Search This Blog

Apr 28, 2020

ஜெய ஜெய சங்கர ! - ஒரு மறுபதிவு.


ஜெய ஜெய சங்கர ! - ஒரு மறுபதிவு.

இன்று சங்கர ஜெயந்தி - 
ஆதி சங்கரர் அவதரித்த நாள்!
சில வருடங்களுக்கு முன் எழுதிப் பதித்த  இந்தப்  பாடலை  மீண்டும் பதிப்பிக்கிறேன்!

அன்புடன் 
ரமேஷ் 




வரைந்தவர் : ரமேஷ் 



நிறைநீர்   நெற்றியன்    மறைஉரை   பெற்றியன்
பிறைமுடி   தரித்தவனின்   பெயர்பெற்றவன்.
சிறுபரு   வத்திலே உறவுகள் அறுத்துப்பின்
துறவறம்   பூண்டிட்ட   முனிபுங்கவன் .


ஆத்மாக்கள்  பரமனும்   ஜீவனும்   ஒன்றென்ற
அத்வைத   தத்வத்தை   போதித்தவன் .
பௌத்தரையும்   ஜைனரையும்  வாதித்து  வென்றதால்
இந்துமத  மேன்மையை  சாதித்தவன் .


வேதங்கள்   அறிந்ததன்  சாரங்களைப்  பிழிந்து
கீதகோ  விந்தமாய்  கற்பித்தவன் .
காதங்க  ளைக்கடந்து  நாடெங்கி  லும்நடந்து
சங்கர   மடம்நான்கை   நிறுவிட்டவன் .

புலையன்   உருவில்வந்த   மலையன்  கண்திறக்க
மாநீஷ   பஞ்சகப்  பாப்புனைந்தவன் .
கைலயங்   கிரிசென்று   ஈசனைப்   பூசித்து
சௌந்தர்ய   லகிரியைப்    பெற்றிட்டவன் .


காஞ்சிபுரி   வந்திருந்து   காமாட்சி   யைத்தொழுது
கோவிலில்   ஸ்ரீசக்ரம்   ஸ்தாபித்தவன் .
சர்வங்க்ய   பீடத்தில்   குருவாக   வந்தமர்ந்து
அடியார்கள்   மனமெங்கும்   வ்யாபித்தவன்.

பாமரர்க்கும்   புரியும்வண்ணம்  பக்தித்   தோத்திரங்கள்
பாவடிவில்   பண்ணுடன்   புனைந்திட்டவன் .
நேமமிகு   பண்டிதரும்   படித்தறிந்து   பண்படவே
பாஷ்யங்கள்  பலப்பலவும்   தந்திட்டவன் .

தாமரைக்  கண்ணினள்  காமாட்சி அருள்பெற்று
காமகோடி   மடம்   உருவாக்கினான் .
நாமெல்லாம்  சேமமுற   நல்வழிகள்   காட்டியபின் 
மோட்சபுரி   காஞ்சியிலே  சித்தியடைந்தான்.

Apr 27, 2020

வாழ்க்கையின் நிதர்சனங்கள் !

வாழ்க்கையின் நிதர்சனங்கள் ! 

இந்தக்  கவிதை வடிவக் கதையைப் படியுங்கள்!
பின் சிந்தியுங்கள்.!

என்னதான் நம் சிந்தனைகள் உயரப் பறந்தாலும் , செயல்கள் அவற்றை  முழுதும் சார்ந்து இருப்பதில்லை!


இதுதான்  நிதர்சனம்!


அன்புடன் 


ரமேஷ் 



விடியற் காலை எந்தன்  கனவில் 
----------கடவுள் வந்தாராம்.
அடியவன் எனக்கு இருகர முயர்த்தி 
----------ஆசிகள் அளித்தாராம் 

"அன்பா உந்தன் பக்தியி னால்நான் 
----------மிகவும் மகிழ்கின் றேன் 
என்ன வேண்டுமென நீயெனைக்  கேட்டால் 
----------வரமொன் றளித்திடுவேன் "

என்றவர் சொன்னதும் எதைக்கேட் பதுவென 
----------எனக்குத் தோன்றவில்லை .
எனினும் சிற்சில நிமிட நேரங்கள் 
-----------சிந்தித் தேஉரைத்தேன் .

"தங்கவே வீடும்  வங்கிப் பணமும், 
----------தங்கம் வெள்ளியுடன்  
பங்கம் இல்லா வாழ்க்கை நடத்த 
----------அனைத்தும் அளித்துவிட்டாய் .

