Search This Blog

May 27, 2022

பிரதோஷப் பாடல் - 46

பிரதோஷப் பாடல் - 46

இன்றைய  பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வணங்கி ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ்  




ஓடிஓடி பாடுபட்டு  பொன்பொருளைச்  சேர்த்தபின் 

தேடித்தேடி தேடித்தேடி  இன்பமுழுதும்  துய்த்தபின்

ஆடிஆடி  ஆட்டமாடி வாழ்வைவீ ணடித்தபின்  

கூடுவிட்டு சீவன்போகும்   வேளைநாளை வருகையில் 

நிம்மதியைத் தேடுகின்ற கேடுகெட்ட மாந்தரே 

தும்பைவிட்டு வாலினைப் பிடிக்கஓடல்  என்கொலோ?

அம்புலியைச்  சிரத்திலேந்தும் அர்த்தநாரி  ஈசனை   

நம்பிநாளும் காலைமாலை  நயந்துவேண்டிக் கும்பிடின்

இம்மைமறுமை முன்மைஎன்னும் முப்பிறவியின்   வினையெலாம் 

நம்மைவிட்டு நீங்கிடும்  நண்மைவந்து சேருமே! 

 

 

May 21, 2022

ஜெர்லின் அனீகாவின் சாதனைகள்

ஜெர்லின் அனீகாவின் சாதனைகள்  

பிரேசில் நாட்டில் அண்மையில் நடைபெற்ற " செவிப்புலனிழந்தோருக்கான ஒலிம்பிக் போட்டி" யில் (deafolympics), மதுரையைச் சேர்ந்த 18 வயது ஜெர்லின் அனீகா என்ற சிறுமி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றாள்! இந்தச் சாதனை பெரிதாக செய்தித் தாள்களிலும் ஊடகங்களிலும் போற்றப்படவில்லை . இது குறித்து வருத்தத்துடன் ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ் 



கேட்கும்திற னிழந்தோரின்  சிறகுப்பந் தாட்டத்தின் *   

போட்டியிலே பங்கேற்று  பதக்கங்கள் பலவென்று 

நாட்டுக்குப் பெருமையினைச் சேர்த்திட்ட நங்கைபற்றி 

ஏடுகளும் எழுதவில்லை ஊடகங்கள் உரைக்கவில்லை 


செவிப்புலன்கள் சிதைபட்ட சிறுமியிவள் சாதனைகள் 

செவிகளிலே  விழவிலையோ ? செவிடாகிப் போனோமோ ?

மவுனமினும் காட்டாமல் மாற்றுத்திற னாளிகளின் 

பவிசு**க்கோர் ஒளிவட்டம் போட்டேநாம் காட்டிடுவோம்!


* சிறகுப்பந்தாட்டம் = shuttle

** பவிசு = சிறப்பு, பெருமை 

May 13, 2022

வழக்கு

வழக்கு 

நேற்றைய செய்தித் தாளில் இடம் பெற்ற செய்தி  இது!


வழக்கின் முடிவு என்ன ஆகும் ? பொறுத்திருந்து பார்ப்போம்! இது பற்றி ஒரு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 


பேரக் குழந்தையை பெற்றுத் தருவதற்கு

நேரக் கெடுவைக் கொடுத்தே - கிழவிதன்

பிள்ளைமேல் மன்றத்தில்  போட்டாள்  வழக்கொன்றை 

"இல்லையேல் ஐங்கோடி தா."



May 8, 2022

தாய்மைத் திருநாள்-அன்னையர் தினம்

தாய்மைத் திருநாள்- அன்னையர் தினம் 

இன்று அன்னையர் தினம்.

முற்றும் துறந்த முனிவர் எனினும் தாய்ப்பாசத்தை துறக்க முடியாது.

ஆதிசங்கரர் தன் தாயைப் போற்றிப் பாடிய பாடல் தொகுப்பின் முதலாவது பாடலை மொழிபெயர்த்து  இந்த தாய்மைத்  திருநாளன்று பதித்து மகிழ்கிறேன்!

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் .

