Search This Blog

Feb 24, 2017

ஆனந்தத் தாண்டவம்

ஆனந்தத்  தாண்டவம்

இன்று சிவராத்திரி. 
தில்லையில் ஆனந்தத்  தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை வணங்கி 
ஒரு பாடல் -- 
அவர் திருப் பாதங்களில் சமர்ப்பணம்.

அன்புடன் 
ரமேஷ் 







விரித்த சடை; உடல் தரித்த நீறு ;    
சிரித்த செவ்விதழ் ;சீறும் செந்தீ
தெறித்து திரிபுரம் எரித்த நுதற்கண்;
உரித்த மதகஜத்  தோல் மேலாடை.

கடலைக் கடைந்த கயிறில் விளைந்த *  
விடத்தை உண்டு கருத்த கண்டம்;
கொடுவரித்** தோலை கட்டிய சிற்றிடை;  
விரிந்த தோள்கள்; பரந்த மார்பு.

அடிக்கும் உடுக்கை ஏந்திய ஒருகை;
சுடுமொளி  ஜோதியை ஏந்திய ஒருகை;
விடமுடை படவர# வணிந்த ஒருகை;            
அடிவிழு எனவர வணைக்கும் ஒருகை.

படுத்துக் கிடக்கும் அரக்கன் மேலே
எடுத்து வைத்து அமிழ்த்தும் வலக்கால்;
மடித்து உயர்த்தி மேலே தூக்கி
நடனம் புரியும் இன்னொரு இடக்கால்.

ஆக்கல் காத்தல் அதன்பின் அழித்துப்
போக்கல் மீண்டும் ஆக்கல் என்று
உலகை ஆட்டும் அலகில் நடனம்
தில்லையில் ஆடும் தேசனைப் பணிவோம்.


* மத்தாக இருந்த மந்தார மலையைக் கடையும் கயிறாக இருந்த வாசுகி என்னும் பாம்பு
**கொடுவரி - கொடும்புலி
# விடமுடை படவரவு= படமெடுக்கும் விஷநாகம்


Feb 22, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 12, 13 & 14

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 12,  13 & 14

இந்தப் பதிவில் 12,13,14 செய்யுள்களைப் பதிவு செய்கிறேன். இவை சென்ற இரு பதிவுகளில் விளக்கிய 9,10,11 செய்யுள்களுக்கு இணையானவை. முந்தைய செய்யுள்கள் செயல், த்யானம் என்ற இருவகை வழிபாடுகளையும்  அவற்றின் இணைப்பையும்  விளக்கின. இந்த மூன்று செய்யுள்கள், அதை போன்று உருவ  வழிபாடு, அருவ  வழிபாடு ஆகிவற்றின் தன்மைகள், வேறுபாடுகள், இணைப்புகள்  ஆகிவற்றை விளக்குகின்றன.

அன்புடன் 

ரமேஷ் 






மொழிபெயர்ப்பு  : *

யார் அரூபமாய் கடவுளை  வழிபடுகிறார்களோ , அவர்கள் காரிருளில் மூழ்குகிறார்கள். உருவமாய் வழிபடுவோர் , அதனினும் கொடிய இருளில் உழல்கிறார்கள்.

 இது பற்றி எங்களுக்கு விளக்கிய மகான்கள் " உருவ வழிபாட்டால்  கிடைக்கும் பலன் ஒருவிதமானது ; அருவ வழிபாட்டால்  கிடைக்கும் பலன் வேறு விதமானது " என்று கூறினார்கள். 

அருவ  வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ, அவன் உருவ வழிபாட்டால் மரணத்தைக் கடந்து, அருவ  வழிபாட்டால் இறைவா நிலையை அடைகிறான்.

Translation  : **

In dark night live those for whom the Lord
Is transcendent only.; in night darker still,
For whom he is immanent only.
But those for whom he is transcendent 
And immanent,  cross the sea of death 
With the immanent and enter into 
Immortality with the transcendent.
So we have heard from the wise.

விளக்கம் :*

தோற்றம் உள்ள நிலை , தோற்றம் இல்லாத நிலை, இரண்டிலும் இறைவனை வழிபடலாம். முதலாவது நிலை எளிதில் சாத்தியமானது. இரண்டாவது நிலை அவ்வளவு  சுலபமானது அல்ல; மிகுந்த உயரிய நிலையில் இருப்போருக்கே உரியது. தகுதியின்றி அம்முறையில் ஈடுபடுபவர், தங்களைத் தானே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். 

