Search This Blog

Apr 30, 2016

புட்டபர்த்தி - 5

 
புட்டபர்த்தி - 5
புட்டபர்த்தி --( தொடர்ச்சி )

 
பிரசாந்தி நிலையத்தில் ,  எங்கும் நிறைந்து நிற்கும் பகவான் சத்ய சாயிபாபா பற்றிய ஒரு சிறு பாடலுடன்,  புட்டபர்த்தி பிரசாந்தி நிலையக் கோவில்கள் / சிலைகள்  பற்றிய இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
அனைவருக்கும் பாபா அருள் புரிவாராக!
ஜெய் சாயி  ராம் !
அன்புடன் 
ரமேஷ் 


 
சுருள்முடி    தலைதனில்    விரித்திட்ட.   மகுடம்

அருள்விழி    சிரித்திடும்   அழகிய.  வதனம் 

பருத்தியில்    இருந்திடும்    சத்திய   சாயியின் 

திருவடித்    தரிசனம்    பிறவிப்   பேறே!  


                                                   (கலி விருத்தம்)

 

Apr 24, 2016

இவள் என்ன ரதியோ?

இதுவரை எழுதிய கவிதைப்பதிப்புகளில் தெய்வீகம் , ஆன்மீகம், அங்கதம், சமூக விழிப்பு  என்று பல கோணங்களைத்  தொட்டிருந்தாலும் , இரண்டு பரிமாணங்கள் இன்னும் தொடப்படவில்லை!அவை-

1) காதல் 2) பெண்களின் அழகு.
இவைகளைப் பற்றி எழுதாவிட்டால் ஒருவன்  தமிழ்க் கவிஞன்  என்று கருதப்படவே  லாயக்கு இல்லாதவன் ! ( லாயக்கு என்பது தமிழ் வார்த்தையா ?)

காதலைப் பற்றி எழுத வயதும் மீறிவிட்டது, சுய அனுபவமும் குறைவு.

ஆனால் பெண்களின் அழகைப்  பற்றிய  சங்க கால, சம காலக் கவிதைகளைப் படித்தும் , கணக்கில்லாத சினிமாப் பாடல்களைக் கேட்டும் வளர்ந்ததால் , கற்பனை செய்து எழுதுவது அவ்வளவு கடினம் இல்லை.


இதோ ஒரு பாட்டு, உங்கள் பார்வைக்கு !

அன்புடன்
ரமேஷ்

இவள் என்ன   ரதியோ?

பெண்ணொருவள் ஓவியத்தை  இன்றிங்கு கண்டேன்
இணையிலா அவ்வழகைக் கண்டே வியந்தேன்!
முற்றும் அதை சொல்லுரைக்க முடியாது எனினும்
சற்றேனும் சொல்லியோர் கவிதை படிப்பேன்.


கருங்குழல்   கரையிட்ட    பிறை நுதல்   நெற்றி
மருங்கினிரு  மந்தார   இலையொத்த மடல்கள் 
மருளும் மான்   விழிபழிக்கும்   கருநீலக்   கண்கள் 
மருவற்ற  முகம் நடுவில்    விரிந்த நீள்   நாசி.


மற்றும் 

சிருங்கார   ரசம் சிந்தும்    சிந்தூர    இதழும்  
விருந்துண்ண    வாவென்று   வரவேற்கும் கனியோ?
மின்னலென இதழிடையில்   மின்னும்   ஒளிக்கீற்று
புன்னகையோ?   கோத்தெடுத்த   நல்முத்துச்   சரமோ ?


கன்னக்   கதுப்புமாங்  கனிதந்த    மொய்யோ ?
எண்ணரும்   எழில் முகம்,    இது என்ன    மெய்யோ?
ஒளிர்வெண்   ணிறம்கொண்ட   சங்கே   கழுத்தோ?
தளிர் மூங்கிலே   அவள்    தோளோ    நீள் கரமோ?


மங்காத    தங்கமென    ஒளிர்ந்திடும்   அங்கை
தெங்கினிள    நுங்குகளோ   மங்கையவள்    அங்கம் ?
மிளிர்மேகலை  அணிந்த   இடையோ   அது கொடியோ?
இடையதனின்   எடைதாங்கி  நிற்கும்பொற்  குடமோ?


