Search This Blog

Jul 17, 2023

துரைராசுக்கு வாழ்த்து



துரைராசுக்கு வாழ்த்து 

எழுபத்து ஐந்தை எட்டி  இருக்கும் 
கெழுதகை நண்பா! துரைராசா!

சிகைநரைத் தாலும் நகை நரைக்காத 
முகத்தில் சேர்த்த முறுவலுடன்

சகநட் போடும் உறவின ரோடும் 
சேர்ந்து கொண் டாடிடும் இந்நாளில் 

பழுதெதும் இல்லா உடல்நலத் தோடுநீ  
பலநாள் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் 

தொழில்நுட் பம்பல  செயல்முறை ஆக்கச்  
செய்யும் முயற்சிகள் சிறப்புறவே - நீ
 
வழிபடும் தெய்வங்கள் துணையாய் நின்று 
வெற்றியை அளிக்க வேண்டுகிறேன்.
 

அன்புடன் 

உன் நண்பன் 

ரமேஷ்.

Jul 14, 2023

பிறந்த நாளும் பிரிந்த நாளும்

பிறந்த நாளும் பிரிந்த நாளும்

இந்தப் பதிவிற்கு முன்னுரை எதுவும் தேவையில்லை!

அன்புடன் 

ரமேஷ் 


பிறந்த நாளும் பிரிந்த நாளும் 


இணைந்து நானே பயணிக்கின்ற 

-----இரு தனி வாட்சப் இணையங்களில் 

இன்று கண்டது இரு நிகழ்வுகள் 

-----இரன்டுமென் நண்பரைப் பற்றியது.


ஒருவர்க் கின்று பிறந்த நாளாம் 

-----வாழ்த்துகள் அவருக்கு வழங்குமுன்னே  

இரண்டாம் இணையத்தில் வந்த செய்தியோ 

-----மற்றவர் மரணம் பற்றியது!


முதலாம் செய்தியைப் படித்து மகிழ்ந்த 

----- முறுவல் முகத்தில் மறையுமுன்னே

பதற்றம் அளிக்கும் பிறிதோர் செய்தியைப் 

-----படிக்க நேர்ந்ததே! என்னவிது?


பிறந்த நாளைக் கொண்டாடு பவர்க்கு 

----- வாழ்த் துரைத்த பின்னோடே 

பிரிந்த நண்பர் உறவினருக்கு 

-----வருத்த வார்த்தைகள் உரைத்தேனே!

 

மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வரும் 

-----வாழ்க்கை தருகின்ற பாடமிதாம்!


சுகித்தலும் சகித்தலும் ஒருகாசின் இரு 

-----பக்கங்களே! இதை அறிந்திடுவோம்!  





Jul 3, 2023

படைப்பின் தொடக்கம்?

படைப்பின் தொடக்கம்? 

சில நாட்களுக்கு முன்  சசி தரூரின் The Hindu Way என்ற ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் முதலாம் அத்தியாயத்திலே இந்தப் பிரபஞ்சம்  எப்படித் தோன்றியது என்ற மர்மத்தைப் பற்றி ஆராயும்  நாஸடீய ஸுக்தம் என்னும் ஒரு ஸ்லோகத் தொகுப்பைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இது ருக் வேதத்தின் ஒரு பகுதி. பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுதப்பட்ட இந்தப் பாடல் தொகுப்பிற்கும் இந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த BIG BANG என்னும் கோட்பாட்டுக்கும் இடையே  வியக்கத்தகு ஒற்றுமை  காணப்படுகிறது! 

முந்தியதோ தவ ஞானிகள் உள்ளுணர்ந்த உண்மை! சரஸ்வதி நதி தீரத்தின் கரையில் 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கார்ந்திருந்த ஒரு முனிவர் இரவு நேரத்தில் பல்லாயிரக் கணக்கான நடசத்திரங்கள் வான வீதியில் பவனி வருவதைக் கண்டார். உடனே இவை எப்படித் தோன்றின என்று ஞான திருஷ்டியில் கண்டார். அதை ஒரு பாடல் மூலம் வெளியிட்டார். அதுதான் நாசதீய சுக்தம் என்னும் துதி.

பிந்தைய கோட்பாடு அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சம்! இதை நம் முன்னோர்கள் அன்றே உணர்ந்திருந்தார்களா?

இது பற்றி மேலும் அறிந்துகொள்ள சில புத்தகங்களை படித்தேன். இந்த ருக்வேதப் பாடல்களின்   தமிழ்ப் பொருளை tamilandveda.com  என்ற blog ல் படித்தேன். லண்டன்  சுவாமிநாதன் என்பவரின் பதிவு அது. 

இந்த சுக்தத்தின் ஏழு பாட்லகளின் பொருளை மேற்குறிப்பிட்டுள்ள பதிவிலிருந்து எடுத்து கீழே கொடுத்திருக்கிறேன் . ஒவ்வொரு பாடலின் பொருளுக்குப் பின்னும் என் வார்த்தைகளில் பாடல் வடிவில் புனைந்திருக்கிறேன். 

படித்து உங்கள் கருத்தையும் பதியுங்களேன்!

