Search This Blog

Showing posts with label kuzhanthai paadalgali. Show all posts
Showing posts with label kuzhanthai paadalgali. Show all posts

Jun 3, 2018

குட்டிக் குரங்குகள் கும்மாளம்

குட்டிக் குரங்குகள் கும்மாளம் 

எல்லா சிறிய  குழந்தைகளுக்கும்  மிகவும் பிடடித்த ஒரு ஆங்கில குழந்தைகள் பாட்டு "Five Little monkeys jumping on the Bed". இதைத் தமிழ்ப்படுத்தி எழுதப் பட்டது இந்தப் பாட்டு!
கட்டிலுக்கு கேடுதான் என்றாலும், சில தமிழ் வார்த்தைகளையாவது கற்றுக் கொள்ளட்டுமே!

அன்புடன் 

ரமேஷ் 



குட்டிக் குரங்குகள் கும்மாளம் 




குட்டிக் குரங்குகள் ஐந்தும் குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
சும்மா கட்டிலில் மேலும் கீழும்  
இனிமேல் குதிக்கக் கூடாதாம் 


குட்டிக் குரங்குகள் நான்கும்  குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
சும்மா கட்டிலில் மேலும் கீழும்  
இனிமேல் குதிக்கக் கூடாதாம் 

குட்டிக் குரங்குகள் மூன்றும்   குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
சும்மா கட்டிலில் மேலும் கீழும்  
இனிமேல் குதிக்கக் கூடாதாம் 

குட்டிக் குரங்குகள் இரண்டும்   குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
சும்மா கட்டிலில் மேலும் கீழும்  
இனிமேல் குதிக்கக் கூடாதாம் 


குட்டிக் குரங்கு ஒன்று குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
கட்டிலின் மேலே படுக்க வைத்து 
கட்டிப் போடு என்றாராம் !










---------------

Nov 30, 2017

பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?- பகுதி 2


பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 2

இந்தக் கதையின் முதல் பாகம் பதிப்பித்து  கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இரண்டாம் பாகம் இதோ!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு :
முதல் பகுதியை இந்த இணைப்பில் பார்க்கலாம் 
http://kanithottam.blogspot.in/2017/11/1.html


பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 2

"முருகனுக்கா? அவன் அண்ணனுக்கா?
-----யாருக் களிப்பது மாம்பழத்தை?
இருவருக்கும் ஒரு போட்டிவைத்து
-----வெல்பவர்க்கே அதை அளித்திடுவோம்"

என்றே  பெற்றோர் முடிவெடுத்தார்.
-----பிள்ளைகள் இருவரையும் அழைத்தார்.
"ஒன்றாய் கிளம்பி இருவருமே
-----இவ்வுலகைச் சுற்றி வரவேண்டும்.

முதலில் வருபவர் அடைந்திடுவார்
-----மந்திர மாம்பழக் கனியைத்தான்.
இதுவே எங்கள்  முடிவாகும்.
-----புறப்படுக! வெற்றி அடைந்திடுக!"

என்றே பெற்றோர் சொன்னவுடன்
-----இருவரும் போட்டிக்குப் புறப்பட்டார்.
வென்றே  வருவோம் என்றெண்ணி
-----வாகன மேற விரைந்திட்டார் .

மயில்மேல் ஏறி முருகனுமே
-----வான வழியாய்  பறக்கையிலே 
ஒயிலாய் எலியின் மேலேறி
-----பிள்ளை யாரும் புறப்பட்டார்


எலிவா கனம்மேல்  ஏறியவர்
-----பெற்றோர் இருவரையும் சுற்றி 
எளிதாய் ஒருமுறை வலம் வந்து
-----அன்னை தந்தையரை வணங்கி 

"வெற்றி எனக்கே  போட்டியிலே
-----தருக மாம்பழம் "எனக்கேட்டார்
"சுற்றவில்லையே நீ உலகத்தை"
-----என்றே பெற்றோர் கேட்டவுடன்


"எங்களுக்குப்  பெற்றோரே
-----உலகம் ; வேறே  ஏதுமில்லை.
உங்களைச் சுற்றி வந்ததுவே
-----உலகைச் சுற்றியதற் கொப்பாகும்.

அடியேன் உலகைச் சுற்றிவிட்டேன்
-----அரிய பழத்தை அளித்திடுக"
என்றே கூறி  அவர்களையே
-----வணங்கி நின்றார் விநாயகரும்.

