Search This Blog

Mar 28, 2020

வேண்டா விருந்தினர்கள் - கொரானா கவிதை -6


வேண்டா விருந்தினர்கள் - கொரானா கவிதை -6

ஒரு காலத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர்களின் வருகையை குடும்பம் முழுவதும்  எதிர்பாத்திருக்கும் !

அந்தக் காலம் போய் , இன்று அவர்கள் வராமல் இருத்தலே நல்லது என்று எண்ணும்  நேரம்!

இது பற்றி ஒரு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் (கனித்தோட்டம் )



வரானா வெளிநாட்டு சொந்தம்  எனக்காத்(து)
இராமல் அவனிந்த நாட்டின் அருகின்   
வராமல் இருந்தால் நலமென்று ஆச்சு
கொரானா கிருமியால் இன்று .


                                                                                                              (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

Mar 26, 2020

கொரானா பாடல் - 5

கொரானாக்  காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசு முழு அடைப்பை அறிவித்த அடுத்தநாளே, கடைகளில் கூட்டம் அலைமோதியது --

வேண்டியது, வேண்டாதது என்று பாராமல் எல்லாப் பொருள்களையும்  வாங்கி வைத்துக்கொள்வதற்காக!

எங்கே போயிற்று நம் சமூகப் பொறுப்பு?

இது பற்றி--

அன்புடன்

ரமேஷ் (கனித்தோட்டம் )

கொரானா பாடல் - 5

கழிந்தது ஓர்நாள் இன்று,  
-----கொரானா காய்ச்சலை  முற்றும்
அழித்திட நாமே அளித்த  
-----இருபத் தோர்நாள் கெடுவில்.

சேதிகள் பலவும் பரவும்,
-----பல்தளப் பதிவுகள் மூலம்.  
ஏததில் உண்மையென் றறியோம் 
-----பீதிகள் அடைதல் தவிர்ப்போம் 

தடையினை மீறி வீட்டின் 
-----வட்டம்  விட்டுச் சென்று 
கடைகளில் முட்டி மோதிப்  
-----பொருள் வாங்கிக் குவித்தல் ஏனோ ?

தேவையை மீறிப் பொருள்கள் 
-----வாங்கி வைப்பதைத்  தவிர்ப்பீர் 
நீவிர் இந்நாளில் செய்யும் 
-----சேவையில் சிறந்தது இதுவே!

அறுசுவை உணவுகள் தினமும் 
-----அடைவது குறைந்ததால் என்ன?
நொறுக்குத் தீனி வகையைத் 
-----நாள்சில தவிர்த்தால் என்ன?

மருந்தென உணவை எண்ணி 
-----உண்பதைச் சற்றே குறைத்து 
இருப்பதை வைத்து இன்னும் 
-----இருபது  நாட்கள் கழிப்போம் 

தெருவினில் உலவுதல் நீக்கி 
-----சமூகத் தழுவல் தவிர்ப்போம் 
வருவது நலமாய் நிகழ 
-----இறைவனை வேண்டி இருப்போம்!





Mar 24, 2020

இங்கினியும் நான் ஏன்?

இருண்ட எதிர்காலத்தை எண்ணி விடைதெரியாமால் வாட்டத்துடன் வெறித்த கண்களுடன் அமர்ந்திருக்கும் இந்த விவசாயின் புகைப்படத்தைப்  பார்த்து விளைந்த கவிதை இது.

அன்புடன் 

ரமேஷ்  (கனித்தோட்டம்)


இங்கினியும் நான் ஏன்?




கருக்காத மேகம் 
திறக்காத வானம் 
நீரற்ற  ஆறு
நிறையாத வாய்க்கால் 
சுரக்காத கேணி
வறண்டுள்ள வாவி 

----------இறக்காமல் நான்மட்டும் 
----------இங்கினியும் ஏன் ஏன் ?

விதைக்கா  நெல்மணிகள்
கொதியாத  உலைகள் 
வதைக்கின்ற வறுமையில் 
புதைந்துள்ள வாழ்வு 
துதிக்குமென் குரலை 
மதிக்காத இறைவன் 


----------இதுதானென் கதியெனின் 
----------இங்கினியும் நான் ஏன்? 