எனவே, மன இயல்புக்கு ஏற்ப , ஒரு தெய்வத்தை வழிபட ஆரம்பித்து , ஆன்மீகத்தில் முன்னேறி, மரணத்துக்கு காரணமான வினைப்பயன்களில் இருந்து விடுபடுகிறோம். இதன் பிறகே, இறைவனை உருவமற்ற நிலையில் வழிபடுவதற்காக தகுதியைப் பெறுகிறோம். இந்தத் தகுதியுடன் , அருவ வழிபாட்டில் ஈடுபட்டு, இறைவா நிலையை அடைகிறோம். 


பாடல்:

இறைவனை உருவமாய்ப் பலர் தொழுவார்
          அருவமாய் அவனைப் பிறர் தொழுவார்
உருவாய்த்  தொழுதல் முதற்படியே
          அருவாய் உணர்தல் அதன்பின்னே

ஒன்றை விலக்கி வேறொன்றை
           மட்டும் செய்தால் பயனில்லை
என்றே உரைத்தனர் சான்றோரே !
           நன்றாய் அதனை உணர்ந்திடுவோம் .

உருவிலன், குணமிலன் என்றாலும்
           கருதி அவனை வணங்கிடவே
உருவம் ஒன்று உண்டானால்
           உதவிடும் என்று உணர்ந்ததனால்

சக்தி ,திருமால், சிவன் என்று
           பற்பல உருவம் படைத்துப்பின்
பக்தியை அவ்வவ் உருவின்பால்
            ஒருமுகப் படுத்தித் தொழுதனரே!

உருவம் பற்பல என்றாலும்
            உள்ளுறை உட்பொருள் ஒன்றென்றே
அறிந்து உணர்ந்த தன்பின்னே
            அருவமாய் அவனை அறிவாரே!

உருவமாய் அவனை வழிபட்டே
          மரணக்  கடலைக் கடந்திடுவார்.
அருவமாய்  அதன்பின் வழிபட்டே
          அமரத்துவத்தை அடைந்திடுவார்.

உருவ அருவ  வழிபாடு
          இரண்டும் வேறு வேறல்ல
முறையாய் ஒன்றன் பின்னொன்றாய்
          இணைத்தே இறைவன் அடிசேர்வோம்.


*- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam


**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books

Feb 18, 2017

குறள் மேல்வைப்பு வெண்பா - 15

குறள் மேல்வைப்பு வெண்பா - 15

தர்மம் செய்தில் ஈடு இணையற்றவன் கர்ணன் என்பது நாம் அறிந்ததே. தன் உடலுடன் ஒட்டியுள்ள உயிர் காக்கும் கவசத்தை , மாறு வேடத்தில் வந்து யாசித்த இந்திரனுக்குத் யோசிக்காமல் அளித்தவன் கர்ணன். 

*கர்ணனின் கொடைப் பெருமையை அர்ஜுனனுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய கிருஷ்ணர், கர்ணன்  குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், மரணப் படுக்கையில் இருக்கும்போது, ஒரு அந்தணன் வேடமிட்டு வந்து யாசகம் கேட்டகிறார். மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் அந்த நேரத்திலும், இல்லை என்று சொல்ல மறுத்தான் கர்ணன். தன் வாயில் இருந்த  தங்கப் பற்களை உடைத்து , அவற்றைத் தானமாக அளித்த பின்னரே உயிர் நீக்கிறான் கர்ணன்.  

* Lord Krishna wanted to demonstrate to Arjuna the generosity of Karnan and how he does not say No to anyone asking for alms. When Karnan was lying in his death bed in Kurukshetra, he comes disguised as a Brahmmin and asks Karnan for alms. Loathe to return him empty handed, Karnan breaks a few of his artificial teeth which were of gold and gives it to the Brahmin, even as he was nearing death. 

