Search This Blog

Dec 28, 2020

2020 ஆம் ஆண்டின் நாட்குறிப்பேடு

2020 ஆம் ஆண்டின் நாட்குறிப்பேடு 

ஆண்டு 2020 க்கான என் நாட்குறிப்பேட்டில் எழுதி நிறைத்த பக்கங்களை விட  எழுதப்படாத வெறுமையான பக்கங்களே அதிகம். ஏழெட்டு மாதங்களாக  வீட்டிலேயே அடைந்து கிடக்கும்போது, எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான் !  இப்படி இருக்கையில் எதற்காக ஒரு தினநாட்குறிப்பு? இந்த நிலைமை சீக்கிரம் மாற இறைவனை வேண்டுவோம்.

அன்புடன் 

ரமேஷ் 



இரண்டா யிரத்திருப தாண்டின்குறிப் பேட்டை 

புரட்டிப் பார்க்கிறேன் நான்பட்ட பாட்டை !

கருமையின்* கறைபடிந்த பக்கங்கள் சிலவே!  * (கரு+மை =கரிய மை)

குறிப்பேட்டை வாங்கியது வீணான செலவே!!

ஒவ்வொரு நாளுமதன் முன்னாளின் நகலே!

இதிலிருந்து விடுபடவே இங்கேது புகலே ?


நோய்நம்மைத் தாக்குமோ என்றுபயப் பட்டு, 

வாய்மீதும் முகமீதும் முகமூடி இட்டு 

வீட்டுள் அடைபட்டு, உள்ளம் உடைபட்டு 

நாடோறும்* நாம்செய்யும்  செயல்கள் தடைபட்டு          (* நாள் தோறும் )

ஊர் முகம் காணுதல் முற்றும் மறந்து 

நேர்முகப் பரிமாறல் அறவே துறந்தோம்  


மனதிலே நிறைந்திடும் வெறுமையின் தாக்கம்

எனதுகுறிப் பேட்டிலென்  எழுத்தையும் தாக்கும்.  

உள்ளத்தின் உள்ளே நிறைந்துள்ள வெறுமை,

நாளேட்டின் பதிப்பிலென்  எழுத்திலும்  வறுமை!

வரும்நாளில் இந்நிலைமை நிச்சயம் மாறும்.

திரும்பவென்  எழுத்துக்கள் நாளேட்டில் ஏறும்!




Dec 26, 2020

கைபேசி

கைபேசி 

இன்று நம் எல்லோருக்கும் பழகிப் போன ஒன்று கைபேசி. அது இல்லாமல் இன்று, அதுவும் இந்த கோவிட்  காலத்தில், உலகம் இயங்காது  என்ற ஒரு நிலைமை.  இருந்தாலும், யாராவது அதைக் கண்டு பிடித்தவர் யாரென்று  நினைவில் வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் ஒய்வு  பெற்ற  காவல் துறைத் தலைவர்  அதிகாரி திரு.ராஜ்மோகன் அவரை இன்று நினைவு  கூறுகிறார்! 

சில வருடங்களுக்கு முன் கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை என்ற தலைப்பில்  திரு.ராஜ்மோகன் அவர்கள் செய்து வரும்  பணியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.* இன்று அப்பலகையில் இடம் பெற்றிருப்பவர்  "மார்ட்டின் கூப்பர் " என்பவர். இன்றைய கைபேசிக்கான தொழில் நுட்பத்தைக்  கண்டுபிடித்து, முதல் கைபேசியையும் வடிவமைத்தவர் கூப்பர். இன்று 92 வயதை அடையும் இந்த விஞ்ஞானியை நினைவு கூர்ந்து, அவரை வாழ்த்துகிறார் ராஜ்மோகன்!





நானும் அவருடன் இணைந்து ஒரு சிறிய பாடல் இயற்றி மார்ட்டின் கூப்பரை  வாழ்த்துகிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 

* http://kanithottam.blogspot.com/2017/08/blog-post_10.html


இடம்பெயர்ந்து இங்கங்கும் நடக்கின்ற போதும் 

தடையின்றி ஒருவரோ டொருவர் உரையாட 

விடையொன்று கண்டார்  விஞ்ஞானி கூப்பர்.