Mar 22, 2020

கொரானா கவிதை - 3

கொரானா கவிதை - 3

தீண்டாமை யைத்தவிர்  ஊரோடு வாழென்று
ஆண்டாண்டாய் கேட்டிருந்த  நீதிக்கு மாறாக 
தீண்டாதே  தள்ளிப்போ  ஊரை ஒதுக்கிடென
வேண்டுகிறோம்  மற்றோரை   இன்று !

                                                                                                                            (ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

ரமேஷ் (கனித்தோட்டம் )


Mar 17, 2020

வடை சுடும் பெண்

வடை சுடும் பெண் 

கீழே உள்ள வடை சுடும் பெண்ணின் படத்தைப் பார்த்து எழுதிய பாடல், இங்கு.
ஏன் அவளுக்கு இந்த வடை சுட்டு வாழும் வாழ்க்கை?
அதன் பின்னணி என்ன ? 
இந்தக் கேள்விகளுடன் எழுந்த பாடல் இது!

படம் தந்த "யாணர் " தமிழ்க் கவிதை தளத்திற்கு நன்றி  

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு;
சில மாதங்களுக்கு முன்னாள் இட்லி விற்கும் கண்ணாத்தா என்ற மூதாட்டியை பற்றி ஒரு பாடல்
எழுதினேன் . அதை இந்த இணைப்பில் காணலாம்.
இட்டலி என்றதும் நினைவுக்கு வருவது சென்னை ரத்னா  கபே இட்லி சாம்பார்.
அது பற்றிய பாடல் இங்கே :
https://kanithottam.blogspot.com/2019/11/blog-post_18.html

இட்லியையும், வடையையும் பற்றிக் கூறிவிட்டு,  பொங்கலை மட்டும் விட்டு விடுவதா?
இந்தப் பெண்களானாலும், கோவிலில் கிடைக்கும் ப்ரசாதத் பொங்கலுக்கு ஈடாகாது!
அது பற்றிய பாடல் இந்த இணைப்பில் :
https://kanithottam.blogspot.com/2020/01/1.html


















வயற்காட்டு வரப்பினிலே விறகடுப்பு  வெக்கையிலே
வியர்வை வழிகையிலும் அயராமல் பதறாமல்

சுயமாகத் தொழில் செய்து குடும்பத்தைக் காக்கின்ற
உயர்வான உத்தமியே உன்பின்னால் கதையென்ன?

உயிரென்று நீநினைத்த உன்கணவன் உனைவிட்டு
அயலாள்  ஒருத்தியோடு ஓடித்தான் போனானோ?

காலநேரம் பார்க்காமல் வேலைவெட்டி இல்லாமல்
கள்ளுக்கடையொன்றே கதியென்று கிடக்கானோ?

வயதான  பெற்றோரை  பெற்றெடுத்த பிள்ளைகளை
அயல்நாட்டில் வேலைசெய்து வாழவைக்க சென்றானோ?

உன்னுடைய பின்னணியில் உள்ளகதை எதுவெனினும் 
தன்மானம் காத்திடவே தனியாய்நீ உழைக்கின்றாய்.

வடைசுட்டு  வாழ்கின்ற உன்வாழ்வின் கேள்விக்கு
விடைவிரைவில் கிடைத்திடவே வேண்டுகிறேன் ஆண்டவனை.

Mar 16, 2020

இலையோர மழைத்துளி


இலையோர மழைத்துளி 

இலையின் நுனியில் ஊசலாடிக்கிருக்கும் இரவுநேர பனித்துளியின் இந்தப் புகைப்படத்தைப் 
பார்த்து எழுந்த ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 





இரவின் குளிரில் முளைத்த சிறுபூ ;  
இலையின் இதழோர எச்சில் ;- நிலையா 
உலகின் உருவொத்த வெண்பனிப்  பந்து;
நிலம்விழும் நேரமிது வாம் !

