Search This Blog

Sep 17, 2017

அடிமுடி காணமுடியா அரன்- (பிரதோஷப் பாடல் 2)

அடிமுடி காணமுடியா அரன் 
(பிரதோஷப் பாடல் 2)

சிவபெருமான் , ஒரு நீண்ட நெருப்புத்தூண் வடிவத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில், பிரம்மன் அவரது முடியையும், திருமால் அவரது அடியையும் காண முனைந்து தோல்வியுற்றதாக ஐதீகம்.
இன்று, பிரதோஷ தினத்தன்று, இது பற்றி ஒரு சிறு பாடல் இயற்றி இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன் 
ரமேஷ் 
பி.கு: இது பற்றிய முழுக்கதை பாடலின் முடிவில் , ஆங்கிலத்தில்.


அடிமுடி காணமுடியா அரன் -- பிரதோஷப் பாடல்

மறையுரைத்த பிரம்மனே பறந்து சென்ற போதிலும் 
திரைகடல் துயில் மாதவன் தரைபிளந்து செல்லினும் 
வரையறையாம்  முடியடி அருகடைந்து அறிவொணா 
இறையவனின் இருபதம் பணிந்துகுறை யிரத்துவோம். 

 வரையறை -  எல்லை .
அறிவொணா - அறிய முடியாத
குறையிரத்தல்  - வணங்கி  வேண்டுதல்  ; to beseech



When Vishnu and Brahma couldn't decide who was greater among them, they 
went to Kailash and explained their situation. Hearing this, Lord Shiva said "I will help to resolve who is the best of you two, I will be taking a giant avatar(Vishwaroopam), having an infinite height, the first person to find my end points of my avatar, i.e., feet or the head will be declared as the winner". Lord Vishnu and Brahma agreed to this and Lord Shiva took a vishwaroopam(Avatar of having an infinite height) as a form of fire. Lord Vishnu went for the pursuit of finding the feet and Brahma went for the pursuit of finding the head. Both came back to Kailash. While Vishnu agreed that he could not find his feet, Brahma falsely claimed that he saw Shiva's head. Knowing Brahma was lying, Shiva cursed Brahma and that is why  no temples  are normally built for Brahma




Sep 15, 2017

நவ துவாரங்கள்

நவ துவாரங்கள்

ஏன் இரண்டு கண்கள், காதுகள், நாசித்  துவாரங்கள் கொடுத்த ஆண்டவன், ஒரு வாய்த்துவாரம் மட்டும் கொடுத்திருக்கிறான்?
இந்த சிந்தனையில் எழுந்த கவிதை இது.
படித்துப் பார்த்து/ கேட்டு , கருத்துப் பதியுங்கள்.

அன்புடன்

ரமேஷ்

நவ துவாரங்கள்

மண்ணில் பிறந்த அனைவருமே
----------மகிழ்வுற வாழும் விதமாக
எண்ணிக் கொடுத்தான் இறைவனுமே
----------உடலில் ஒன்பது துவாரங்கள்

செவிகள் இரண்டு கேட்பதற்கு
----------கண்கள் இரண்டு காண்பதற்கு
சுவாசம் செய்து ஜீவிக்க
---------- இரண்டு துவாரம்  மூக்கினிலே.

நாத்திறம் காட்டவும்  சாப்பிடவும்
-----------முகத்தினில் இருப்பது வாயொன்று.
மூத்திரம்  மலஜலம் கழித்திடவே
----------- ஒவ்வொரு துவாரம் உடலினிலே.

காண, கேட்க  , காற்றிழுக்க
-----------இரண்டிறண் டோட்டைகள் தந்தாலும்
உண்ணவும் பேசவும் ஒன்றைத்தான்
------------இறைவன் அளித்ததின் பொருளென்ன?

உண்பதை உரைப்பதை சுருக்கிடுக
------------ காண்பதைக் கேட்பதைப்  பெருக்கிடுக
மன்பதை உறைவோர் அனைவருக்கும்
-------------முதலாம் பாடம் இதுதானே!

உதடுகள் என்னும்   கதவுகளை
-------------திறந்திடும் நேரம் குறைத்திடுவோம் .
இதமாய் இனியவை  பேசிடுவோம்.
-------------மிதமாய் உண்டு மகிழ்ந்திடுவோம்.










