Search This Blog

Apr 19, 2026

எந்தன் மகனே கோவிந்தா-----

 எந்தன்  மகனே கோவிந்தா-----

இது தேர்தல் நேரம். இந்த வாரத்திறுதியில் தமிழகத்தில் தேர்தல். 

இந்தத் தருணத்தில், பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிப் பதித்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஓட்டுப் போடப் போகும் ஒரு தந்தை தன் மகனுக்கு தேர்தலைப் பற்றி சொல்லித் தருவதாக எழுதினேன்.

எவ்வளவு ஆண்டுகள் ஆனால் என்ன? நிலமை அதேதான்!

இதோ அந்தப் பாடல்.

அன்புடன்

ரமேஷ்





மகன்
அப்பா இந்தக் காலையிலே
---எங்கே நீயும் போகின்றாய்?
நானும்  கூட வரலாமோ?
--- வீட்டில் பொழுதே போகலையே


தந்தை
எந்தன்  மகனே கோவிந்தா, நான்
---ஓட்டுப் போடப் போகின்றேன்
வந்தால்  நீயும் என்னுடனே 
---இடைஞ்ச  லாக இருந்திடுமே.


மகன்
இடைஞ்சல் எதுவும் செய்யாமல் நான்
---நல்ல பையனாய் இருக்கின்றேன்
முடியா  தென்று சொல்லாதே !
---மீண்டும் கெஞ்சிக் கேட்கின்றேன்.


தந்தை
சரிதான், என்னுடன் நீயும் வா ; 
---நாளை  இந்நாட்டின் தலைவன் நீ .. 
தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள 
-----பாடம்   உனக்கே சொல்வேன்நான்.


மகன்
தேர்தல் என்றால் என்னப்பா?
----புரியும் படியே சொல்நீயே!


தந்தை
சேரர்,  பாண்டியர்  சோழரென 
---மன்னர் இருந்தது அக்காலம்.
யாரும்  மன்னர்  ஆகிடலாம் 
----இதுதான் குடியர சுக்காலம்.
நாமோர்  பெரிய   குடியரசு;
----நாட்டின் மன்னர் நாம்தானே!.
நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
---தேர்தலில்   மந்திரி  ஆக்கிடுவோம்.


மகன்
மன்னர்கள் ஆட்சி செய்கையிலே
---கப்பம் கேட்பார் எனக்கேட்டேன் ;
மந்திரி   ஒருவர்   வந்தபின்னே
---அவர்க்கும்  கப்பம் கட்டணுமோ ?


தந்தை
காரியம் நமக்கு  நடக்குமுன்னே,
----கப்பம் நிச்சயம் கட்டணுமே..
இப்போ இதற்கு பெயர்மாற்றி
----லஞ்சம் என்றே வெச்சாச்சு.


மகன்
மன்னர் ஆட்சி மட்டும்தான்  
---தலைமுறை  தோறும்  தொடருமென்பார்
மந்திரி   இவர்கள்  ஆட்சியுமே
---தலைமுறை  ஆகத்  தொடர்வதென்ன?


தந்தை
தந்தை தாத்தா முன்னோர்கள் 
---ஊழல் செய்து குவித்தபணம்
இருக்கும் வரையில் தேர்தலிலே
---இவர்கள் தோற்க வழியில்லை.


மகன்
ஓட்டுப் போடும் இடத்தைநாம்
---சாவடி என்பது எதனாலே?


தந்தை
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு
---வந்தபின்  அடுத்த தேர்தல்வரை
ஓட்டுப் போட்ட மக்களையே 
---"சாவ   டிக்கிறார்" அதனாலே.


மகன்
எனக்கும் ஓட்டுப் போட்டிடவே  
---ஆசை,  அருமை அப்பாவே .
எப்போ நானும் போட்டிடலாம் ?
----பதிலைச் சொல்நீ இப்போதே

 
தந்தை
அவசரம் வேண்டாம், இதற்குள்ளே !
----அன்பு மகனே கோவிந்தா.
அகவை பதினெட் டெட்டிடுவாய் ,
-------சட்டம் இதுவே  பொறுத்திடுவாய் .


மகன்
பதினெண்  வயது வேண்டுவது 
----நாட்டில்  நிலவும்  சட்டமென்றால்
எதனால் இந்த சட்டதிட்டம்? 

----எனக்கதை நீயே சொல்வாயா?

தந்தை
ஓட்டுப் போடணும் என்றாலே 
-----முழுதாய் முட்டாள் ஆகணுமாம்.
முழுதும் முட்டாள் ஆகிடவே 
-----பதினெட்   டாண்டுகள் பிடித்திடுமே!.