நெடுதுயர்ந்த    கால்களும்    செவ்வாழைத்   தண்டோ?
சிலம்பணிந்த.  பொற்பாதம்  நிலம் பூத்த    மலரோ ?
அங்கயற்  கண்ணியள்   திங்களின்   தங்கை?
எங்கும் நான்   இதுவரை    காணாத   நங்கை!


மதனையும்    மயக்கிடும்    இவள் என்ன   ரதியோ?
நிதம்எண்ணி   ஏங்குதல்    ஆடவர்   விதியோ?

Apr 20, 2016

புட்டபர்த்தி -- 4


புட்டபர்த்தி  --  4

புட்டபர்த்தி - தொடர்ச்சி 

பிரசாந்தி நிலையத்தின் உள்ளே உள்ள மற்றும் இரண்டு கோயில்கள் 
1. காயத்ரி தேவி கோயில் 
2. மகாலட்சுமி கோயில் 

இவை பற்றிய ஒரு கவிதைப் பதிவு, இதோ.

அன்புடன்,

ரமேஷ் 



DEVI GHAYATHRI



பஞ்ச    பூதங்களை   முகங்களாய்    ஏற்று-நல்

நால்வே    தங்களையும்   நாவினில்    ஏற்றினள்.

சாவித்திரி.   சரஸ்வதி    அவளென்று    சாற்றுவோம்.

சாயிகா     யத்திரி   தேவியைப்   போற்றுவோம்.             (கலி விருத்தம் )


DEVI LAKSHMI

காயாத்ரி கோயிலுக்கு அடுத்து இருக்கிறது  திருமகளின் திருக்கோயில்.  அதனுள் வீற்றிருக்கும் லக்ஷ்மியின் நிழற்படம் எனக்குக் கிடைக்கவில்லை.! அதனால் , இந்த சொற்படத்தை மட்டும் பதிவு செய்திருக்கிறேன்.


தலையினில் மணிமகுடம்  தரித்து , செவ்விதழில்

விலையிலாப்   புன்னகை விரித்து - தவமோன

நிலையிலே அமர்ந்தருள் புரிகின்ற திருமகள்

அலைமகளின் அருள்வேண்டு வோம்.   

                                            (வெண்டுறை )                     

Apr 16, 2016

தமிழ் நாட்டில் தேர்தல் -

தமிழ் நாட்டில் தேர்தல் -

அரசியல் கட்சிகள் பற்றி பொதுவாகவே ஒருவருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்!
நாடு முழுவதும் இந்த நிலைமைதான், என்றாலும் தமிழ் நாட்டில் அரசியல் வாதிகளும், கட்சிகளும் , இதை ஒரு எட்டமுடியாத கீழ்த்தரமான நிலைக்குகே கொண்டுவந்து விட்டார்கள் என்றால் அது மிகையாகாது.
நிலைமை இப்படி இருக்கையில் தேர்தல் இப்போது நடக்கப் போகிறது.
பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒரு கலையாகவே ஆக்கி , "திருமங்கலம் பார்முலா " என்ற புகழைப் பெற்றதல்லவா நம் தமிழ் நாடு?
இந்த புரையோடிப்போன அரசியல் சூழ்நிலையில் நடக்கவிருக்கும் தேர்தல் பற்றி ஒரு ஆதங்கக்  கவிதை.
படித்து முடித்தவுடன் ' கொஞ்சம் ஓவர் " என்று நினைக்கலாம்.  இருந்தாலும் என் எரிச்சல் முழுவதையும் வெளியே கொண்டு வர இது தேவையாக இருந்தது.
என்னைப் போலவே பலரும் நினைப்பார்கள் என்று நம்புகிறேன்!.

அன்புடன்
ரமேஷ்

பி.கு: நான் பதீவு செய்திருப்பது, சுருக்கப்பட்ட வடிவம். முழுக் கவிதை சற்றுப் பெரியதாக இருந்ததால் , படிப்போரது பொறுமையைச்  சோதிக்கவேண்டாம் என்று சுருக்கி இருக்கிறேன். முழு கவிதையையும் பின்னொருநாளில் பகிர்ந்து கொள்கிறேன்! ( இந்தக்  கவிதைக்கு வரும் வரவேற்பைப் பொறுத்து!)

