Search This Blog

May 28, 2017

சோ

சோ 


சோ ராமசாமி அவர்கள் மறைந்த போது ஒரு இரங்கல் கவிதை எழுதி இந்த "கனித்தோட்ட"த்தில் பதித்திருந்தேன். 
என்னுடைய பதிவுகளிலே மிகுந்த வரவேற்பைப் பெற்ற  கவிதைகளில்  இது ஒன்று.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்,  துக்ளக் இதழில்  இது , சில சிறு மாற்றங்களுடன், வெளியிடப்பட்டிருக்கிறது. ( பக்கம் 27 ).
இதை மீண்டும் ,  வெளியிடுவதில் மகிழ்ச்சி  அடைகிறேன்!

அன்புடன்
ரமேஷ்



சோ" என்று பெய்து கொண்டிருந்த  மழை நின்று விட்டது .

இந்த மழை --
வாரம் தோறும் நம்மை நனைத்து வந்த
கருத்து மழை !
மேடையிலும், வெள்ளித் திரையிலும் பொழிந்து வந்த
சிரிப்பு மழை.
நம் மனக் குளங்களை நிரப்பி வழிந்து வந்த
மகிழ்ச்சி மழை.
குடையின்றி, தடையின்றி வேண்டியே நாம்
நனைந்த மழை.

மழை நின்றால் வானம் வெளுக்கும்!
ஆனால்
இந்த மழை நின்றதால் , மனம் இருண்டதே!

அரசு கட்டிலில் யார் அமர்ந்த போதும் -
ஏமரா மன்னர்களை இடித்துரைத்து , அவ்வுரையை
பாமர மக்களையும் படிக்க வைத்து - அவர்கள்
ஏமாறா  திருக்கச் செய்த
எழுத்தாளன் .

அங்கதத்தில் அரசன் !
அதையும்
இங்கிதமாய்ச் சொல்லி
எவரையும் ரசிக்க வைத்த
நடிகன் .


IS GOD DEAD - என்ற  கேள்வி எழுந்தாலும்
இந்த "சரஸ்வதியின் செல்வன் "
மீண்டுமிவ் யுகத்தில்  சம்பவித்து வருவானென 
நம்பிடுவோம் , நாம் இன்று --

WHY NOT?
பொறுத்திருந்து பார்ப்போம் !
Let us WAIT AND SEE !

அதுவரை 

அன்னாரின் ஆன்மா சாந்தியுடன் இருக்க இறைவனை வேண்டுகிறோம்




May 23, 2017

நில்லாத நடம் புரிவோய், அருள்நீயே! - (பிரதோஷப் பாடல் 1)

நில்லாத நடம்புரிவோய் , அருள்நீயே!
(பிரதோஷப் பாடல் 1)

"ஆசைகளும் , உலகப்பற்றுகளும்  துன்பங்களுக்கு வித்து " என்பதை பல ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இளம் வயதில் ஆசைகளைத் துறப்பது  கடினம்தான்.
ஆனாலும், இளமையில் இன்பங்களை அனுபவித்த பின்பு, வயது முதிர , முதிர ஆசைகளைத் துறப்பது சுலபமாக அல்லவா ஆகவேண்டும்?
இதுவும் அவ்வளவு  எளிதாக  இல்லையே!
இந்தப் பற்றில்லா நிலைமை வந்தடைய, நடராசப் பெருமானை வேண்டி  இன்றைய பிரதோஷப்   பாடல் .


அன்புடன் 

ரமேஷ் 


நில்லாத நடம்புரிவோய் !

துள்ளியே    விளையாடும்   இளமைப்   பருவங்கள்
தள்ளியே   ஆண்டுபல    போனபின்னும்
பல்லாடி நரைவிழுந்து  பார்வையும் புரையோடி 
தள்ளாடித் தடியூன்றும்  நேரத்திலும் 
உள்ளாடும் மனதினில் உலகத்து ஆசைகள்
நில்லாது நீக்கிட்ட நிலை காண 
சொல்லோடு பொருள்போல உமையோடு இணைந்திட்டு
நில்லாத நடம்புரிவோய் ,  அருள்நீயே!




May 20, 2017

அற்புதங்கள்

வாழ்க்கையின் பெரும் பகுதியை ஓடுவதிலும், எதை  எதையோ தேடுவதிலும் கழித்து ஒழித்துவிட்டபின், நாம் காணும்  காட்சிகளில் புதைந்து கிடக்கும் அற்புதங்களை சற்று ரசித்தால்  என்ன?

