Search This Blog

Apr 24, 2016

இவள் என்ன ரதியோ?

இதுவரை எழுதிய கவிதைப்பதிப்புகளில் தெய்வீகம் , ஆன்மீகம், அங்கதம், சமூக விழிப்பு  என்று பல கோணங்களைத்  தொட்டிருந்தாலும் , இரண்டு பரிமாணங்கள் இன்னும் தொடப்படவில்லை!அவை-

1) காதல் 2) பெண்களின் அழகு.
இவைகளைப் பற்றி எழுதாவிட்டால் ஒருவன்  தமிழ்க் கவிஞன்  என்று கருதப்படவே  லாயக்கு இல்லாதவன் ! ( லாயக்கு என்பது தமிழ் வார்த்தையா ?)

காதலைப் பற்றி எழுத வயதும் மீறிவிட்டது, சுய அனுபவமும் குறைவு.

ஆனால் பெண்களின் அழகைப்  பற்றிய  சங்க கால, சம காலக் கவிதைகளைப் படித்தும் , கணக்கில்லாத சினிமாப் பாடல்களைக் கேட்டும் வளர்ந்ததால் , கற்பனை செய்து எழுதுவது அவ்வளவு கடினம் இல்லை.


இதோ ஒரு பாட்டு, உங்கள் பார்வைக்கு !

அன்புடன்
ரமேஷ்

இவள் என்ன   ரதியோ?

பெண்ணொருவள் ஓவியத்தை  இன்றிங்கு கண்டேன்
இணையிலா அவ்வழகைக் கண்டே வியந்தேன்!
முற்றும் அதை சொல்லுரைக்க முடியாது எனினும்
சற்றேனும் சொல்லியோர் கவிதை படிப்பேன்.


கருங்குழல்   கரையிட்ட    பிறை நுதல்   நெற்றி
மருங்கினிரு  மந்தார   இலையொத்த மடல்கள் 
மருளும் மான்   விழிபழிக்கும்   கருநீலக்   கண்கள் 
மருவற்ற  முகம் நடுவில்    விரிந்த நீள்   நாசி.


மற்றும் 

சிருங்கார   ரசம் சிந்தும்    சிந்தூர    இதழும்  
விருந்துண்ண    வாவென்று   வரவேற்கும் கனியோ?
மின்னலென இதழிடையில்   மின்னும்   ஒளிக்கீற்று
புன்னகையோ?   கோத்தெடுத்த   நல்முத்துச்   சரமோ ?


கன்னக்   கதுப்புமாங்  கனிதந்த    மொய்யோ ?
எண்ணரும்   எழில் முகம்,    இது என்ன    மெய்யோ?
ஒளிர்வெண்   ணிறம்கொண்ட   சங்கே   கழுத்தோ?
தளிர் மூங்கிலே   அவள்    தோளோ    நீள் கரமோ?


மங்காத    தங்கமென    ஒளிர்ந்திடும்   அங்கை
தெங்கினிள    நுங்குகளோ   மங்கையவள்    அங்கம் ?
மிளிர்மேகலை  அணிந்த   இடையோ   அது கொடியோ?
இடையதனின்   எடைதாங்கி  நிற்கும்பொற்  குடமோ?


நெடுதுயர்ந்த    கால்களும்    செவ்வாழைத்   தண்டோ?
சிலம்பணிந்த.  பொற்பாதம்  நிலம் பூத்த    மலரோ ?
அங்கயற்  கண்ணியள்   திங்களின்   தங்கை?
எங்கும் நான்   இதுவரை    காணாத   நங்கை!


மதனையும்    மயக்கிடும்    இவள் என்ன   ரதியோ?
நிதம்எண்ணி   ஏங்குதல்    ஆடவர்   விதியோ?

8 comments:

  1. So romantic....Ramesh turning the clock backwards.....keep it up!

    ReplyDelete
  2. So romantic....Ramesh turning the clock backwards.....keep it up!

    ReplyDelete
  3. மங்கையின் அங்கத்தை அசிங்கபடுத்தாமல் மறைமுகமாக நுங்குதனை மட்டும் ஒப்பிட்டு நாசூக்காக பாலியலை தழுவினது மெச்சத்தக்கது !

    ReplyDelete
  4. சங்ககால பெண்களின் அழகு வர்ணனை. கவிதை நயம் நன்று . அனால் இப்பொழுது எங்கு கண்டாய் வர்ணனைக்கு பொருந்தும் இவ்வழகிய பெண்ணை

    ReplyDelete
  5. இன்றும் உள்ளனர் அத்தகைய பெண்கள்.அல்லது இல்லாததால் தான் கற்பனைப் பெருக்கெடுத்து ஒரு ரதியைப் படக்கிறோமோ என்னவோ. Ts Venkataraman சொல்வது போல் நசூக்கான வர்ணனை மெச்சத் தக்கது. மங்கையின் அங்கத்தை வெளிப்படையாக சொல்வது இன்று ஏற்புடையதாக இல்லை அது காமப்பொருளாகப் பார்க்கப் படுவதால். அன்னாளில் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள் அதனை ஒரு அவயவமாகவே கண்டதால். இது பெரியாழ்வர் திருமொழி, பெருமாள் திருமொழி, நச்சியார் திருமொழி படித்தவர்களுக்கு நன்கு தெரியும். கண்ணதாசன் பெண்ணின் பருவ மாற்றத்தை அருமையாக எழுதியுள்ளார் ஒரு பாடலில் "மூன்றாம் பிறையில் பார்த்தது பூரண நிலவாய் ஆனது, பிள்ளைத் தமிழில் பாடியது இன்று கன்னிதமிழில் பாடுது" என்று கதானாயகன் குழந்தைப் பருவத்தில் பார்த்த பெண்ணை வளர்ந்த மங்கையாக பார்க்கும்போது. (படம் செல்வமகள் என்று நினைக்கிறேன்)

    ReplyDelete
  6. Ramesh,you probably wrote this poem decades back.This definitely feels like a poem written out immediately after a blissful evening or late evening.
    S.D.Sankarlingam

    ReplyDelete
  7. Ramesh,you probably wrote this poem decades back.This definitely feels like a poem written out immediately after a blissful evening or late evening.
    S.D.Sankarlingam

    ReplyDelete