Search This Blog

Aug 16, 2021

என் உயில் - அம்ரிதா ப்ரீதம்

என் கல்லூரி நண்பர் வரதராஜன் எனக்கு அனுப்பிய ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழி பெயர்ப்பு இந்தக் கவிதை.

இந்தக் கவிதை பஞ்சாபிக் கவிஞர் அம்ரிதா ப்ரீதம் அவர்களால் இயற்றப்பட்டது என்று கூறப்பட்டாலும், அது வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. 

எது எப்படியானாலும் என் மனதை வெகுவாகத் தொட்ட கவிதை இது,

நீங்களும் அவ்வாறே உணருவீர்கள் என்ற நினைப்புடன் 

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு : ஆங்கிலக் கவிதையும் இணைக்கப்பட்டிருக்கிறது 

P>S : This is a translation of a poem by Amritha Pritam,  the famous Punjabi poet. The poem struck a chord in my heart. Hope it does the same thing for you too! The English version also is given.


என் உயில்  -  (அம்ரிதா ப்ரீதம்)


நிறையுடல் நலமும்  குறையிலா மனமும் 

கொண்டின்று நானே வரையும் எந்தன் 

இறுதிச் சாசனம் இதுவே யாகும்!  


சிறைவிட் டென்னுயிர் பறந்த பின்னாலே 

விரைந்து வந்தென் வீட்டின் அறைகளில்  

திறந்த கதவின்பின் இறைந்து கிடக்கும் 

பொருள்கள் அனைத்தையும் தேடி எடுங்கள்!


அடுக் களையிலும் படுக்கை அறையிலும் 

முடங்கிக்  கிடக்கும்நம் பெண்ணினத்  தோரின் 

உடைந்த கனவை மீட்டி எடுக்க

எந்தன் கனவை எடுத்துக் கொடுங்கள்!


வெளிநா டுகட்கே பிள்ளையை  இழந்த

முதியோர் இல்லப் பெற்றோர் எல்லாம் 

துளி மணித் துளிகள் களிப்புடன் இருக்கவென் 

சிரிப்பின் சிதறலைத் தேடித் தெளிப்பீர்.


என் 

மேசையின் மேலே கிடக்கும் வண்ணக் 

குழம்புக் கலவையைக் கொஞ்சம் எடுத்து 

தேசம் காக்கத்  தன்னுயிர் ஈந்த 

பாசக் கணவனின் உடலில் ஓடிய 

செந்நிறக் குருதிக் கறை யைத் தனது 

புடைவையின் கரையாய் அணிந்தவள் அவளின் 

வெண்ணிறப் புடவையின் மீதே பூசி 

வாழ்க்கையின் நிறத்தை மாற்றி விடுங்கள்!


என் 

கண்ணில் வடியும் கண்ணீர்த் துளிகளை 

ஒவ்வொன் றாக எண்ணி எடுத்து 

பண்கள் பாடும் புலவர்க் களிப்பீர் ,

கவிதைப் பூவாய் அவையே மலரும்!


தன்  

கற்பை விற்றும் தன்  மகளுக்கு  

கற்பித்திடுவாள் கல்வியை அவளே!

போற்றி யேஅவள் செயலை நானும்

பெற்றவென் பெருமை புகழ்க ளனைத்தையும் 

மொத்த மாகவே  அவளுக் களித்தேன்!


இனிவரும் நாட்களில் தனியொரு புரட்சியை

எடுத்து நடத்தும் திறனைப் பெறவென்   

உணர்வில் ஊறிய சினங்களை எடுத்து 

இளைஞர்தம் மனங்களில்  ஏற்றுக இன்றே!


என்னுள் திளைக்கும் பெரும்பர வசத்தை

உலக சுகங்களை உதறித் தள்ளி  

அனைத்தையும் துறந்து இறைவனைத் தேடி 

அலையுமத் துறவிக் கெடுத்தளித் திடுக!


இவைகளை அனைத்தும் அவரவ ரிடத்தில் 

அளித்தபின் மிச்சம் மீதி இருக்கும்

கவைக்கு உதவா கோபம்  குரோதம் 

பெரும் பேராசை சுயநலம் சூழ்ச்சி 

பொய்கள் இவற்றை என்னுட லத்துடன் 

சிதையில் ஏற்றி எரித்தழித் திடுக! 

