Search This Blog

Jan 22, 2021

ஒரு ஜனனம் , ஒரு மரணம்


ஒரு ஜனனம்; ஒரு மரணம் 




ஒரு ஜனனம் , ஒரு மரணம்  

சாதனைகள் படைத்த சாமானி யர்இருவர் 

வெற்றிக் கோப்பையுடன் வீடு திரும்புகையில் 

இருவரின் கண்களிலும் பெருகிவரும் கண்ணீரே!

காரணமோ வெவ்வேறு! விதியெழுதிய கதையிதுவே!


சின்னப்பன் பட்டியெனும்  சிற்றூரிலே பிறந்து 

முன்னேறப் போராடி வெற்றிகண்ட நடராசன் 

தொண்ணுறு நாட்களுக்கு முன்பிறந்த தன்மகவை 

கண்ணார முதல்முறையாய் கண்டு அணைக்கையிலே 

கண்ணூறிக் கன்னத்தில் வழிகிறது  கண்ணீரே!


ஐதரா பாத்நகரின் ஆட்டோ ஒட்டிமகன் 

தாய்நாடு திரும்புகையில் தந்தை உயிரோடில்லை!

விதையிட்டு விளையாட்டு ஆர்வம் வளர்த்தவரை 

புதைத்திட்ட இடமடைந்து சதைகுலுங்க அழுகையிலே 

கருவிழியில் அருவியெனப் பெருகுவதும் கண்ணீரே!


ஒருவரது கண்ணீரின் பின்னணியில் ஜனனம்!

மற்றவரின் கண்ணீரின் காரணமோ மரணம்!

விதியெழுதிய கதை இதுவே! வேறன்ன கூறுவது?


 அன்புடன் 

ரமேஷ் 

 

Jan 20, 2021

சாதனையும் வேதனையும்

சாதனையும் வேதனையும் 

நேற்றைய  இரு நிகழ்வுகளில் ஒன்று சாதனை; மற்றொன்று வேதனை.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை அதிரடியாக வெற்றி கொண்டது சாதனை.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவர் சாந்தா இறைவனடி அடைந்த செய்தி வேதனை.

இவைகளைப் பற்றி வெண்பா வடிவில் ஒரு பதிவு.

அன்புடன் 

ரமேஷ் 


சாதனை 

முன்னணி  வீரர்கள் ஐவர் ,அடிபட்டு ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் இருந்தபோதும், அனுபவமே அற்ற மாற்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட அணியொன்றை அமைத்து , எவரும் கனவிலும் நினைத்திராத முறையில் சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலியாவை தோற்கடித்தார்கள்!


அஞ்சுபேர் நோயால்  அணியிலில் லாபோதும் 

அஞ்சாமல் ஆடியே வென்றார் விளையாட்டில் ! 

"ஆசி"யரின்*  ஆணவத்தை நீக்கி முகத்திலே 

பூசினார் நன்றாய்  கரி.

                                                                                             (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

* ஆஸ்திரேலியர்கள்  " ஆசீஸ் " என்று சுருக்கி அழைக்கப்படுவர்.



வேதனை



புற்றுநோய் பீடித்து வாடுகின்ற பேர்களுக்கு 

சற்றும் ஓய்வின்றி சேவை செய்தவளே! 

மற்ற உலகோற்கும் உன்சேவை தேவையென

சென்றாயோ அங்கே விரைந்து ?

                                                                                             (பலவிகற்ப இன்னிசை வெண்பா)


Jan 17, 2021

கடலோரக் காட்சி

 கடலோரக் காட்சி 

பல மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்றோம்.  இதற்கு முக்கிய காரணம் பெங்களூரிலிருந்து சென்னை வந்திருக்கும் எங்கள் அன்புப் பேத்தி ஆதிரா! கடற்கரைக்குப் போயே தீரவேண்டும் என்று பிடிவாதம்!

அதிகாலையில் கூட்டம் கூடும் முன்பாக அங்கு கழித்த சில மணி நேரங்கள் சொர்க்கம்தான்!

முகமூடியைக் கழற்றிவிட்டு, சில்லென்ற காற்றின் ஸ்பரிசத்தில் நடக்கும் சுகமே தனி ! கூடவே கைகோர்த்து நடக்க பேத்தியும் இருந்ததால் ஆனந்தம் இரண்டு மடங்கு!

