என் கல்லூரி நண்பர் வரதராஜன் எனக்கு அனுப்பிய ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழி பெயர்ப்பு இந்தக் கவிதை.
இந்தக் கவிதை பஞ்சாபிக் கவிஞர் அம்ரிதா ப்ரீதம் அவர்களால் இயற்றப்பட்டது என்று கூறப்பட்டாலும், அது வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்று கூறுவோரும் உண்டு.
எது எப்படியானாலும் என் மனதை வெகுவாகத் தொட்ட கவிதை இது,
நீங்களும் அவ்வாறே உணருவீர்கள் என்ற நினைப்புடன்
அன்புடன்
ரமேஷ்
பி.கு : ஆங்கிலக் கவிதையும் இணைக்கப்பட்டிருக்கிறது
P>S : This is a translation of a poem by Amritha Pritam, the famous Punjabi poet. The poem struck a chord in my heart. Hope it does the same thing for you too! The English version also is given.
என் உயில் - (அம்ரிதா ப்ரீதம்)
நிறையுடல் நலமும் குறையிலா மனமும்
கொண்டின்று நானே வரையும் எந்தன்
இறுதிச் சாசனம் இதுவே யாகும்!
சிறைவிட் டென்னுயிர் பறந்த பின்னாலே
விரைந்து வந்தென் வீட்டின் அறைகளில்
திறந்த கதவின்பின் இறைந்து கிடக்கும்
பொருள்கள் அனைத்தையும் தேடி எடுங்கள்!
அடுக் களையிலும் படுக்கை அறையிலும்
முடங்கிக் கிடக்கும்நம் பெண்ணினத் தோரின்
உடைந்த கனவை மீட்டி எடுக்க
எந்தன் கனவை எடுத்துக் கொடுங்கள்!
வெளிநா டுகட்கே பிள்ளையை இழந்த
முதியோர் இல்லப் பெற்றோர் எல்லாம்
துளி மணித் துளிகள் களிப்புடன் இருக்கவென்
சிரிப்பின் சிதறலைத் தேடித் தெளிப்பீர்.
என்
மேசையின் மேலே கிடக்கும் வண்ணக்
குழம்புக் கலவையைக் கொஞ்சம் எடுத்து
தேசம் காக்கத் தன்னுயிர் ஈந்த
பாசக் கணவனின் உடலில் ஓடிய
செந்நிறக் குருதிக் கறை யைத் தனது
புடைவையின் கரையாய் அணிந்தவள் அவளின்
வெண்ணிறப் புடவையின் மீதே பூசி
வாழ்க்கையின் நிறத்தை மாற்றி விடுங்கள்!
என்
கண்ணில் வடியும் கண்ணீர்த் துளிகளை
ஒவ்வொன் றாக எண்ணி எடுத்து
பண்கள் பாடும் புலவர்க் களிப்பீர் ,
கவிதைப் பூவாய் அவையே மலரும்!
தன்
கற்பை விற்றும் தன் மகளுக்கு
கற்பித்திடுவாள் கல்வியை அவளே!
போற்றி யேஅவள் செயலை நானும்
பெற்றவென் பெருமை புகழ்க ளனைத்தையும்
மொத்த மாகவே அவளுக் களித்தேன்!
இனிவரும் நாட்களில் தனியொரு புரட்சியை
எடுத்து நடத்தும் திறனைப் பெறவென்
உணர்வில் ஊறிய சினங்களை எடுத்து
இளைஞர்தம் மனங்களில் ஏற்றுக இன்றே!
என்னுள் திளைக்கும் பெரும்பர வசத்தை
உலக சுகங்களை உதறித் தள்ளி
அனைத்தையும் துறந்து இறைவனைத் தேடி
அலையுமத் துறவிக் கெடுத்தளித் திடுக!
இவைகளை அனைத்தும் அவரவ ரிடத்தில்
அளித்தபின் மிச்சம் மீதி இருக்கும்
கவைக்கு உதவா கோபம் குரோதம்
பெரும் பேராசை சுயநலம் சூழ்ச்சி
பொய்கள் இவற்றை என்னுட லத்துடன்
சிதையில் ஏற்றி எரித்தழித் திடுக!
The English Version