Search This Blog

Showing posts with label venbaa. Show all posts
Showing posts with label venbaa. Show all posts

Oct 1, 2025

கலைமகளைத் தொழுதிடுவோம்

கலைமகளைத் தொழுதிடுவோம்


நவராத்திரியின் கடைசி நாளான நவமித் திதி , நாம் கலைமகளைப் பூசிக்கும் தினம். 

மனத்தின்,  ஆன்மாவின் தூய்மையைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சிதரும் அன்னை தன்  கரங்களில் ஏந்தியிருக்கும் வீணையும் , புத்தகமும்  குறிப்பது கலைகளின் இணைப்பை.

கல்விக்குத்  தெய்வமாக நாம் மட்டும் சரஸ்வதியை வழிபடுவதில்லை.  பல மதத்தினரும், பண்பாட்டினரும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு உருவங்களில் கல்வித் தேவதைகளை வணங்கி வந்திருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் இந்த பண்பாடுகள்  அழிந்து போன போது, அவைகளுடன்  இந்த  வழிபாட்டு முறைகளும்  சிதைந்து போயின. ஆனால் நம் பாரதப் பண்பாடும், அப்பண்பாட்டின் சின்னங்களான வெவ்வேறு வழிபாட்டு முறைகளும் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன.

இன்று நாம் கலைமகளைப்  பூசிக்கும் இத்தினத்தில், கலைமகளைப்  பற்றியும் ,  வேறு பண்பாடுகளில் - மதங்களில்-  குறிப்பிடப்பட்டு  வணங்கப்பட்ட கல்வித் தெய்வங்களைப்  பற்றியும் ஒரு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில் !

அனைத்துக் கல்வித் தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டுதலுடன் 

உங்கள் அன்பின் 

ரமேஷ்  





வெண்பட்டு ஆடை உடுத்தாளின், தன்கரத்தில் 

பண்ணெழுப்பும் வீணை எடுத்தாளின்- தண்கருணைக்* 

கண்பார்வை பட்டாலே நற்கல்விக் கண்திறக்கும் 

மண்வாழும் மாந்தர்க்கெல் லாம்  


மற்ற மதங்களிலும் பண்பாட்டுச்  சாரலிலும்  

ஓத்தபிற தெய்வங்கள் உண்டாமே - பட்டியல் 

இட்டவற்றைப் பார்ப்போம் சரஸ்வதியை நாம்வணங்கும் 

சத்தான நன்னாளில்  இன்று   




அப்பாலோ ஆணென்றும்#  அத்தீனா பெண்ணென்றும்# 

செப்பித்  தொழுதார்  கிரேக்கர்-  அதன்முன்னர் 

மெர்க்குரி ஆணென்றும்  பெண்மினர் வாவென்றும்   

ரோமர்கள் பேரிட்ட  னர் 





BENZEITEN

ஷிண்டோ மதத்தினரின் ஆண்கடவுள் தென்ஜின்னே !  

பெண்கடவுள் பென்சய்ட்டென் வாக்தேவி**  யின்னுருவாம்  !

ஈகிப்து நாட்டினரின் ஆண்பெண்பால்  தெய்வங்கள் 

தோத்துடன் சேஷத்தும் தான்!  


  

வேற்றுப்பண் பாட்டினர்கள் தம்கல்வித் தேவதையை   

போற்றி வணங்குவதை  விட்டே மறந்தாலும்    

இந்தியப்பண் பாட்டாரோ  நெஞ்சில் நிலைநிறுத்தி 

வந்தனை செய்கின்றார்  நன்று   


* தண் கருணைக்  கண்  = குளிர்ந்த,  கருணைகாட்டும் விழி 

** வாக்தேவி = சொல்லின் அரசி. . 

பென்சய்ட்டன்  என்னும் பெண் தெய்வம், சரஸ்வதியைப் போன்றே கையில் ஓர் இசைக்கருவியை ஏந்தியிருப்பதைக் காணலாம் 

# மற்ற பண்பாடுகளில் கல்வித் தெய்வங்களாக, பெண் தெய்வத்தோடு ,ஒரு ஆன் தெய்வமும் குறிப்படப்பட்டுள்ளதைப்  பார்க்கலாம். நம் பண்பாட்டிலும், விநாயகரை ஆண்  கல்வித் தெய்வமாக வழிபடுதல் உண்டு.