தேர்தல்

அஞ்சுஅஞ்சு    வருஷந்தோரும்.   அரங்கேறும் விந்தையே  !
நாட்டுமக்கள்   ஓட்டுரிமை    விலைபோகும்    சந்தையே  !
கட்டுக்கட்டாய்    கைமாறும்  கரன்சிநோட்டுக்    கத்தையே  !
கோடிமக்கள்     ஏமாறும்     மோடிமஸ்தான்    வித்தையே  !


கட்சிகள்

சாதிமத   பேதங்கள்.   இல்லையெனச்  சாற்றினும்
நாகர் கோயில்   போட்டியிட   நாடாரையே  நாடுவார்'
மதுரையிலே   போட்டியிட  தேவரையே   தேடுவார்
கடலூரில்   வன்னியர் !  மீதிப்பேர்   அன்னியர் !


இன்றுஒரு   கூட்டணி;   நாளைவேறு    கூட்டணி
இந்தநாளில்  அரசியலில்   ஈதெல்லாம்  சகஜமே !
கொள்கைகளும்   கொலையாகும்!   வாக்குவங்கி    விலைபோகும்!
எள்ளளவும்   இல்லையே ,  எவர்க்குமிதில்     வருத்தமே !


வேட்பாளர்கள் - தேர்தலுக்கு முன்னும் பின்னும்

சந்துபொந்து   தோறும்வந்து   வாய்கிழியப்  பேசுவார்
வந்துநின்று   வக்கணையாய்    வார்த்தைகளை   வீசுவார். 
முந்திசொன்ன    வாக்குறுதி    பற்றியாரும்   கேட்பறேல்
முறையாகப்    பேசாமல்    மெழுகிநழுகி    ஓடுவார் 


வீடுதோறும்   வாசல்ஏறி   வந்தனங்கள்  செய்யுவார்.
தேடிவந்து   கைகுலுக்கி   ஒட்டுவேட்டை ஆடுவார்
ஓட்டுப்பெட்டி   நிறைந்ததுமே  ஒதுங்கியோடிப்  பதுங்குவார்
நாட்டுமக்கள்   இவர்களையே  நம்புவதும்   எங்கனம் ?


வாக்காளர்கள்

பாலும்தேனும்   நாட்டிலே   பெருகிஓடும்   அதனுடன்
பலவிதமாய்     இலவசங்கள்   பெற்றிடுவீர்   என்றெலாம்
அவிழ்த்துவிடும்   கதைகள்கேட்டு  குழம்பிடுவார்   சிந்தையே 
யாரெவரையும்  தலையாட்டி   நம்பும்ஆட்டு   மந்தையே

.
கஞ்சிகுடித்து   கந்தலுடுத்தும்   குடிசைவாழும்   மக்களும்
கஞ்சிபோட்ட  உடையுடுத்தி   காரில்போகும்    மக்களும்
கொஞ்சம்கூட   அஞ்சிடாமல்   கட்சிசொல்லும்   பொய்களை
நம்பிஒட்டு   போடுறார் !  நாசமாகப்    போகிறார்



வேறு சிலரோ ,

ஓட்டுப்போட்டு   மையைத்தடவ   கையைக்காட்டும்  முன்னரே
நோட்டுவாங்கி   பையில்போட   கைகளையே  நீட்டுவார்.
காந்தியாரே   இங்குவந்து   வேண்டிஒட்டு   கேட்டினும்
காந்திபடத்தை     போட்டநோட்டு   காட்டுமுதலில்    என்பரே


வேட்பாளர் வெற்றி பெற்று சட்டசபை சென்றபின் . 

விதவிதமாய்   கையூட்டு    கூசாமல்.   வாங்குவார்!
சதவீதம்  பெற்றேயெக்   காரியமும்.   செய்யுவார்!
சுனாமிகள்  புயல்மழைக்கு   அரசின்   நிவாரணம்
பினாமியாய்    இவர்களுக்கு   பாதிபோயே    சேரணும் .


தேர்தலிலே   வெற்றிபெற்று   சட்டசபை.  சென்றபின்
சொத்துபத்தும்   உடமைகளும்   பத்துமடங்கு   பெருகுமே
எங்கிருக்குது   சுவிஸ்சர்லாண்டு      என்பதும்     தெரியாமலே
அங்குள்ள  வங்கிகளில்  தங்கமாய்ப்    பதுக்குவார்.


