Search This Blog

Apr 9, 2016

தாயும் கடவுளும்

சில நாட்களுக்கு முன்னே, எனக்கு வந்த ஒரு ஆங்கில முன் மொழிவு ( A parable by Dr.Wayne Dyer ) என்னை மிகவும் பாதித்தது.

கண்ணால் நாம் பார்ப்பது   மட்டுமே உண்மையா? அப்படியானால் 'கடவுள்" என்ற தத்துவத்தை எப்படி அறிவது?
தாயைப் பார்த்தறியாத . கருவில் கிடக்கும் இரண்டு குழந்தைகள் , ஒன்றோடொன்று பேசிக்கொள்வதாக அமைந்துள்ள இந்த உருவகக்க(வி)தையில் இந்தக் கேள்விக்கு விடை இருக்கிறதா?
படித்துப் பாருங்கள்!

அன்புடன்
ரமேஷ்

தாயும் கடவுளும்

கருவில் கிடக்கும்   ஒருஜோடி   
இரட்டைக்  குழந்தைகள்  ஓர்நாளில்  
கருப்பை விடுக்கும் முன்பாக  
ஒன்றோ டொன்று பேசினவே!.

குழந்தை 1
ஈரைந்து மாதம்  முடிந்த பின்னே
வெளியில் சென்று விழும் வேளை
இருளில் இருக்கு மிவ்வாழ்க்கை
விரைவில் முடிந்து ஒழிந்திடுமே !

குழந்தை 2
வெளியில் வந்து விழித்தபின்னே
வேறோர் வாழ்க்கை தொடங்கிடுமே--(கர்ப்பக்)
குழியில் இருக்கு   மிவ்வாழ்க்கை
பின்வரும்  வாழ்க்கையின் முன்னுரையே!

குழந்தை 1

இன்னோர் வாழ்க்கை இதன்பிறகா?
பைத்தியம் போலே உளறாதே !
எப்படி இருக்கும் அதுவென்று
இப்போதே நீ சொல்வாயோ ?

குழந்தை 2

கங்குல்   போலுமிவ்  விருள்விலகி
எங்கும் வெளிச்சம் நிறைந்திடலாம்.- நம்
அங்கங்கள் இன்னும் பெரிதாகி
அங்கும் இங்கும் உலவிடலாம். .
வாயால் உணவும் உண்டிடலாம்!
வேறு திறமைகள் வளர்த்திடலாம்.
இதுவரை யிலும்நாம் உணராத 
புதிதாய்ப் புலன்கள் புரிந்திடலாம்.

குழந்தை 1

நிற்பது நடப்பது இவையெல்லாம்
கற்பனையில் நீ காண்பதுவே!
தொப்புள் கொடியும் கழன்றபின்னே
எப்படி நம்முயிர் நிலைத்திருக்கும்?
கருவைத்  துறந்தும் உயிரிருந்தால்
ஒருவரும்  ஏனிங்கு  திரும்பவில்லை?
வெளியே   இருப்பது   காரிருளே!-நம்மை
வளைத்து விழுங்கும்  சூனியமே!

குழந்தை-2

கருப்பை   திறந்து  வெளிவந்து
கருப்பைத்  துறந்து   ஒளிகாண்போம்.!
தாயென்  ரொருவள்  இருக்கும்வரை
தீயவை நம்மை அணுகாதே!

குழந்தை-1

அம்மா என்று எவருமில்லை
சும்மா நீயும் சொல்லாதே!
அப்படி ஒருவர் உண்டென்றால்
இப்போ தவரும்  எங்குள்ளார்?

குழந்தை-2

நம்மைச் சுற்றி அவள் உள்ளாள் !
நாமும் அவளுக்  குள்ளுள்ளோம் !
அவளில்லாமல் நாம் இல்லை.
நாம் இருக்கும்  உலகுமில்லை.

குழந்தை-1

அம்மா எங்கே இருக்கின்றாள்?
கண்ணால் அவளை நான் காணேன்!
கண்ணால் காணா ஒன்றினையே
சும்மா எப்படி நம்புவது?

குழந்தை-2

மவுனம்  நம்மைச்  சூழ்ந்திருக்க
மனதை  நன்றாய் நிலைநிறுத்தி
செவியைத்  தீட்டிக்  கேட்பாயேல்
அவளது குரலை நீ கேட்பாய்!
சுவாசம்  நமக்குத்  தந்தவளை -விசு
வாசத்  தோடு  யாசித்தால்
பாசத்  துருவாம் தாயவளுன் 
உள்ளத்  துணர்வில்  உறைவாளே ! 



4 comments:

  1. Excellent especially the last stanza

    ReplyDelete
    Replies
    1. எழுந்த எண்ணங்களை உடனே பகிர்ந்துகொண்டதற்கும், பாராட்டுகளுக்கும் நன்றி. தொடர்ந்து பதிவைப் படித்து கருத்தகளைக் கூறுமாறு வேண்டுகிறேன்.

      Delete
  2. The concept of such dialogue between yet-to-be born is too familiar to me to forget !However this does not take away the credit of the lyrics !

    ReplyDelete
  3. The concept of such dialogue between yet-to-be born is too familiar to me to forget !However this does not take away the credit of the lyrics !

    ReplyDelete