May 1, 2025

ஐ.பி.எல் போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும்

ஐ.பி.எல்  போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும் 

நேற்று நடந்த போட்டியில் மீண்டும் வெற்றிகரமாகத் தோல்வியுற்று சி.எஸ்.கே அணி இறுதிக் கட்ட ஆட்டங்களுக்குப் போகும் வாய்ப்பை இழந்தது.

இது குறித்து ஒரு பாடல்!

இது நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சொற்பமான பந்துகளிலேயே  சதமெடுத்து சாதனை புரிந்தார்! 

இது பற்றியும் ஒரு பாடல்!

இரண்டும் வெண்பா வடிவில்.

அன்புடன் 

ரமேஷ் 



வந்தாரை வாழவைக்கும் சென்னைநகர் பண்பினையே 

பந்தாட்டப் போட்டியிலே காட்டுவதேன்? - நொந்துமிக

நூல்தன்னைப் போலானார் மாநகரின்  மக்களெலாம்!

பால்தன்னைப் பத்தாம்நாள் ஊற்று

                                                                                (இருவிகற்ப இன்னிசை வெண்பா)




பால்வடியும் தோற்றத்தால்  ஏமார்ந்தே போகாதே!

'பால்'^அடிக்கும் மட்டை  பலத்தால் எதிரணியை                        ^ ball

பாழடிக்கும்  *"வைப(வ்)"வத்தை பார்த்தேநாம் பூரிப்போம்  * vaibhav

வாழட்டும் **சூர்யகுலத் தான்!                                                             ** suryavanshi

                                                                               (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

Apr 26, 2025

பெகல்காம் படுகொலை

எல்லை கடந்து வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெஹல்காம் பள்ளத்தாக்கில் செய்த படுகொலைகளுக்கு , இன மத வேறுபாடுகளின்றி இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்துக்களை மட்டுமே கொலைசெய்து    இந்தியாவில்  மதக் கலவரத்தை தூண்ட முயலும் தீவிரவாதிகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். 

ஜெய் ஹிந்த் !

ரமேஷ்  




பட்டப் பகலில் பெகல்காமின் பள்ளத்தில் 

திட்டமிட்டுத் தாக்கியே சுட்டுக்  கொலைசெய்தார்

இந்துக் களைமட்டும் -  இந்தச் செயலெதிர்த்து  

இந்தியனே பொங்கி எழு !


ஆதார  அட்டைகளில் பேர்பார்த் ததன்பின்னும்

போதாமல்  உள்ளுறுப்பை சோதித்த பாவிகள்-தன்

மாற்று மதத்தாரை மட்டும் இனம்கண்டு 

கூற்றுக் கிரையாக்கி கொன்ற கொடுஞ்செயலை 

ஏற்காது  எம்பார தம்


பெற்றிட்ட பிள்ளைகள் கட்டிய தோர்தாரம்

உற்ற உறவினர் மற்றவர் முன்னாலே  

ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொலைசெய்த 

பாவிகளைத் தேடிக்கொல் வோம் 








Jan 31, 2025

GCT 70 நண்பர்களின் கூடல்

GCT 70 நண்பர்களின் கூடல் 

கோவை அரசினர் பொறியியற்கல்லூரில் இருந்து 1970 -ம் ஆண்டு பட்டம் பெற்று நாங்கள் வெளியே வந்து இப்போது 55 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிகழ்வை நினைகூறும் விதமாக நண்பர்கள் பலரும் மைசூரில் ஒன்று கூட ஆயத்தமாகி வருகிறோம். 

ஐந்து  ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பொன் விழாக் கூடலுக்குப் பிறகு, பெரிய அளவில் நண்பர்கள் இணையப்  போகும் இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தவும், அதற்கான மொத்தச் செலவையும் தானே ஏற்கவும் முன்வந்திருக்கிறார் நண்பர்                                எம்.ஜீ.எம் போர்ஜிங் பாரத் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான  முரளிதர்  பகவத். 

இந்நிகழ்ச்சியைப் பற்றியும், நண்பர் முரளியின் நேர்த்தியான செயலுக்கு நன்றியுரைக்கும்  விதமாகவும் ஒரு சிறு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 



தந்தைவழி தாய்வழியும்  கைப்பிடித்த கன்னிவழி 

வந்தடைந்த சொந்தங்கள் மட்டும் உறவல்ல

ஒன்றிணைந்து கல்வியினைக் கற்றிட்ட நண்பர்கள் 

என்றும் உறவென் றறி.


ஆண்டுகள் ஐம்பத்து ஐந்து  கழிந்தபின் 

மீண்டும் முரளியின் முன்னெடுப்பால்  - ஈண்டிங்கு

பண்டுநாட் பல்கதைகள் பேசிக் களிக்கவே

நண்பர்கள் சேர்வார் பலர்.                 


வெவ்வேறு நாடுகள் வெவ்வே  றிடங்களில் 

எவ்வெவர் எங்கெங் கிருப்பினும் -  அவ்வவர் 

தந்தேகத்  தொந்தரவை  சற்றும் கருதாமல்  

சந்திப்பில் சேரவரு  வார்


தங்க இடத்தோடு உண்ண அறுசுவையும்

எங்களுக் கன்போ டளிப்பவன் - தங்கத்தை 

ஒத்த மனத்தினன் நண்பன்  முரளிக்கு

மெத்தவும் நன்றியுரைப் போம் 


   



Jan 16, 2025

நாளுமோர் நற்கவிதை


நாளுமோர் நற்கவிதை 

என் கல்லூரி நண்பர்கள்பலரும்  இணைந்துள்ள வாட்ஸஅப் தளத்தில் நண்பர் வேலாயுதம் தினந்தோறும் ஒரு கவிதை எழுதி பதித்து  மகிழ்வித்து வருகிறார்! அன்னாரின் திறமையை வியந்துப் போற்றி ஒரு பாடல் - வெண்பா வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 


மடையுடைத்துப் பாய்கின்ற வெள்ளம்போல் -  தங்கு 

தடையின்றி வீசுகின்ற தென்றல்போல் -  நாளும்  

இடைவெளிகள் இல்லாமல் பாடல் புனைந்தளிக்கும் 

சொல்வேலை நான்போற்று வேன்.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

Sep 28, 2023

நீத்தார் கடன்

நாளை முதல் மாளைய பக்ஷம் என்று அறியப்படும் 15 நாட்கள் தொடங்குகிறது. இந்த நாட்கள் உயிர் நீத்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. வெவ்வேறு பிரிவினர் அவரவர்களுடைய முறைப்படி நீத்தார் வழிபாடுகளை செய்வர். எள் நீர் விடுவதும், காகங்களுக்கு உணவு படைப்பதும் பலரது வழக்கம். இது குறித்து இரு சிறு பாடல்கள்.

அன்புடன் 

ரமேஷ்  

நீத்தார் கடன் 





ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்

மாளயத் தன்றுநம் முன்னோரைக்  கும்பிட்டு 

எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே 

சாலச் சிறந்த செயல்  

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 




தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின் 

தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்; 

நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில் 

தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !

(கலிவிருத்தம்)

  



Jan 17, 2023

பூரி ஜகன்னாதர்

பூரி ஜகன்னாதர் 

சென்ற மாதம் 50 PLUS VOYAGERS என்ற நிறுவனத்தாரால்  ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சுற்றுலாப் பயணத்தில் நானும் என் மனைவியும் பங்கேற்றோம். ஆறு நாட்கள் பயணித்து ஒரிசா மாநிலத்தின் பல இடங்களுக்குச் சென்றோம். இவற்றில் ஒன்று புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோயில்.

சாதாரணமாக எல்லா கோவில்களிலும், கடவுளர்கள் தத்தம் மனைவியருடனே சேர்ந்திருந்து அருள்பாலிப்பதையே  ( சிவன்-பார்வதி, விஷ்ணு-லட்சுமி, முருகன்-வள்ளி,தெய்வானை ) பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தக்கோவிலிலே ஒரு வித்தியாசமாக மூலஸ்தானத்தில் கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவுடன் சேர்ந்து தரிசனம் தராமல் , தனது சகோதரன் பலராமனோடும், சகோதரி சுபத்திரையுடனும் சேர்ந்து தரிசனம் தருகிறார்! இதன் தாத்பரியம் சரியாகப் புரியவில்லை! தெரிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன்!

கூடப் பிறந்தோருடன் கண்ணன் தரிசனம் தருவதை பற்றி ஒரு சிறு பாடல், வெண்பா வடிவில்!

அன்புடன் ரமேஷ் 




தன்னுதிரத் தோடுதித்த  தங்கை தமையனையும்

தன்னுடனே கர்ப்ப கிரஹத்தில் கூட்டிவைத்து 

கண்ணனவன் காட்சிதரும் மாட்சியினைப் பெற்றதுவாம் 

மன்னுபுகழ் பூரித் தலம் 


(பல விகற்ப இன்னிசை வெண்பா)


Oct 26, 2022

குறள் மேல்வைப்பு வெண்பா 22

குறள் மேல்வைப்பு வெண்பா 22


திருக்குறள் 62-ஆம் அத்தியாயத்தில் (ஆள்வினை உடைமை) வரும் 619-ஆம் குறள் இது 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்!

இதன் பொருள் :

ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

என்றைக்கும் பொருந்தும் இந்தக் குறளின் ஒரு இன்றைய எடுத்துக்காட்டு ,ரிஷி சுனக்  தான் முதல் முறை அடைந்த தோல்வியால் தளராமல் மீண்டும் போட்டியிட்டு பிரிட்டனின் பிரதமர் ஆன செயல்!

இக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சுத்தானந்த பாரதியின் சொற்களில்>

Though Fate is against fulfilment

Hard Labour has ready payment

இக்குறளை  ஈற்றடியாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு குறள்  மேல்வைப்பு வெண்பா , கீழே!

அன்புடன் 

ரமேஷ் 



சென்றமுறை தோற்றாலும் சோர்ந்து சுணங்காமல் 

நின்றே மறுமுறையும்  வென்றான் சுனக்ரிஷியே* !         * Rishi Sunak

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்! 

May 13, 2022

வழக்கு

வழக்கு 

நேற்றைய செய்தித் தாளில் இடம் பெற்ற செய்தி  இது!


வழக்கின் முடிவு என்ன ஆகும் ? பொறுத்திருந்து பார்ப்போம்! இது பற்றி ஒரு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 


பேரக் குழந்தையை பெற்றுத் தருவதற்கு

நேரக் கெடுவைக் கொடுத்தே - கிழவிதன்

பிள்ளைமேல் மன்றத்தில்  போட்டாள்  வழக்கொன்றை 

"இல்லையேல் ஐங்கோடி தா."



Dec 15, 2021

மார்கழி மாதத்து மாண்பு

 மார்கழி மாதத்து மாண்பு

நாளை  மார்கழி மாதத்தின் முதல் நாள்.

ஒரு வெண்பாப் பாடல் போட்டிக்காக , "மார்கழி மாதத்து மாண்பு" என்ற சொற்றொடரை ஈற்றடியாகக் கொண்டு நான் எழுதிய பாடல் இது! 

அன்புடன்

ரமேஷ்

பி.கு :

சென்ற ஆண்டின் மார்கழியின் போது நான் எழுதிப் பதித்த மற்றோர் பாடலின் இணைப்பையும் இங்கு தந்திருக்கிறேன்.  படித்துப் பாருங்களேன்!

https://kanithottam.blogspot.com/2020/12/blog-post_20.html





வாசலிலே கோலமிட்டு பூசணியின் பூவைத்து
பூசனைகள் செய்கின்ற மாசமிது -- கேசவனின்
பேர்பாடிக் காலையிலே ஊர்கோலம் போகுதலே
மார்கழி மாதத்து மாண்பு

Oct 27, 2021

யாணர் கூடல் பாட்டுக்கள் - பகுதி 2

 யாணர் கூடல் பாட்டுக்கள் - பகுதி  2


யாணர் என்னும் இணையதளத்தில் அவ்வப்போது என்னுடைய பாடல்களைப் பதிவு செய்கிறேன். சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை  ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையம் ஓர் விருத்தத்தையும் எழுதினேன். 

அப் பாடல்களை மூன்று தொகுப்புகளாக - ஒரு தொகுப்பில் இரண்டு கவிதைகள் -   கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன். 

இரண்டாம்  தொகுப்பு, இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


தலைப்பு - கடைக்கு வராத சரக்கு

நாட்குறிப் பேட்டிலே   தீட்டிப் புதைத்தவென் 
பாட்டுகள் பற்பல  ஆகுமே  -  வெட்கம்  
தடைசெய்த தாலவை இன்னாள் வரையில்      
கடைக்கு வராத சரக்கு.
(பல விகற்ப இன்னிசை வெண்பா)

X
தலைப்பு - கணக்குக்கு  வராத பணம்

அஞ்சரைப் பெட்டி அடியில்  ஒளித்துவைத்த 
அஞ்சாரு ஐநூறு   ரூபாய்க ளெல்லாம்  
பணமதிப்பு  போனவுடன்  பாட்டியின் வங்கிக்   
கணக்கில் வராத  பணம் 
{பல விகற்ப இன்னிசை வெண்பா)

Sep 14, 2021

கடற்கரைக் காட்சி

சென்ற மாதம் சென்னை மரீனா கடற்கரையில் நான் பிடித்த புகைப்படம் இது!

இதை நான் நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டபோது, ஒரு நண்பர்              " இப்படத்துடன் அது பற்றிய ஒரு பாடலையும் எழுதிப்  பதித்திருக்கலாமே!" என்ற ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

அந்த உந்துதலில் விளைந்த  பாடல் இது!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: இந்தப் படத்தில் இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இரு மகன்கள்!



கடற்கரைக் காட்சி 


மெல்லக் கிழக்கினிலே மேலுழும்பும் சூரியன்தன்

 வெள்ளைக் கதிர்க்கொற்றை அள்ளித் தெளிக்கையிலே 

வெள்ளித் தகடென்று மின்னும்  கடலெந்தன்  

உள்ளத்தை கொள்ளைகொள் ளும் 

Jun 18, 2021

ஐயா! ஜாலி!!

ஐயா! ஜாலி!!

அரசு தற்போது அறிவித்து இருக்கும் ஊரடைப்பு விதித் தளர்வுகளால் நம் "குடிமக்கள்" உற்சாகத்தில் ஊறித் திளைக்கிறார்கள் - டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் !

கடைகளில் திருவிழாக் கூட்டம்! 

முகக் கவசம் போடலையா?
------அது எதுக்கு?
சாராய விலையை அதிகமாக்கி விட்டார்களே?  
------கவலையில்லை!
தடுப்பூசி போட்டாச்சா? 
------அதுக்கு யாரு பணம் கொடுப்பாங்க? ஒசியிலே கிடைச்சா சரி!

ஈச்வரோ ரக்ஷது ! ( இறைவன்தான் காக்கவேண்டும் !)

இது குறித்து சில வெண்பாக்கள்!

அன்புடன்

ரமேஷ்





பேஸ்மாஸ்க்கை எப்போதும் போடாமல் கூட்டமாய்

டாஸ்மாக் கடையிலே முந்துவார் ---- ஈஸ்வரனே

வந்துரைத் தாலும் திருந்தார் இவரைநாம் 

நொந்தென்ன காண்போம் பயன்?

                                                                                                                          (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

ஏராள மாகவே என்னவிலை சொன்னாலும் 

ஆராய்ச்சி சற்றுமே செய்யாம லேயுடன் 

தாராள மாய்ப்பணத்தை தாரைவார்த் தேதருவார்

சாராயச் சாருண்ப வர்!

                                                                                                       (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

எவ்விலை ஆயினும் வாங்கிக் குடிப்பார்

உயிர்குடிக்கும்  சாராயச் சாரை  - உயிர்காக்கும்

ஊசியைப் போடவே நூறுதடை சொல்லுவார்

ஓசியாய் வாராத தால்!

                                                                                                                            (பலவிகற்ப இன்னிசை வெண்பா)



Jun 15, 2021

கிண்டி பாம்புப் பண்ணை

கிண்டி பாம்புப் பண்ணை

சென்னையில் வசிப்பவர்களுக்கும், சென்னைக்கு வருபவர்களுக்கும் , அந்தக் காலத்தில் , பார்க்கவேண்டிய ஒரு சுற்றுலாத் தலமாக  இருந்தது கிண்டியில் இருக்கும் பாம்புப் பண்ணை.

பாம்புகளிடமிருந்து விஷத்தை எடுத்து, அவ்விஷத்தையே பாம்புக் கடிக்கு மாற்று மருந்தாக மாற்றும் பணியும் இங்கு நடைபெருகிறது.

இன்று , ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் வருவது முற்றும் தடைப்பட்டு , வருமானமின்றி , அங்குள்ள பாம்புகளுக்கு இரையளிக்கவும் முடியாத நிலையில் இருக்கிறது என்பது இன்றைய பத்திரிகைச் செய்தி.

நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டி, இதைப் பற்றிய ஒரு பாடலுடன் 

அன்பன் 

ரமேஷ்

Name of the Account : Chennai Snake Park Trust 
A/C.No. : 10792456546 
Name of the Bank : State Bank of India, SME Branch, Adyar


ஆலத்தை* யேமாற்றி ஔடதமாய்** ஆக்கிவிடும்      *ஆலம் = நஞ்சு**ஔடதம் = மருந்து 

ஜாலத்தை செய்கின்ற சர்ப்பச் சதுக்கத்தில் *                *சர்ப்ப சதுக்கம் = பாம்புப் பண்ணை 

பாலூட்ட பாம்பிற்கு காசில்லை ; இன்றதுதன்  

காலூன்றி நிற்கா நிலை.

                                                                                                                      (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)