நெடுநாட்கள் அவர்வாழ வாழ்த்துக்கள் சொல்வோம்!


Dec 25, 2020

தசாவதாரம்

இன்று வைகுண்ட ஏகாதசி!

இந்தப் புண்ணிய நாளில் திருமாலின் பத்து அவதாரங்களைப்  பற்றி எழுதிய பத்து வெண்பாக்களை இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன் 
ரமேஷ் 

தசாவதாரம் 

மச்சாவதாரம் 


ஆழ்கடலின் ஆழத்தில் நான்முகனின் நான்மறையை
ஆழ்த்தி மறைத்திட்ட அஸ்வமுக* தானவனை**
மீனினவ தாரத்தில்  போரிட்டு    மீட்டவன் 
வானுரை வைகுண்ட னே    

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

* அஸ்வமுக - அஸ்வம் - குதிரை.
** தானவன் - ராட்சதன் ;


கூர்மாவதாரம் 


மந்தார மாமலையை   மத்தாக ஆக்கியே
இந்திர தேவ ரசுரர் - இணைந்துவெண்        
பாற்கடலை யேகடைய அம்மலையைத் தாங்கினார்
கூர்மாவ தாரத் திலே.  

( பல விகற்ப இன்னிசை வெண்பா )
.

வராகஅவதாரம் 



மண்ணுலகை ஆழ்கடலில் ஆழ்த்திவைத்த ராட்சதனை
வெண்ணிப் பன்றியின்
ரூபத்தில்   - கொன்றபின்
பூமியைத்தன் மூக்கிலே தாங்கியே மேற்கொணர்ந்த
*நேமியன்  வாரா கனே (
பல விகற்ப இன்னிசை வெண்பா )

*நேமியன் - உயர்ந்தவன்; நியமம் தவறாதவன்.  
  

நரஸிம்ஹாவதாரம் 



மானுடன் பாதியாய் *மாஅரியும் மீதியாய் 
ஊனுடல் ரூபம் எடுத்து - இரணியனை 
கொன்றுன் பக்தனை பாலிக்க வேயெடுத்த 
நான்காதாரப்  பிறப்பு.   

(பல விகற்ப இன்னிசை வெண்பா) 

  *மாஅரி- அரிமா ; சிங்கம்  

வாமனாவதாரம் 

மூன்றடி மண்கேட்டு  ஈரடியில் பாரளந்து
மூன்றா மடியூன்றி மன்னன் தலைகொண்டு 
வாமனக் கோலத்தில் வந்தவத ரித்துலகை
சேமமுறச் செய்தமா யன். (பல விகற்ப இன்னிசை வெண்பா )


பரசுராமவதாரம் 


பரசெனும் கோடரி ஆயுதம் ந்தி                                                  
அரசாளும்  க்ஷத்ரிய வம்சத்தை கொன்றென்றும்
சாகா வரம்பெற்று சஞ்சீவி யாய்வாழும் 
ஏகாந்த ராமன் இவன்.  (பல விகற்ப இன்னிசை வெண்பா )    
 

ராமாவதாரம் 

 
பெற்றவன்  சொல்காக்க கான்சென்று தன்னுடன்
உற்றவளை மீட்கவே வில்லேந்தி - தெற்காளும்
கொற்றவனைக் கொன்றவளை மீட்ட அவதாரம்
பொற்புடை ராமனுடைத் தே ! 

( ஒரு விகற்ப நேரிசை வெண்பா )

பலராமாவதாரம்




ராமாவ தாரத்தில் சோதரனி லக்குவனாய்
*சாமத் திருமேனி அண்ணலுக்கு - நேமமாய்
செய்தபணிப்  புண்ணியத்தால் கண்ணனுக்(கு) அண்ணனாய்
உய்த்தான்  பலராம னாய் . 

( இரு விகற்ப நேரிசை வெண்பா )   

* சாமம்- இரவு; சாமத் திருமேனி - இரவைப்போன்ற கருத்த நிறத்தவன் 
  

கிருஷ்ணாவதாரம் 


 
*இருதாயைப் பெற்று  **இருதாரம் ஏற்று
திரௌபதியைக் காக்க துகிலளித்து - அர்ச்சுனனின் 
தேர்ஒட்டி  போர்முடித்து கீதையெனும் நீதியை
பாருக் களித்தகண் ணன்.  