After having spent the best part of our life running after things , why not step back and find some time to enjoy the beautiful things of nature?

அன்புடன் 

ரமேஷ் 


அற்புதங்கள் 





மேகமில்லா  நீல வான நிர்மலம் ஒரு  அற்புதம் 
தேகமில்லா தென்றல் காற்று முகம் தழுவுதல் அற்புதம் 
தேசமில்லா பறவைக் கூட்டம்  பறக்கும் காட்சி அற்புதம். 
பாசத்தோடு அன்னை மகவை அணைக்கும் காட்சி அற்புதம் 


வாலை யாட்டி சுதந்திரமாய் நீல வானந்  தன்னிலே 
 நூலறுந்த  பட்டம் ஒன்று மிதக்கும் காட்சி அற்புதம் 
மேலிருந்து முகம் நனைக்கும்   மழையின்  தூறல்  அற்புதம்
பாலருந்தும் குழந்தை முகத் தோற்ற முமே  அற்புதம் 

வானும் மண்ணும் அற்புதம் ; வாழும் யாவும் அற்புதம்;
கானும்  மலையும்  அற்புதம்; கடலும் நதியும் அற்புதம்
நானும் நீயும் அற்புதம். நீரும் நெருப்பும் அற்புதம்.
ஆணும் பெண்ணும் அற்புதம்; காணும் யாவும் அற்புதம்;

ஆன தெல்லாம்  அற்புதம்;  ஆகப் போவ  தற்புதம் .
காணும் காட்சி யாவிலும் காணு கிறேன்  அற்புதம்
நாளை என்ன நடக்குமென்று நாம் அறியாப்  போதிலும் 
நிச்சயமாய் அதை நடத்தும்   இறைவன் விதி  அற்புதம். 

இயற்கை படைத்த எதுவிலும் இருபுடை யிவை* வற்புதம்
இயற்கையையே  யார்  படைத்தார்?  வணங்கிடு அவர் பொற்பதம்.
இவ்வுலகில் நாம் வாழும்   காலம் மிகவும் சொற்பமே.
அற்புதங்கள் யாவும் கண்டு அனுப விக்கக்   கற்பமே !

*இருபுடை இயைவு-- symmetry




May 12, 2017

SWAMINATHAN CHINNASAMY KARNAN வெர்சஸ் SUPREME COURT



SWAMINATHAN CHINNASAMY KARNAN  வெர்சஸ் SUPREME COURT

இன்று நாளேடுகளிலும், ஊடகங்களிலும் பரபரப்பாகப்  பேசப்படும்  ( இப்போது போலீசாரால் தேடப்படும்) ஒரு நபர்  கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன்.
பல மாதங்களாக, தான்  Scheduled Cast -SC  -ஐ சேர்ந்தவர் என்பதால் ,தன்னை தன்  சக நீதிபதிகள் தரக்  குறைவாக நடத்துவதாகவும் , தனக்கு பெரும் அநீதிகள்  அழைக்கப்படுவதாகவும் கூறி வந்த இவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியையும், உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் விட்டு வைக்கவில்லை. இவர் தொல்லை பொறுக்காது இவரை இடமாற்றம் செய்த போதும்.பிற நடவடிக்கைகள் எடுத்த போதும் , அதை எதிர்த்து இவர் கூறி வந்த ஒரு  காரணம், தான் ஒரு SC  எண்பதாலேயே இவைகள் எடுக்கப்பட்டன என்பதாகும். இது தவிர, உச்ச நீதி மன்றத்தார் மீது இவர் "எடுத்துள்ள" நடவடிக்கைகளும், நீதி நிறுவனங்களையே மக்கள் ஒரு கேலிப்பொருளாக நினைக்கும் நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. திரும்பத்  திரும்ப SC வாதத்தை எடுத்து வைக்கும் இவரைப் பற்றி SC என்ற தலைப்பெழுத்துத் தொடரின் பல்வேறு அர்த்தங்களை உபயோகித்து  ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு :  பாடலின் ஒவ்வொரு அடியும் மூன்று சீர்கள் கொண்டவை. ஆங்கிலமும், தமிழும் கலந்து இருப்பதால், இசையோடு படிப்பதற்கு ஏதுவாக , ஒவ்வொரு சீருக்கும் இடையே அதிக இடைவெளி விட்டுப் பிரித்து இருக்கிறேன்.  பாடலின்  வலது பக்கப் பகுதியில்  , அந்தந்த வரியில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்  SC என்பதற்கு விரிவாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடலைப் படித்து ஒளிப்பதிவும் செய்திருக்கிறேன்.
முதலில், இதை பற்றிக் கவலைப் படாமல் , பாடலை மட்டும் சந்தத்துடன்ப படித்து கேட்டு ரசியுங்கள்! பிறகு மீண்டும் படிக்கையில் , வலது பக்கக்  குறிப்புகளை படித்துப் புரிந்துகொள்ளலாம்! 



