Search This Blog

Mar 26, 2024

வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடிகள்

தேர்தல் ஜுரம் சூடு பிடிக்கத்  தொடங்கிவிட்டது. ஆளுக்கு ஆள் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசுகிறார்கள்.  தேர்தல் முடிவுகள் வந்தபின்பு எவருக்கும் இந்த வாக்குறுதிகள் நினைவுக்கு இருப்பதில்லை. மக்களும் கேள்வி கேட்பதில்லை. அவர்களுக்குப் பழகிவிட்டது. வாக்குச் சாவடிக்குக் சென்று வோட்டுப் போடுவதோடு சரி.

இந்த ஒட்டுப் போடும் இடத்திற்கு ஏன் " வோட்டுச் சாவடி" என்று பெயர் வந்தது? இது பற்றி ஒரு வித்தியாசமான பொருள் விளக்கம் - ஒரு வெண்பா வடிவில்!

படித்துச் சிரியுங்கள்!!

அன்புடன் 

ரமேஷ் 






வாய்க்கெல்லாம்  வந்தபடி வாக்குறுதி கள்வீசி

வாய்க்கரிசி போட்டுவாக் காளர் களைவாங்கி

"சாவடிப்ப தாலே"தான் ஓட்டிடும் பந்தற்கு*                *ஓட்டிடும் பந்தல்= polling booth 

"சாவடி" என்றே பெயர்.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)



Mar 18, 2024

நாவிதனின் கடையினிலே

நாவிதனின் கடையினிலே 




என் தலை நிறைய முடி இருந்தது ஒரு காலம். அப்போதெல்லாம் முடி திருத்தும் நிலையம் செல்லும்போது, எப்படி எப்படி முடி திருத்த வேண்டும்  என்று  முடிதிருத்துபவருக்கு விவரமாக அறிவுரை கூறுவதுண்டு. 

ஆனால் இப்போதோ தலையில் முடி எங்கே என்று தேடவேண்டி இருக்கிறது.  ஆனாலும் "இப்படிச் செய், அப்படிச் செய்"என்று அறிவுரை கூறுவதை நிறுத்த முடிவதில்லை. இதைக்  கேட்டு நாவிதரும், பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் வாய் விட்டுச் சிரிக்காததுதான் குறை!

இந்த நிலைமை பற்றி ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 

வகிடெடுத்து வக்கணையாய் வாரிவந்த  காலம்போய் 

துகிலிழந்து துயருற்ற தோகைமயில் போலாகி 

சிகையிழந்து சிறிதளவே சிரத்தினில் இருக்கையிலே  

"வகையாக வெட்டிவிடு, ஜாக்கிரதை" எனக்கூறி 

நகைப்புக்கு உள்ளானேன் நாவிதனின் கடையினிலே! 


Mar 13, 2024

பள்ளிக்கு அனுப்பும் படலம்

பள்ளிக்கு அனுப்பும் படலம்

நான் இப்போது  தங்கி இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் காலை ஏழு மணி அளவிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும். அவற்றில் தத்தம்  குழந்தைகளை ஏற்றிவிட தாய் தந்தையர் கூட்டமாக   வந்து காத்திருப்பார்கள். சில  சமயங்களில் பேருந்தைப் பிடிக்க சற்று கால தாமதமாக புறப்பட்ட பெற்றோர் புத்தகப்பை, உணவுப் பை சகிதமாக, ஓடி வருவதும் , குழந்தைகளோ சிறிதும்  கவலையின்றி பின்னல் மெதுவாக வருவதும் ஒரு கண்கொள்ளாக் காட்சி!
இதை விவரித்து ஒரு பாடல்- ! 

அன்புடன் 
ரமேஷ் 



புதிதாய் வாங்கிய புத்தகம் அடைத்து
-----பிதுங்கும் பையோ தொங்குது முதுகில்!
மதியத் துணவு அடைத்தொரு  பெட்டி
-----அதனுடன்  கூட அருந்தநீர்க் குடுவை
மிதச்சூட்  டோடுபால் நிரப்பிய   பிளாஸ்க்கு
-----இடைவே ளுக்கோ   தேன்பழத் துண்டு-இவ் 
விதம்பல  நிறைத்த பையொரு  தோளில்- பெண் 
-----போட மறுத்த காலணி   கையில்!
பதைத்து  பள்ளிக் கூட வண்டியை
------பிடிக்க முன்னால் ஒடும் தந்தை!


 

சற்றும் இதையே சட்டை செய்யாமல்
பத்தடி  பின்னால்  பதைப்பெதும் இன்றி
பாதை யோரத்து செடியில்  பூத்த
பட்டாம் பூச்சியை  எட்டிப் பிடித்துக் கை
கொட்டிச் சிரிக்கும்  குறும்புக் குழந்தை .




















Mar 8, 2024

சிவராத்திரிப் பாடல்

 சிவராத்திரிப் பாடல்

 


சிவசிவசிவ சிவசிவசிவ சிவசிவவெனும் மந்திரம் 

துயில்துறந்து இந்தநாளின் இரவுப்பொழுது முழுவதும்

பயிலுவோர்க்கு புண்ணியங்கள் பலவும்வந்து வாய்த்திடும்; 

கயிலைநாதன் கருணையாலே கேட்டயாவும் கிட்டுமே ! 


அன்புடன் 

ரமேஷ்