Search This Blog

Apr 19, 2026

எந்தன் மகனே கோவிந்தா-----

 எந்தன்  மகனே கோவிந்தா-----

இது தேர்தல் நேரம். இந்த வாரத்திறுதியில் தமிழகத்தில் தேர்தல். 

இந்தத் தருணத்தில், பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிப் பதித்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஓட்டுப் போடப் போகும் ஒரு தந்தை தன் மகனுக்கு தேர்தலைப் பற்றி சொல்லித் தருவதாக எழுதினேன்.

எவ்வளவு ஆண்டுகள் ஆனால் என்ன? நிலமை அதேதான்!

இதோ அந்தப் பாடல்.

அன்புடன்

ரமேஷ்





மகன்
அப்பா இந்தக் காலையிலே
---எங்கே நீயும் போகின்றாய்?
நானும்  கூட வரலாமோ?
--- வீட்டில் பொழுதே போகலையே


தந்தை
எந்தன்  மகனே கோவிந்தா, நான்
---ஓட்டுப் போடப் போகின்றேன்
வந்தால்  நீயும் என்னுடனே 
---இடைஞ்ச  லாக இருந்திடுமே.


மகன்
இடைஞ்சல் எதுவும் செய்யாமல் நான்
---நல்ல பையனாய் இருக்கின்றேன்
முடியா  தென்று சொல்லாதே !
---மீண்டும் கெஞ்சிக் கேட்கின்றேன்.


தந்தை
சரிதான், என்னுடன் நீயும் வா ; 
---நாளை  இந்நாட்டின் தலைவன் நீ .. 
தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள 
-----பாடம்   உனக்கே சொல்வேன்நான்.


மகன்
தேர்தல் என்றால் என்னப்பா?
----புரியும் படியே சொல்நீயே!


தந்தை
சேரர்,  பாண்டியர்  சோழரென 
---மன்னர் இருந்தது அக்காலம்.
யாரும்  மன்னர்  ஆகிடலாம் 
----இதுதான் குடியர சுக்காலம்.
நாமோர்  பெரிய   குடியரசு;
----நாட்டின் மன்னர் நாம்தானே!.
நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
---தேர்தலில்   மந்திரி  ஆக்கிடுவோம்.


மகன்
மன்னர்கள் ஆட்சி செய்கையிலே
---கப்பம் கேட்பார் எனக்கேட்டேன் ;
மந்திரி   ஒருவர்   வந்தபின்னே
---அவர்க்கும்  கப்பம் கட்டணுமோ ?


தந்தை
காரியம் நமக்கு  நடக்குமுன்னே,
----கப்பம் நிச்சயம் கட்டணுமே..
இப்போ இதற்கு பெயர்மாற்றி
----லஞ்சம் என்றே வெச்சாச்சு.


மகன்
மன்னர் ஆட்சி மட்டும்தான்  
---தலைமுறை  தோறும்  தொடருமென்பார்
மந்திரி   இவர்கள்  ஆட்சியுமே
---தலைமுறை  ஆகத்  தொடர்வதென்ன?


தந்தை
தந்தை தாத்தா முன்னோர்கள் 
---ஊழல் செய்து குவித்தபணம்
இருக்கும் வரையில் தேர்தலிலே
---இவர்கள் தோற்க வழியில்லை.


மகன்
ஓட்டுப் போடும் இடத்தைநாம்
---சாவடி என்பது எதனாலே?


தந்தை
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு
---வந்தபின்  அடுத்த தேர்தல்வரை
ஓட்டுப் போட்ட மக்களையே 
---"சாவ   டிக்கிறார்" அதனாலே.


மகன்
எனக்கும் ஓட்டுப் போட்டிடவே  
---ஆசை,  அருமை அப்பாவே .
எப்போ நானும் போட்டிடலாம் ?
----பதிலைச் சொல்நீ இப்போதே

 
தந்தை
அவசரம் வேண்டாம், இதற்குள்ளே !
----அன்பு மகனே கோவிந்தா.
அகவை பதினெட் டெட்டிடுவாய் ,
-------சட்டம் இதுவே  பொறுத்திடுவாய் .


மகன்
பதினெண்  வயது வேண்டுவது 
----நாட்டில்  நிலவும்  சட்டமென்றால்
எதனால் இந்த சட்டதிட்டம்? 

----எனக்கதை நீயே சொல்வாயா?

தந்தை
ஓட்டுப் போடணும் என்றாலே 
-----முழுதாய் முட்டாள் ஆகணுமாம்.
முழுதும் முட்டாள் ஆகிடவே 
-----பதினெட்   டாண்டுகள் பிடித்திடுமே!.


மகன்
ஆகா ! அடுத்த தேர்தலுக்குள் 
-----பதினெண் வயதை எட்டிடிடுவேன்
முழுவதும்  முட்டாள் ஆகிவிட்டு   
-----ஒட்டு உரிமையைப் பெற்றிடுவேன்.

Apr 14, 2026

பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து

 பரபாவ வருடப் புத்தாண்டு வாழ்த்து 

முன் குறிப்பு:

இந்தப் புத்தாண்டின் பெயர் பரபாவ ஆண்டா அல்லது பராபவ ஆண்டா?  நான் கீழே கொடுத்துள்ள தமிழ்ப்பெயர்கள் பட்டியலின் படி இதன் பெயர்  பரபாவ ஆண்டு. பஞ்சாங்களில்  குறிப்புட்டுள்ளபடி இது பராபவ  ஆண்டு. நான் இந்தப் பாடலில் பரபாவ ஆண்டு என்றே குறிப்பிட்டிருக்கிறேன். எப்படி இருந்தாலும் , பாடலில்  கூறப்பட்டுள்ள கருத்துகளும், எண்ணக்கிடக்கைகைகளும், எதிர்பார்ப்புகளும் மாறாதவையே!

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.

அன்புடன் 

ரமேஷ் 


உலக நிறை*வென்ற விசுவாசு ஆண்டிங்கு 

கலகங்கள் பலநிறைந்த ஆண்டாக முடிவடைய 

அருள்தோற்றம்* என்கின்ற பரபாவ ஆண்டின்று 

தரையிறங்கும் வேளையிலென் புத்தாண்டு வாழ்த்துக்கள் 


குறுகியதோர் கடலிடுக்குக் கால்வாயில் கப்பல்கள் 

மறுபடியும் தடையின்றித் தவழ்ந்திடவே வாழ்த்துக்கள் 

கால்வாயை விடமிகவும் குறுகிய மனமுடையோரின் 

கோல்மால்கள் குறைந்தொழிய கவிஞன் என் வாழ்த்துக்கள் 


டிரம்ப் போன்ற கோமாளித் தனத்தோரை விட்டெறிந்து 

திறம்படைத்தோர் ஆட்சியினை அமெரிக்கர் பெற்றிடவும்  

நடுகிழக்கு நாடுகளில் உக்ரேனில் ருஷ்யாவில் 

நடக்கின்ற கடும்போர்கள் முடிந்திடவும் வாழ்த்துக்கள்  


எரிவாயு எண்ணெய் கரி இவைசார்ந்த ஆலைகளை 

சரிபாதி அளவேனும் குறைத்துஅணு சக்தியொடு 

வளிஒளியைச் சார்ந்த உற்பத்தித் திறன்பெருக்கும் 

வழிகண்டு நாம் விரைவில் வளம் பெறவும் வாழ்த்துக்கள் 


சகோதரத்  துவம்பெருகி சமதர்மம் நிலைத்திடவும் 

விகாரங் கள்விலக்கி வாழ்வாங்கு வாழ்ந்திடவும் 

பரபாவப் புத்தாண்டில் பாரதம்பெரும் வளம்பெறவும் 

அரன்,அரி பிரம்மன்எனும் முத்தேவர் அருள்புரிக 



* உலக நிறைவு= விசுவாசம் ; அருள்தோற்றம்= பிரபாவம் - இவை சென்ற, இந்த ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள். முழு அறுபது ஆண்டுகளின் தமிழ்ப்  பெயர்கள் இதோ!



Apr 7, 2026

குதத்தில் நுழைத்த கம்பு

 இன்றைய நாளிதழில் ஒரு தலைப்புச் செய்தி -



2020 ஆம் ஆண்டு நாடுமுழுதும் கோவிட் தாக்கத்தால் துயருற்றிருந்த நேரம்.  எல்லாக் கடைகளும் இரவு 9 மணிக்குள் மூடப்படவேண்டும் என்ற தடை விதிக்கப்பட்டிருந்த காலம். அப்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் கடையை மூடவில்லை என்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட தந்தை, அவரைக் காணச் சென்ற மகன்,  இருவரும், காவல் நிலையத்தில் மிகக் கொடூரமாக,  மலவாயில் கம்பை நுழைத்துத்  தாக்கப்பட்டு,  இறந்தார்கள். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட காவலர்கள் ஒன்பது பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

நாட்டையே அன்று உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அன்று நான் பதிவிட்ட பாடலை  இன்று நினைவு கொள்கிறேன்  -- இனியேனும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது குறையும் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன் 

ரமேஷ்


கோவில்பட்டிக்  கொடூரங்கள்

குறிப்பிடப்பட்ட நேரத்தில் கடையடைப்புச் செய்யவில்லை என்ற காரணத்திற்காகக் கோவில்பட்டியில்  கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தந்தை, அவரைக் காண காவல் நிலையம் சென்றிருந்த - மகன், இருவரும் காவலர்களின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் மினியாபோலிஸுக்கு  நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டுகிறார்களோ?

ரமேஷ் 



விதம்விதமாய்  வதைசெய்து பதம்பார்க்கும் முறைகளிலே  
முதலிடத்தை அடைந்துள்ள கோவில்பட்டிக் காவலர்க்கு 
புதியவொரு இலச்சினையை* பதிவிடுவோம் அதுவேயோர் 
குதத்தில் நுழைத்த கம்பு.  

* இலச்சினை= LOGO