இந்த அனுபவத்தைப் பற்றி ஒரு கவிதை, இதோ!

அன்புடன் 

ரமேஷ்  

கடலோரக் காட்சி 





கடலலைகள் கரை தடவும் ; அலைமுடியில் நுரை மகுடம்;

உடல் தழுவும் குளிர் காற்று; இளம் சூட்டில் கதிர் கீற்று .

முகில் தூவும் சிறுதூறல் ; துகில் நனைக்கும் மழைச்  சாரல்;

முகம் சேரும்  மழைத் துளிகள் சுகம் சேர்க்கும்; அகம் மகிழும்!


கரையோரம் நிற்கையிலே சிற்றலைகள் கால்வருடும்.

விரைந்துவரும் பேரலைகள் துரத்திநம்மை ஓடவிடும் .

திரும்பிக்கடல் செல்கையிலே காலடியில் குழிபறிக்கும்.

குறுமணலின் உரசலிலே உள்ளங்கால் குறுகுறுக்கும்!


தூரத்துத் தொடுவானச் சூரியனைப் பார்த்தபடி, 

இளங்கதிரின் சூட்டினிலே உடல்சிறிது வேர்த்தபடி,

பெயர்த்தியுடன் விரல்களையே கைசேர்த்துக் கோர்த்தபடி, 

நடக்கையிலே பார்த்திருக்கும் கடலதையே  ஆர்த்தபடி!


ஈரமணல்  பரப்பினிலே காலடிகள் தடம்பதிக்கும் 

மீண்டும்மீண்டும் கால்வருட வருமலைகள் அடம்பிடிக்கும்.

இவ்வியற்கைக் காட்சியையென் கண்களுமே படம்பிடிக்கும் 

என்மனதில் இந்நினைவுகள் நீங்காமல் இடம்பிடிக்கும்!






Jan 12, 2021

ஹனுமத் ஜெயந்தி


ஹனுமத் ஜெயந்தி 

இன்று ஹனுமத் ஜெயந்தி.
இந்த நாளில் நங்கநல்லூர் ஆதிவியாதிஹர ஹனுமந்த சுவாமியை  வணங்கி வியாதிகள் அனைத்தையும்  விலக்கி நல்வாழ்வளிக்க வேண்டி ஒரு விருத்தப் பாடல்.
ஆஞ்சனேயரின் அருள் அனைவருக்கும் கிட்டுவதாகுக!

அன்புடன் 

ரமேஷ் 


நங்கநல்லூர் ஆதிவியாதிஹர ஹனுமந்த சுவாமி





துளசி தளங்கள் பறித்து எடுத்து தொடுத்த மாலை அதனுடன்

உளுந்து சேர்த்து பொரித்துக்  கோர்த்த வடையின் மாலை அணிவித்து

வளியின் மைந்தன் ராம பக்த  ஆஞ்ச நேய  சாமியை

விழுந்து வணங்கி வியாதி அனைத்தும் போக்கி அருள வேண்டுவேன்



Jan 10, 2021

பிரதோஷப் பாடல் 37 - காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அஷ்டோத்ரம்

பிரதோஷப் பாடல் - 37

காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அஷ்டோத்ரம்

இன்று மகாபெரியவா என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை. மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு எல்லா மதத்தினராலும் ஞானியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உத்தமர் அவர்.

இந்த நன்னாளில் அவரைத்  துதித்து சமஸ்க்ருத மொழியில் எழுதப்பட்ட அஷ்டோத்ர சத நாமாவளியை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவு மூலத்தின் கருத்தை சிதைக்காமல் , தமிழ்ப்பாடல் வடிவில் அமைத்திருக்கிறேன். இதன் சமஸ்கிருத மூலத்தின் இணைப்பை(லிங்க்) கீழே பகிர்கிறேன்.


