நேற்று (4-5-2017) கெம்பிலாஸ்டின் பொன்விழாக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கூடப் பணிசெய்த பலரையும் சந்தித்து அளவளாவவும் , நிறுவனர்களைச் சந்த்தித்து வாழ்த்துக்கூறவும் முடிந்தது. அந்த நிகழ்வின் முடிவில் எனது கவிதைப் பதிவைப் படித்து ரசிக்கும் நண்பர்கள் ராம்குமார் சங்கரும், கிருஷ்ணமூர்த்தியும் , இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று கேட்டதின் விளைவே இந்தப் பதிவு.
நிகழ்சியைப் பற்றியல்லாமல் , "நிகழ்ச்சியின் நாயகன் " கெம்பிளாஸ்ட் பற்றி ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
பூவிரித்த மலர்ச்சோலை மகரந்த மணம்பரப்பும்
காவிரிக் கரை ஓரத்தில்
பீவிசி பிசின்செய்யும் தொழிற்சாலை நம்நாட்டின்
தேவைஎனக் கண்டறிந்து
மேவி*யதை மேட்டூரில் அயிம்பத்து ஆண்டுகளாய்
பாவித்து வரும் மாட்சியை
நாவிரித்து நவிலவே முடியுமட்டும் முனைகின்றேன்
பாவொன்றை நான் புனைந்து.
நாராயணர் அன்று வித்திட்டு வேர்கொண்ட
ஆறா யிரம்கொள் ளளவு
நூறுபல நூறாகப் பல்கிப் பெரியதோர்
விருட்சமாய் வளர்ந்த தின்று .
பசைவகைப் பீவிசி** பிசின்செய் திறத்திலே
இசைஎவரும் இல்லை இவர்க்கு.
புகைமணல்மம்@, எரிகாரம்@ , க்லோரோ மீதேனென்று
வகைவகை வேதியல் களை
தகவோடு செய்வதில் நிகரில்லை இவர்க்கென்று
மிகையில்லை என்றுரைத்தால்.#
திருமறைக் காட்டினில் , உப்பனார் ஓரத்தில்
பிரவிடையான் ஆற்றின் கரையில்
திரைகடல் கடந்தோடி நைல்நதியின் நிலப்பரப்பில்
துறைமுகம் சைடின்*** அருகில்
வெவ்வேறு இடங்களில் நுண்தொழில் நுட்பமிகு
செய்கூடம் பலவும் நிறுவி
சங்கரரும் அவர்குழுவும் சாதித்த தையெந்த
கிங்கரனும் மிஞ்சல் அரிதாம்!
பொன்னைவிட , அளவிலே பெரிதென்னும் புகழைவிட
நன்மதிப்பும் நற்பெயருமே
என்றுமே பெரிதென்று ஏறு நடைபோட்டு
பொன்விழா இன்று காணும்
நிறுவனம் கெம்பிளாஸ்ட் வைரவிழாக் காண
இறையவன் அருள் தருகவே!
* மேவி = இருக்கச் செய்து, நிறுவி
** பசைவகைப் பீவிசி= paste resin .
@ புகை மணல்மம்=fumed silica , எரிகாரம்=caustic soda
*** துறைமுகம் சைட் = port
# "என்றுரைத்தால் மிகையில்லை" என்று படித்தறிக
No comments:
Post a Comment