Search This Blog

Showing posts with label vasana kavithai. Show all posts
Showing posts with label vasana kavithai. Show all posts

Jun 5, 2020

உயிர்காணும் உறவுகள் - கொரானா பாசிடிவ் -3

உயிர்காணும்  உறவுகள் - கொரானா பாசிடிவ் -3

தொடரும் வீட்டடைப்பு நேரத்தில் உருப்படியாய் செய்வது, சென்ற பதிவில் கூறியிருந்தபடி , புத்தகங்களை தூசி தட்டி எடுத்துப் படிப்பது மட்டுமல்ல; விட்டுப்போன உறவுகளையும் , எட்டிப்போன நட்புகளையும் கூட தூசி தட்டி புதுப்பித்துக்கொள்ள இது ஒரு சிறந்த நேரம்!
செய்வோமா?
அன்புடன் 
வீ. ரமேஷ் 

உயிர்காணும்  உறவுகள்

பரணையிலே போட்டிருந்த பெட்டியினைக் கீழிறக்கி
திறந்ததனுள் மறைந்திருந்த  படத்தொகுப்பைப்  பார்த்ததனால்
மறந்திருந்த உறவுகளை  மறுபடியும் உயிர்ப்பிக்க
உரமிட்டு உதவிட்ட ஊரடங்குக்குக் கோர்நன்றி .

Mar 21, 2019

பேத்திகள் -

இன்று எனது மூன்றாவது பேத்தி ஆதிராவின் பிறந்த நாள்!
அதைக்  கொண்டாடும் விதமாக , வெகு நாட்களாக விடுபட்டிருந்த என் பதிவை மீண்டும் புதுப்பிக்கிறேன்!
அன்புடன் 
ரமேஷ் 
கனித்தோட்டம் 


பேத்திகள் 

பேத்திகள் -

ஓடுதலிலும் தேடுதலிலுமே  காலம் கழிந்ததால்
மகனிடமும் மகளிடமும் காட்ட மறந்து
மனதில் அணை கட்டித்
தேக்கி வைத்திருந்தஅன்பு ஊற்றுகளின்
வடிகாலாக விளங்கும்
பாத்திகள்

பேத்திகள்-

வையகத்தின் மொத்த அழகையும்
கையகப்படுத்தி , 
அதனைத் தம்
அழகுமுகச்  சிரிப்பிலும்
உதிர்மழலைச் சொல்லிலும்
சேர்த்து வைத்திருக்கும்
நேர்த்திகள்

தாத்தாக்களுக்கு 
அவை  தரும் ஆனந்தத்தைக்
கூற உண்டோ  
வார்த்தைகள்?



  

Sep 29, 2018

பேத்திகளுக்குப் புரிவதில்லை




பேத்திகளுக்குப் புரிவதில்லை

கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில்

வெள்ளைத் தாள்களில் கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்துப் போடும் தாத்தாவைத் திட்டாத அம்மா

தான் செய்தால் மட்டும் ஏன் திட்டுகிறாள் என்று !


Feb 5, 2018

வெறுமை



வெறுமை 

என் பெங்களூர்ப் பேத்தி , 
இரண்டு வார இருப்புக்குப்பின்
நேற்று மீண்டும் பெங்களுர் திரும்பினாள்.

கீழே இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருள்கள்
பெட்டியில் அடைக்கப்பட்டு
மீண்டும் பரணை ஏறின.

அவளை  
அமர்த்தி உணவூட்டும் குழந்தை நாற்காலியும்*      *high chair
அவள் படுத்திருந்த எடுப்புக் கட்டிலும்* ,                     *portable pram
மீண்டும் மடிக்கப்பட்டு 
பெட்டிக்குள் பதுங்கின.

மாடிப்படிகளுக்குப்  போடப்பட்டிடுந்த
தடுப்புக் கதவு எடுக்கப்பட்டுவிட்டது.

அவள்  சென்னைக்கு விஜயம் செய்யுமுன்
அவசர  அவசரமாகக்  காலி செய்யப்பட்ட

அலமாரிகளின் அடித்தட்டுகளும் ,

வரவேற்பறையில் நிறைந்திருந்து,
பின் மறைக்கப்பட்ட  விந்தைப் பொருள்களும்*,       *curios

கைக்கெட்டும் தூரத்தில்  இருந்து  எடுத்து
மேலே வைக்கப்பட்ட மின்ணனுக் கருவிகளும்*         *electronic goods 

மீண்டும் அவையவைகளின் இடத்தில்வைக்கப்பட்டு 

வீடு நிறைந்துவிட்டது.
ஆனால் 
மனம் மட்டும் 
வெறுமையாகிவிட்டது.

Oct 25, 2017

மீண்டும் பிறக்கிறான் நரகாசுரன்

மீண்டும் பிறக்கிறான் ---- 
நரகாசுரன்

அன்று

மூவுலகங்களையும்   தன் காலடிக்கீழ் கொண்டுவந்து
மக்களை வதைத்து
கொடுங்கோலாட்சி செய்த
நரகாசுரனை
அழித்தான் கண்ணன்.

அவன் அழிவைக்  கொண்டாடினர்  மக்கள்.

பிறந்தது தீபாவளி.


இன்று

தீபாவளிக்  கொண்டாட்டத்தில்
வெடிக்கும்  பட்டாசுகள் வெளிவிடும்
விஷப்புகையின்   உருவத்தில்
விஸ்வரூபம் எடுத்து
மக்களை மெள்ள மெள்ள அழிப்பதற்கு

மீண்டும் பிறக்கிறான்
நரகாசுரன்

அவனை அழிக்க
என்று வருவான்
கலியுகக் கண்ணன்?

காத்திருக்கிறோம்.