ஒருவர் யாசிப்பதை, இல்லைஎனச் சொல்லாமல் , அவர் கேட்டதைக் கொடுப்பதால் தனக்கு ஏதும் கேடு நேருமோ என்பதையும் கருதாமல், அவர்கள் கேட்டதை அளிப்பவரே சிறந்த கொடையாளி. 
இத்தகையோர் , "பிறர் கேட்டதை தம்மால் கொடுக்கமுடியாது என்ற  நிலைமை வருமானால் , அதைவிட உயிர் நீத்தலே மேல் எனக் கருதுவர் " என்கிறார் திருவள்ளுவர்.

சாதலின் இன்னாத தில்லை இனிததுவூம்
ஈதல் இயையாக்  கடை.                                           (குறள் எண் 230; அதிகாரம் - ஈகை )


ஆனால் மரணப் படுக்கையிலும் இல்லை என்று சொல்லாத கர்ணனோ , இதைவிட ஒருபடி மேலாக அல்லவோ சென்றுவிட்டான்! 

இந்த வகையில்  ஒப்பிடும்போது, எவரும் கர்ணனுக்கு ஈடு இணை இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நிகழ்ச்சியை மேல் நிறுத்திய ஒரு குறள்  மேல்வைப்பு வெண்பா : 

மரணப் படுக்கையிலும் தானமெனக் கேட்டவர்க்கு
கர்ணன்தன் பல்லுடைத்து தங்கத்தைத்  தந்தானே!
சாதலின் இன்னாத தில்லை இனிததுவூம்
ஈதல் இயையாக்  கடை.
    English version of Rev. Pope
    'Ts bitter pain to die, 'ts worse to live                                                                                  For one who finds nothing to give
    English version of Suddhaanandha Bharathi
      Nothing is more painful than death
      Yet more is pain of giftless dearth.
    Meaning :
    Nothing is more unpleasant than death ; yet, even that is pleasant when there is nothing to give.

அன்புடன் 

ரமேஷ் 


Feb 16, 2017

கூவத்தூரில் குழுமியிருக்கும் -

கூவத்தூரில் குழுமியிருக்கும் ----


நீண்ட நாட்களாக கூவத்தூரில் குழுமி வெளியே வர மறுக்கும் சட்ட மன்ற உறுப்பினர்களை நினைத்தால் ஒரு புறம் கோபமும் ஒரு புறம் தமிழக அரசியல் இவ்வளவு கேவலமாக ஆகிவிட்டதே என்ற  அவமானமும் வருகின்றன.
தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியான  ஜல்லிக்கட்டைக் காக்க அமைதியாகவும், உறுதியாகவும் போரிட்டு நாட்டின் கவனத்தை ஈர்த்த தமிழகம் இன்று கேலிப் பொருளாக மாறிவிட்டது.
உறுப்பினர்கள் யாரை ஆதரித்தாலும் , தைரியமாக வெளியே வந்து அவர்கள் தொகுதி மக்களுக்கு தம் கருத்தையும் , அதற்கான காரணங்களையும்  கூறாமல் ஒளிந்து கொண்டு இருப்பது , பல விதமான சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.
இதற்கு எப்போது முடிவு?
அன்புடன் 
 ரமேஷ் 

கூவத்தூரில் குளிர்காற் றறையில்
------குழுமியிருக்கும் கோழைகளே!
கூவி மக்கள் கொடுக்கும்  குரல்கள் 
------காதுகளிலே விழவில்லையா?
ஏவல் செய்யும் அடிமைகளாகவே
------எத்தனை நாளின்னும் இருந்திடுவீர்?
காவலை உடைத்து வெளியே வந்து 
------மக்களுக்கே பதில் உரைப்பீர்.
சசியோ ப.செ.வோ யாருக்காயினும் 
------சுதந்திரத்துடன் செயல்பட்டு 
விசுவாசத்தை ஒட்டுப் போட்ட 
-------நாட்டு மக்கட்கே காட்டிடுவீர்.






Feb 11, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 11

ஈசாவாஸ்ய உபநிஷத்  - செய்யுள் 11

இந்தச் செய்யுளின் பாடல் விளக்கம் சற்று விரிவாக உள்ளது. இதை படிக்குமுன் சென்ற பதிவில் கூறப்பட்ட 9,10 செய்யுள்களை  மீண்டும் படித்து, அவற்றுடன் சேர்த்து புரிந்து கொள்ளுதல் நல்லது. 

இதற்கு வசதியாக, அந்த இணைப்பின் தொடர்பையும்  (links) இந்தப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.

