ஒத்தைச் செருப்பு - 2
காலையில் நடந்து செல்கையில் கண்டேன்
சாலையில் கிடந்ததோர் ஒற்றைச் செருப்பை .
ஜோடி யாகவே வாழ்ந்த செருப்புகள்
மோடி செய்துஏன் பிரிந்து போயின?
கடைசிப் பஸ்ஸை ஓடிப் பிடிக்கையில்
கழண்டு விழுந்து 'கால்விடப்' பட்டதோ?
காலைக் கடித்த காரணத் தாலே
கோபப் பட்டு எறிந்துவிட் டாரோ?
கள்ளுக் கடையில் நேற்றைய இரவு
"புல்லாய்த்"* தண்ணீர் போட்டு விட்டு (* full-ஆய்)
தள்ளாடித் தடு மாறி நடந்த
குடிமகன் விடுத்த காலணியோ இது?
ஒரு காலணியை இழந்த வருக்கு
மற்றொன் றால்உறும் பயனும் உண்டோ?
தெருமுனை மட்டும் நடந்து பார்த்தால்
அந்தச் செருப்பும் அங்கே கிடைக்குமோ?
No comments:
Post a Comment