The English Version

Fully conscious and in good health, I am writing today my will:
After my death
Ransack my room
Search each item
That is scattered
Unlocked
Everywhere in my house.
 
Donate my dreams
To all those women
Who between the confines of
The kitchen and the bedroom
Have lost their world
Have forgotten years ago
What it is to dream.

Scatter my laughter
Among the inmates of old-age homes
Whose children
Are lost
To the glittering cities of America.

There are some colors
Lying on my table
With them dye the sari of the girl
Whose border is edged
With the blood of her man
Who wrapped in the tricolor
Was laid to rest last evening.

Give my tears
To all the poets
Every drop
Will birth a poem
I promise.

My honor and my reputation
Are for the woman
Who prostitutes her body
So her daughter can get an education.

Make sure you catch the youth
Of the country, everyone
And inject them
With my indignation
They will need it
Come the revolution.

My ecstasy
Belongs to
That Sufi
Who
Abandoning everything
Has set off in search of God.

Finally,
What’s left
My envy
My greed
My anger
My lies
My selfishness
These
simply
Cremate with me…


 



 



Aug 11, 2021

மூன்றாம் அலை???


மூன்றாம் அலை???





யூகானிலே பிறந்து உலகெங்கிலும் பறந்து 

-----பரவிய கிருமி இதுவே! - இது 

சாகா வரம் ஒன்று சாமியிடம் பெற்று 

-----சோகாப்பில் எமை ஆழ்த்துதோ?


"ஆகா இதைநாங்கள் அழிக்க மருந்தொன்றை 

-----அடைந்து விட்டோம்" என்கையில்- அழிந்து 

போகாமல் இன்னுமிது ஒன்றிரெண்டு மூன்றென்று 

-----அலைகளாய்ப் பாய்ந்து வருதே!


இரண்டாவ  தாமலையின் தாக்கத் தினால்  சிறிதும்  

----மிரண்டு போகா மலே- கூடித் 

திரண்டு தோளோடு தோளிடித் தேயடுத்த 

-----அலையினை வரவேற் கிறார். 


ஆல்பாவிலே தொடங்கி பீட்டா காமா பின்பு 

-----டெல்டாவென் றின்றா கியே- தனது  

தோல்மாற்றி நாள்தோறும் பால்மாறி நம்மையே 

-----ஏமாற்றி தினம் வாட்டுதே!


தாளிட்ட  கதவின்பின் நாள்முழுது மேயடைந்து 

-----மனம்நொந்து போகும் நிலையை - விட்டு

மீளவோர் வழிகாட்ட மும்மதக் கடவுளரை 

-----வேண்டியே வணங்கு கின்றோம்! 


அன்புடன் 

ரமேஷ் 

Aug 8, 2021

ஈட்டி எரிதலில் ஈட்டிய பதக்கம்

ஈட்டி எரியும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவைப் பாராட்டி ஒரு சிறு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 


ஈட்டி எரிதலில் ஈட்டிய பதக்கம் 

 

ஈட்டி எரியும் களத்தில் - எவரும் 

-----ஈடில் லாத வகையில் 

போட்டி போட்டு வென்று - ஒளிரும் 

-----தங்கப் பதக்க மொன்றை 

ஈட்டி எமக்குத் தந்தாய் - எங்கள் 

-----நெஞ்சை நிமிர வைத்தாய் 

நாட்டு மக்கள் சேர்ந்து - உனக்கு 

-----  நன்றி கோடி சொல்வோம்!


நூறு ஆண்டுக் காலம்- பாரத 

----நாட்டைச் சேர்ந்த மக்கள் 

யாரும் செய்ய இயலா -  தொரு 

-----செயலைச் செய்து  வென்றாய் 

பார தத் தாயின் -புகழை 

-----பாரில் பரவச் செய்த 

நீரஜ் சோப் ராவே - நீயும் 

-----நூறு ஆண்டு வாழ்க!