அன்புடன் 

ரமேஷ் 





1st sloka of the Matru Panchagam by the Great Sage AdiShankara

आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा

नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी।

एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः

दातुं निष्कृतिमुन्नतोऽपि तनयस्तस्यै जनन्यै नमः ॥ 

Meaning In English

The unbearable pain endured by the mother at the time of  my delivery, the lack-lustre feeling and the emaciation of the body during pregnancy, the year long sharing of the bed dirtied by my faeces and urine  when I was a baby,   O’ Mother, none of these sufferings borne by you because of my birth can be compensated by me in the least, however great I may be.  My Namaskaram to you O ‘ Mother!

இனி என் பாடல் 

பெறுகையில் எனைநீ பெரும்பா டுற்றாய்

கருவைச் சுமக்கையில்   களைத்தாய் இளைத்தாய் 

சிறுகுழ வியாய்நான் இருக்கையில் எந்தன் 

சிறுநீர் நனைத்த படுக்கையில் படுத்தாய்  

பெரிதாய் வளர்ந்துநான்   பெரும்புகழ் பெறினும் 

சிறிதும் என்னால் நீயுற்ற துயரை 

சரியீ டுசெயல் அரிதினும் அரிதே !


வாழ்க்கை வெற்றியின் அளவுகோல்

 வாழ்க்கை வெற்றியின் அளவுகோல்


உங்கள் வாழ்வின் வெற்றியின் அளவை
நீங்கள் அறிவது எங்கனம் ?

"வங்கிக் கணக்கில் தங்கம் வெள்ளி
செல்வம் உள்ளது எத்தனை?"

என்பதை விடஇவ் வாழ்வின் மாலையில்
வேறோர் அளவுகோல்அவசியம்.

உங்களின் மீதுஅன்பு செலுத்த
நீங்கள் விரும்பும் பெயர்களில்

எத்தனை பேர்கள்  உங்கள்  மீது
உண்மை அன்பை உடையவர்?

பங்கிதை போட்டுப்  பார்த்தால் உணர்வோம்
வாழ்க்கை வெற்றியின் அளவினை.


அன்புடன் 

ரமேஷ் (கனித்தோட்டம்)


May 3, 2022

அக்ஷய திருதி

 

இன்று அக்ஷய திருதி. 

இந்த நாளன்று பிறர்க்கு நாம் செய்யும் நற்செயல்கள் பன்மடங்கு பலன் அளிக்கும் என்பது ஐதீகம்.

நாமும் பல நற்செயல்கள் செய்து பலனுறுவோம்.

இது குறித்து இரு சிறு பாடல்கள்- 

அன்புடன்

ரமேஷ்.

பாடல் 1

அட்சய திருதியின்று நம்மில் நலிந்தோர்க்கு 

தட்சிணை* யளித்துதவி செய்தால்  - **யியட்சிணி 

லட்சிமி ஆகியோர் கடைக்கணருட் பார்வை 

நிச்சயம் கிட்டும் நமக்கு

(வெண்டுறை)

*தட்சிணை = நல் உதவி, donation 

** யியட்சிணி= குபேரனின் மனைவி

பாடல் 2

இங்கோடி  அங்கோடி அட்சய திருதியன்று 

தங்கம் வாங்குதல் தவிர்த்து - இங்குள்ள 

ஏழை பாழைகட்கு நாம்செய்யும் உதவிகள் 

ஊழ்ப்பீழை* வெல்லும் வழி.

(வெண்டுறை)

* ஊழ்ப்பீழை= விதியால் விளையும் கேடுகள்

*ஊழ்ப்பீழை=விதியால் விளையும் கேடுகள்






ஈத் திருநாள்

இன்று ஈத் திருநாள். 
இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்.

செங்கதிர்ச் சுடரோன்  சூரியன் உதித்து 

வான்வழி உலவும்  பொழுதுகள் முழுதும்

நான்கு வாரங்கள் நன்நோன் பிருந்தபின் 

வான்புகழ் இறைவனை வணங்கித் துதித்து

ஊன்கறி விருந்தினை  உற்றார் உறவுடன்

பாங்காய்ப் பகிர்ந்து களிக்கும்  ஈத்நாளில்

உங்கட்கு உரைப்பேனோர்  வாழ்த்தை.