Search This Blog

Jul 28, 2020

(கொரானா) வலையில் சிக்கிய மீன்கள்


(கொரானா) வலையில் சிக்கிய மீன்கள் 






செய்தி :

காசிமேடு மீன் சந்தையில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம்!
சமூக இடைவெளி விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்ட மக்கள்!

பாடல் :

மீன்வாங்கச் சந்தைக்குச் சென்றோர் கொரானாவைத்
தான்வாங்கி வந்தார் திரும்புகையில்   - ஏன்தானோ
மின்விளக்கின் மேல்விழுந்து மாய்கின்ற விட்டில்போல்
தன்னையே   தண்டிக்கின்  றார்?

(இருவிகற்ப நேரிசை வெண்பா)


அன்புடன்

ரமேஷ்







Jul 20, 2020

மனதின் கழிவுகள்


நம் உடலின் அவயவங்கள்,நாம் சுவாசிக்கும் காற்றிலும், உண்ணும் உணவிலும் உள்ள சத்தை  மட்டும் எடுத்துக்கொண்டு கழிவை வெளியேற்றிவிடுவது போல், நம் மனமும் நல்ல எண்ணங்களை மட்டும் வைத்துக்கொண்டு , கெட்ட எண்ணங்களை எல்லாம் விலக்கிவிட்டால்  எவ்வளவு நன்றாக இருக்கும்!
ஏன் இறைவன் அப்படிச் செய்யவில்லை?

அன்புடன் 

ரமேஷ் 


உள்ளி ழுக்கும் காற்றி லும் 
-----உண்ணு கின்ற உணவிலும்
உள்ள நல்ல சத்தையே 
-----மட்டு மேற்று கழிவினை
தள்ளு கின்ற வித்தையை 
-----உடலின் உள்ளே  வைத்தவன்,
உள்ளம் என்னும் ஊற்றிலே 
-----கொப் பளித் தெழுந்திடும்
கள்ள எண்ணக் களைகளை 
-----களைந் தெடுத் தெறிந்துபின்
நல்ல எண்ணம் மட்டுமே 
-----நிலைத்து நிற்க வைத்திடும்
வல்லிய தோர் சக்தியை 
-----உள்ளிருத்த  விடுத்த தேன்? 

உண்மை பொய்மை  இடையிலும் 
-----நன்மை தீமை இடையிலும்
உண்டு செய்து சண்டையை  
-----கண்டு  அதனை ரசிக்கவோ?

நுண்மை யாக எண்ணினால்  
-----என்ன வென்று தெரிந்திடும் ;
ண்  குணத்தான் எண்ணமும்
-----நன்கு நமக்குப்  புரிந்திடும்.

உடலம்  எனும்  பருப்பொருள் 
-----தனிற் படியு மழுக்கினை 
துடைக்க  உதவும் கருவிகள் 
-----தந்த அந்த ஆண்டவன்
உள்ளம் எனும் கருப்பொருள் 
----மேற்  படர்ந்த மாசினை 
விலக்க வேண்டும்  வழிகளை 
-----உனையே  தேடச் சொல்கிறான்!





Jul 19, 2020

இலையுதிர் காலங்கள்


இலையுதிர் காலங்கள் 







மரம்விடுத்து மிதந்துவிழும் பழுப்புவண்ண  இலைகளே 
மனம்விடுத்து மிதந்துசெல்லும் எண்ணஅலைகள் போலவோ?
எண்ணஅலைகள் எழுதும்கவிதைக்  கருப்பொருளாய் ஆகும்போல்
மண்விழுந்த இலைகளுமே நல்லுரமாய் மாறுமே !


கடந்துபோன   கோடைகாலக்  கதிரவனின் கிரணங்களால்
சூடுபட்ட உடலின்வெப்பம் சற்றுக்குறைய வேண்டியே
ஆடையான இலைகளைந்து  அத்தனை  மரங்களும்
வாடைக்கால வருகைக்காக விழிகள்நோக்கி  நிற்குதோ?  