(பல விகற்ப இன்னிசை வெண்பா )


*இருதாய் - பெற்ற  தாய் தேவகி; வளர்த்த தாய் யசோதை. இருவரையும் கண்ணனே தேர்ந்தெடுத்ததால் "இருதாயைப் பெற்று " என்று கூறியுள்ளேன்.

** இருதாரம் - பாமா, ருக்மணி



கல்கியவதாரம் 


கலியுகத்தில் பாவங்கள் பல்கிப் பெருகும்;
நலம்நாடும் மாந்தர்கள் வாடிமனம் சோர்வார்.
உலகத்தை அப்போ தழித்துப் புதுப்பிக்க
கல்கியவ தாரம் வரும்.  

( பல விகற்ப இன்னிசை வெண்பா )






Dec 20, 2020

மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு

 மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு 

சென்ற ஆண்டு மார்கழி மாதம் எழுதிப்  பதித்த ஒரு பாடலை மீண்டும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  அடைகிறேன்.

அன்புடன் 

ரமேஷ்


மார்கழி விடியல்





மார்கழித் திங்கள் நிறைபனிக் காலை
தேரில்  ஏறி வான்வழி உலவும்
சூரிய னொளிக்கதிர் தரைதொடும் நேரம்
ஊரெழு முன்தம் உறக்கம் விடுத்த
கூர்விழி  மாதர்தம் குடிலின் வாயிலில்
நீரைத் தெளித்து நிலத்தைக் கழுவி
அரைத்த அரிசி மாவை எடுத்து
விரலால் விரிமாக் கோலம் இட்டு
ஆவின் சாணம் அதனுள் வைத்து
பூசணிக் கொடியின் பூவைச் செருகி
திருப்பா வைகளின் பாசுர மிசைத்து
அறிதுயில் கொள்ளும் அரியை எழுப்ப

விடியும் இனியவோர்  காலைப்  பொழுது


Dec 16, 2020

காடு வரை பிள்ளை?

காடு வரை பிள்ளை?*

இந்தக் கொரானா நாட்களில் ஒருவரும் அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை விட்டு வேறெங்கும் செல்ல முடிவதில்லை.

வெளி நாட்டு விமான சேவைகள் இன்னும் செயல்படத்  தொடங்காத நிலையில், வெளி நாடுகளில் வசிக்கும் எவரும் இங்கு வர முடியாத நிலை.

எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில்  மகன்களும், மகள்களும் வெளிநாடுகளில் இருப்பதால் , வயதான பெற்றோர் தனித்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் கொரானா நோய் தாக்கி இறந்தபோது, பெற்ற  பிள்ளைகள் எவரும் வந்து ஈமச்சடங்களைக்கூட செய்ய முடியாமல் போனது பற்றிய பல துயரச் செய்திகளை நாளேடுகளில் சில மாதங்களுக்கு  முன் படித்தேன்.

அதன் தாக்கத்தின் பயனாக (சில மாதங்களுக்கு முன்) எழுதப்பட்ட ஒரு கவிதை இது.

 அன்புடன் 

ரமேஷ் 

காடு வரை பிள்ளை?*

"காடு வரை பிள்ளை" என்று

---------- கண்ண தாசன் சொன்னான்- ஆனால் 

நாடு விட்டு நகரம் விட்டு 

----------வீடு விட்டு உறவை விட்டு  

தேடி வேலை** சென்ற பேர்கள் 

----------மீண்டு வருதல்  இயலா  நிலையில் 

பாடு பட்டு பாசம் கொட்டி 

----------வளர்த்த  பெற்றோர் இன்னுயிர் இன்று    

கேடு விளைக்கும் கொடுநோய் தாக்கி 

----------கூடு விட்டுப்  பறந்த போதும் 

வீடு திரும்ப வழியொன் றின்றி 

----------வேறு   இடத்தில்  முடங்கிக்  கிடக்க 

காடு வரையில் கடைசிப் பயணம் 

----------கூடச் செல்லல் எங்கன மியலும்?


* என்னுடைய ஒத்த வயதினருக்கு "வீடு வரை உறவு" என்று தொடங்கும் இந்தப் பாடல் நினைவிருக்கலாம். பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம் பெற்றது.