மஹா ஸ்வாமிகள் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரரின் மறு உருவே  என்பது பக்தர்களின் திண்ணமான எண்ணம். இந்தத் தோத்திர மாலையில் இந்தக்  கருத்து பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இன்றைய பிரதோஷ தினப் பாடலாக  இதைப் பதிவு செய்கிறேன்.   அடியேனின் இந்த முயற்சியில் ஏதேனும் குறைகள் இருப்பின் மஹாஸ்வாமிகள் மன்னித்தருள்வார் என்று திடமாக நம்புகிறேன். பக்தர்களின் மன்னிப்பையும் கோருகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: இந்த மொழிபெயர்ப்பில் எனக்கு உதவி செய்த திரு ராமசுப்பிரமணியத்திற்கும் அவரது பிற நண்பர்களுக்கும் என் நன்றி.

https://mahaperiyavaa.blog/2013/04/15/downloads-of-all-guru-ashtotrams/






காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அஷ்டோத்ரம்

1. காஞ்சி மாநகர்   காம கோடிமடப்  
    பீடத் தமர்ந்த தலைவா  போற்றி!
2. சந்திர சேகர சரஸ்வதி யாக
    வந்தருள் புரியும் குருவே போற்றி!
3. முனிபுங் குவரில்  முதல்வா போற்றி!
4. காவி உடையினை உடலில் உடுத்து
    கையில் தண்டம் தரித்தாய் போற்றி!
5. பிடித்த பீடைகள் அனைத்தும்  அகற்றி
    பேரருள் புரியும் பரமா  போற்றி !
6. சுவாமி நாத குருவே போற்றி!
7. கருணைக்  கடலின் உருவே  போற்றி!
8. உலகை ஈர்க்கும் உத்தம போற்றி!
9. அண்ட சராசரம் அனைத்திலும் இருக்கும் 
    ஆண்டவனாக வந்தாய் போற்றி!
10. பக்த கோடிகளைக் காத்து அருளும்
      உத்தம உருவே உன்புகழ் போற்றி!
11. தர்மம் காக்கும் தலைவா போற்றி!
12. ஜெயேந்திர சரஸ்வதி குருவே போற்றி!
13. விஜயேந் திரர்வழி படுபவ போற்றி !
14. சிவனும் சக்தியும் சேர்ந்தவ போற்றி!
15. பக்த ஜனங்களின் பிரியனே  போற்றி!
16. பிரம்மா விஷ்ணு சிவனெனும் மூவர்
      ஒருங்கே இணைந்த உருவே  போற்றி!
17. காசியில் வசிக்கும் கோவே போற்றி!
18. கயிலை மலையில் உறைவாய் போற்றி!
19. சுயதர் மத்தை காப்பாய் போற்றி!
20. நான்கு வர்ண மக்களை எல்லாம்
      நன்றே காக்கும் நாயகா போற்றி!
21. உலகில் வாழும் உயிர்களை எல்லாம்
      நலமாய் வாழச் செய்வாய் போற்றி!
22.  தன்னுள் உறையும் பிரம்மனை எண்ணி
      என்றும் த்யானம் செய்வோய் போற்றி! 
23. பாபம் அனைத்தையும் போக்குவாய் போற்றி!
24. நெறிமுறை காக்கும் நீதி மான்களை
      விரும்பி அருளும் வினயா போற்றி!
25. அன்பர் அளிக்கும் தான மனைத்தையும்
      மனமுவந் தேற்கும் மகேசா போற்றி!
26. உபநிடத் துக்களின் உட்பொருள் அறிந்த
      தவத்திரு ஞான உருவே போற்றி!
27. நீதி நூற்பொருள் அனைத்தும் அறிந்த 
      வேதப்  பொருளின் வித்தே போற்றி!
28. அகில உலகப் பிதாவே போற்றி!
29. வணங்கித் துதிப்போர் வேண்டும் வரத்தை
      இணங்கி அருளும் இனியா  போற்றி!
30. வேதம் ஓதும் வித்த கர்களை
      குறையெதும் இன்றிக் காப்பாய் போற்றி!   
31. பலநிறப்  பூவால்  பக்தர்கள் புரியும்