நேற்றுமாலை இலைகள்நிறைந்த கூந்தல்இருந்த  மரங்களே
முற்றும்இன்று ஓரிரவில் மொத்தமுடியும் இழந்ததே!
இன்றுமனிதன் அனுபவிக்கும் இன்பம்செல்வம் அனைத்துமே
நின்றுஎன்றும் நிலைப்பதல்ல என்றஉண்மை உணர்த்துதோ?


இலையைஇழந்து கிளைகள்வெறித்துக் காத்துநிற்கும் மரங்களும்
நாளைவசந்த வேளைவந்தால் மீண்டும்பூத்துக் குலுங்குமே !
நிலையும்இன்று குலைந்துபோன மனிதர்பலரின்  வாழ்வுமே
மலர்ந்துமீண்டும் மகிழ்ச்சிகூடும் ; இதுவும்வாழ்க்கைப் பாடமே! 


Jul 12, 2020

அந்த ஏழாம் நாள்

அந்த ஏழாம் நாள்

இன்று ஞாயிற்றுக்கிழமை!
பணியிலிருந்து விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதனால் நடைமுறையில் ஒவ்வொரு கிழமைக்கும்  பெரிதாக வித்தியாசம் தெரிவதில்லை.
பேரன்,பேத்திகளுக்கு பள்ளி விடுமுறை என்பதாலும், மகன்களுக்கு அலுவலக விடுப்பு நாள் என்பதாலும் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை என்று தெரிய வந்திருந்தது.
இப்போது, இந்த கோவிட்  நாட்களில் அந்த வேறுபாடு கூட  இல்லை.
என்றாலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை ஆறு மணிக்குள் என் தூக்கம் கலைந்துவிடுகிறது!
ஞாயிறன்று மட்டும் அது நடப்பதில்லை.
இந்த நாட்களின் வேறுபாட்டை உடலும் மனமும் துல்லியமாக அறிந்து கொள்ளுகின்றனவே!
உங்களுக்கும் அப்படித்தானா?

அன்புடன் 

ரமேஷ் 

அந்த ஏழாம் நாள்

வேலையினை நான்விடுத்து ஆண்டு பல ஆனாலும்
நூலைப் பிடிப்பதுபோல் ஐந்திலிருந்து ஆறுக்குள்
ஆலையின் சங்கொலிபோல் உள்ளிருந்தோர்  ஒலியெழுப்ப
காலைக் கண்விழித்தல் தானாக நடக்கிறது

வாரத்தின் முதலாறு நாட்களில் மட்டிலுமே 
நேரம் தவறாமல்  நிதம்நடக்கும் நிகழ்விதுவே
ஏழாம்  நாள்மட்டும் என்றுமே நடப்பதில்லை
பாழும் மூளைக்கு ஏனிதெனப்  புரிவதில்லை.

நாடு முழுவதுமே பூட்டி இருக்கையிலும்
வீடே கதியென்று விழுந்து  கிடக்கையிலும்
முதலாறு  நாளினின்  றதைத்தொடரும்  ஞாயிறையே
விதம்பிரித்து அறிகிறதே என்மனமிது எங்கனமோ?






Jul 7, 2020

ஒற்றைச் செருப்பு - 2






ஒத்தைச் செருப்பு - 2


காலையில் நடந்து  செல்கையில் கண்டேன்   
சாலையில் கிடந்ததோர் ஒற்றைச் செருப்பை .
ஜோடி யாகவே வாழ்ந்த  செருப்புகள் 
மோடி செய்துஏன் பிரிந்து போயின?

கடைசிப் பஸ்ஸை  ஓடிப் பிடிக்கையில் 
கழண்டு விழுந்து 'கால்விடப்' பட்டதோ? 
காலைக் கடித்த காரணத் தாலே 
கோபப்  பட்டு எறிந்துவிட் டாரோ? 

கள்ளுக் கடையில் நேற்றைய இரவு 
"புல்லாய்த்"* தண்ணீர் போட்டு விட்டு    (* full-ஆய்) 
தள்ளாடித்  தடு மாறி நடந்த 
குடிமகன் விடுத்த காலணியோ  இது?

ஒரு காலணியை இழந்த வருக்கு 
மற்றொன் றால்உறும்  பயனும்  உண்டோ?
தெருமுனை மட்டும் நடந்து பார்த்தால் 
அந்தச் செருப்பும் அங்கே கிடைக்குமோ?