Search This Blog

Jun 29, 2021

இதழ் விரிக்கும் மலர் மொட்டு


இதழ் விரிக்கும் மலர் மொட்டு

என்னுடைய கல்லூரி நண்பர் வரதராஜன் அனுப்பிய ஒரு ஆங்கிலக் கவிதையை  மொழி பெயர்த்து நான் எழுதியது இந்தக் கவிதை. 

மூலம் - சுபி கவிஞர் ஜலாலுதீன் ருமி.

படம்:  Getty Images யிலுருந்து , நன்றியுடன் 

அன்புடன் 

ரமேஷ் 


இதழ் விரிக்கும் மலர் மொட்டு 






கடவுள் படைத்த ரோஜா மொட்டை  

எடுத்துக் கையில் அன்புடன் அணைத்து 

தடவிக் கொடுத்து இதழைப் பிரிக்க 

முயன்றேன் ஆனால் முடிய வில்லையே!


மெதுவாய்ப் பதமாய் தொட்ட போதிலும் 

இதழ்கள்  கீழே உதிர்ந்து விழுந்தன!

மொட்டின் மலரிதழ் விரியச் செய்யும் 

மருமம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!


மொட்டின் இதழை விரிக்கும் செயலே 

என்னால் இங்கு இயலா திருக்கையில் , 

முன்னால் விரியுமென்  வாழ்க்கையின்  மருமம் 

ஆராய்ந் தறிதல் எங்கனம் இயலும்?


ஒட்டி இருந்த மொட்டின் இதழ்களின்  

கட்டை அவிழ்த்து மலரச் செய்தவன் 

வருகிற வாழ்க்கைத் தருண மனைத்தையும்  

பிரித்துப் பின்னே  மலரச் செய்வான் 


கண்முன் தெரியும் வாழ்க்கைப் பாதையின் 

மருமம் அனைத்தும் அறிந்தவன் அவனே!

நண்பனாய் அவனை நம்பி நடந்தால் 

நலனே என்றும் நடக்கும் என்றறிவோம்.






Jun 26, 2021

வெள்ளம்

There was a time when rivers were flowing under the bridges.
Now a days only the traffic flows over the bridge - the rivers under the bridges have dried!

 வெள்ளம்


அன்று                         

                                                     
ஆற்றில் வெள்ளம் பெருகிய நாளில் 
மறுகரை செல்ல பாலம் அமைத்தோம். 
 
இன்று                                                                                   


பாலத்தின் மேலே  மக்கள் வெள்ளம் 
கீழே பார்த்தால் ஆற்றைக் காணோம்!!


Jun 24, 2021

செய்திப் பரிமாற்றங்கள்

செய்திப் பரிமாற்றங்கள்

ஊரடைப்புத் தடைகளால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலையில் இடைவிடாமல் அவர்கள் செய்துகொள்ளும் குறுஞ்செய்திப்  பரிமாற்றம் ஒன் உதவுகிறது. என்றாலும் நேருக்கு நேராக அவள் விழியால் செய்யும் செய்திப் பரிமாற்றத்திற்கு அவை இணையாகுமா?





மின்காந்த அலைமூலம் தொலைபேசிச் செய்திகளை

அன்பார்ந்த காதலியே,  அன்றாடம் அனுப்புகிறாய் .

என்றாலும் அவையெல்லாம் நேர்நோக்கும் உன்காந்தக்

கண்பார்வைக் கில்லை இணை!

பின் குறிப்பு :

என்னுடைய நண்பர்கள் இருவர் - இராம. கி , என்.கிருஷ்ணமூர்த்தி - ஆகியோர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாறுதல்களைச் செய்திருக்கிறேன். ஆராய்ந்து கருத்துத் தெரிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!


மின்காந்த வானலையில் உன்காதல் செய்திகளை

அன்பார்ந்த காதலியே, நாள்தோரும்  நீபகிர்வாய்

என்றாலும் நேர்நோக்கும் உன்காந்தக் கண்பார்வைக்

 குண்டோ யிணையிங்கே சொல்!

                                                                                        (பல விகற்ப இன்னிசை வெண்பா)

Jun 21, 2021

பறக்கும் சீக்கியன் - மில்கா சிங்

பறக்கும் சீக்கியன் மில்கா சிங்

1947 ம் ஆண்டு பாரதம் இரண்டாகப் பிளவுபட்டபோது நடந்த மதப் படுகொலைகளில் தன்  பெற்றோர்களையும், கூடப் பிறந்தோரையும் பலிகொடுத்தவர் மில்கா சிங். 