Sep 11, 2017

ஆலங்குடி ஆஞ்சநேயர்

ஆலங்குடி ஆஞ்சநேயர் 





                                                           








என்னுடைய சென்ற பதிவிலே ஆலங்குடியில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயரைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன்.

இங்கிருக்கும் ஆஞ்சநேயர் , விஸ்வரூப சங்கடஹர மங்கள ஆஞ்சநேயர் என்று அறியப்படுகிறார்.

இந்த ஆஞ்சநேயர், சஞ்சீவினி மலையிலிருந்து எடுக்கப்பட்ட  விஷால்ய கரணி  , சவரண கரணி  , சந்தான கரணி , ம்ருத சஞ்சீவினி  என்னும் நான்கு வித மூலிகைகளைத் தன்  இடுப்பில் முடிந்து வைத்திருப்பதைக் காண முடிகிறது. இதுவே இவ்விக்கிரஹத்தின்  தனித் தன்மை.

அறுபது டன் எடையும், முப்பத்தி இரண்டு அடி  உயரமும் கொண்ட இந்த ராமதூதனைப் பற்றி , கலி  விருத்தத்தில் அமைந்த ஒரு பாடல் இப்பதிவில் .


அன்புடன் 

ரமேஷ் 

ஒப்புகை : இந்தப் பதிவில் இடம் பெற்றிருக்கும் படங்கள் கீழ்கண்ட பதிவிலிருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டவை. 
gkamesh.wordpress.com/tag/alangudi-hanuman
ஆலங்குடி ஆஞ்சநேயரைப் பற்றிய முழுத்  தகவல்களையும் அறிய விரும்புவோர் இந்தப் பதிவை அணுகலாம்.



ஆலங் குடிக்கு  இருகல்* அருகே
சாலை மருங்கில் ஞான புரியில்  
சிலை வடிவாக அனுமனின் தோற்றம்
மலையென எழும்பி முகில்தொடும் ஏற்றம்.

முப்பத் தீரடி  கற்சிலை வடிவில் 
செப்பர்க் கரிய விஸ்வரூ பத்தில்
சங்கடம் அறுக்கும்   மங்களத் தோற்றம்**
இங்கே  காண்போம்  ! இதற்கிணை ஏது ?

சஞ்சீ வினிமலை தனையடி பெயர்த்து 
அஞ்சன வண்ணனின் இளவலைக்  காத்தோன் 
இடர்களை யும்நால்   மூலிகை***  களைத்தன்  
இடையி லிருத்திய   இறைவனை வணங்கு.


செஞ்சுட ரோனைப்  பந்தென் றெண்ணி
பிஞ்சு வயதிலதைப்   பிடிக்கப் பறந்தோன்****  
பஞ்சென லங்கையை தீயிட் டெரித்த   
அஞ்சனை  புத்ரன் அனுமனை வணங்கு

அகழா  ழியினைத்   தாண்டிச்   சென்று
பகையோர்  நடுவில்  பாவையைக் கண்டு
கணையா ழிதந்து   கலக்க மொழித்த 
இணையில்  மாருதி  வீரனை வணங்கு

(கலி  விருத்தம்)

* -  The place where it is situated is known a gnanapuri and is about two miles before alangudi in the main road, as we travel from Kumbakonam
**- The Anjaneyar is known as Viswaroopa Sangadahara Mangala Anjaneyar.
***- Tucked in his waist are the four Mooligaigal Vishalya Karani, Savarana Karani, Santhana Karani and Mrita Sanjeevini each having different curative properties.
****- Reference is made to the legend in which Hanuman,  as a young kid, flies towards the Sun, mistaking it to be a ball which he wanted to play with.





Sep 8, 2017

குரு தக்ஷிணாமூர்த்தி



சென்ற வாரம்  கும்பகோணம் சென்று ஆலங்குடியில் கோவில் கொண்டிருக்கும் குரு தக்ஷிணாமூர்த்தியைத் தரிசனம் செய்தோம்.
அவரைப் பணிந்து ஒரு பாடல்.