      அர்ச்சனை ஏற்கும் அருளே போற்றி!
32. உருத்தி ராட்சக் கிரீடம் சிரத்தில்
      தரித்து விளங்கும் தலைவா போற்றி!
33. நீறு பூசிய உடலாய் போற்றி!
34. அனைத்தும் அறிந்த அறிவே போற்றி!
35. விண்ணிலும் வெளியிலும் வியாபித் திருந்து
      அண்டம்  முழுதும் நிறைந்தாய் போற்றி!
36. அண்டி அடைந்திட்ட சீடர் அனைவரை
      அன்புடன் என்றும் காப்பாய் போற்றி!
37. அலையாய்ப் பாயும்  மனதை அடக்கி
      நிலையாய் நிறுத்தும் நாயகா போற்றி!
38. அபயக் கரத்தால் அருள்வாய் போற்றி!
39. பக்தர் பயங்கள் போக்குவாய் போற்றி!
40. வேள்விகள்  ஏற்கும் வேளே போற்றி!
41. வேள்விகள் அனைத்தையும் விரும்பிப் புரியும் 
      நால் வேதவிற் பன்னா போற்றி!
42. வேள்வியின் விதிமுறை அனைத்தும் அறிந்து  
       பூரணமாகப் புரிவோய் போற்றி!
43.  வேள்விக் குதவும் வேந்தே போற்றி!
44. வேள்விப் பலன்கள் அளிப்பாய் போற்றி!
45. வேள்விகள் விரும்பும் வித்தகா  போற்றி!
46. ஒப்பெதும் இல்லா உத்தமா போற்றி!
47. படிக ருத்ராக்ஷ துளசி மாலைகள்
      உடலில் அணியும் உருவே  போற்றி!
48. நான்கு வர்ணத் தோரனை வரையும்
      ஒன்றாய் நோக்கும் நல்லோய் போற்றி!
49. ருக்யஜுர் சாம அதர்வண மென்னும்
      நான்வே தங்களைக்  காப்பாய் போற்றி!
50. தக்ஷிணா மூர்த்தி உருவே போற்றி!
51. உறக்கம் விழிப்பு சொப்பனம் அனைத்தையும்
      துறந்த தூய வடிவே போற்றி!
52. கோடிப் பரிதியி னொளியினை ஒத்த
      தேசுடன் விளங்கும் தந்தையே  போற்றி !
53. பத்தரைக் காக்கும் புண்ணியா போற்றி!
54. அசுவம் யானை இவையுடன்  கூட
      பசுவைப் பூசை செய்வாய் போற்றி!
55. குருவின் உருவாய் அவர்பாது கையை
      கருதிச் சிரத்தில் அணிவாய்  போற்றி!
56. தங்கக்  காசால் தலைமுதல் கால்வரை
      எங்கள் அர்ச்சனை ஏற்பாய் போற்றி 
57. பொன்னா லான பில்வ இலைகளால்
       பரமனைப் பூசை செய்வாய் போற்றி 
58. அனைத்து உயிர்களும் மோட்சம் அடைய
      அன்புடன் அருளும் அண்ணலே போற்றி!
59. வாயால் பேசும் வார்த்தைகள் இன்றி 
       குறிப்பால் உணர்த்தும் குருவே போற்றி!
60. காட்சி உன்னைக் காணு மாத்திரம்
      தீட்சை தருகிற திவ்வியா போற்றி!
61. பனிரெண்டு லிங்கங்கள் பதித்தாய் போற்றி!
62. இசையை ரசிக்கும் ரசிகா போற்றி!
63. அறிதற் கரிய ப்ரம்ம ஞானத்தை
      அடியவர்க் குபதே சிப்பாய் போற்றி
64. அனைத்துக் கலைகளும் அறிந்தாய் போற்றி!
65. நால்வகை வர்ண மக்கள் அனைவரும் 
      போற்றித் துதிக்கும் பரமா போற்றி!
66. உலகம் முழுதும் பேசும் மொழிகள்
      பலவும் அறிந்த பெரியோய் போற்றி!
67. அட்டமா சித்தி அடைந்தாய் போற்றி!
68. சாரதா மடத்தின் ஸ்தாபிதா  போற்றி!
69. அனுதினந் தோரும் அன்ன  தானங்கள்
      அன்புடன் அளிப்போர்க் கருள்வாய் போற்றி!
70. உனைத்தினம் வணங்கும் முறையெளி  தெனினும்
       பனையென பயன்தரும் புண்ணியா போற்றி!         
71. காதம் கடந்து பாரதம் முழுதும்