" நீயாவது ஒடித்த தப்பிவிடு, மில்கா" என்று கதறிய தந்தையின் குரலுக்கு கட்டுப்பட்டு, இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து தப்பி ஓடி  ஒரு  அகதியாக டெல்லி வந்தடைந்தார். பல தோல்விகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அவரது ஒட்டப்பந்தயத் திறமையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றார். 

ஆசிய மற்றும் (பிரிட்டிஷ்) குடியரசு நாடுகளுக்கான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்த அவர் , ரோம் நகரில் நடந்த 400 மீட்டர் பந்தயத்தில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார்.  

சென்ற வாரம் , ஜூன் 18ம் நாள்,கோவிட கொடுநோயின் தாக்கத்தால் உயிரிழந்தார் மில்கா சிங்க்.

இந்தியத்  தடகளத் தடத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவரது வாழ்க்கை "ஒடு மில்கா ஓடு" (Bhaag, Milkaa, Bhaag) என்ற ஒரு திரைப்படமாக வடிக்கப்பட்டது. அனைவரும் பார்த்து பெருமிதம் அடைய வேண்டிய ஒரு படம். 

அவரை  வணங்கி எழுதிய ஒரு சிறு பாடல், இதோ!

அன்புடன் 

ரமேஷ் 
 






பறக்கும் சீக்கியன் மில்கா சிங் 

பாடுபட்டு தனைவளர்த்த பெற்றோரைப் பறிகொடுத்து 

கூடப் பிறந்தபல சோதரரைப் பலிகொடுத்து 

"ஓடு மில்கா ஓடு " வென்ற  தந்தைகுரல் செவிமெடுத்து

நாடுவிட்டு ஓடிவந்து நிலம்விட்டுப் புலம்பெயர்ந்து 

தடைபலவைத் தகர்த்தெறிந்து  பலதடகளப் போட்டிகளில் 

ஓடுவதே உயிர்மூச்சாய்க் கொண்டவனே! கொண்டையனே!


பஞ்சாப்பின் சிங்கமகன், பறக்கின்ற சீக்கியனே!

நெஞ்சை  நிமிர்த்தி  நம்நாட்டோர் நடக்குமுகம்  

பஞ்சாய்ப் பறந்தோடி பதக்கம்பல பெற்றவனே!

விஞ்சஉன்னை யாரும்இல்லை தடகளத்தின் தலைமகன் நீ! 

மஞ்சம்ஒன்று தேடிஅதில்  நீண்டநேரம்  நிம்மதியாய்

துஞ்ச இன்று சென்றாயோ , ஓடிக்களைத்த பின்னே ? 


ஓடிக் களைத்த பின்னே உறங்கச் சென்றாலும்

நீடித்து நிலைத்திருப்பாய் எம்மனதில் நீயென்றும்!



Jun 20, 2021

அப்பாக்கள் தினம்

அப்பாக்கள் தினம்

இன்று அப்பாக்கள் தினம் கொண்டாடப் படுகிறது. 

சமூக வலைத்தளங்களில் உதவியால் இன்று இது சற்றுப் பிரலபம் அடைந்திருந்தாலும்,  அம்மாக்கள் தினத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இதற்கு அளிக்கப்படுவதில்லை என்பதே பல அப்பாக்களின் குறை!

"ஒப்புக்குச் சப்பாணி, ஊறுகாய்க்கு மாங்கொட்டை" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது!

இது குறித்து ஒரு நான்கு வரிப் பாடல்!

அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்!

அன்புடன்

ரமேஷ்


தப்பாமல் தாயார் தினத்தை நினைப்போரும்

அப்பாவி அப்பாக்கள் நாளை  மறந்திடுவார்

முப்பொழுதும் மக்கட் கவர்செய்யும் தொண்டிற்கு 

எப்போ  கிடைக்கும்  ஒப்பு!



Jun 18, 2021

ஐயா! ஜாலி!!

ஐயா! ஜாலி!!

அரசு தற்போது அறிவித்து இருக்கும் ஊரடைப்பு விதித் தளர்வுகளால் நம் "குடிமக்கள்" உற்சாகத்தில் ஊறித் திளைக்கிறார்கள் - டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் !

கடைகளில் திருவிழாக் கூட்டம்! 

முகக் கவசம் போடலையா?
------அது எதுக்கு?
சாராய விலையை அதிகமாக்கி விட்டார்களே?  
------கவலையில்லை!
தடுப்பூசி போட்டாச்சா? 
------அதுக்கு யாரு பணம் கொடுப்பாங்க? ஒசியிலே கிடைச்சா சரி!

ஈச்வரோ ரக்ஷது ! ( இறைவன்தான் காக்கவேண்டும் !)

