Search This Blog

Apr 16, 2016

தமிழ் நாட்டில் தேர்தல் -

தமிழ் நாட்டில் தேர்தல் -

அரசியல் கட்சிகள் பற்றி பொதுவாகவே ஒருவருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்!
நாடு முழுவதும் இந்த நிலைமைதான், என்றாலும் தமிழ் நாட்டில் அரசியல் வாதிகளும், கட்சிகளும் , இதை ஒரு எட்டமுடியாத கீழ்த்தரமான நிலைக்குகே கொண்டுவந்து விட்டார்கள் என்றால் அது மிகையாகாது.
நிலைமை இப்படி இருக்கையில் தேர்தல் இப்போது நடக்கப் போகிறது.
பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒரு கலையாகவே ஆக்கி , "திருமங்கலம் பார்முலா " என்ற புகழைப் பெற்றதல்லவா நம் தமிழ் நாடு?
இந்த புரையோடிப்போன அரசியல் சூழ்நிலையில் நடக்கவிருக்கும் தேர்தல் பற்றி ஒரு ஆதங்கக்  கவிதை.
படித்து முடித்தவுடன் ' கொஞ்சம் ஓவர் " என்று நினைக்கலாம்.  இருந்தாலும் என் எரிச்சல் முழுவதையும் வெளியே கொண்டு வர இது தேவையாக இருந்தது.
என்னைப் போலவே பலரும் நினைப்பார்கள் என்று நம்புகிறேன்!.

அன்புடன்
ரமேஷ்

பி.கு: நான் பதீவு செய்திருப்பது, சுருக்கப்பட்ட வடிவம். முழுக் கவிதை சற்றுப் பெரியதாக இருந்ததால் , படிப்போரது பொறுமையைச்  சோதிக்கவேண்டாம் என்று சுருக்கி இருக்கிறேன். முழு கவிதையையும் பின்னொருநாளில் பகிர்ந்து கொள்கிறேன்! ( இந்தக்  கவிதைக்கு வரும் வரவேற்பைப் பொறுத்து!)

தேர்தல்

அஞ்சுஅஞ்சு    வருஷந்தோரும்.   அரங்கேறும் விந்தையே  !
நாட்டுமக்கள்   ஓட்டுரிமை    விலைபோகும்    சந்தையே  !
கட்டுக்கட்டாய்    கைமாறும்  கரன்சிநோட்டுக்    கத்தையே  !
கோடிமக்கள்     ஏமாறும்     மோடிமஸ்தான்    வித்தையே  !


கட்சிகள்

சாதிமத   பேதங்கள்.   இல்லையெனச்  சாற்றினும்
நாகர் கோயில்   போட்டியிட   நாடாரையே  நாடுவார்'
மதுரையிலே   போட்டியிட  தேவரையே   தேடுவார்
கடலூரில்   வன்னியர் !  மீதிப்பேர்   அன்னியர் !


இன்றுஒரு   கூட்டணி;   நாளைவேறு    கூட்டணி
இந்தநாளில்  அரசியலில்   ஈதெல்லாம்  சகஜமே !
கொள்கைகளும்   கொலையாகும்!   வாக்குவங்கி    விலைபோகும்!
எள்ளளவும்   இல்லையே ,  எவர்க்குமிதில்     வருத்தமே !


வேட்பாளர்கள் - தேர்தலுக்கு முன்னும் பின்னும்

சந்துபொந்து   தோறும்வந்து   வாய்கிழியப்  பேசுவார்
வந்துநின்று   வக்கணையாய்    வார்த்தைகளை   வீசுவார். 
முந்திசொன்ன    வாக்குறுதி    பற்றியாரும்   கேட்பறேல்
முறையாகப்    பேசாமல்    மெழுகிநழுகி    ஓடுவார் 


வீடுதோறும்   வாசல்ஏறி   வந்தனங்கள்  செய்யுவார்.
தேடிவந்து   கைகுலுக்கி   ஒட்டுவேட்டை ஆடுவார்
ஓட்டுப்பெட்டி   நிறைந்ததுமே  ஒதுங்கியோடிப்  பதுங்குவார்
நாட்டுமக்கள்   இவர்களையே  நம்புவதும்   எங்கனம் ?


வாக்காளர்கள்

பாலும்தேனும்   நாட்டிலே   பெருகிஓடும்   அதனுடன்
பலவிதமாய்     இலவசங்கள்   பெற்றிடுவீர்   என்றெலாம்
அவிழ்த்துவிடும்   கதைகள்கேட்டு  குழம்பிடுவார்   சிந்தையே 
யாரெவரையும்  தலையாட்டி   நம்பும்ஆட்டு   மந்தையே

.
கஞ்சிகுடித்து   கந்தலுடுத்தும்   குடிசைவாழும்   மக்களும்
கஞ்சிபோட்ட  உடையுடுத்தி   காரில்போகும்    மக்களும்
கொஞ்சம்கூட   அஞ்சிடாமல்   கட்சிசொல்லும்   பொய்களை
நம்பிஒட்டு   போடுறார் !  நாசமாகப்    போகிறார்



வேறு சிலரோ ,

ஓட்டுப்போட்டு   மையைத்தடவ   கையைக்காட்டும்  முன்னரே
நோட்டுவாங்கி   பையில்போட   கைகளையே  நீட்டுவார்.
காந்தியாரே   இங்குவந்து   வேண்டிஒட்டு   கேட்டினும்
காந்திபடத்தை     போட்டநோட்டு   காட்டுமுதலில்    என்பரே


வேட்பாளர் வெற்றி பெற்று சட்டசபை சென்றபின் . 

விதவிதமாய்   கையூட்டு    கூசாமல்.   வாங்குவார்!
சதவீதம்  பெற்றேயெக்   காரியமும்.   செய்யுவார்!
சுனாமிகள்  புயல்மழைக்கு   அரசின்   நிவாரணம்
பினாமியாய்    இவர்களுக்கு   பாதிபோயே    சேரணும் .


தேர்தலிலே   வெற்றிபெற்று   சட்டசபை.  சென்றபின்
சொத்துபத்தும்   உடமைகளும்   பத்துமடங்கு   பெருகுமே
எங்கிருக்குது   சுவிஸ்சர்லாண்டு      என்பதும்     தெரியாமலே
அங்குள்ள  வங்கிகளில்  தங்கமாய்ப்    பதுக்குவார்.


நாம் ஏங்குவது ---

மக்கள்நலனை   மட்டும்நாடும்    கட்சிஒன்று   தோன்றுமோ?
கக்கன்காந்தி   காமராஜர்   போன்றதலைவர்   கிடைப்பரோ? ?
ஓட்டைவிற்க   மக்கள்மறுக்கும்  காலமென்   றுதிக்குமோ
நாட்டைஆள   நல்லஆட்சி   இன்றுநாளை  நேருமோ?


2 comments:

  1. நன்றாய்த்தான் சொன்னீர்
    நம்மவரின் ஏக்கத்தினை
    என்றாலும இது நிச்சயம்
    ஆகிடுமே செவிடன் காதில் சங்காக
    இது

    ReplyDelete
  2. நம் தொகுதியில் யார் நிற்கிறார்கள் ,அவர்களின் தகுதிதான் என்ன என்று ஒன்றும் அறியாமல் இருக்கும் இந்த பாமரமக்களின்
    மத்தியில் நான் வோட்டே போடவில்லைஎன்றால் ஒன்றும் குடி முழுகி போகாது என்பது ஏன் கருத்து !

    ReplyDelete