SC யாய்    இருந்துபின்னர்     SC -ஆகி
ஹைகோர்ட்டின்   ஜட்ஜாக   உயர்ந்த SC



"SC நான்   என்பதனால்   SC யாக 
எனைநடத்தி    SC- யாய்ச்    செய்தா"ரென்றும் 


'என்பேரை   எழுதிவைத்த   பலகையைத்தள்ளி
SCயால்    SC க்கள்    மிதித்தா"ரென்றும்  


"SC யின்      ஜட்ஜுகள்   எல்லோருமே  
SC  க்கள்      பலவுமே     செய்தா"ரென்றும்


இப்படிப்பல    காரணங்கள்    விதம்விதமாக 
தினம்கூவும்    SC யாய்    இருந்ததனாலே

SChபாதிப்போ   இவர்க்கென்    றெண்ணி  
SCசெய்ய    SCயை    SC அமைத்தார்.



"SCஜட்ஜு      போட்டஇந்த    ஆணைகளெல்லாம்  எனக்கெல்லாம்     SCயென்    றெடுத்துக்கூறி

"நானென்ன     SCயே     இல்லாதவனா?
SC மட்டும் என்ன ஒரு  SC  பசுவா ?
என் பவரைக்    காட்டுகிறேன்    இவர்க்கே"என்று 

SCக்கு    கொடுப்பதுபோல்    பிடிவாரண்டை
SCஜட்ஜ்     மேலேயே     திருப்பிவிட்டார்.

தான்ஒரு     SCஎன்ற    எண்ணத்தினால் 
இன்றுஇவர்     இழைத்திட்ட     SC எல்லாம்

விளைவித்த      SCயை      SC கண்டு
வெலவெலத்துப்   போயிருக்கும்    நிலைமைஇன்று!

SCபோட்ட    SCஇவர்    என்றேகூறி
குலுங்கக்குலுங்க    நாடெல்லாம்    சிரிக்குது பாரு!


 SC-SENIOR COUNCIL
 SC-STANDING COUNCIL
SC- SWAMINATHAN CHINNASAMY KARNAN

SC-SCHEDULED CAST
SC-STEP CHILD
SC-SECONDARY CITIZEN

SC- Shoe-Chappal
SC- சக கோர்ட்டார் 


SC-SUPREME COURT
SC- SERIOUS CORRUPTION



SC-சண்டைக் கோழி

SCh- SCHIZOPRENIA
SC-SANITY CHECK 
SC-SPECIAL COMMITTEE
SC- SUPREME COURT

SC- SUPREME COURT
SC-சற்றும்   செல்லாது

SC-SPINAL CORD
SC- SUPREME COURT
SC-SACRED COW

SC-SIMPLE CRIMINAL
SC- SUPREME COURT

SC-SUPREME COMMANDER
SC- செய் கருமம்

SC-SYSTEMIC  CHAOS
SC- SUPREME COURT


SC- SUIT-COAT
SC-SUPER CLOWN


-------------------------------------------------------------------------------------------------------------------------

May 10, 2017

மவுண்ட் ரோடு மெட்ரோ ரயில் நிலையம்

மவுண்ட் ரோடு மெட்ரோ ரயில் நிலையம் 

 NEWS ITEM -1 ; செய்தி -1

UNDERGROUND METRO  RAIL SERVICE TO BE COMMISSIONED
சென்னையில் பாதாள  மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் !

NEWS ITEM - 2 ;  செய்தி -2

MOUNT ROAD CAVED IN ABOVE THE UNDERGROUND METRO RAIL LINE TRAPPING  A BUS AND A CAR IN THE CRATER FORMED!