இது குறித்து சில வெண்பாக்கள்!

அன்புடன்

ரமேஷ்





பேஸ்மாஸ்க்கை எப்போதும் போடாமல் கூட்டமாய்

டாஸ்மாக் கடையிலே முந்துவார் ---- ஈஸ்வரனே

வந்துரைத் தாலும் திருந்தார் இவரைநாம் 

நொந்தென்ன காண்போம் பயன்?

                                                                                                                          (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

ஏராள மாகவே என்னவிலை சொன்னாலும் 

ஆராய்ச்சி சற்றுமே செய்யாம லேயுடன் 

தாராள மாய்ப்பணத்தை தாரைவார்த் தேதருவார்

சாராயச் சாருண்ப வர்!

                                                                                                       (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

எவ்விலை ஆயினும் வாங்கிக் குடிப்பார்

உயிர்குடிக்கும்  சாராயச் சாரை  - உயிர்காக்கும்

ஊசியைப் போடவே நூறுதடை சொல்லுவார்

ஓசியாய் வாராத தால்!

                                                                                                                            (பலவிகற்ப இன்னிசை வெண்பா)



Jun 15, 2021

கிண்டி பாம்புப் பண்ணை

கிண்டி பாம்புப் பண்ணை

சென்னையில் வசிப்பவர்களுக்கும், சென்னைக்கு வருபவர்களுக்கும் , அந்தக் காலத்தில் , பார்க்கவேண்டிய ஒரு சுற்றுலாத் தலமாக  இருந்தது கிண்டியில் இருக்கும் பாம்புப் பண்ணை.

பாம்புகளிடமிருந்து விஷத்தை எடுத்து, அவ்விஷத்தையே பாம்புக் கடிக்கு மாற்று மருந்தாக மாற்றும் பணியும் இங்கு நடைபெருகிறது.

இன்று , ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் வருவது முற்றும் தடைப்பட்டு , வருமானமின்றி , அங்குள்ள பாம்புகளுக்கு இரையளிக்கவும் முடியாத நிலையில் இருக்கிறது என்பது இன்றைய பத்திரிகைச் செய்தி.

நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டி, இதைப் பற்றிய ஒரு பாடலுடன் 

அன்பன் 

ரமேஷ்

Name of the Account : Chennai Snake Park Trust 
A/C.No. : 10792456546 
Name of the Bank : State Bank of India, SME Branch, Adyar


ஆலத்தை* யேமாற்றி ஔடதமாய்** ஆக்கிவிடும்      *ஆலம் = நஞ்சு**ஔடதம் = மருந்து 

ஜாலத்தை செய்கின்ற சர்ப்பச் சதுக்கத்தில் *                *சர்ப்ப சதுக்கம் = பாம்புப் பண்ணை 

பாலூட்ட பாம்பிற்கு காசில்லை ; இன்றதுதன்  

காலூன்றி நிற்கா நிலை.

                                                                                                                      (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)




Jun 10, 2021

ஒன்றிலே பத்து!

ஒன்றிலே பத்து!

தென்னாப்பிரிக்கப் பெண்ணொருத்தி ஒரே பிரசவத்தில் பத்துக் குழந்தகளைப் பெற்றெடுத்தது இன்றைய செய்தி!

அவற்றில் ஏழு ஆண்கள், மூன்று பெண்கள்!

தாயும், குழந்தைகளும் நலனோடு நீண்டு வாழ இறைவனை வேண்டுவோம்- ஒரு வெண்பா வடிவில் !

அன்புடன்

ரமேஷ்

பி.கு:

ஆங்கிலத்தில் இது DECOUPLET என்று கூறப்படுகிறது. தமிழில் என்ன என்று 
தெரியவில்லை. அறிந்தவர்கள் பகிரவும்! நன்றி!







பத்து மதிக்காலம் காத்துக் குழந்தைகளை  

பெற்றெடுப்ப தொன்றும் புதிதல்ல- வேயாயின்

பத்துக் குழந்தைகளை ஆணேழு பெண்மூன்றாய்

கொத்தாகப் பெற்றவர்க்கு வாழ்த்து 

                                                                                            (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 

Jun 8, 2021

நேற்றுப் பெய்த மழை

நேற்றுப் பெய்த மழை

நேற்று இரவு திடீரென்று பெருத்த இடியோசையுடனும், கண்ணைப் பறிக்கும் மின்னலுடலும் கூடிய பெருமழை பெய்யத் தொடங்கி, உறக்கத்திலிருந்து என்னை எழுப்பியது!

 கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இடியோசையும் மின்னலும் அடங்கவில்லை!

