றங்கு
இடையிலே இருந்து ஈசன்
வடிவினைக்  காணு தற்கு 
தடையாக இருந்த படியால் 
வருந்தி வாடிய பக்தன் 
இருதயம் இன்புறும் விதமாய்  
நந்தியை நகரச்  செய்து
நந்தனுக்கு காட்சி தந்த
சுந்தரச்  செஞ்சடை  யோனை
வந்தித்து வணங்கிடு வோமே! 

பாட்டியும் பேத்தியும்

பாட்டியும் பேத்தியும் 


இன்று பல குடும்பங்களில் மகன்களும் மகள்களும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். தங்கள் பேராக் குழந்தைகளுடன்  தமிழில் உரையாட முடியவில்லையே என்பது தாத்தாக்களுக்கும் பாடல்களுக்கும் ஒரு பெரிய குறைதான்.
அவர்கள் ஆண்டு விடுப்பில்  சென்னை வருகையில் முடிந்த அளவு அவர்களுக்கு தமிழைக் கற்றுத் தரவேண்டும் என்ற முயற்சியில் தாத்தா-பாட்டிகள் ஈடுபடுகிறார்கள்.. 

அப்படிப்பட்ட ஒரு முயற்சியின் முடிவுதான் இது !

அன்புடன் 

ரமேஷ் 





இரண்டு மாதம் கோடை விடுப்பில்  
-----வந்தாள் அமெரிக்கப் பேத்தி.
தமிழில் பேசக் கற்றுக் கொடுக்க  
-----முயன்றாள்  நம்மூர்ப்  பாட்டி 
இரண்டு மாதம் ஆனபின்னே 
-----பேத்தி திரும்பிப் போச்சு.  
பாட்டி  இப்போ அமெரிக்கன்  இங்கிலீஷில்    
-----பொளந்து தள்ளல் ஆச்சு!                                                                                                  3