இந்திய சுதந்திர தினம்
தேசிய கீதம் திரையரங்குகளில் இசைக்கப்பட்ட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் சொன்னது சரியா?
அப்படி கீதம் இசைக்கப்படும்போது ,எல்லோரும் எழுந்து நிற்கவேண்டும் என்ற நியதி சரிதானா, அல்லது அதை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விட வேண்டுமா ?
" வந்தே மாதரம் " பாடலைப் பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் சொன்னது சரியா?
"வந்த மாதரம்" ஒரு தேசப்பற்றை தூண்டும் கீதமா அல்லது இது ஒரு "ஹிந்துத்துவ "(?) பாடலா?
இப்படி பல "குழந்தைத்தனமான" சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நாளன்று , சர்ச்சைகளை பெரியவர்களுக்குள்ளே மட்டும் வைத்துக்கொண்டு, நம் குழந்தைகளுக்கு இந்த சுதந்திர தினத்தன்று நம் நாட்டின் பெருமையைச் சொல்லலாமே!
குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஒரு பாடல்.
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
அன்புடன்
ரமேஷ்
இந்தியா -
பாரத நாடுநம் தாய்நாடு
பாரில் சிறந்த பொன்னாடு
வேறெங்கும் இதற் கி(ல்)லையீடு .
வாழ்க பாரதம் எனப்பாடு .
வட திசையினிலே இமயமலை
தென்திசையி லிந்து சமுத்திரமே
இடவலம் இரண்டு பக்கங்களில்
வங்க அரபிக் கடல்களுண்டு.
கங்கை யமுனை பிரம்மபுத்ரா
கோதா வரியுடன் காவேரி
பொங்கி ஓடுமிம் மாநதிகள்
பாரத நாட்டை செழிப்பாக்கும்
பரதன் இந்நாட்டை ஆண்டதனால்
பாரதம் என்ற பெயரிதற்கு
சிந்து சமவெளியில் தொடங்கியதால்
இந்தியா என்பதும் இதன்பேராம் .
இந்து புத்த ஜைனமதம்
உலகுக் களித்தது நம்நாடே
விஞ்ஞா னத்தை மிஞ்சுகின்ற
மெய்ஞ்ஞா னத்தின் உறைவிடமாம்.
இருபத் தொன்பது மாநிலங்கள்
இருபத் திரண்டு தாய்மொழிகள்
இருக்குது இந்திய நாட்டினிலே .
இருந்தும் இணைந்தே இருக்கின்றோம்.
காந்தி நேரு நேதாஜி
கங்கா தரதிலக் வ.வூ.சி
பாரதி குமரன் ராஜாஜி
போன்ற தேசியத் தலைவர்கள்
சேர்ந்து பலநாள் போரிட்டு
வெளிநாட் டினரை விரட்டியதால்
இன்று நம்நாடோர் குடியரசு.
நாமெல் லோரும் அதன்மன்னர்.
வீரம் உண்மை செழுமைஎனும்
மூன்று கொள்கைகளைக் குறிக்கின்ற-
மூவர்ணக் கொடி ஏற்றிடுவோம்.
தேசிய கீதம் பாடிடுவோம்.
இந்த சுதந்திரத் திருநாளை
ஒன்று கூடிக்கொண் டாடிடுவோம்
வந்தே மாதரம் என்றிடுவோம்
பாரதத் தாயை பணிந்திடுவோம்
No comments:
Post a Comment