அந்தப் பின்னணி இசையுடனேயே மீண்டும் உறங்கிவிட்டேன்!

காலையில் விழித்துப் பார்க்கையில்  சற்றே வெளுத்த வானம், சிறு தூறலுடன் என்னை வரவேற்றது!

இது பற்றி ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ். 


நேற்றுப் பெய்த மழை

 வகிடெடுத்து வெள்ளிமின்னல் வானைப் பிளக்கும்;

-----வெள்ளிமின்னல் ஒளியினிலே விண்ணும் ஜொலிக்கும்!

முகிலோடு முகிலுரசி மத்தளம் முழங்கும் 

-----மத்தளங்கள் முழங்கொலியில் இத்தளம் நடுங்கும்'

முகிற்கூட்டம் மலைமுகட்டில் மோதித்துகி லுரிக்கும்.

-----துகிலுரியும் நேரத்தில் திகில்மழையைக் கக்கும்.

திகிலூட்டும் வகையினிலே பெய்யும்பெரு மழையால் 

-----ஆறுகளும் ஏரிகளும் கரையுடைந்து ஓடும்

புகல்தேடி புட்கூட்டம் கூட்டுள் பதுங்கும்

-----விலங்குகளும் விரைந்தோடி மரத்தடியில் ஒதுங்கும்.

அகிலமே அழியுமென் றச்சமுறும் நேரம்

-----வீரியம் குறைந்து மழை தூரலாய் மாறும்

அகழாழி கள்நிரம்பி நீர்மட்டம் உயரும்

-----ஆற்றுவெள்ளம் சற்றடங்கி வாரியில் சேரும்.

சுகமாக அதிகாலைப் பொழுதிங்கு விடியும்

-----சூரியனின் காரியமும் சுறுசுறுப்பாய்த் தொடரும்!


Jun 7, 2021

பிரதோஷப் பாடல் 39

பிரதோஷப் பாடல் - 39

என் நண்பர் என்.கிருஷ்ணமூர்த்தி கவி காளமேகத்தின் ரசிகர். 

அவர் என்னுடன் கீழ்க்கண்ட பாடலைப் பகிர்ந்து கொண்டார்.

கூற்றுவனை வில்மதனை யரக்கர் கோவைக் 
    கூனிலவைக் குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை 
ஏற்றுலகின் புறவுருவு மாளத் தோள்க 
    ளிரிவெறிப்ப விமையப்பெண் வெருவ வேவக் 
காற்றொழிலா னயனத்தால் விரலால் கற்றைக்  
    கதிர்முடியாற் கரதலத்தாற் கணையாற் பின்னும் 
ஊற்றழிய வுதைத் தெரித்து நெரித்துச் சூடி 
    உரித்தெரித் தானவனென்னை யுடைய கோவே 

இப்பாடல் நிரனிரைப் பொருள்கொள் வகையச் சேர்ந்தது - வார்தைகளை புரட்டிப் போட்டுப் படித்தால்தான் பொருள் விளங்கும்! இருவரின் கூட்டு முயற்சியுடன் அதைச் செய்து முடித்தோம். விளைவு கீழ்வருமாறு -

கூற்றுவனை ஏற்று உலகு இன்புற காற்றொழிலான்  ஊற்றழிய உதைத்து
வில்மதனை  உருவம் மாள நயனத்தால் எரித்து 
அரக்கர் கோவை தோள்கள் இற  விரலால்  நெரித்து
கூன் நிலவைக்  வெறிப்ப கற்றைக் கதிர் முடியால் சூடி 
குஞ்சரத்தை  இமையப் பெண் வெருவ கரதலத்தால்  உரித்து
இஞ்சி மூன்றை  வேவக்  கணையாய் பின்னும் எரித்தான்
அவன் என்னை உடைய கோவே !

இதன் பொருள் :

யமனை எதிர்கொண்டு உலகம் இன்பம் பெறுமாறு தன கால்களின் தொழிலால் இன்னல் தீர உதைத்து 
கரும்புவில் ஏந்திய மன்மதனை அவன் உருவம் மறையுமாறு தன் நெற்றிக் கண்களால் எரித்து
அரக்கர் கோவை தோள்கள் பொடிபட தன் விரலால் நெறித்து 
பிறைச் சந்திரனை அது இருக்கும் இடத்தை வெறுமையாக்கி தன் ஒளிமயமான கற்றைக் குழலில் அணிந்து 
யானையை ஹிமவான் மகள் பார்வதி தேவி அஞ்சும்படி தோலுரித்து
மூன்று கோட்டைகளாகிய திரிபுரத்தை தன் அம்புகளால் தாக்கி பின்னர் எரிக்கவும் செய்தான் 
அவன்தான் என்னை அடிமையாக உடைய சிவபெருமான்.