நாம் ஏங்குவது ---

மக்கள்நலனை   மட்டும்நாடும்    கட்சிஒன்று   தோன்றுமோ?
கக்கன்காந்தி   காமராஜர்   போன்றதலைவர்   கிடைப்பரோ? ?
ஓட்டைவிற்க   மக்கள்மறுக்கும்  காலமென்   றுதிக்குமோ
நாட்டைஆள   நல்லஆட்சி   இன்றுநாளை  நேருமோ?


Apr 14, 2016

டமில் வால்க !


இதற்கு முன்னுரை தேவை இல்லை !

அன்புடன்

ரமேஷ்

 

இன்று காலையில்

நான் எழுந்து ,வெளியே வந்ததும்

முதலாகப்   பார்த்த

பால்பொட்டலம் கொண்டுவரும் பையனிடமும்

பக்கத்து வீட்டுப் பாட்டியிடமும்

"புத்தாண்டு வாழ்த்துக்கள்"

என்று கூறினேன்.

புரியாமல் விழித்தார்கள!

" ஹாப்பி நியூ இயர் " என்றேன்.

" விஷ் யூ தி சேம் " என்றார்கள்.     

HAPPY TAMIL NEW YEAR

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

மன்மத ஆண்டு முடிந்த பின்னாலே
துன்முகி  ஆண்டு தொடங்கும் இன்னாளில்
சண்முகக் கடவுள் நல்லரு ளாலே
இன்பங்க ளனைத்து முங்களைச் சேர
இன்னல்கள் நீங்கி இன்புற வாழ
இன்முகத் தோடு என்று மிருக்க
துன்பமும் துயரமும் தீண்டாதொழிய
அன்புடன் அளிப்பேன் வாழ்த்துகள் இன்று
.


அன்புடன்

ரமேஷ்
 

Apr 9, 2016

தாயும் கடவுளும்

சில நாட்களுக்கு முன்னே, எனக்கு வந்த ஒரு ஆங்கில முன் மொழிவு ( A parable by Dr.Wayne Dyer ) என்னை மிகவும் பாதித்தது.

கண்ணால் நாம் பார்ப்பது   மட்டுமே உண்மையா? அப்படியானால் 'கடவுள்" என்ற தத்துவத்தை எப்படி அறிவது?
தாயைப் பார்த்தறியாத . கருவில் கிடக்கும் இரண்டு குழந்தைகள் , ஒன்றோடொன்று பேசிக்கொள்வதாக அமைந்துள்ள இந்த உருவகக்க(வி)தையில் இந்தக் கேள்விக்கு விடை இருக்கிறதா?
படித்துப் பாருங்கள்!

அன்புடன்
ரமேஷ்

தாயும் கடவுளும்

கருவில் கிடக்கும்   ஒருஜோடி   
இரட்டைக்  குழந்தைகள்  ஓர்நாளில்  
கருப்பை விடுக்கும் முன்பாக  
ஒன்றோ டொன்று பேசினவே!.

குழந்தை 1
ஈரைந்து மாதம்  முடிந்த பின்னே
வெளியில் சென்று விழும் வேளை
இருளில் இருக்கு மிவ்வாழ்க்கை
விரைவில் முடிந்து ஒழிந்திடுமே !

குழந்தை 2
வெளியில் வந்து விழித்தபின்னே
வேறோர் வாழ்க்கை தொடங்கிடுமே--(கர்ப்பக்)
குழியில் இருக்கு   மிவ்வாழ்க்கை
பின்வரும்  வாழ்க்கையின் முன்னுரையே!

குழந்தை 1

இன்னோர் வாழ்க்கை இதன்பிறகா?
பைத்தியம் போலே உளறாதே !
எப்படி இருக்கும் அதுவென்று
இப்போதே நீ சொல்வாயோ ?

குழந்தை 2

கங்குல்   போலுமிவ்  விருள்விலகி
எங்கும் வெளிச்சம் நிறைந்திடலாம்.- நம்
அங்கங்கள் இன்னும் பெரிதாகி
அங்கும் இங்கும் உலவிடலாம். .
வாயால் உணவும் உண்டிடலாம்!
வேறு திறமைகள் வளர்த்திடலாம்.
இதுவரை யிலும்நாம் உணராத 
புதிதாய்ப் புலன்கள் புரிந்திடலாம்.