      பாதம் பதித்து நடந்தாய் போற்றி!
72. பல்வகை மதமும் கூறும் பொருளை
      துல்லியமாக அறிந்தாய்  போற்றி!
73. சுருதிகள்  ஸ்மிருதிகள்   புராணங் களின்
      உருவாய்  விளங்கும் உத்தமா போற்றி!
74. தேவர் யட்சர் கின்னர ரோடு
      கிம்புரு வரர்களும் வணங்குவ  போற்றி!
75. அன்பும் அருளும் ஒன்றாய்க்  கலந்த
      உன்னத வார்த்தைகள் உரைப்பாய் போற்றி!
76. திருமுக தரிசனம் காண்போர்க் கெல்லாம்
      பெருமகிழ் வளித்திடும் பெருமான் போற்றி!
77. அத்து வைத சித்தாந்தத் தனையே
       சிந்தித் தானந் தித்தாய் போற்றி!      
78. நினைத்தால் இனிக்கும் நாதா போற்றி!
79. சைவ ராயினும் வைணவ ராயினும்
      எவரும் ஒன்றென உரைத்தாய் போற்றி!
80. சங்க ராச்சர்ய குருவே போற்றி!
81. தண்டத் தோடு  கமண்ட லங்கள்
      இரண்டும்  ஏந்திய கரத்தாய் போற்றி!
82. மத்தளம் வீணை மங்கள வாத்தியம்
      அத்தனையின் இசை வடிவே  போற்றி!
83. ராக சுரங்கள் சாகித் யங்கள்
      ரசித்து மகிழும் ரம்மியா போற்றி!
84. நடனம் நாடகம் நாட்டியம் பயிலும்
      பல்கலை நிபுணரைக் காப்பாய் போற்றி!
85. இதயத்தி ருக்கும் இனியா போற்றி!
86. கேதா ரத்துறை நாதா போற்றி!
87. ருத்திர சமக தோத்திரம் மூலம்
      நித்திய பூசை ஏற்பாய் போற்றி!
88. அறியா மைதனை அழிப்பாய் போற்றி!
89. பலனெதிர்ப் பார்க்கா கடமை செய்யென
      உலகோர்க் குபதே சிப்பாய் போற்றி!
90. எளிதாய் பக்தி செய்யும் வழிகள்
      எவர்க்கும் எடுத்து உரைத்தாய் போற்றி!
91. இலிங்க உருவாய் வருவாய் போற்றி!
92. சாலிக் கிராமத் துள்ளே ஒளிரும்
      சூட்சம சொரூபச் சித்தா போற்றி!
93. சங்கர மடங்கள் நான்கையும் ஒன்றாய் 
      ஒருங்கே காணும் உத்தமா போற்றி!
94. இந்திரி யங்களை வென்றாய் போற்றி!
95. உனையே கதியென சரணடைந் தோர்க்கு
      துணையாய் இருக்கும் தெய்வமே போற்றி!
96. ஸ்ரீசை லமலைச் சிகரந் தன்னில்
      வாசம் செய்து வருவாய் போற்றி!
97. தமருக மெனும்சிறு முரசினை  ஒலித்து 
      களிப்புடன் நடம்புரி நாதா போற்றி!    
98. எருது வாகனம் ஏற்றவா போற்றி!
99. இடக்கையி லேந்திய உடுக்கையின் ஒலியால்
      வேதம் விளைத்த விமலா போற்றி!
100. ஆபி சாரரை  அழிப்பாய்  போற்றி!
101. மிதமாய் உணவை உண்பவா  போற்றி! 
102.  மறுபிறப்  பறுக்கும்  மகேசா  போற்றி!
103. இறப்பை எண்ணி இருப்போர் பயத்தை
        துரத்தி அடிக்கும் தூயா போற்றி!
104. அடியவர் புரியும் செயல்கள் சிறக்க
        அனுக்கிரஹம் செய்யும் அருளே போற்றி!
105. அனுஷத் தாரகை நன்னாள் அன்று 
        அவதா ரித்த அருளே போற்றி! 
106. உலகோர் போற்றும் உத்தமா போற்றி!
107.  வேங்க டேஸ்வரரின் தாமரைப் பாதம் 
         வணங்கிப்  போற்றும்  வடிவே போற்றி!
108. திரிபுர சுந்தரி உமையுடன் சேர்ந்த
        சந்திர மௌளீஸ் வரரைத் தினமும்
        சிந்தையில் இருத்தி மந்திரம் ஓதி
        வந்தனம் செய்யுமுன் சேவடி போற்றி!