இந்த காளமேகக் கவிதையை என்னுடைய வார்த்தைகளில், இன்னும் சற்று சுலபமாக, எல்லோருக்கும் புரியும்படி வடித்ததை, இந்தப் பிரதோஷ நாளன்று பதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,

அன்புடன் 

ரமேஷ்











 

காலனைக்  காலால் உதைத்தான் - நீலவான் 

நிலவைப் பறித்துத்தன் தலையில் தரித்தான் 

மத்தகத் தோலினை உரித்தான் - மன்மதனை 

நெத்திக் கண்நோக்கின்  நெருப்பால் எரித்தான் 

கழுவீசி முப்புரம் உடைத்தான் - அரக்கர்கோன் 

கழுத்தைத் தன்கைகளின்  விரலால் நெரித்தான்* 

கோலவார் குழலி என்னம்மை உமையோடு 

ஆலவாய் அமர்ந்த சிவனே!

Jun 5, 2021

நானும் கூட - மீ டூ (ME TOO)

இதற்கு முன்னுரை தேவை இல்லை!

அன்புடன்

ரமேஷ்



நானும் கூட - மீ டூ (ME TOO)


பொன்னும் மணியும் வீட்டில் 

-----பெட்டியில் கொட்டிக் கிடக்க

இன்னமும் கூட வேண்டும் 

-----வைரமும் முத்தும் என்று

கன்னமிட் டடுத்த வீட்டை 

-----கள்ளமிட நினைத்த பேரின் 

எண்ணத்தில் மண்ணைப் போட 

-----எழும்புவேன் நானும் கூட!*                               * Me Too!


கற்றுக் கல்வியில் தேர 

-----பள்ளிக்கு வந்தோ ருக்கு 

கற்பிப்போர் வடிவில் வந்து 

-----சிற்றின்பச் சுவையைக் காட்டும்

குறுஞ்செய்திக் கொத்தை அனுப்பி 

-----குற்றச் செயல்கள் புரியும் 

அற்பரை அடியோ டழிக்க 

-----எழும்புவேன் நானும் கூட!*                               * Me Too !              

Jun 1, 2021

கொரானா அலைகள்

கொரானா அலைகள்

எனக்கும், நம்மில் பலருக்கும்,  கொரானவின் முதல் தாக்குதலின் போது இருந்த மனநிலைக்கும், இப்போது வீசும் இரண்டாம் அலையின்  தாக்குதலின் போது இருக்கும் மனநிலைக்கும் ஒரு பெரிய வேற்றுமை இருக்கிறது.

இது பற்றி ஒரு பாடல்!

உங்கள் கருத்து? அறிய ஆவலாக இருக்கிறேன்!

அன்புடன் 

ரமேஷ்


முதலாம் அலை

முதலாம் அலையும் பலமாய் நம்மேல்

மோதிய போது வீட்டினுள் நாமும் 

இதுவும் கடந்து போகும் என்று

பதுங்கி இருந்தோம் பாது காப்புடன் !


நாள்தோ ரும்தொலைக் காட்சிச் செய்திகள்

அள்ளித் தெளிக்கும் அவலக் கதைகளை

உள்ளத் துள்ளே இருத்தா தேயோர்

புள்ளிக் கணக்காய் மட்டும் பார்த்தோம் !


நாமும் நம்மைச் சார்ந்த நண்பரும்

மாமன் மருகன் பிற்பல உறவும் 

சேமம் குன்றா திருப்பத னாலே

மாமூ லாய்நம் வாழ்க்கையைத் தொடர்ந்தோம்!


இரண்டாம் அலை

பின்பு வந்தயிவ் விரண்டாம் அலையோ

இன்று போடும்வெறி யாட்டம் தன்னில்

நன்கு பழகிய நண்பர்கள் சிலரும்

நண்பரின் நண்பர் என்பவர் பலரும் 


தெரிந்தவர் உறவினர் அக்கம் பக்கம்

இருப்பவர் எனப்பலர் நோய்வாய்ப் பட்டு 

எட்டி இருந்த நோய்த்தாக் குதலின்

வட்டம் சுருங்கி கிட்ட வருகையில்


முதலாம் அலையின் முழுவுளக் காட்சி *                * perspective

முற்றிலும் மாறி பற்றின்மை* போய்                         *detachement

மனதினில் நிறையுது பெருங்கழி விரக்கம்*          * empathy

மனிதம் மீண்டும் உயிர்த்தது என்னுள்!