மகன்
ஆகா ! அடுத்த தேர்தலுக்குள் 
-----பதினெண் வயதை எட்டிடிடுவேன்
முழுவதும்  முட்டாள் ஆகிவிட்டு   
-----ஒட்டு உரிமையைப் பெற்றிடுவேன்.

Apr 14, 2026

பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து

 பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து 

முன் குறிப்பு:

இந்தப் புத்தாண்டின் பெயர் பரபாவ ஆண்டா அல்லது பராபவ ஆண்டா?  நான் கீழே கொடுத்துள்ள தமிழ்ப்பெயர்கள் பட்டியலின் படி இதன் பெயர்  பரபாவ ஆண்டு. பஞ்சாங்களில்  குறிப்புட்டுள்ளபடி இது பராபவ  ஆண்டு. நான் இந்தப் பாடலில் பரபாவ ஆண்டு என்றே குறிப்பிட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் , பாடலில்  கூறப்பட்டுள்ள கருத்துகளும், எண்ணக்கிடக்கைகைகளும், எதிர்பார்ப்புகளும் மாறாதவையே!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.

அன்புடன் 

ரமேஷ் 


உலக நிறை*வென்ற விசுவாசு ஆண்டிங்கு 

கலகங்கள் பலநிறைந்த ஆண்டாக முடிவடைய 

அருள்தோற்றம்* என்கின்ற பரபாவ ஆண்டின்று 

தரையிறங்கும் வேளையிலென் புத்தாண்டு வாழ்த்துக்கள் 


குறுகியதோர் கடலிடுக்குக் கால்வாயில் கப்பல்கள் 

மறுபடியும் தடையின்றித் தவழ்ந்திடவே வாழ்த்துக்கள் 

கால்வாயை விடமிகவும் குறுகிய மனமுடையோரின் 

கோல்மால்கள் குறைந்தொழிய கவிஞன் என் வாழ்த்துக்கள் 


டிரம்ப் போன்ற கோமாளித் தனத்தோரை விட்டெறிந்து 

திறம்படைத்தோர் ஆட்சியினை அமெரிக்கர் பெற்றிடவும்  

நடுகிழக்கு நாடுகளில் உக்ரேனில் ருஷ்யாவில் 

நடக்கின்ற கடும்போர்கள் முடிந்திடவும் வாழ்த்துக்கள்  


எரிவாயு எண்ணெய் கரி இவைசார்ந்த ஆலைகளை 

சரிபாதி அளவேனும் குறைத்துஅணு சக்தியொடு 

வளிஒளியைச் சார்ந்த உற்பத்தித் திறன்பெருக்கும் 

வழிகண்டு நாம் விரைவில் வளம் பெறவும் வாழ்த்துக்கள் 


சகோதரத்  துவம்பெருகி சமதர்மம் நிலைத்திடவும் 

விகாரங் கள்விலக்கி வாழ்வாங்கு வாழ்ந்திடவும் 

பரபாவப் புத்தாண்டில் பாரதம்பெரும் வளம்பெறவும் 

அரன்,அரி பிரம்மன்எனும் முத்தேவர் அருள்புரிக 



* உலக நிறைவு= விசுவாசம் ; அருள்தோற்றம்= பிரபாவம் - இவை சென்ற, இந்த ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள். முழு அறுபது ஆண்டுகளின் தமிழ்ப்  பெயர்கள் இதோ!



Apr 7, 2026

குதத்தில் நுழைத்த கம்பு

 இன்றைய நாளிதழில் ஒரு தலைப்புச் செய்தி -



2020 ஆம் ஆண்டு நாடுமுழுதும் கோவிட் தாக்கத்தால் துயருற்றிருந்த நேரம்.  எல்லாக் கடைகளும் இரவு 9 மணிக்குள் மூடப்படவேண்டும் என்ற தடை விதிக்கப்பட்டிருந்த காலம். அப்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் கடையை மூடவில்லை என்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட தந்தை, அவரைக் காணச் சென்ற மகன்,  இருவரும், காவல் நிலையத்தில் மிகக் கொடூரமாக,  மலவாயில் கம்பை நுழைத்துத்  தாக்கப்பட்டு,  இறந்தார்கள். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட காவலர்கள் ஒன்பது பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

நாட்டையே அன்று உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அன்று நான் பதிவிட்ட பாடலை  இன்று நினைவு கொள்கிறேன்  -- இனியேனும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது குறையும் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன் 

ரமேஷ்


கோவில்பட்டிக்  கொடூரங்கள்

குறிப்பிடப்பட்ட நேரத்தில் கடையடைப்புச் செய்யவில்லை என்ற காரணத்திற்காகக் கோவில்பட்டியில்  கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தந்தை, அவரைக் காண காவல் நிலையம் சென்றிருந்த - மகன், இருவரும் காவலர்களின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் மினியாபோலிஸுக்கு  நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டுகிறார்களோ?

