Search This Blog

Aug 10, 2018

ரசவாதம்

நகர மறுக்கும் நிமிடங்களும் நாட்களும் எப்படி நிகழ்வதென்றே தெரியாமல் மாதங்களாகவும், வருஷங்களாகவும் மாறிவிடுகின்றனவே! இந்த ரசவாத விந்தையை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா? 

அன்புடன் 

ரமேஷ் 

ரசவாதம் 

காலையில் விழிக்கும்போதே கனத்த மனத்துடன் எழுகின்றேன்!

இன்னொரு நாளைக் கடக்க வேண்டுமே என்ற சோர்வோடும்,
எப்படிக் கடக்கப்போகிறேன் என்ற கலக்கத்தோடும் !

நேற்றுச் செய்யத் தவறிய கடமைகள்
கழுத்தில் கட்டிய கல்போல் சுமக்கின்றன.

செய்தாகவேண்டும் என்ற புரிதலுக்கும்
செய்யாதே எனத்தூண்டும்
மனத்தின் மறுதலிப்புக்கும்
இடையே நடக்கும் போராட்டமாக
நாள் ஊர்ந்து நகர்கிறது.

நிமிடங்களாக நீளத் தயங்கும்  நொடிகளையும் 
மணிகளாய் மாற  மறுக்கும் நிமிடங்களையும்  

எப்படியோ தாண்டி 

ஓரு  நாளைக் கடந்து 
மீண்டும் இரவில் போர்வைக்குள் புகுந்துகொள்கிறேன்.

ஒவ்வொருநாளும் இப்படி நகர மறுக்கின்றபோதும், 

நாட்கள் வாரங்களாகவும் 
வாரங்கள் மாதங்களாகவும் 
வியப்புக்குரிய வேகத்துடன் விரைகின்றனவே!

திடீரென்று ஒரு நாள்
நாள்காட்டியைப் பார்க்கையில் 
ஒரு வாரமோ, ஒரு மாதமோ கழிந்துவிட்டிருக்கிறதே!


இது என்ன ரசவாதம்?



1 comment:

  1. காலத்தை நதியோடு ஒப்பிடுவதன் காரணமே
    ஞாலத்தை மதியோடு நோக்கவேண்டும் என்பதற்கே
    நீர் இருக்கும்வரை வெள்ளமுண்டு வெறுமையுண்டு
    நீர் இருக்கும்வரை உள்ளலுண்டு தள்ளலுண்டு.

    ReplyDelete