எல்லாப் பொருளும் எந்தன் ஒருவன் 
----------தேவைக்கும் மேலாக 
உள்ளது; அதனால் பணம் பொருள் எதையும் 
----------உன்னிடம் நான்வேண்டேன் .

அத்தனை சுகமும் மொத்தமா யிருந்தும் 
----------ஒருகுறை உண்டெனக்கு.
சுத்தமாய் மனதில் அமைதியே இல்லை, 
----------அதைநீ அளித்திடுவாய்! "

எனநான் உரைத்ததை இறைவனும் 
----------கேட்டு இவ்வாறே உரைத்தான்  
' உனக்கு வேண்டும்  உள்ள அமைதியை 
----------நிச்சயம் அளித்திடுவேன்.

ஆனால் அதன்முன் நிபந்தனை ஒன்றை 
----------நானும் விதித்திடுவேன் .
தேவைக் கதிகமாய் நானுனக் களித்த 
----------செல்வம் மொத்தத் தில் 

வேண்டிய அளவை மட்டும் விட்டு 
----------மிகுதியை எடுத்திடுவேன்  
வேண்டும் அமைதியை அதற்குப் பதிலாய் 
----------உனக்கே அளித்திடுவேன்"

இதனைக் கேட்டு என்ன சொல்வதென 
----------பதைத்தே போய்விட்டேன் .
பதிலைக் கேட்க  இறைவனும் சிறிது 
----------நேரம் பொறுத்திருந் தான்.

மனதில் அமைதி வேண்டு மென்றாலும் 
----------ஆசை விடவில்லை! 
எனது எனது எனநான் சேர்த்ததை   
----------இழந்திட மனதில்லை!

இரண்டும் வேண்டும் என்றே இறைவனைக் 
----------கேட்கத் தோன்றியது.
இறைவனும் சிரித்து என்மன மறிந்து 
----------இயலா ததுவென்றான்.

சொல்வது என்ன என்றே இதயம் 
----------குழம்பி  நிற்கையிலே 
நல்ல வேளையாய் கனவும் கலைந்து 
----------நானும் விழித்திட்டேன் .

இந்தக் கனவு இன்னும் ஒருமுறை 
----------எனக்கு வர வேண்டாம்!
வந்தது உனக்கு என்றால் அதற்கு 
----------உன்பதில் எதுவாகும் ?





.






Apr 21, 2020

கொரானா கவிதை - 13- தேவை -- தொடர்ந்து கவனம்

கொரானா கவிதை - 13

தொற்று நோய் பரவும் வேகத்தைக் கணிக்க  R0 என்ற ஒரு விகிதத்தை பயன்படுத்துகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் , இது ஒன்றுக்கு குறைவாக இருந்தால் நோய் பரவுதல் தடுக்கப்பட்டு விட்டது  பொருள்.
ஒன்றுக்கு மேல் இருந்தால், நோய் பரவிக்கொண்டிருக்கிறது என்று பொருள். எவ்வளவுக்கு எவ்வளவு ஒன்றுக்கு மேல் இருக்கிறதோ, அவ்வளவு நோய்  பரவும் வேகம் அதிகம் என்று கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இந்தியாவில் 1.75 ஆக இருந்த இந்த விகிதம், ஏப்ரல் 16 ல் 1.55 ஆகக்  குறைந்து இருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
இது மற்ற பல நாடுகளை விட குறைவாக உள்ள விகிதம்!
தொடரும் ஊரடைப்பால் , இது இன்னும் குறையலாம்!
ஆனால் இதை எண்ணி நாம் கவனக் குறைவாக  ஆகிவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் முகமாக ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 

தேவை -- தொடர்ந்து கவனம்

( "தான தான தான தான தான தான தானனா " என்ற மெட்டில் படித்தல் சிறப்பு )

ஆ(ர்)ரு  நாட்டு*  என்ற  விகிதம்  இன்று  இந்தி  யாவிலே
வேறு   நாட்டை  விடவும்  மிகவும் குறைந்த  தாக  இருப்பினும்
ஊரு  அடங்கு  உத்  தரவை மாற்றி  விலக்கும்  பொழுதிலே
தாறு மாறாய் எகிரிப் போக வாய்ப்பு நிறைய உள்ளதால்

தூரம் காக்கும் விதி  முறையை தூரத்  தூக்கிப்  போடாதே!
காரு பஸ்ஸு  ரயிலி  லேறி  ஊர் முழுதும்  சுத்தாதே!
கறியும்  காயும்  வாங்க  வேண்டி  கோயம்  பேடு  போகாதே!
எரிந்து கொண்டு  இருக்கும்  நெருப்பில் எண்ணையை  நீ  ஊற்றாதே!