இதனைக்  கேட்டு மனமகிழ்ந்த
-----சிவனும் உமையும் மாம்பழத்தை
முதலில் வந்தவன் எனஓப்பி
-----மூத்த மகனுக்கு கொடுத்தாராம்.











 முற்றும் உலகைச்  சுற்றிவிட்டு
-----அதன்பின் வந்த முருகனுமே
பெற்ற  தந்தை தாய்மேலே
-----பெரிதாய் கோபம் கொண்டானே.





பெற்றோர் கூறும் வார்த்தைகளை
------சற்றும் கூடக் கேட்காமல்
உற்ற உறவை  விட்டுவிட்டு 
-------பறந்து வெளியே போய்விட்டான் !








இந்தக்கதையால் உங்களுக்கு 
        தெரியும் பாடங்கள் இரண்டு                                     
தந்தை தாயை மதித்திடுக !
          சிந்தித்தே நீ  செயல்படுக. !




எங்கே சென்றான் இளமுருகன்?
தங்க அவனுக்கு ஏதுஇடம்?
உங்கள் இந்தக் கேள்விக்கு
கூடிய விரைவில் பதில் சொல்வேன் .




Nov 14, 2017

பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?- பகுதி 1- A song for the Children's Day.

இன்று குழந்தைகள் தினம்!
ஜவாஹர்லால் நேரு பிறந்த இந்த நவம்பர் 14-ம் தேதி, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தன்று குழந்தைகளுக்காக ஒரு பாடல்.
பிள்ளையாரும் முருகனும், மாம்பழத்துக்குப் போட்டியிட்ட கதை.
இதை,நீளம் கருதி, இரண்டு பகுதிகளாக வெளியிடப்போகிறேன்.
முதல் பகுதி இன்று.

அன்புடன் 
ரமேஷ் 

acknowledgements : The pictures used in this blog have been taken from various sites in the internet domains. I thankfully acknowledge them.




பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 1

சிவபெரு மானும் பார்வதியும்
-----கைலா யத்தில் குடியிருந்தார்.
அவர்க  ளுடைய  இருமகன்கள்
------பிள்ளை யாரும் முருகனுமே.
                                                                               
இரன்டு பேரில் இளையவற்கு
------முருகன் என்னும் பெயரிட்டார். .           
முருகனுக்கு முன் பிறந்த
------பிள்ளை  பிள்ளை யாராமே.

பிள்ளை யாருக்கு ஆனைமுகம்.
-----முருக னுக்கோ ஆறுமுகம்.
கொள்ளை அழகு இருவருமே.
-----குறும்பு செய்வதில் குறைவில்லை.





நல்ல பிள்ளைகள் இருவருமே
-----நன்றாய் நாளும் விளையாட
செல்லப்   பிராணி கள்இரண்டை
-----வாகன மாகப் பெற்றாராம்.







முருகனுக்கு மயில் பறவை
-----மூத்த வனுக்கோ மூஞ்சூறு
இருவரும் அவைமேல் ஏறிக்கொண்டு
-----ஓடி ஆடி மகிழ்வாராம்.







ஒருநாள் சிவனின் வீட்டிற்கு
-----நாரத முனிவர் வந்தாராம்.
பெரிய மாம்பழம் ஒன்றினையே
-----சிவபெரு மானிடம் தந்தாராம்.

"இந்தப் பழமொரு சிறந்த பழம்
-----மந்திர சக்திகள் உள்ளபழம்
இந்தப் பழத்தை உண்ணுபவர்
-----எல்லா நலமும் பெறுவாரே.

ஆனால்   ஒருவர் மட்டும்தான்
-----இந்தப் பழத்தை சாப்பிடலாம்.
இருவர் இதனை சாப்பிட்டால்
-----மந்திர சக்திகள் மறைந்துவிடும்."

என்று நாரதர் சொன்னவுடன்
-----இரண்டு பிள்ளையும் ஓடிவந்து
"எனக்கு வேண்டும் இந்தப்பழம்"
 -----என்றே தந்தையைக் கேட்டார்கள்.

முதலில் பிறந்த மூத்தவன்நான்
-----அதனால் எனக்கே தருகவென
மோதகப் பிரியன் யானைமுகன்
-----வாதம் செய்து சாதித்தான் .

