Search This Blog

Aug 12, 2017

சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)


சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)


வரும் திங்கள் கோகுலாஷ்டமி - கண்ணன் அவதரித்த நாள்.

கோகுலத்தில் சிறு குழந்தையாகவும், ஒரு சிறுவனாகவும் கண்ணன் செய்த லீலைகள் பற்றிய கதைகள்  குழந்தைகளை  மிகவும் கவரும்.

நான் முன்பு கூறி இருந்த படி , குழந்தைகளுக்கு புரியும் படி பாடல்களை எழுதி , கற்பித்து , அவர்கள் மனதில் நம் கலாச்சாரத்தைப் பற்றிய கதைகளையும் நல்ல கருத்துக்களையும்  பதிக்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.

இதன் படி  குழந்தைகளுக்கான முந்தைய இரு  பாடல்களின் தொடர்ச்சியாக கோகுலாஷ்டமி அன்று கண்ணன் பற்றிய ஒரு பாடல் இன்று.

அன்புடன் 

ரமேஷ் 


சின்னக் கண்ணன் - (கோகுலாஷ்டமி)




யமுனை நதியின்  கரையோரம் 
கோகுலம் என்னும் கிராமத்தில் 
சிமிழிதழ் சிரிப்புடன் சின்னக்கண்ணன் 
அன்னை மடியில் தவழ்கின்றான்.










கட்டி முடித்த கருமுடியில் 
அழகாய்ச் செருகிய மயிலிறகு.
பட்டாடையும் அவன்  இடையினிலே 
பட்சணமும் சிறு கைகளிலே 








துருதுரு துறுவென இங்கங்கும்    

தவழுவதில்  அவன் சிற்றெறும்பு 
சுறுசுறுப்பாக ஓடி அவன் 
செய்வ தெல்லாமோ பெருங்குறும்பு.   








வெண்ணை தயிர்க்குடப்  பானைகளை 

தள்ளி வெண்ணையைத் தின்றுவிட்டு   
கண்ணை இமைக்கும் நேரத்தில் 
அங்கிருந்தே அவன் ஓடிடுவான்  








ஓடி ஒளிந்திடும் கண்ணனையே 

தேடிப்  பிடுத்து அவன் அன்னை 
சாடிக்  கடியும் நேரத்தில் - நான் 
செய்ய வில்லைஎனச் சாதிப்பான். 







சின்னக் கண்ணன் செய்கின்ற 

சில்விஷ மங்களைப்  பொறுக்காமல் 
அன்னை யசோதா அவனையொரு 
உரலில் கட்டி வைத்தாளாம்.






திருமால் விஷ்ணுவின் உருவான 

குட்டிக் கண்ணன் இவனுக்கு 
உரலும் பெரிய கனமல்ல.
உருட்டி  இழுத்துச் சென்றானாம்.





கண்ணன் செய்யும் விளையாட்டுக் 

குறும்பு களுக்கோர் கணக்கில்லை.
எண்ணில் அடங்கா இக்கதைகள்  
ஒவ்வொன்றாய் நாம் படித்திடுவோம்.





அட்டமித் திருநாள் இம்மாதம் 
குட்டிக் கண்ணன் பிறந்ததினம்.
வீட்டு  வாசலில் கோலமிட்டு 
பாட்டுகள் பாடி மகிழ்ந்திடுவோம்.








சின்னச்   சின்னக் கால்வரைந்து 
வண்ணத் தோரணங்கள் கட்டி 
வெண்ணை பட்சணங்கள் படைத்து 
கண்ணனை வாவென வரவேற்போம்.









4 comments:

  1. அன்புள்ள ரமேஷ்

    நீ என் பேரில் எழுதிய கவிதை மடல் என்னை கவர்ந்தது.
    அதனால் நேற்று உன் வீட்டில் வந்து நீங்கள் படைத்த
    தின்பண்டங்களை சுவைத்து மகிந்தன். மேலும் மேலும்
    கவிதை மழையை பொழிந்து கொண்டேயிருக்க
    ஆசீர்வதிக்கிறேன் .

    உன் பக்திக்கு பாத்திரமான சாய்க்கிருஷ்ணன்

    ReplyDelete
  2. மிக எளிமையான வார்த்தைகள் , அழகான விளக்க படங்கள் , இதற்க்கு முன்னோடியாக நீ அனுப்பியிருந்த mail மழலைகளுக்கு இந்த கதைகளை எடுத்துக்கூற , எல்லாமே அருமை . பாராட்டுக்கள் பல

    ReplyDelete