குழந்தை 1

நிற்பது நடப்பது இவையெல்லாம்
கற்பனையில் நீ காண்பதுவே!
தொப்புள் கொடியும் கழன்றபின்னே
எப்படி நம்முயிர் நிலைத்திருக்கும்?
கருவைத்  துறந்தும் உயிரிருந்தால்
ஒருவரும்  ஏனிங்கு  திரும்பவில்லை?
வெளியே   இருப்பது   காரிருளே!-நம்மை
வளைத்து விழுங்கும்  சூனியமே!

குழந்தை-2

கருப்பை   திறந்து  வெளிவந்து
கருப்பைத்  துறந்து   ஒளிகாண்போம்.!
தாயென்  ரொருவள்  இருக்கும்வரை
தீயவை நம்மை அணுகாதே!

குழந்தை-1

அம்மா என்று எவருமில்லை
சும்மா நீயும் சொல்லாதே!
அப்படி ஒருவர் உண்டென்றால்
இப்போ தவரும்  எங்குள்ளார்?

குழந்தை-2

நம்மைச் சுற்றி அவள் உள்ளாள் !
நாமும் அவளுக்  குள்ளுள்ளோம் !
அவளில்லாமல் நாம் இல்லை.
நாம் இருக்கும்  உலகுமில்லை.

குழந்தை-1

அம்மா எங்கே இருக்கின்றாள்?
கண்ணால் அவளை நான் காணேன்!
கண்ணால் காணா ஒன்றினையே
சும்மா எப்படி நம்புவது?

குழந்தை-2

மவுனம்  நம்மைச்  சூழ்ந்திருக்க
மனதை  நன்றாய் நிலைநிறுத்தி
செவியைத்  தீட்டிக்  கேட்பாயேல்
அவளது குரலை நீ கேட்பாய்!
சுவாசம்  நமக்குத்  தந்தவளை -விசு
வாசத்  தோடு  யாசித்தால்
பாசத்  துருவாம் தாயவளுன் 
உள்ளத்  துணர்வில்  உறைவாளே ! 



Apr 8, 2016

புட்டபர்த்தி- 3


புட்டபர்த்தி-3


புட்டபர்த்தி - தொடர்ச்சி

பிரசாந்தி நிலையத்திற்கு உள்ளே இருக்கும் வணிக வளாகத்திற்குச் செல்லும் வழியில் உள்ளது கண்ணைக் கவரும் வான நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிள்ளையார் சிலை !

STANDING VINAYAGAR WITH UMBRELLA



வண்ணக்    குடைதன்னை    தோளிலே    சரித்து
கண்கவர்    பட்டுடை.   தரித்து-   தண்ணீர்  
கமண்டலம்  கையேந்தி    நெடுதுயர்ந்து.   நிற்கும்
உமயவள்    மகனைத்.   துதி!                                                               
 
(வெண்டுறை )


 பஜனைக்குப் பின் , சமாதி தரிசனம் செய்துகொண்டு,
உள்ளிருக்கும் தியான மண்டபம் வழியாக வெள்ளியே செல்லுகையில் , மண்டபதிற்குள்ளே  காட்சி தரும் பளிங்குப் பிள்ளையார் .






வெள்ளி விளக்கிரு மருங்கிலும் ஒளிர
உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகுடன்

வெள்ளைப் பளிங்கு கல்லில் சமைத்த
பிள்ளையார் பாதம் பணிந்து வணங்கு.                     (கலி விருத்தம்)
 
 
 
 


 

Apr 6, 2016

புட்டபர்த்தி - 2

புட்டபர்த்தி ---- ( தொடர்ச்சி )

முந்தைய "புட்டபர்த்தி -1 " பதிவில்  "கணேசா நுழைவாயில் " பிள்ளையார், அதன் அருகில் இருக்கும் சுப்பிரமணியர் ஆகியோரைப் பற்றிய பாடல்களைப் பதிவு செய்திருந்தேன்.