ரமேஷ் 



விதம்விதமாய்  வதைசெய்து பதம்பார்க்கும் முறைகளிலே  
முதலிடத்தை அடைந்துள்ள கோவில்பட்டிக் காவலர்க்கு 
புதியவொரு இலச்சினையை* பதிவிடுவோம் அதுவேயோர் 
குதத்தில் நுழைத்த கம்பு.  

* இலச்சினை= LOGO





Feb 3, 2026

காலைச் சிற்றுண்டி


காலைச்  சிற்றுண்டி 

சென்ற மாதம் என்னுடைய மகன் அமெரிக்காவிலுருந்து வந்திருந்த போது ஒரு காலைவேளையில் அருகிலுள்ள ராமேஸ்வரம் கஃபே யில் காலைச்  சிற்றுண்டி(?) சாப்பிடச் சென்றோம். ஒரு மாத்திட்க்குப் பிறகு அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது , இன்னும் அந்தச் சுவை அவன் நினைவில் மிதக்கிறது என்று கூறினான்! அதன் உந்துதலின்  பேரில் எழுதிய ஒரு சிறு பாடல்! சுவைத்து மகிழுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 





மிகமிக மிகமிக மெலிதாய் வார்த்த 

முரு முரு முறுவெனும் ரவையின்    தோசை 

கம கம கம வென வாசம் வீசி  

நெய்யில் மிதக்கும் நறுமணப் பொங்கல் 

சுறு சுறு சுறுவென உரைக்கும் ரசத்தில் 

மெது மெது மிருதுவாய் ஊறிய  ரசவடை 

சிவ சிவ சிவ சிவ சிவப்பு நிறத்தில் 

பொடி மேல் தடவிய  தட்டு இட்டலி 

தேங்காயத் துகளும் கொத்து மல்லியும் 

தூவித் தெளித்த  தோசை இவற்றை 

பல பல பல பல சட்டினி வகையுடன் 

சாம்பார் சேர்த்து சாப்பிட் டானபின்  

கொதி கொதி சூட்டில்  கொதித்திடும் பாலுடன் 

கரு கருக்  கொட்டை வடிநீர் கலந்து 

சர் சர் சர் என நுரை வர ஆற்றி 

சுடு சுடு சுடுவென டிகிரிக் காபி 

குடித்து முடிக்கையில் கூடிய  தின்பம் 



Dec 13, 2025

இன்னும் கொஞ்சம் ----

இன்னும் கொஞ்சம் ---- 


இன்னும் கொஞ்சம் ----

அன்பை வெளிப்படுத்தவும், கருணையைக் காட்டவும் , உதவி செய்யவும், பிறர் நமக்குச்  செய்த உதவிகளுக்கு  நன்றியைத் தெரிவிக்கவும் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்டு பின் நினைத்து வருந்துவது என்பது நம்  அனைவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒன்று. நாம் செய்ய நினைத்து , செய்யாமல் தள்ளிப் போட்ட சிலவற்றை செய்யவே முடியாமல் போய்விடுமுன், இன்றே, இப்போதே, செய்துவிடலாமே !

அன்புடன் 

ரமேஷ்  




என்னைப்   பெற்ற தந்தையும்  தாயும்  

முன் அவர் தனியாய் வாழ்ந்த போதிலும் 

பின்னென் னுடனே சேர்ந்த்திருக் கையிலும் 

------------இன்னும் கொஞ்சம் நேசமும் நெருக்கமும் 

------------காட்டி இருக்கலாமோ 

------------என் அன்பை அவர்க்கு நன்றாய்த் தெரியச்    

------------செய்தி ருக்கலாமோ 


இன்வாழ்வுப் பொருள்* எதுவும் வேண்டாம்       * luxury goods 

என்றுரைத்தே அவர் ஏற்க மறுத்தாலும்

என்னால் அந்நாள்  இயன்ற வரையில்      

------------இன்னும் கொஞ்சம் ஏதேனும் நான் 

------------செய்திருக்கலாமோ?

 ------------இன்னும் அவர்க்கு வாழ்க்கை வசதிகள் 

------------சேர்த்திருக்கலாமோ?  


நெருங்கிய நண்பர் அருகில் இருந்தும் 

நேரே  சந்தித் துரையாடாமல் 

இணைய தளத்தில் இணைவதைக் குறைத்து O

------------இன்னும் கொஞ்சம் தடவைகள் நேரில் 

------------பார்த்திருக்கலாமோ ?

