ஆறுவாரம் ஆரவாரம் -(r1)
சென்ற ஆறுவாரங்கள் என்னுடைய மூன்று பேத்திகள் சென்னை வந்திருந்து
எங்களுடன் தங்கியிருந்த நாட்கள் ஒரு அட்டகாச அனுபவம். அதை உங்களுடன் இந்தப் பாடல் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
ஆறு வாரம் , ஆரவாரம்
என்மூன்று பேத்திகளும் தந்தை தாயாருடன்
சென்னைக்கு வந்திருந்து என்வீட்டில் தங்கிய
இன்பமான ஆறுவாரம் அட்டகாச அனுபவம்
என்மனதை என்றும்விட்டு அகலாத அற்புதம்.
கத்தல்கே ளிக்கைகும் மாளம்கொடி யேற்றம்
முத்தங்கள் கன்னங்களில் மாறிப் பரிமாற்றம்
முகமூடிக ளணிந்தே விலங்காய் உருமாற்றம்
சுகமான அணைப்புடன்சிறு கதைகளரங் கேற்றம்
ஆடச்சொல்லி அபிநயங்கள் பார்ப்பதுமே ஓர்சுகம்.
ஓடச்சொல்லி பின்தொடர்ந்து பிடிப்பதுமே ஓர்சுகம்
தேடச்சொல்லி ஒளிந்துவிளை யாடுவதும் ஒருசுகம்
கட்டிப்பிடுத்து கையில்தூக்கி மார்பணைத்தல் ஒருசுகம்
குட்டிக்காலால் எட்டிநம்மை உதைப்பதுமே ஓர்சுகம்.
கரைகின்ற காகம்கானம் பாடுகின்ற குயிலுடன்
விரைகின்ற குதிரைமற்றும் முட்டுகின்ற மாடுகள்
குரைக்கின்ற நாய்கள்மற்றும் மியாய்மியாய் பூனைகள்
உருமிகின்ற சிங்கம்புலி போலக்குரல் எழுப்பியே
பரிணாம வளர்ச்சியில் பலபடிகள் பின்புபோய்
பரிமாணம் புதிதாகப் பார்த்ததுமே ஓர் சுகம்.
உச்சிமுகர்ந்து உடலணைத்து கொஞ்சுதலும் ஒருசுகம்
பச்சரிசிப் பல்வரிசை மிளிரும் புன்னகைசுகம்.
இச்சகத்தில் இச்சுகங்கள் என்றுமீண்டும் கிடைக்குமோ
அச்சமொன்று மனதிலே விச்வரூப மெடுக்குதே.
ஆறுவார ஆரவாரம் நேற்றுமுடிந்து போனதே!
வேறுவேறு திசைகள்நோக்கி பறவைகள் பறந்ததே!
வெறுமைபரவி வீடும்மனமும் வெறிச்சென் றிருக்குதே!
மறுபடியும் இந்தநாளின் வருகைநோக்கி நிற்கிறேன்.
No comments:
Post a Comment