சின்னப் பிள்ளை செல்லம் நான்.
-----அதனால் மந்திர மாம்பழத்தை
என்னிட மேதர வேண்டுமென்று
-----ஆறுமுகத்தான்  அடம் பிடித்தான்.




குழந்தைகளே,
இந்தப் போட்டியை சிவனும் பார்வதியும் எப்படி சமாளித்தார்கள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
























































Nov 7, 2017

சங்கடஹர சதுர்த்திப் பாடல் -

இன்று சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில், விநாயகரை வணங்கி ஒரு பாடல்.
குழந்தைகளுக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதி இருக்கிறேன்.
நீங்கள்படித்து, கேட்டு, பின் சிறுவர்களுக்கும் படித்துக் காட்டுங்களேன்!

விநாயகர் அருள் அனைவருக்கும் கிட்டுவதாகுக! 

அன்புடன் 
ரமேஷ் 



பெருத்த தொந்தியும் சிறுத்த கண்களும்
விரித்த காதும் உடையோனே!
கருத்த உடல்மேல் அருக்கமாலை
விருப்ப மிகக்கொண்டு அணிவோனே!

பருத்த இடையில் படவர  வினையே
அரைஞாண் கயிறாய் அணிந்தோனே!
மரித்த கையில் பறித்த பழத்தை
இருத்தி புன்னகை புரிவோனே !

அரசின் அடியில் தெருவின் முனையில்
அமர்ந்து தரிசனம் தருவோனே
அரசர் ஆண்டி அனைவ ருக்கும்
அருள்மழை அனுதினம் பொழிவோனே!

ஒடித்த தந்தம்  பிடித்தொரு  கையில்
பாரதம் எழுதி முடித்தோனே!
எடுத்த காரியம் யாவிலும்  தடைகளை
உடைக்கும்  விக்ன விநாயகனே!

சிற்றெலி யேறி பெற்றோர் இருவரை
சுற்றி உலகளந்த சிவன்மகனே!
பற்றி  உன்பாதம் பணிந்து தொழுவோர்க்கு
உற்ற துணையாகும் உமைபாலா!

கறந்த பாலும் சிறந்த தேனும்
பருப்பும் பாகும் பாயசமும்
பொரித்த அவலும் உரித்த பழமும்
பூசைகள் செய்து படைப்பேனே !

விரித்த மலர்கள் அரிந்து தொடுத்து
மணமிகு மாலைகள் அளிப்பேனே !
கருத்தில் இருத்தி தொழுவேன் தினமுமென்
வருத்தம் தீர்க்க வருவாயே!

Oct 28, 2017

தீபாவளியும் சுற்றுச்சூழலும்

தீபாவளியும் சுற்றுச்சூழலும் 

இது குழந்தைகளுக்காக ( சிறுவர்-சிறுமியர்களுக்காக?) நான் எழுதிய தீபாவளிப்  பாட்டு. 
அளவோடு வெடிகள் வெடித்து சுற்றுப்புறச்ச சூழ்நிலையைக் காப்பாற்ற அவர்களுக்கு ஒரு அறிவுறுத்தல்!
சற்று நாள் கழித்து வந்தாலும் நலன் பயக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன் 
ரமேஷ் 

தீபாவளியும் சுற்றுச்சூழலும் 




விடியற்காலை குளித்தபின்பு  கடவுளை வணங்கியே
மடித்துவைத்த புதியஆடை   உடுத்தியதன் பின்னரே
பிடித்தஇனிப்பு காரவகை பட்சணங்கள் பலவிதம்
கடித்துநொறுக்கி மூக்குமுட்ட உண்டுவிட்ட பின்னரே

சாக்குமூட்டை நிறையவாங்கி  வைத்தவெடிகள் வெடிக்கையில்

கேக்கும்சத்தம் காற்றில்வந்து  காதில்முட்டி முழங்குது.
ராக்கட்டுகள் வானம்முட்டும் தூரம்மட்டும் பறக்குது
தீயைக்கக்கும்  வாணவெடிகள் வர்ணஜாலம் புரியுது.