அன்புடன்

ரமேஷ்.


ஈசாவாஸ்ய உப்பனிஷத் - செய்யுள் 11

மொழிபெயர்ப்பு : *

 செயல்கள்,தியானம், இரண்டையும் சேர்த்து எவன் அறிகிறானோ , அவன் செயல்களால் மரணத்தைக் கடந்து, தியானத்தால் இறைவா நிலையை அடைகிறான்.


விளக்கம் *

செயல்கள் தவிர்க்க முடியாதவை. பற்றின்றி செய்யப்படும் செயல்கள் , கடந்த பிறவிகளின் வினைப்  பலன்களை அழித்து , பிறப்பை அறுக்கின்றன . மரணத்தைக் கடந்து என்று கூறப்பட்டு இருப்பது , வினைப்பயனிலிருந்து விடுபடுவது என்பது.  முழுதும் விடுபட்டால் , அதன்பின் பிறப்பு இல்லை; அதனால் மரணமும் இல்லை. இதற்கு  அடுத்த நிலை தியானத்தின் மூலம் அமரத்துவத்தை அடைவது. 



English Translation **

But those who combine action with meditation,
Cross the sea of death through action
And enter into immortality
Through the practice of medidation.
So have we heard from the wise.

பாடல் :

பெயர் புகழ் கருத்தினில் கொள்ளாமல்
          விளைவெதை யுமெதிர் பாராமல்
உயரிய நோக்குடன் இணைத்தினிதாய்
          தவஜப  தானங்கள் செய்வதினால்

வினைப்பயன் விலக்கி மரணமெனும்
           முடியாக் கடலையும் கடந்திடுவார்.
மனமும் தூய்மை பெற்றுப்பின்
           தியானம் செய்யத் தகுதி பெரும்.

தூய்மை  துலங்கும் மனத்தினையே
           ஒருங்கே ஒருநிலைப் படித்துப்பின்
தியானம் செய்வதின் விளைவாக
           அமரத்  துவத்தை அடைந்திடுவார்!

இவ்வகை இருவழிச் சாதனைகள்
          ஒன்றோ டொன்று இணைந்ததுவே!
செவ்வனே இவற்றைச் செய்பவரே
          இறைநிலை தனையே   அடைவாரே .


ஒன்றை விலக்கி வேறொன்றை
           மட்டும் செய்தால் பயனில்லை
என்றே உரைத்தனர் சான்றோரே !
           நன்றாய் அதனை உணர்ந்திடுவோம் .
 
The link for slokas 9 and 10 -
http://kanithottam.blogspot.in/2017/02/9_3.html

   *- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books


Feb 7, 2017

எழுதாத டைரி - The Unwritten Diary- ( English version)

எழுதாத டைரி - The Unwritten Diary




I browse through my diaries of yester years,
Which I  had  bundled and kept in the loft.

The empty pages in them,
which are much more
Than the pages which have been filled up,
Stare at me

I also browse through,
In my mind,
The pages from my life
Of the years gone by.

Here too,
There are many pages,
Unfilled;
Spent without a purpose.

As I sit here thinking about it,
The pages of this year's diary
Kept on the table ,
Flutter in the wind,
Winking at me .

Will I fill these pages with writings
And my Life's remaining pages with meaning ?

Or

Will they both remain

EMPTY ?


Ramesh  ( kanithottam )
www.kanithottam.blogspot.in


for the tamil version go to
http://kanithottam.blogspot.in/2017/02/empty-pages-of-diary.html

எழுதாத டைரி ( The Empty pages of A Diary)

எழுதாத டைரி



கட்டி வைத்திருந்த
கடந்த ஆண்டுகளின்   நாட்குறிப்பேடுகளை
புரட்டிப் பார்க்கிறேன்!

எழுதி நிறைத்த  பக்கங்களை விட
எழுதாத வெற்றுப் பக்கங்களே அதிகம்!

எனது கடந்த வருடங்களின்
வாழ்க்கைப் புத்தகப் பக்கங்களை
மனதில்
புரட்டிப் பார்க்கிறேன்.

அவற்றிலும்

முழுமையாக வாழ்ந்து
நிறைத்த  பக்கங்களை விட
நிறைக்காத வெற்றுப்  பக்கங்களே அதிகம்!