இந்த முறை கோபுர வாசல் முன் வீற்றிருக்கும் ,  உலோக   வார்ப்படத்தால் ஆன வினாயகர் , அதற்குப் பின்னிருக்கும்  "ராம லக்ஷ்மண சீதா " சிலை ,  அதன்  கீழே  அமர்ந்திருக்கும்  அனுமன் சிலை ஆகியவற்றைப் பற்றிய பாடல்கள்.

அன்புடன்

ரமேஷ்

விரித்த மடலழகும் வேழமுகத் தழகும்
சிரிக்கும் சிறுத்த கண்ணழகும் - பெருத்த
தொந்தியுடன் வார்த்த சிலையழகும் கண்டு
வந்திப்போம் வாயில்நுழை வில்.

 
இலக்கென்றும் தவறாத வில்லம்பை ஏந்தி

இலங்கைவாழ் அரக்கரை அழித்திட்ட அண்ணல்
இலக்குமியின் அவதார நிலமகளி  னோடும் 
இலக்குவ னோடும் இணைந்திருக்கும் காட்சி!               
  
HANUMAN UNDER THE RAMA STATUE

தூய சீதை  துயரை நீக்க தூதுவனாய் சென்றவன்

தீயைவைத்து    தீயஅரக்கர்.   நகரத்தையே   எரித்தவன்.

பாய்ந்துசென்று  மலைகொணர்ந்து  அனைவர்நோயைத் தீர்த்தவன்

சாயிகோவில்   வாயில்முன்னே.  ராமர்பாதத்   mதடியிலே

கையில்தாளக்    கட்டெடுத்து.    ராமகானம்    பாடிடும்

வாயுபுத்திரன்   அனுமனை.   வணங்குவோம் !     வணங்குவோம்!

Apr 2, 2016

புட்டபர்த்தி- 1

சாயிராம்!

புட்டபர்த்தியின் பிரசாந்தி நிலையம் ஒரு அமைதிப் பூங்கா..அங்கு உள்ளே நிழந்தவுடன் எல்லோருக்கும் எதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.இல்லாவிட்டால், சாதரணமாக வெளியில் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவர்கள் கூட , உள்ளே ஒரு கட் டுப்பட்டோடு இருப்பதைக் காண முடிகிறது.

பிரசாந்தி நிலையத்திற்குள்ளே பல இடங்களில், சிறு கோவில்களும், தனியாக தெய்வச் சிலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. நான் அங்கு இருந்தபோது , தினமும் ஒரு சுற்று எல்லாவற்றையும் தரிசனம் செய்து வருவேன்.

அப்போது , ஒவ்வொன்றையும் பற்றி ஒரு சிறு பாடல் வடித்தேன். ஒவ்வொரு பாடலோடும், அந்த உருவச்சிலைகளின் புகைப்படங்களையும் இணைத்துள்ளேன். இந்தப் பதிவிலும், இன்னும் சில பதிவுகளிலும், அவற்றைப் பகிர்ந்து கொள்வேன். ஏற்கனவே , பிரசாந்தி நிலையம் சென்றிருப்பவர்களின் நினைவை இப்பாடல்கள் தூண்டி விடும் என்று கருதுகிறேன்.

இந்த முறை, பிரதான வாயிலுக்கு முன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிள்ளையாரைப் பற்றியும், அதற்கு சற்று  அருகில் இருக்கும் சுப்பிரமணியர் கோவிலப் பற்றியும்..

அன்புடன்
ரமேஷ்.

VINAAYAGAR AT GANESHA GATE



பிரசாந்தி      நிலையத்தின்       நுழைவாசல்    முன்னமர்ந்து
அரசாளும்    ஆனை    முகனை -    சிரம்தாழ்த்தி
பணிந்து    வணங்கிப்பின்    துணிந்திடும்    காரியம்
கனிந்திடும்   இதுஉறுதி   காண்!                                                                                        (வெண்டுறை )


SUBRAMANIYAR

வலக்கையில்    வடிவேலும்    இடக்கையில்    குக்குடமும் *
துலங்கும்    நீர்நிறை     நெற்றியும்  -   சிலம்பணிந்த
பொற்பாத  மும்கொண்ட   பாலனைத்     தொழுதிடுவோர் 
உற்பாதம்    அனைத்தும்    விலகும்.                                                            

(வெண்டுறை )
* குக்குடம் - சேவல்; கையில் இருக்கும் சேவல் கொடியைக் குறிக்கும்.