வெடித்துமுடித்து ஓய்ந்தபின்பு  தெருவில்சென்று நிற்கையில்
வெடிக்கும்போது   வெளியில்வந்த புகையும்எங்கும் சூழ்ந்ததால்
கண்எரிந்து  கண்ணீரும்   பொலபொலவெனக்  கொட்டுது.
கொடியநெடியும்   மூக்கில்ஏறி   மூச்சுமுட்டிப் போகுது

காற்றைஉள் ளிழுக்கும்போது  கலந்துமிதக்கும் துகள்கள்நம்

காற்றுப்பையுள்  போய்நுழைந்து   நுண்துளைகளை அடைத்திடும்.
சுற்றுப்புறச் சூழ்நிலையும் சீர்குலைந்து போவதால்
மற்றும்வேறு  பின்விளைவுகள் மேலும்மேலும் நிகழுமே .

பட்சணங்கள் தின்னும்போது மகிழ்ச்சியாக  இருப்பினும்
உட்கொண்டது   அதிகமென்றால்  வயிற்றுவலியும் வந்திடும்.
பட்டாசுகள்   வெடிக்கும்போது பரவசமாய்  இருப்பினும்
கட்டுக்குள்   இல்லையெனில் கொடியவிளைவு தொடர்ந்திடும்..

ஆதலினால் குழந்தைகளே தீபாவளி நாளிலே

மிதமான அளவோடு வெடிகளை வெடியுங்கள்
சுற்றுப்புறச்  சூழலுக்கு சேதங்களைக்  குறையுங்கள்
கற்றஇந்தப் பாடத்தையே மற்றவர்க்கும் கூறுங்கள்!











Oct 16, 2017

காளிங்க நர்த்தனம்-

 காளிங்க நர்த்தனம் -

தீபாவளி நெருங்கும்போது, நரகாசுகரை அழித்து தீபாவளிக்குக்  காரணமான கண்ணனைப் பற்றி ஒரு பாட்டு.
இது குழந்தைகளுக்கான கண்ணன் பாட்டு.
காளிங்க நர்த்தனத்தைப் பற்றியது.
குழந்தைகளும் ( நீங்களும்) ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்!
முடிந்த அளவு சுலபமான , சிறுவர்களுக்குப் புரியக்கூடிய, வார்த்தைகளையே உபயோகித்திருக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துகளையும் , திருத்தங்களையும் அறிய ஆவல். பகிர்ந்துகொள்ளவும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்


அன்புடன்
ரமேஷ்









ஆயர்பாடி கோகுலத்தில் யமுனையாற்றின் கரையிலே
மாயக்கண்ணன் நண்பருடன் ஓடிவிளை யாடுறான்.
நதியிலோடும்  நீரிலிறங்கி  நீந்திவிளை யாடுறார்
குதித்துகுதித்து கூத்தடித்து கும்மாளந்தான் போடுறார்.

ஆத்தங்கரை  புல்வெளியில் மாட்டுக்கூட்டம்  மேயுது
மாடுகளின் மடியிலிருந்து பால்சுரந்து வழியுது
பூத்துக்குலுங்கும்  நந்தவனச் செடியின்  பூக்கள்வாசமே
காற்றில்மிதந்து கமகமவென மூக்கினிலே ஏறுது

சின்னக்கண்ணன் குழலெடுத்து கானங்களை இசைக்கிறான்
கண்ணைமூடி அனைவருமே தலையைஆட்டி ரசிக்கிறார்.
வண்ணப்பூக்கள் தொடுத்துமாலை கோபியர்கள் கட்டியே
கண்ணனுக்குப் போட்டுஅவன் அழகினையே ரசிக்கிறார்.

கடலைநோக்கி அமைதியாக யமுனைநதி ஓடுது
திடீரென்று டமாலென்ற பெரியசத்தம் கேட்குது
அடியில்நதியில் படுத்துக்கிடந்த பத்துத்தலை பாம்பொன்று
படமெடுத்து தலையைத்தூக்கி புஸ்புஸ்என்று சீறுது

வாலைச்சுழற்றி  நீரிலடித்து அட்டகாசம் செய்யுது.
அலைகள்போல நீரெழும்பி  கரைபுரண்டு ஓடுது.
நாலுபுறமும் தலையைச்சுற்றி  நீளமான நாக்கையே
நீட்டிக்கொடிய விஷத்தினையே நாற்புறமும் கக்குது.