மேசையின் மீது இருக்கும்
இந்த வருட நாட்குறிப்புப் புத்தகத்தின்
இன்னும் எழுதப்படாத ஏடுகள்
காற்றில் சிறகடித்து
என்னை நோக்கி
கண்களைச் சிமிட்டுகின்றன!.

அவைகளையும் ,

வாழ்வின் இந்த வருடப் பக்கங்களையும்

எழுதி நிறைப்பேனா?
எழுதாமல் கழிப்பேனா?


ரமேஷ் ( கனித்தோட்டம் )
www.kanithottam.blogspot.com

ஆங்கில மொழி பெயர்ப்புக்கு கீழ்கண்ட பதிவைப் பார்க்கவும்.
http://kanithottam.blogspot.in/2017/02/unwritten-diary-english-version.html

Feb 4, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - -9&10

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் எண்கள்  -9&10

இந்தப் பதிவை நீங்கள் படிக்குமுன் சில குறிப்புகள் :

1. உபநிடதச் செய்யுள்கள் மிகவும் சுருக்கமானவை.  இவைகளை விளக்கும்போது , முக்கியமாக, தமிழ்ப்பாடல் வடிவில் எல்லோருக்கும் புரியும்படி எழுதும்போது , இந்த அளவு சுருக்க இயலாது என்பதால் , இரண்டு வரி செய்யுள்களின் தமிழ்ப் பாடல் வடிவம், பல வரிகளாக நீள்வதை (என்னால்)தவிர்க்க  முடியவில்லை. 
2. இந்த இருவரிச் செய்யுள்களில்  பொதிந்துள்ள உண்மைகளை , பலரும் பலவிதமாக ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். அதனால், கீழே கூறப்பட்ட தமிழ்-ஆங்கில  மொழிபெயர்ப்புகளிலும் , பாடல் வடிவிலும் மேலாக நோக்குகையில் சில மாறுபாடுகள் தென்படலாம். ஆனால் ஆழ்ந்து  நோக்கினால் உட்பொருள் ஒன்றே!
3. இந்தப் பதிவிலிருந்து, நண்பர் T.S. வெங்கடராமன் ஆலோசனைப்படி, செய்யுள்களின் தேவநாகரி வடிவத்தையும் பதிந்திருக்கிறேன். இது சரியாக செய்யுள்களைப் படிப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 

9
     

மொழிபெயர்ப்பு   *
             யார் உயர்நோக்கமின்றி கர்மங்களை  மட்டும் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் அடர்ந்த இருளில் மூழ்குகிறார்கள்.
             யார் தகுதி பெறுமுன் , தியானத்தில் மட்டும் ஈடுபடுகிறார்களோ, அவர்கள் அதைவிட அதிகமான இருளில் மூழ்கித் துன்புறுகிறார்கள்.


10
மொழிபெயர்ப்பு   *
                    இது பற்றி எங்களுக்கு விளக்கிய மகான்கள் " தியானத்தினால் கிடைக்கும் பலன் ஒருவிதமானது ; செயல்களால் கிடைக்கும் பலன் வேறு விதமானது " என்று கூறினார்கள்.

English Translation **

In Dark night live those for whom
The world without alone is real ; 
In night Darker still , (live those)
For whom the world within alone is real. 
The first leads to a life of action, 
The second to a life of meditation

பாடல்

வேதனை தருமிவ் வாழ்க்கைச்சுழல்  
          விடுதலை வேண்டி விழைவோர்க்கு 
சாதனை முறைகள் இரண்டுண்டு ;
          சொன்னார் இதைநம் முன்னோரே!

தானம் ,தபஜபம் சேவையெனும்
          கடமைகள் செய்வது ஒருபகுதி.
தியானம் செய்து இறைவனுடன் 
          இரண்டறக்  கலப்பது ஒருபகுதி ;

செய்யும் செயல்களின் விளைவாக
          வருவது ஒருவகைப் பயனென்றால்
உயரிய தியானம்  அளிக்கும்பலன்
          வேறெனச் சொன்னார் சான்றோரே !

ஒன்றை விலக்கி மற்றொன்றை
          மட்டும் செய்யும் மாந்தரெலாம்
என்றும் இருண்ட காரிருளை
          விட்டே விலகுதல் அரிதாமே!

*     Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books