** "வேலை தேடி" என்று படித்தறிக.

Dec 12, 2020

பாரதியார் பிறந்த நாள்

நேற்று மகாகவி பாரதியின் பிறந்த தினம்.  

அவரை நினைவு கூர்ந்து வணங்கி ஒரு கவிதை.

அன்புடன் 

ரமேஷ் 


பாரதியார் 

பிறந்த  நாள் 11-12-2020

 


முடிந்த முண்டாசு ! முறுக்கிய கூர்மீசை! 

நடுநெற்றிப் பொட்டின் கீழ் நாட்டின் விலங்கறுக்க 

விடுதலை வேட்கையுடன் துடிக்குமிரு கருவிழிகள் !


தடித்தவிரு உதடுகளைத் திறந்தவுடன் தடையின்றி 

தொடுத்ததோர் வில்விட்டு விரைகின்ற  கணைகள்போல் 

அடுக்கடுக் காகவரும் அழகுத்  தமிழ்க்கவிதை !


மிடுக்கோடு மடித்துக் கோத்திட்ட கையிரண்டும் 

முடியரசன் முன்னாலும் கவியரசர் நானென்று 

அடங்க மறுத்திட்டு முன்னிருத்தும் இறுமாப்பு!


மடித்தெடுத்துக்   கட்டிய  கச்ச உடையோடு

எடுத்து முன்வைக்கும் பீடு நடையோடு 

தடைகள்  தூளாக்கி தடம் பதிக்கும் திண்கால்கள் !


உன்னுருவம் நோக்கையிலே பொங்கியெழும் புத்துணர்வு

என்மனதில் எந்நாளும் இனியதமிழ்க் கவியரசே!

   







Dec 5, 2020

குறள் மேல்வைப்பு வெண்பா - 20


குறள் மேல்வைப்பு வெண்பா - 20





நேற்றைய செய்தித் தாளில் படித்த ஒரு செய்தி - "ஷோலாப்பூரை சேர்ந்த ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் உலகின் தலை சிறந்த ஆசிரியராக ஒரு சர்வதேசப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக அவர் ஒரு மில்லியன் டாலர் பரிசையும் பெற்றார்" என்பது.  ஆனால் செய்தி இத்தோடு முடியவில்லை! அவர் பெற்ற அந்தப் பரிசுத்  தொகையில் பாதியை  தன்னோடு இறுதிச் சுற்றில் போட்டியிதத்  தேர்ந்தெடுக்கப்பட்டுத் தோல்வியடைந்த  மற்ற ஒன்பது பேர்களுடன் பகிர்ந்து கொண்டார்! அதற்கு அவர் கூறிய காரணம் " கடைசி வரை போட்டிக்குத் தேர்வு பெற்ற மற்ற அனைவரும் மனம் உடையாமல் அவர்களது சிறப்பான கல்விப்பணியைத் தொடர இது ஊக்கமளிக்கும் " என்பதாகும்!

"ஊருணிநீர் நிறைந் தற்றே உலகவாம் , 
பேரறி வாளன் திரு " 

என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!

இச் செயலைப் பாராட்டி . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு  குறள் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ்  

பி.கு: குறள்  மேல் வாய்ப்பு வெண்பாவில் முதல் இரண்டு அடிகள் ஒரு செய்தியையோ அல்லது அனைவரும் அறிந்த ஒரு கதையையோ குறிக்கும். மூன்றாம், நான்காம் அடிகளில்  அது குறித்த குறள் இடம் பெறும். நான்கு அடிகளும் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட ஒரு வெண்பாவாக அமையும்.  என்னுடைய முந்தைய குறள் மேல்வைப்பு வெண்பாக்களை , தேடிப்  படிக்க  வசதியாக , ஒரு தொகுப்பாக அமைத்திருக்கிறேன்!



பரிசாகத்   தான்பெற்ற பொற்கிழியில் பாதி     

பிரித்தே   பகிர்ந்திட்டான்    தோற்றோ  ருடன்கூட  

ஊருணிநீர் நிறைந் தற்றே உலகவாம் 

பேரறி வாளன் திரு  


(பல விகற்ப இன்னிசை வெண்பா)