பதறிப்பயந்து போனமக்கள் கூட்டமங்கு  மிங்குமாய்
சிதறியோடி செய்வதென்ன வென்றுதிகைத்து நிற்கிறார்.
கதறியழுது ஓடிச்சென்று கண்ணன் காலில் விழுகிறார்.
உதவிசெய்வாய் உயிர்காப்பாய் என்றுகூறி அழுகிறார்.

கருணைகொண்ட கண்ணனும் கோகுலத்தைக் காக்கவே
விரைந்துநதியில் இறங்கியே பாம்புடன் போராடினான்
வெருண்டெழுந்து உருண்டகண்ணை திறந்துபார்த்த  நாகமும்
சுருண்டவாலால் கண்ணனை சுற்றிநெருக்கப்  பார்த்ததே

தந்திரமாய் அப்பிடியில்  தப்பிவிட்ட  கண்ணனோ
பந்துபோல்  குதித்துஅந்த பாம்பின் தலைமேல்  ஏறினான்.    .
தன்னிரண்டு கால்களால் ஓங்கிஓங்கி மிதித்தபின்
தந்தனத்தோம் என்றுஅதன்  தலைமேல்நடன மாடினான்.

தலைவலியைத் தாங்காத நாகம் போரில்  தோற்றது
தலைகள்பத்தும் குனிந்துவணங்கி தலைகனத்தை விடுத்தது
தலைவனொருவன்   அனைவருக்கும் கண்ணன்என்று ஏற்றது
வாலைச்சுருட்டி  வைத்துக்கொண்டு வந்தவழி சென்றது.

கரையிலிருந்த  கோகுலத்தார் கைகள்தட்டி மகிழ்ந்தனர்
கரங்கள்கூப்பி சிரங்கள்தாழ்த்தி கண்ணனையே வணங்கினர்
காளிங்கன் மேலேறி நடமாடிய கண்ணனை
ஆலிங்கனம் செய்தணைத்து பெற்றோரும் வாழ்த்தினர் .






























Aug 15, 2017

இந்திய சுதந்திர தினம்


இந்திய சுதந்திர தினம் 

தேசிய கீதம் திரையரங்குகளில் இசைக்கப்பட்ட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொன்னது சரியா?
அப்படி கீதம் இசைக்கப்படும்போது ,எல்லோரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற நியதி சரிதானா, அல்லது அதை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விட வேண்டுமா ?
" வந்தே மாதரம் " பாடலைப்  பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் சொன்னது சரியா?
"வந்த மாதரம்" ஒரு தேசப்பற்றை தூண்டும் கீதமா அல்லது இது ஒரு "ஹிந்துத்துவ "(?) பாடலா?

இப்படி பல "குழந்தைத்தனமான"  சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நாளன்று , சர்ச்சைகளை பெரியவர்களுக்குள்ளே மட்டும் வைத்துக்கொண்டு, நம் குழந்தைகளுக்கு  இந்த சுதந்திர  தினத்தன்று நம் நாட்டின் பெருமையைச் சொல்லலாமே!

குழந்தைகளுக்காக  எழுதப்பட்ட ஒரு பாடல்.
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

அன்புடன்

ரமேஷ்





இந்தியா - 

                                        பாரத நாடுநம்  தாய்நாடு
                                        பாரில் சிறந்த பொன்னாடு
                                        வேறெங்கும் இதற் கி(ல்)லையீடு .
                                        வாழ்க பாரதம் எனப்பாடு .






                                                  வட  திசையினிலே இமயமலை
                                                  தென்திசையி லிந்து சமுத்திரமே
                                                   இடவலம்  இரண்டு பக்கங்களில்
                                                   வங்க அரபிக் கடல்களுண்டு.

                                                    கங்கை யமுனை பிரம்மபுத்ரா
                                                    கோதா வரியுடன் காவேரி
                                                    பொங்கி ஓடுமிம் மாநதிகள்
                                                    பாரத நாட்டை  செழிப்பாக்கும்

பரதன் இந்நாட்டை ஆண்டதனால் 
பாரதம் என்ற பெயரிதற்கு
சிந்து சமவெளியில்  தொடங்கியதால் 
இந்தியா என்பதும் இதன்பேராம் .


இந்து புத்த ஜைனமதம்
உலகுக் களித்தது நம்நாடே
விஞ்ஞா னத்தை மிஞ்சுகின்ற
மெய்ஞ்ஞா னத்தின் உறைவிடமாம்.