அன்புடன்

ரமேஷ்

குரு தக்ஷிணாமூர்த்தி 




ஆலங் குடிதன்னில் ஆல  மரத்தடியில்
---------கோலத் தவமிருக்கும்  குருநாதா!
ஆல காலமுண்ட  நீல கண்டனின்
----------ஞான உருவான சர்வேசா!

வேதம் நான்கினுட் பொருளை அறியவே
----------பாதம் பணிந்திருக்கும்  முனிவருக்கே
ஓதி அவரறிய போதித் தருள்செயும்
----------ஆதி குருவான அகிலேசா!

சின்முத் திரையையும் சுடர்த்தீப்  பிழம்பையும்
----------சபமா லைசதுர்வே தங்களையும் 
நான்கு கரங்களில் ஏந்திஅருள் செய்து
----------தென்திசை யைநோக்கி  அமர்ந்தோனே!

முயலகனின் வடிவில்  அறியா மையிருளை
----------காலடி யில்கிடத்தி அழிப்போனே!
செயல்யா வும்சிறக்க மெய்ஞ்ஞா னம்பிறக்க
----------குருவுந் தன்தாளைப் பணிவேனே!






Sep 1, 2017

ஆறுவாரம் ஆரவாரம் -(r1)


ஆறுவாரம்  ஆரவாரம் -(r1)

சென்ற ஆறுவாரங்கள் என்னுடைய மூன்று பேத்திகள் சென்னை வந்திருந்து
எங்களுடன் தங்கியிருந்த நாட்கள் ஒரு அட்டகாச  அனுபவம். அதை உங்களுடன் இந்தப் பாடல் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்



ஆறு வாரம் , ஆரவாரம் 

என்மூன்று பேத்திகளும்   தந்தை தாயாருடன் 
சென்னைக்கு வந்திருந்து என்வீட்டில்  தங்கிய 
இன்பமான ஆறுவாரம் அட்டகாச  அனுபவம்  
என்மனதை என்றும்விட்டு அகலாத அற்புதம்.

கத்தல்கே ளிக்கைகும்  மாளம்கொடி யேற்றம் 
முத்தங்கள்  கன்னங்களில்    மாறிப் பரிமாற்றம் 
முகமூடிக  ளணிந்தே விலங்காய்   உருமாற்றம் 
சுகமான  அணைப்புடன்சிறு கதைகளரங் கேற்றம் 

பாடச்சொல்லி மழலைக்குரல் கேட்பதுமே   ஒருசுகம்
ஆடச்சொல்லி அபிநயங்கள் பார்ப்பதுமே  ஓர்சுகம்.
ஓடச்சொல்லி பின்தொடர்ந்து பிடிப்பதுமே  ஓர்சுகம்
தேடச்சொல்லி ஒளிந்துவிளை யாடுவதும்  ஒருசுகம்
கட்டிப்பிடுத்து கையில்தூக்கி மார்பணைத்தல் ஒருசுகம்
குட்டிக்காலால் எட்டிநம்மை உதைப்பதுமே  ஓர்சுகம்.

கரைகின்ற காகம்கானம் பாடுகின்ற குயிலுடன்
விரைகின்ற குதிரைமற்றும் முட்டுகின்ற மாடுகள்
குரைக்கின்ற நாய்கள்மற்றும் மியாய்மியாய் பூனைகள்
உருமிகின்ற சிங்கம்புலி போலக்குரல் எழுப்பியே 
பரிணாம வளர்ச்சியில் பலபடிகள் பின்புபோய்
பரிமாணம் புதிதாகப் பார்த்ததுமே ஓர் சுகம்.

உச்சிமுகர்ந்து உடலணைத்து  கொஞ்சுதலும் ஒருசுகம்  
பச்சரிசிப் பல்வரிசை மிளிரும் புன்னகைசுகம்.
இச்சகத்தில் இச்சுகங்கள் என்றுமீண்டும் கிடைக்குமோ 
அச்சமொன்று மனதிலே விச்வரூப மெடுக்குதே.

ஆறுவார ஆரவாரம் நேற்றுமுடிந்து போனதே!
வேறுவேறு திசைகள்நோக்கி பறவைகள் பறந்ததே!
வெறுமைபரவி  வீடும்மனமும்  வெறிச்சென் றிருக்குதே!
மறுபடியும் இந்தநாளின்  வருகைநோக்கி நிற்கிறேன்.