( இருவிகற்ப இன்னிசை வெண்பா ) 

Mar 13, 2020

கரோனா பாடல்- 2

கரோனா பாடல்-  2


உலகெங்கும் கரோனா கிருமியின் தாக்கம் தலைவிரித்து ஆடுகிறது. 
இதன் தாக்குதலிலிருந்து தப்பிக்க முக்கியமான இரண்டு யுக்திகள் -

1. கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்; மற்றவரோடு கையை 
குலுக்காதீர்கள்;கைகளால் முகத்தை தொடுவதை தவிருங்கள்.
2. மற்றவர்களின் இருமல், தும்மல் இவைகளின்போது வெளிவரும் கிருமிகளைத் தவிர்க்க , வாய், மூக்கு இவற்றை மறைக்கும் முகமூடியை அணியுங்கள் 

என்பதாகும்.

இவற்றை வற்புறுத்தும் கருத்தூது ஒரு வெண்பா.

அன்புடன் 
ரமேஷ் 


கொரானா கிருமிக் குழுமத்தின்  தாக்கம்
வராமல்  இருக்க வழியுண்டு  - ஆட்டக்கை *
நீட்டாம  லேயிருந்து மூடி முகமறைத்தால்
வாட்டாது  நோயென் றறி.


*ஆட்டக்கை= கையை ஆட்ட, கையை குலுக்க எனப் பொருள் கொள்க 


** மூடி முகமறைத்தால் =  முகமூடி (mask ) அணிந்தால்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)


கரோனா பாடல்- 1

கரோனா பாடல்-  1

சீனாவில் இருந்து பலவிதமான பொருள்கள் அடிமாட்டுவிலைக்கு இந்தியச் சந்தையிலும், உலகச் சந்தைகளிலும்  விற்கப்பட்டுவரும் இந்த நேரத்தில், அங்கிருந்து வரும்  இன்னொரு வேண்டாத ஏற்றுமதி இந்த கரோனா நோய்க்கிருமி!
முன்னதை வரவேற்றுப் பயனடைந்தோறும், பின்னதை ஏற்பதில்லை!

இரண்டும் இந்திய பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை!

இது பற்றி ஒரு வெண்பா .

அன்புடன்

ரமேஷ்


சீனாவில் செய்த மலிவுவிலைப் பண்டத்தை 
நீ-நான் எனமுந்தி  ஓடிப்போய் வாங்கியவர்
யூகானில் உற்பத்தி ஆன பொருள்*மட்டும்
ஆகாது என்கிறார் இன்று !

யூகானில் உற்பத்தி ஆன பொருள்= கரோனா நோய்க்கிருமி 

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

Mar 7, 2020

பிரதோஷப் பாடல் - 33

பிரதோஷப்  பாடல் - 33

என் முந்தைய பதிவுகளில் கூறியிருந்த படி, திருக்கருகாவூர் முல்லைவனநாதர் மூலவர் உருவம் கல்லால் ஆனதல்ல - புற்று மணலால் ஆனது. அதனால் , அந்த மூலவருக்கு பால், நீர் முதலிய திரவப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. புனுகுச் சாந்தைச் சாத்தி   மட்டும் அபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு செய்து வேண்டிக்கொள்பவர்களின் சரும நோய் அகலும் என்பது ஐதீகம்
இந்தக் கோவிலை கட்டிய கிள்ளிவளவனும் அவனைப் பிடித்திருந்த சரும நோய் முற்றும் விலகப் பெற்றான் என்பது வரலாறு.
இந்தப் பிரதோஷ தினத்தன்று இந்தத் தல வரலாறைப் பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ்

தோல் மருத்துவர் முல்லைவன நாதர்  

ஈசனார் உறையும் முல்லைத் 
-----திருத்தலக் கோயில் சென்று 
பூசனை பலவும் செய்து 
-----பக்தியுடன் அவனைத் துதித்து 
வாசனைப் புனுகுச் சட்டம் 
-----பூசியபி ஷேகம் செய்தால் 
மாசுற்ற தோற்குறை நீங்கி 
-----தேசுற்றுப் பொலியும் தேகம் .

                                                                                     (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

Mar 4, 2020

காத்திருப்பு


யாணர் என்ற கவிதைத் தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்திற்கு ஏற்ப நான் எழுதி அந்தத்  தளத்தில் பதித்த ஒரு பாடல்!
அன்புடன் 
ரமேஷ் 

காத்திருப்பு


ஒருகை நீட்டி சிறிதே  திறந்து 
ஒருக் களித்த கதவின்  வழியே
ஒருகரு  விழியால் வரும்வழி நோக்கி
சிறிதாய் ஏக்கம் அதனுள் தேக்கி
ஒருபா திமுகம் மட்டும் காட்டி
தன்மறு  பாதித்  தலைவனின் வருகை
எதிர்பார்த் திருக்கும் ஏந்திழை இவளே!