முறைமை**  ஏற்று    நிறைய   நாட்கள் இன்னும்  இருத்தல்  தேவையே!
பொறுமை யோடு  இருத்தல்  நீங்கள்  செய்யும்  பெரிய  சேவையே!

* ஆர்(ரு) நாட்(டு) = R nought , R0 = தொற்று னாய் பரவும் வேகத்தைக் குறிக்கும் விகிதம்
** முறைமை = அரச நீதி, ஒழுக்கம் 

Apr 20, 2020

பிரதோஷப் பாடல் - 32

பிரதோஷப்  பாடல் - 32

திருவலிதாயம் 








இறைவன் - ஸ்ரீ வலிதாய நாதர், ஸ்ரீ வாலீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ தாயம்மை, ஸ்ரீ ஜகதாம்பிகை
தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்
தல விருட்சம் - பாதிரி, சரக்கொன்றை

இன்றைய  பிரதோஷப் பாடல் சென்னைக்கு அருகே இருக்கும்  பாடியில் அமைந்திருக்கும் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பற்றியது.
என்னுடைய பிரதோஷப்  பாடல்களை தவறாமல் படித்து ஊக்குவித்து வரும் கல்லூரி  நண்பர் ராமகிருஷ்ணனின் தூண்டுதலால் இந்தத் தலத்தைப் பற்றிய தகவல்களை படித்தறிந்து எழுதிய பாடல் இது.

வலியன் என்று கூறப்படும் கரிக்குருவியாக உருவெடுத்து , இந்தத்  தளத்தில் இறைவனை வழிபட்டு பரத்துவாச முனிவர் சாபவிமோசனம் அடைந்ததால் இன்திருவலிதாயம் என்ற பெயரைப் பெற்றது.

இது பற்றிய முழு தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்.


இதுபோல திருவிளையாடல் புராணத்தில் கரிக்குருவி ஒன்றுக்கு இறைவன் அருளிய வேறு ஓர் கதையும் உண்டு! 

அது பற்றிய பாடல் பின்னொரு நாளில்.

அன்புடன் 

ரமேஷ் 


திருவலிதாயத் தலப் பாடல்

பிருஹஸ்பதி பெற்றமகன் பரத்து வாசன்
----------பிரம்மனிடம் தான்பெற்ற சாபம் ஏற்று
கருநிறச் சிறுபறவை வலியன் என்னும்
----------கரிக்குருவி உருவெடுத் திவ்வுலகை  அடைந்து
வருடம்பல  உருண்டோடிச் சென்ற பின்னே
----------இத்தலத் தேயுறையும் இறையருளி  னால்
உருமாறி உய்ததால் இத்தல முமே
----------திருவலி தாயமெனப் பெயர்பெற்ற தாம் 

Apr 19, 2020

வியாபார தந்திரம் ?--கொரானா கவிதை - 12

வியாபார தந்திரம் ?

கொரானா கவிதை - 12

சிறுவயத்தில் நான் பார்த்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
அந்தப் படம் "சபாஷ் மீனா".
இந்த வயதொத்த அனைவரும் அதை பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அந்தப் படத்தில் வேலையில்லாத கதாநாயகன் , பைழைக்க ஒரு நூதனமான வழியொன்றைக் 
கடைப்பிடிக்கிறான்.
அவனுடைய கூட்டாளி முதலில் சென்று கல்லெறிந்து வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை 
உடைத்துவிட்டு ஓடி விடுவான்.
சற்று நேரம் கழித்து கதாநாயகன் வந்து அதை பழுது பார்த்து பணம் சம்பாதிப்பான்.
கீழ்க்கண்ட செய்தியைப் படித்தவுடன், எனக்கு இந்தப் படம்தான் நினைவுக்கு வந்தது!

செய்தி :
கொரானா னாய் பரவுதலைத் தடுக்க முகமூடி, உடற்கவசங்கள் முதலிய பாதுகாப்புப் 
பொருள்களும், நோய்  உண்டா எனக் கண்டுபிடிக்கும் சோதனைக்கு கருவிகளும் 
மிகப்பெரிய அளவில் சீனாவில் இருந்து வாங்கப்படுகின்றன.
இதுகுறித்து ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 

பாடல் :

இலவசமாய் நோயொன்றை ஏற்றுமதி செய்தவனே
பலகோடி முகமூடி உடற்கவசம் இவற்றுடனே 
இலட்சக் கணக்கினிலே  சோதனைக்  கருவிகளை
விலைக்கு விற்கிறான் பார்.

  

Apr 16, 2020

புன்னகை நோய் ! -கொரானா கவிதை 11

புன்னகை என்னும்  ஒரு தொற்று நோய் - 
புன்னகையும் ஒரு தொற்று நோய்தான்!
எதிரே வருபவர் , தெரிந்தவராயினும் சரி  , தெரியாதவராயினும் சரி , பார்த்து ஒரு புன்னகையை வீசுங்கள்! நிச்சயம் அது அவர் முகத்திலும் தொற்றிக் கொள்ளும். 

அன்புடன் 

ரமேஷ் 


கிட்டே  வந்து தொட்டால் மட்டும் 
தொற்றும் நோயை முற்றும் விலக்கி 
எட்ட இருந்தே தொற்றிக்  கொள்ளும் 
புன்னகை நோயைப் பரப்பி  வளர்ப்போம்.

Apr 14, 2020

சார்வரி ஆண்டு வேண்டுதல்கள்



சார்வரி ஆண்டு வேண்டுதல்கள்

விகாரி  ஆண்டு முடிந்தது நேற்று
முகாரி ராகப்  பின்னணி யில்.
  
கொரானா நோயின்  கூரம்பு 
சரசர வெனநமைத் தாக்கையிலே 
கண்ணால் காண முடியாத  
கிருமியின் கோரத் தாண்டவத்தால்
எண்ணொ னாத்துயர் நிறைந்தெங்கும் 
கண்ணீர் வெள்ளம்  பெருகுகையில் 
வருகுது புதிய ஆண்டின்று 
சார்வரி  யெனும்  பெயருடனே !

வரவேற் புரையை  வாசிக்க  
வார்த்தைக ளெதுவும்  தோன்ற லையே!

சார்வரி என்னும் வார்த்தைக்கு 
வீறி யெழல்எனத் தமிழ்ப்பெயராம்.  
தீரா நோயை  ஒழித்திடவே 
வீறுகொண் டனைவரும் எழுந்திடவும் ,
சமூக விலகல் நிலைமாறி 
சுமூக நிலையும் திரும்பிடவும் 
நீர்நிலை நிரம்பிட மழைபொழிந்து 
ஏர்முனை இயக்கம் சிறந்திடவும் 
சீர்குலைந் திருக்கும் நிலைமாறி 
பொருளா தாரம் நிமிர்ந்திடவும்
கண்ணால் காணாக் கிருமியினால்- இன்று   
கற்கும்  பாடங்கள்   நிலைத்திடவும்  
கண்ணில் தெரியா இறைவனையே- நம்  
மனதில் இருத்தி வேண்டிடு வோம். 

அன்புடன் 
ரமேஷ் 
www.kanithottam.blogspot.com








விகாரி = எழில்மாறல்
சார்வரி = வீறியெழல்



Apr 12, 2020

கொரானாவுக்கும் கருணை உண்டோ? - கொரானா கவிதை - 10

கொரானாவுக்கும் கருணை உண்டோ? - கொரானா கவிதை - 10

உலகையே ஆட்டிப் படைக்கும் இந்த நோய் சிறுவரையும் , பெண்களையும் குறைவாகவே பாதிக்கிறது!
வயதானவர்களைத் தாக்கும்போதும், ஏற்கனவே நோய்வார்த்திருப்பவரையே அதிகமாக் குறி வைக்கிறது!

இது பற்றி ----

அன்புடன் 
ரமேஷ் 


கொலைகாரக் கரோனாவுக்கும் கருணைமுகம் ஒன்றுளதோ?

மழலைகளை சீக்கிரமே மீள விடுகிறது!
தாய்குலத்தைத் தாக்குவதில் தீவிரம் காட்டவில்லை!
நோய்பட்ட முதியோரை நமனுலகுக்  கனுப்புவதும் 
நீள்நாட்கள் படுகின்ற  நோய்த்துயரை நீக்கிடவோ?
இளைஞர்  நடுவயதோர் இவர்களையே தேர்ந்தெடுத்து 
சமபலத் தோருடனே சமர்செய்யும் செயலாலே 

கொலைகாரக் கரோனாவுக்கும் கருணைமுகம் ஒன்றுளதோ?





Apr 10, 2020

இனிமையான எழுபத்தி ஐந்து !

 இனிமையான எழுபத்தி ஐந்து !

என்னுடைய சம்பந்தி திரு.வெங்கடராமனின் 75-ஆவது பிறந்த நாளன்று எழுதிப்  படித்த வாழ்த்து மடல்.

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு : என்னுடைய கவிதைகளின் தொகுப்பின் முழுமை கருதி , இந்த பதிவை இந்தத்  தளத்தில் பதிக்கின்றேன். ஆனால் இதனை முகநூல், மின்னஞ்சல் இவைகளில்   பகிரவில்லை.

எழுபத்து ஐந்தை எட்டி இருக்கும் 
கெழுதகை நண்பர் வெங்கட்ராம்!
பழுதெதும் இல்லா உடல்நலத்தோடு 
பலநாள் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் 

தொழில்நுட் பம்பல  செயல்முறை ஆக்கச்  
செய்யும் முயற்சிகள் சிறப்புறவே - நீ 
வழிபடும் தெய்வங்கள் துணையாய் நின்று 
வெற்றியை அளிக்க வேண்டுகிறேன்.

நிலத்தடிக்  கரியை கல்நெய்* ஆக்கும்    
வழிமுறை தேடி நீபுரியும் 
பலநாள்  முயற்சிகள் யாவுமிவ்வாண்டு 
பலனைத் தரவே இறை அருள்க.

சிகைநரைத் தாலும் நகை நரைக்காத 
முகத்தில் சேர்த்த முறுவலுடன் 
நகைச்சுவை உணர்வை நாளும் வளர்த்து 
நண்பர்க ளோடு பகிர்ந்திடுக.

தடைகளை உடைக்கும் திடமிகு மனதை 
விடைவா கனத்தான் அருளிடுக !
உடலுறை குறைகள் உடன்விடு படவே 
உமையொரு பாகன் உதவிடுக !

அன்புடன் 

ரமேஷ் , வர்தினி 


* கல்நெய் = diesel / petrol




Apr 8, 2020

மன அமைதி

மன அமைதி

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

கோவில் சென்றேன் கும்பிட்டு வந்தேன்
நாவால் மந்திரம் ஓதி முயன்றேன்
பாவால் பாடித் துதித்துப் பார்த்தேன்
பூவால் பூசைகள் செய்யவும் செய்தேன்
தாவித் தாவிக் குதித்தே ஓடும்
பாவி மனதெதிலும் நிலைப்பது இல்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

புத்தகம் பலவும் புரட்டிப் படித்தேன்
வித்தகர் பலரிடம் விளக்கம் கேட்டேன்
மெத்தனம் விட்டு காலையில் எழுந்து
சத்தம் சிறிதும் இல்லா வேளையில்
நித்தமும் தியானம் செய்ய முயன்றேன்
சித்தம் எதிலும் நிலைத்திட வில்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

கண்களை மூடிக் காட்சிகள் மறைத்தேன்
செவிகளை மூடி சத்தம் தவிர்த்தேன்
ஏறுதல் ஆறுதல் ஊறுதல் பழகி*
நாசியின் மூலம் ஸ்வாசம் செய்தேன்
வாயினை  மூடி வார்த்தைகள் விடுத்தேன்
ஆயினும் அமைதி அகப்பட வில்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

என்னையே  மூடி எதுவும் மனதில்
நில்லா திருக்கும் நிர்மல நிலையை
என்று அடைவேன் எப்போ(து) உய்வேன்?
அன்றே அடைவேன் பிறவிப் பயனை !

* ஏறுதல், ஆறுதல், ஊறுதல் = மூச்சை உள்ளிழுத்தல், தங்கவைத்தல், வெளிவிடுதல் 


 

Apr 4, 2020

கொரானா கவிதை - 9 - தினக்கூலி, வீட்டுவேலைத் தொழிலாளர்கள் குரல்

கொரானா கவிதை  - 9
தினக்கூலி, வீட்டுவேலைத்  தொழிலாளர்கள் குரல் 

இப்போதைய தனிப்படுத்தலால் எல்லோருக்கும் துயரம் என்றாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வீட்டுவேலை செய்வோர்  , தினக்கூலித் தொழிலாளர் ஆகியோரே!

கொரானா  இங்கு நுழைந்ததிற்கு இவர்கள் எந்த வகையிலும்  காரணமல்ல!
இவர்களுடைய கேள்வி   - இதற்கு காரணமான மற்றோரை நோக்கி!

இது பற்றி எனது கல்லூரித் தோழர் வரதராஜனது மகள் எழுதி, அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட ஆங்கிலக் கவிதையை மூலமாக வைத்து, நான் எழுதிய பாடல் .


அன்புடன்

ரமேஷ் 


மூச்சுக்கு ஒருமுறை எனையழைக்கும் உந்தன்
பேச்சுக்கு மறுபேச்சு இன்றிநான் உழைத்தேன் 
இரைதேடி அதிகாலை வெளிச்சென்ற பறவை 
இரவிலே இசைபாடி பின்திரும்பும் வரையில்  
உன்னோடு நிழலாக உன்பின் இருந்து 
சொன்னதைச் செய்து துரும்பாய்நான் தேய்ந்தபின் 

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென  பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!

திரைகடல் கடந்தாய் திரவியம் சேர்த்தாய் 
விரும்பிய வழியெலாம் வீண்செலவு செய்தாய்!
வரைமுறை ஏதின்றி வாழ்க்கையைக் கழித்தாய் 
திரும்பநீ வருகையில் கிருமிகள் கொணர்ந்தாய்!
மருத்துவ மனைசென்று சோதனைகள் செய்தே 
திருத்தங்கள் செய்துவுன்  வேதனை விடுத்தபின்  

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் ! 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!


சிறியதோர் குடிலிலே எங்கள் குடும்பம் 
வறுமையின்  பிடியிலே வாடுகிறோம்   நிதமும்  
என்னுடைய மக்கள்  என்றுமெனைச்  சுற்றி , 
என்னுடைய தாய்தந்தை என்கையைப் பற்றி.
நாள்தோறும் எங்களது வாழ்வேயோர் வேள்வி. 
நாளையென் செய்வோம் என்பதே கேள்வி. 

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!

மாகாணம் விட்டு மாகாணம் வந்து 
நீகாப்பாய் நன்றாய் என்றுன்னை நம்பி 
உனக்காக உழைக்கின்ற தினக்கூலி மக்கள் 
சோகாத்து இந்நாள்  வாடுதல் சரியோ?
ஏகாந்த மாகநீ உள்ளொளிந் திருக்க 
தேகாந்த நிலையவர்கள் அடைவதும் முறையோ?

----------இன்றுநீ என்னையென் வீட்டுள் அடைத்தாய் 
----------என்றுவெளி வருவதென பின்சொல்வே னென்றாய் 
----------சுவர்நான்குக் குள்ளேநான் சிறைப்பட்டிருக்க 
----------தவறென்ன செய்தேன்? விவரங்கள் கூறு!













Apr 2, 2020

கொரானா கவிதை - 8

கொரானா கவிதை  - 8

இந்த வலுக்கட்டாய கொரானா தனிப்படுத்தலின் பொது ஒரு சிறிய லிமெரிக் - சுத்தத்தை வலியுறுத்தி!

அன்புடன் 

ரமேஷ் 

கை கழுவ  உதவு கின்ற  சோப்பு 
நமக் கின்று மிகப் பெரிய  காப்பு 

செஞ்சிடுவோம்   சுத்தம்
பலதடவை    நித்தம்

அடிச்சுடுவோம்  கொரானாக்கு ஆப்பு!

Apr 1, 2020

கொரானா கவிதை -7

எச்சரிக்கை!
கொரானா கவிதைகள் தொடர்கின்றன!
கொரானா அபாயம் தொடுறுமட்டும் , இந்தக் கவிதைகளும் தொடரும்!
கொரானாவே மேல் என்று தோன்றுகிறதோ?

அன்புடன் 
ரமேஷ் 



கொரானா கவிதை -7

போய்விடு போய்விடு என்று
-----பெருங்குரல் எடுத்து நாமே
கூவினால் மட்டும்   ஓடிப்
-----போகுமோ இக்கொடும் நோய்?
கோவிடு பத்தொன் போதை*           
-----காணாமல் போகச் செய்ய
நீவிடுக் காதே வீட்டை
-----விகாரி  முடியும் மட்டும் **.

*covid 19
** விகாரி வருடம்