                                                இருபத் தொன்பது  மாநிலங்கள்
                                                இருபத்   திரண்டு தாய்மொழிகள்
                                                இருக்குது இந்திய நாட்டினிலே .
                                                இருந்தும் இணைந்தே இருக்கின்றோம்.








                                                         காந்தி நேரு நேதாஜி
                                                         கங்கா தரதிலக் வ.வூ.சி
                                                         பாரதி குமரன் ராஜாஜி
                                                         போன்ற தேசியத் தலைவர்கள்

                                                          சேர்ந்து பலநாள் போரிட்டு
                                                          வெளிநாட் டினரை  விரட்டியதால்
                                                          இன்று நம்நாடோர் குடியரசு.
                                                          நாமெல் லோரும்  அதன்மன்னர்.




                                                வீரம் உண்மை செழுமைஎனும் 
                                                மூன்று கொள்கைகளைக்   குறிக்கின்ற-
                                                மூவர்ணக் கொடி  ஏற்றிடுவோம்.
                                                தேசிய கீதம் பாடிடுவோம்.

                                             
                                                 இந்த  சுதந்திரத்  திருநாளை
                                                 ஒன்று கூடிக்கொண் டாடிடுவோம்
                                                 வந்தே மாதரம் என்றிடுவோம்
                                                 பாரதத்  தாயை பணிந்திடுவோம்
























Aug 12, 2017

சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)


சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)


வரும் திங்கள் கோகுலாஷ்டமி - கண்ணன் அவதரித்த நாள்.

கோகுலத்தில் சிறு குழந்தையாகவும், ஒரு சிறுவனாகவும் கண்ணன் செய்த லீலைகள் பற்றிய கதைகள்  குழந்தைகளை  மிகவும் கவரும்.

நான் முன்பு கூறி இருந்த படி , குழந்தைகளுக்கு புரியும் படி பாடல்களை எழுதி , கற்பித்து , அவர்கள் மனதில் நம் கலாச்சாரத்தைப் பற்றிய கதைகளையும் நல்ல கருத்துக்களையும்  பதிக்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.

இதன் படி  குழந்தைகளுக்கான முந்தைய இரு  பாடல்களின் தொடர்ச்சியாக கோகுலாஷ்டமி அன்று கண்ணன் பற்றிய ஒரு பாடல் இன்று.

அன்புடன் 

ரமேஷ் 


சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)




யமுனை நதியின்  கரையோரம் 
கோகுலம் என்னும் கிராமத்தில் 
சிமிழிதழ் சிரிப்புடன் சின்னக்கண்ணன் 
அன்னை மடியில் தவழ்கின்றான்.










கட்டி முடித்த கருமுடியில் 
அழகாய்ச் செருகிய மயிலிறகு.
பட்டாடையும் அவன்  இடையினிலே 
பட்சணமும் சிறு கைகளிலே 








துருதுரு துறுவென இங்கங்கும்    

தவழுவதில்  அவன் சிற்றெறும்பு 
சுறுசுறுப்பாக ஓடி அவன் 
செய்வ தெல்லாமோ பெருங்குறும்பு.   








வெண்ணை தயிர்க்குடப்  பானைகளை 

தள்ளி வெண்ணையைத் தின்றுவிட்டு   
கண்ணை இமைக்கும் நேரத்தில் 
அங்கிருந்தே அவன் ஓடிடுவான்  








ஓடி ஒளிந்திடும் கண்ணனையே 

தேடிப்  பிடுத்து அவன் அன்னை 
சாடிக்  கடியும் நேரத்தில் - நான் 
செய்ய வில்லைஎனச் சாதிப்பான். 







சின்னக் கண்ணன் செய்கின்ற 

சில்விஷ மங்களைப்  பொறுக்காமல் 
அன்னை யசோதா அவனையொரு 
உரலில் கட்டி வைத்தாளாம்.






திருமால் விஷ்ணுவின் உருவான 

குட்டிக் கண்ணன் இவனுக்கு 
உரலும் பெரிய கனமல்ல.
உருட்டி  இழுத்துச் சென்றானாம்.





கண்ணன் செய்யும் விளையாட்டுக் 

குறும்பு களுக்கோர் கணக்கில்லை.
எண்ணில் அடங்கா இக்கதைகள்  
ஒவ்வொன்றாய் நாம் படித்திடுவோம்.





அட்டமித் திருநாள் இம்மாதம் 
குட்டிக் கண்ணன் பிறந்ததினம்.
வீட்டு  வாசலில் கோலமிட்டு 
பாட்டுகள் பாடி மகிழ்ந்திடுவோம்.








சின்னச்   சின்னக் கால்வரைந்து 
வண்ணத் தோரணங்கள் கட்டி 
வெண்ணை பட்சணங்கள் படைத்து 
கண்ணனை வாவென வரவேற்போம்.









Aug 4, 2017

The Female Trinity - ( English Version)

The Female Trinity - ( English Version)

While posting the Tamil version of the Female  trinity, I had mentioned that I will post the English version, which I wrote a year back, for my Grand Daughter. Here it is.

V.Ramesh.




1


Sakthi , the mothergod,, has forms three

Worship her in all forms, to be worry free!

2

As Lakshmi she gives us wealth and  money

Her blessings will fill the land, with milk and honey.


3


As Parvathi she gives us strength and courage

To her enemies , she is  a source of scourge!


4

Saraswathi is the source of wisdom

With wisdom,  you can conquer any kingdom!


5



All of us should thank them and pray, 

Morning and evening,  every day !




The male trinity - english version

THE MALE TRINITY-  (ENGLISH VERSION)

While posting the Tamil version of the Male trinity, I had mentioned that I will post the English version, which I wrote a year back, for my Grand Daughter. Here it is.

V.Ramesh.

1



Three great gods who live in heaven
Are Brahma, Vishnu and Paramasivan.

2


Brahma is one who creates the worlds
The sun and the moon and animals and birds.

3



God Vishnu, who took the nectar
From the sea of milk, is our protector.

4






Paramasiva will fight and kill
All things that are bad 'n evil!

5





All of us must thank them and pray,
Morning and evening, every day!



Jul 28, 2017

முப்பெரும் பெண் தெய்வங்கள்

சென்ற வாரம் பதிப்பித்திருந்த "பிரம்மா, விஷ்ணு, பரமசிவன் பற்றிய குழந்தைகளுக்கான பாடலைப் பற்றி கருத்துத் தெரிவிவித்து இருந்தவர்களுக்கும், படித்துப் பாராட்டியவர்களுக்கும்  நன்றி.
முப்பெரும் ஆண் தெய்வங்கள் பற்றிய பதிப்பைத்  தொடர்ந்து , அவர்களின் துணைவியராகவும், சக்தியின் மூன்று வடிவங்களாகவும் இருக்கும் முப்பெரும் பெண் தெய்வங்களான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி பற்றிய ஒரு சிறு பாடல் - குழந்தைகளுக்காக.

அன்புடன்
ரமேஷ்






முப்பெரும் பெண் தெய்வங்கள்




ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அம்மா
அப்பா பின்னே  இருப்பதுபோல்
சிவன் பிரம்மா திருமால் பின்னே
சக்தி ஒருவள் இருக்கின்றாள்.


 





சக்திக்கு உருவம் மூன்றுண்டு-  அவை
சரஸ்வதி,பார்வதி,லட்சுமியென்பார் .
பக்தியுடன் தினம் இருவேளை - அவள்
பாதம் தொழுது பயனுறுவோம்.                        








கலைமகள் என்று பெயர்கொண்டு- ஆய
கலைகளை அளித்தவள் சரஸ்வதியே!
விலைமதிப் பில்லாப் பொருளான- கல்வி  
அறிவினை  அருள்வது அவள்தானே!








பார்வதி என்பவள் மலைமகளாம்- அவள்
வீரத் திற்கே  உறைவிடமாம்.
யாரெவர் நம்மை எதிர்த்தாலும்- நாம்
அவளருள் இருந்தால் வென்றிடுவோம்









திருமகள் என்னும்  லட்சுமியே   - நற்
செல்வம் நமக்கு அருள்பவளாம் .
பொருளும் பொன்னும் குறைவின்றி - தன்னைத்
தொழுவோர்க் கெல்லாம்  அளித்திடுவாள்.                  







இந்த மூவரையும்  அனுதினமும்-நாம்
வந்தனை செய்து வழிபட்டால்
வந்தடையும்  நம் அனைவரையும்- உயர் 
கல்வியும் செல்வமும் வெற்றிகளும் .






























.