 

Aug 6, 2021

எழுதாத முதல் வரிகள்

விடிந்தும் விடியாத , உறக்கம் முற்றும் கலையாத, இளங்காலைப் பொழுது ஒரு கவிஞனுக்கு மிகவும் ஆக்கவளம் மிக்க நேரம். ஆனாலும் சில சமயங்களில் மனதின் எழும் கற்பனைகளுக்கு முழுதாக சொல்வடிவம் கொடுக்கும் முன்னாலேயே பொழுது விடிந்து விடிகிறது. பாடல் நிறைவு பெறுவதில்லை!

அத்தகைய ஒரு நிகழ்வு பற்றிய பாடல் இது!

அன்புடன் 

ரமேஷ் 


 எழுதாத முதல் வரிகள் 



முழுதாக முடியாத பின்னிரவுப் பொழுதுக்கும் 

-----விடியல்வே ளைக்கும் இடையே 

விழிமூடிப்  படுக்கையில் இருக்கையில் மனதிலே 

-----மிதந்து வந்த வரிகள்!   

எழுதாத என்பாடல் ஒன்றிலே அவைகள் 

-----இரண்டாம்  மூன்றாம் வரிகளாம்  

விழிக்குமுன் பாடலின் முதல்வரியும் உதிக்குமென 

-----கண்மூடிக் காத்திருந் தேன்! 


பொழுதோடு வாராமல் முதலாம் வரியதுவோ  

-----வழுக்கியே ஓடுகிற தே! 

எழுந்த பின்னாலும்  எவ்வேலை செய்தாலும் 

------அவ்வேலை யில்லென் மனம் 

முழுதாகச் செல்லாமல் முதலாம் வரியதைத்

-----தேடியே அலைகின்றதே!

வழிபடும் அறையிலே  இறைவனின் முன்னாலே 

-----அமர்ந்திருக் கும்போதி லும் 

கழிவறை  சென்றாலும்  குளிக்கவே போனாலும்

-----உறுத்தலால் மனம் உழலுதே! 

அழகான வரியொன்று இதுகாறும் வாராமல் 

-----இழுபறியாய் இருக்கின்றதே!


பொழுதோடு இன்றுநான் உறங்கச் செல்லுவேன்,

-----கண்விழித்துப் பின் எழுகையில்  

சுழியோடி கடல்மூழ்கி எழும்போது அவன்கையில் 

-----ஒளிரும்நன் முத்தினைப் போல்  

பிழையொன்றும் இல்லாத அழகான முதல்வரியும்

------என் பாட்டில் வந்து விழுமோ ? 

பழுதொன்றும் இல்லாது   என்பாட லும்நிறைந்து  

----- முழுதாகி அழகு  பெறுமோ?



    


Aug 1, 2021

நட்பின் எல்லை

 நட்பின் எல்லை 







கனவின் எல்லை எது வரை ?
காலையில் விழித்து எழும்வரை. 
நினைவின் எல்லை எது வரை?
நித்திரை நம்மைத் தொடும்வரை.
ஒளியின்  எல்லை எது வரை?
கண்கள் மூடும் அதுவரை 
நட்பின்  எல்லை எது வரை? - யாரும்
கண்டது இல்லை இதுவரை.


வித்தையின் எல்லை எது வரை - அதன் 
உத்திகள் வெளியில் வரும் வரை 
கத்தியின் எல்லை எது வரை? அதன்
கூர்முனை கேடயம் தொடும்வரை 
புத்தியின் எல்லை எது வரை ? இறுதி 
புத்தகப் பக்கம்  அதுவரை 
நட்பின்  எல்லை எது வரை?- யாரும்
கண்டது இல்லை இதுவரை  

பொன்புகழ் பதவி பொருளைத் தேடி 

ஓடி ஓய்ந்தவிவ்  வேளையில்  

அற்றை  நாட்களில் பெற்ற நண்பர்கள்  

உறுதுணை என்ற  உணர்வுடன்

உறங்கிக்  கிடக்கும் நட்பு இழைகளை 

சேர்த்துக் கோர்த்துப் பின்னியே 

உறவுப் பாலம் ஒன்றை அமைத்து

சிறந்த நட்பைப்  போற்றுவோம். 

பிறவிப்  பயனை எய்துவோம்.