சென்னை மவுண்ட் ரோட்டில் பாதாள மெட்ரோ ரயில் பாதைக்கு  மேலே தெரு பிளந்து வண்டிகள் கீழே இறங்கின!

இவை பற்றி -----

அன்புடன் 

ரமேஷ் 




"அண்டர் கிரௌண்ட் மெட்ரோ"க்கு 
----------அவசரமாய்ப் போவதற்கு  
"என்ட்ரி பாயின்ட்" மவுண்ட் ரோட்டில் 
-----------இப்படியே கொடுத்துவிட்டார் !
கவிழ்ந்த வண்டிகளின் 
-----------கதவைத் திறந்து கொஞ்சம்  
தவழ்ந்து கீழ்சென்றால் 
------------ரயில்நிலையம் மிக அருகில்!


May 5, 2017

கெம்பிளாஸ்ட் பொன்விழா


நேற்று (4-5-2017) கெம்பிலாஸ்டின் பொன்விழாக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கூடப் பணிசெய்த பலரையும் சந்தித்து   அளவளாவவும் , நிறுவனர்களைச் சந்த்தித்து வாழ்த்துக்கூறவும் முடிந்தது. அந்த நிகழ்வின்  முடிவில் எனது கவிதைப்  பதிவைப்  படித்து ரசிக்கும் நண்பர்கள் ராம்குமார் சங்கரும், கிருஷ்ணமூர்த்தியும் , இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று கேட்டதின் விளைவே இந்தப் பதிவு. 

நிகழ்சியைப் பற்றியல்லாமல் , "நிகழ்ச்சியின் நாயகன் " கெம்பிளாஸ்ட் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


கெம்பிளாஸ்ட் பொன்விழா 

பூவிரித்த மலர்ச்சோலை மகரந்த  மணம்பரப்பும்
காவிரிக் கரை ஓரத்தில்
பீவிசி பிசின்செய்யும் தொழிற்சாலை நம்நாட்டின்
தேவைஎனக்   கண்டறிந்து
மேவி*யதை மேட்டூரில் அயிம்பத்து ஆண்டுகளாய்
பாவித்து வரும் மாட்சியை
நாவிரித்து நவிலவே முடியுமட்டும்  முனைகின்றேன்
பாவொன்றை நான் புனைந்து.

நாராயணர் அன்று வித்திட்டு வேர்கொண்ட
ஆறா யிரம்கொள்  ளளவு
நூறுபல  நூறாகப்  பல்கிப் பெரியதோர்
விருட்சமாய் வளர்ந்த தின்று .

பசைவகைப் பீவிசி** பிசின்செய் திறத்திலே
இசைஎவரும் இல்லை இவர்க்கு.
புகைமணல்மம்@, எரிகாரம்@ , க்லோரோ மீதேனென்று
வகைவகை வேதியல் களை 
தகவோடு  செய்வதில் நிகரில்லை இவர்க்கென்று  
மிகையில்லை  என்றுரைத்தால்.#

திருமறைக் காட்டினில் , உப்பனார் ஓரத்தில் 
பிரவிடையான் ஆற்றின் கரையில்
திரைகடல் கடந்தோடி  நைல்நதியின் நிலப்பரப்பில் 
துறைமுகம் சைடின்*** அருகில் 

வெவ்வேறு   இடங்களில் நுண்தொழில் நுட்பமிகு
செய்கூடம் பலவும் நிறுவி 
சங்கரரும் அவர்குழுவும் சாதித்த தையெந்த 
கிங்கரனும்  மிஞ்சல் அரிதாம்!

பொன்னைவிட , அளவிலே பெரிதென்னும் புகழைவிட 
நன்மதிப்பும் நற்பெயருமே 
என்றுமே பெரிதென்று ஏறு நடைபோட்டு 
பொன்விழா இன்று காணும் 
நிறுவனம் கெம்பிளாஸ்ட் வைரவிழாக் காண 
இறையவன் அருள் தருகவே!

*     மேவி = இருக்கச் செய்து, நிறுவி 
**   பசைவகைப் பீவிசி= paste resin .
@ புகை மணல்மம்=fumed silica , எரிகாரம்=caustic soda 
*** துறைமுகம் சைட் = port 
#      "என்றுரைத்தால் மிகையில்லை" என்று படித்தறிக