அன்புடன

ரமேஷ் 



    

1.அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை; ஏதும் இருந்ததுமில்லை; இல்லாமலும் இல்லை. அப்போது விண்வெளியோ ஆகாயமோ இல்லை; அதற்குப் பின்னரும் எதுவுமே இல்லை. என்ன நேர்ந்தது? எங்கே? யார் இதைக் கவனித்தார்? ஆழம் தெரியாத அளவுக்கு அப்போது தண்ணீர் இருந்ததா?

உளதாம் தன்மையும் இலதாம் தன்மையும்           existence and  nonexistence -

உண்மையும் இன்மையும் அன்றங் கில்லை 

வெளியும் அதன்மேல் வானும் இல்லை 

எங்க திருந்தது? எதுவதை மறைத்தது?

-----அளவிட முடியா ஆழத்  தடியில்

-----உயிர்த்துளி உண்டோ? அறிவார் யாரோ? 


2.சாவு என்பதே அப்போது கிடையாது; மரணமில்லப் பெருவாழ்வு என்பதும் இல்லை. பகல் இரவு என்பதே இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உயிர்மூச்சுடன் இருந்தது; காற்றே இல்லாவிடினும் அது தனது சக்தியால் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதைத்தவிர எதுவுமே இல்லை.

இறப்பு என்பது அன்றங் கில்லை 

இறவாத் தன்மை என்பதும் இல்லை 

இரவெனப் பகலெனப் பிரிவினை இல்லை 

தானே தனித்துத் தன்னிறைவடைந்த 

-----ஒருவன் மட்டும் வெறுமையில் இருக்க 

-----வேறோர் எவரும்  அன்றங் கில்லை 

3.ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரோ! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது தவ சக்தியால், தவ (Heat) வெப்பத்தால் ஒன்று மட்டும் எழுந்தது (மாபெரும் வெடிப்பு BIG BANG இதுதான்)

இருளை இருளே போர்த்தி இருக்க 

இருளுள் உயிர்த்துளி ஒளிந்து கிடக்க  

அண்டம் முழுதும் அந்த காரமாய் 

வெறுமை எங்கும்  நிறைந்தே இருக்க

-----உருவம் இல்லா   அருவனாம் அவன் 

-----வெம்மையின் ஆற்றலால் உயிர்பெற் றெழுந்தான்

4.துவக்கத்தில் அதற்கு ஆசை எழுந்தது. அதுதான் மனதில் விதைக்கப்பட்ட முதல் விதை; ஒன்றுமே இல்லாததில் ஒன்று இருந்ததை ஞானத்தை நாடும் தெய்வீக கவிஞர்கள் கண்டார்கள்.

ஆதியில் எழுந்தது ஆசை என்பது 

அதுவே மனதில் விதையு மானது 

முதுபே  ரறிஞரின் தேடலி னாலவர் 

இதயத் துள்ளோர் ஒளி பிறந்தது 

-----உளதி லதென்ற விரண்டின் இடையிலே 

-----துலங்கும் தொடர்பும் தெரிய வந்தது.

5.அந்தக் கயிறு இணைப்பு- எங்கும் சென்ற து ஆனால் கீழ், மேல் என்று ஏதாவது அப்போது உண்டா? விதைகள் தூவப்பட்டன. எங்கும் சக்தி. உயிர்த்துடிப்பு மேலும் கீழும்.

சூனிய மான வெறுமையி னுள்ளே 

ஞானிகள் பார்வை நீண்ட போதிலே 

விருப்பத்தின் விதையினின் றெழுந்த சக்தியே 

விருட்சமாய் வளர்ந்து வெடித்ததை உணர்ந்தார்.

-----உள்ளே உள்ள மாபெரும் ஆற்றலே 

----வெளியே விரிந்தெங்கும் வியாபித் திருந்தது


6. யாருக்குத் தெரியும்? யார் இதைச் சொல்ல முடியும்? அது எப்போது தோன்றியது? இந்த படைப்பு என்பது எப்போது ஏற்பட்டது ?படைப்புக்குப் பின்னரே (நாம் இன்று வணங்கும்) கடவுளர் வந்தனர். அப்படி இருக்கையில் இது எப்போது தோன்றியது என்பதை எவர் அறிவார்?

படைப்பு முதலாய் நிகழ்ந்த  தெப்படி ? 

இடமும் நேரமும் அறிந்தவர் உண்டோ?

கடவுளர் தோன்றலும் படைப்பின் பின்னெனின் 

நடந்தது எதுவென யாரே உரைப்பர்?


7. எப்போது இந்தப் படைப்பு ஏற்பட்டது? அதுவே ஏற்பட்டதா? இல்லையா? யார் இதை மேலிருந்து கவனித்தாரோ அந்த ஒருவனுக்கே  அது தெரியும்; அவனுக்கே தெரியாமலும் இருக்கலாம்!


மூலமிப் படைப்பின் காரணம்*  எதுவோ?              *இப்படைப்பின் மூலகாரணம் 

காலமிந் நிகழ்வைக்* கணித்தவர் எவரோ?           *இந்நிகழ்வின் காலத்தைக் 

மேலிருந் தனைத்தையும் நோக்கிடும் ஒருவன் 

வாலறிவன் இதன் விடையறி வானோ?

-----ஒருகால் அவர்க்கும் இதுதெரி யாதோ?

-----புரியா மருமத்தின் விடைகிடை யாதோ?