------------அவர் கூட நடந்து  நினைவில் நெகிழ்ந்து கை 

------------கோர்த்திருக்கலாமோ? 


என்னிடம் உதவி கேட்டு அணுகிய 

முன்பின் அறியா முகங்களுக்கும்

அன்புடன் இருந்த உறவுகளுக்கும்    

------------இன்னும் கொஞ்சம் கூட உதவிகள் 

------------செய்திருக்கலாமோ? - அவர்

------------முகத்தில் புன்னகை இன்னும் கொஞ்சம் 

------------சேர்த்திருக்கலாமோ?


நானின் றிப்படி நலமாய் இருப்பதற் 

கேணிப் படியாய்  இருந்து உதவிய 

மானுடர் பலராம்; நன்றி அவர்க்காய் 

------------இன்னும் கொஞ்சம் நெஞ்சில்மட்டேனும்  

------------நினைத்திருக்கலாமோ?

------------நேரில் சென்றென்  நன்றிக்  கடனை 

------------*நேர்ந்திருக்கலாமோ?                 


என்னை ஈன்ற தாய்தந்தை யுமே  

இன்னுயிர் நீத்தின்  றிறையடி சேர்ந்தபின் 

இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாம் 

என்றே நினைந்து  நொந்தால் பயனென்?


இன்னும் கொஞ்சம் செய்தி ருக்கலாம் 

என்றே  தோன்றும் எதையும் கூட 

பையச் செய்வோம் என்றே நினைப்பின் 

ஐயோ அதனைச் செய்யும் காலம் 

கையை விட்டுக் கடந்தே சென்று 

நைதல்*  மட்டும்    நிலைக்கும் !  அதனால்                 * மனம் வருந்துதல் 


"இன்னும் கொஞ்சம்"  என்றே தோன்றும்   

எதையும்    இன்றே செய்தல் நன்றாம் ! 















Nov 18, 2025

பிரதோஷப் பாடல் - 51

பிரதோஷப் பாடல் - 51

சில நாட்கள் முன்பு, எனது பிரதோஷப் பாடல் தொகுப்பின்  50 தாவது பாடலாய் பதிவு செய்து, அதனையுடன் இந்தத் தொகுப்பை  நிறைவு செய்வதாகக் குறிப்பிட்டிருந்தேன் . 

ஆனால்  நேற்றைய பிரதோஷத்தன்று மீண்டும் நாகலிங்கேஸ்வரசர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்கையில் மனதில் எழுந்த  ஒரு பாடல் இது!

எல்லாம் அவன் செயல்!

அன்புடன் 

ரமேஷ்  




அஞ்சுதலை அரவம் படமெடுத்துக்  குடைபிடிக்க 

நஞ்சுண்ட கண்டனதன் அடியமர்ந்து அருள்புரிய 

அஞ்சுதலை விலக்கி அவன்பாதம் பணியுங்கால் 

செஞ்சிட்ட பாவங்கள் பஞ்சுபோல் பறந்தோடும்! 


Nov 1, 2025

தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

உடலில் தங்காத கழிவுகளுக்கு தங்கத்தில் பாத்திரம்!

இன்று   (1-11-2025)டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி!

முழுவதும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர்க்கலம் ( toilet cistern ) புகழ் பெற்ற Sotheby என்னும் ஏலம் விடும் நிறுவனத்தாரால் ஏலம் விடப்பட இருக்கிறது! 

இதை அந்த நிறுவனம் " கலையின் வெளிப்பாட்டிற்கும் வணிக மதிப்பிற்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய கூர்மையான விமர்சனம் " (an incisive commentary on the collission of artistic production and commodity value ) என்று விவரத்திருக்கிறது !படிப்பவர்க்குப் புரிந்தால் சரி!

ஏலத்தின் ஆரம்பத்  தொகை சுமார் 90 கோடி ரூபாய்! இதற்கு மேலும் பணம் கொடுத்து வாங்கத்  தயாராக இருக்கும் பைத்தியக்காரப் பணக்காரர்களும் இருப்பார்கள்தான்!

இது குறித்து ஒரு குறும்புக் கவிதை - லிமெரிக் வடிவில்- படித்துச் சிரிக்க !

அன்புடன் 

ரமேஷ் 




தங்கத்தாலே செஞ்ச ஒரு பாத்திரம் 

கழித்திடவே தினம் மலஜல மூத்திரம்!

விடு வாராம்  ஏலம்!

உலகம் போற கோலம்!!

நினைச்சாலே பொங்கிவருது ஆத்திரம்!