Mar 2, 2020

குறுந்தொகை - 279

குறுந்தொகை - 279

இந்தக்கால  இளம் பெண் ஒருத்தியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவளது பெற்றோர் 
வெளியே  சென்றிருக்கிறார்கள்,
,அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள்.
அப்போது அவள் தன்  தோழியை தொலைபேசியில் அழைத்து - 
" என் பெற்றோர் வீட்டில் இல்லை. திரும்பி வர நேரம் ஆகும். நீ வேகமாகப் போய்  என் காதலனை 
என் வீட்டுக்கு உடனே வரச்  சொல். வந்தால் நாங்கள் இருவரும் சற்று "ஜாலியாக" இருக்கலாம் " 
என்று கூறுகிறாள்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

'என்ன பெண் இவள்? காலம் கெட்டுப் போச்சு! என்ன இருந்தாலும் அந்த காலப் பெண்களுடைய 
அடக்கம் இந்தக் காலத்துப் பெண்களுக்கு இல்லவே இல்லை! " என்றுதானே?

"அந்தக் " காலப் பெண்கள் என்ன செய்தார்கள் என்று சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்போமா-
இந்த குறுந்தொகைப் பாடல் வழியே?

குறுந்தொகைப் பாடல் 279

சேயாறு சென்று, துனை பரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்று, மற்றில்ல,
வயச்சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல நிறப் பெருங்கடல் புக்கனன், யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள், இதனால்,
பனியிரும் பரப்பில் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே.

என்ன புரியவில்லையா?

இதன் பொருள் :

நெடுவழியில் சென்று சென்ற வேகத்தில் இந்தப் பொருத்தமான நேரம் பற்றி அவருக்கு யாராவது சொன்னால் நல்லது.

சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு மாறி வர உப்பங்கழனிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம்.

அந்தக் காலப் பெண்கள் நல்ல " விவரமானவர்கள்" தான்!

இதையே நான் ஒரு சிறு கவிதையாக இதோ தருகிறேன் - !ஒரு வெண்டுறை வடிவில் !

படகேறிச் சென்றுளான்   என்தந்தை  ;  தாயும் 
கடைவீதி சென்றாளே   தோழி - உடனே  
வரச்சொல்லென் காதலனை விரைந்து ; அவன்வரினே  
பெறலாம் இனிதாய் எனை!

இதே பாடல் ஒரு லிமெரிக் (limerick )* வடிவத்தில் :

என் பெற்றோர்கள்   போனார்   வெகுதூரம்  
அவங்க  திரும்பிவர ஆகும் ரொம்ப நேரம்  
என் காதலனை நானும் 
பார்த்துப் பேச வேணும் -  
அவன் வந்தாதான் அடங்கும் எந்தன்  தாகம் 

இந்தக் கருதோடு ஒரு சினிமாப்  பாடல் கூட இருப்பதாக நினைவு ! 
ஞாபகம் வரவில்லை!
யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு : இதற்கு முன்னே, "ஊதா கலர் ரிப்ப" னோடு   இணைந்த ஒரு நற்றிணைப்  பாடல் பற்றி
எழுதியிருந்த பதிவை இந்த இணைப்பில் பார்க்கலாம்!
https://kanithottam.blogspot.com/2016/12/blog-post.html

Update :
 இந்தப் பதிவைப் படித்த நண்பர் வரதராஜன் ,  இதே கருத்தோடு எழுப்பட்டிருந்த 
சினிமாப்  பாடலை நினைவு படுத்தினார் - " மம்மி டாடி வீட்டில் இல்லை " என்ற பாடல் .
இதைப் படித்தல் இந்தக் காலப் பெண்கள் ஒரு படி என்று தோன்றுகிறது!
இதோ அந்தப் பாடல் :
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்... கேளேண்டா மாமூ... இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
டாடி மம்மி... டாடி மம்மி...
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா