ஆனந்தத் தாண்டவம்
இன்று சிவராத்திரி.
தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை வணங்கி
ஒரு பாடல் --
அவர் திருப் பாதங்களில் சமர்ப்பணம்.
அன்புடன்
ரமேஷ்
விரித்த சடை; உடல் தரித்த நீறு ;
சிரித்த செவ்விதழ் ;சீறும் செந்தீ
தெறித்து திரிபுரம் எரித்த நுதற்கண்;
உரித்த மதகஜத் தோல் மேலாடை.
கடலைக் கடைந்த கயிறில் விளைந்த *
விடத்தை உண்டு கருத்த கண்டம்;
கொடுவரித்** தோலை கட்டிய சிற்றிடை;
விரிந்த தோள்கள்; பரந்த மார்பு.
சுடுமொளி ஜோதியை ஏந்திய ஒருகை;
விடமுடை படவர# வணிந்த ஒருகை;
அடிவிழு எனவர வணைக்கும் ஒருகை.
படுத்துக் கிடக்கும் அரக்கன் மேலே
எடுத்து வைத்து அமிழ்த்தும் வலக்கால்;
மடித்து உயர்த்தி மேலே தூக்கி
நடனம் புரியும் இன்னொரு இடக்கால்.
ஆக்கல் காத்தல் அதன்பின் அழித்துப்
போக்கல் மீண்டும் ஆக்கல் என்று
உலகை ஆட்டும் அலகில் நடனம்
தில்லையில் ஆடும் தேசனைப் பணிவோம்.
* மத்தாக இருந்த மந்தார மலையைக் கடையும் கயிறாக இருந்த வாசுகி என்னும் பாம்பு
**கொடுவரி - கொடும்புலி
# விடமுடை படவரவு= படமெடுக்கும் விஷநாகம்
No comments:
Post a Comment