Search This Blog

Nov 14, 2017

பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?- பகுதி 1- A song for the Children's Day.

இன்று குழந்தைகள் தினம்!
ஜவாஹர்லால் நேரு பிறந்த இந்த நவம்பர் 14-ம் தேதி, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தன்று குழந்தைகளுக்காக ஒரு பாடல்.
பிள்ளையாரும் முருகனும், மாம்பழத்துக்குப் போட்டியிட்ட கதை.
இதை,நீளம் கருதி, இரண்டு பகுதிகளாக வெளியிடப்போகிறேன்.
முதல் பகுதி இன்று.

அன்புடன் 
ரமேஷ் 

acknowledgements : The pictures used in this blog have been taken from various sites in the internet domains. I thankfully acknowledge them.




பிள்ளையாரும் முருகனும் - மாம்பழம் கிடைத்தது யாருக்கு ?-  பகுதி 1

சிவபெரு மானும் பார்வதியும்
-----கைலா யத்தில் குடியிருந்தார்.
அவர்க  ளுடைய  இருமகன்கள்
------பிள்ளை யாரும் முருகனுமே.
                                                                               
இரன்டு பேரில் இளையவற்கு
------முருகன் என்னும் பெயரிட்டார். .           
முருகனுக்கு முன் பிறந்த
------பிள்ளை  பிள்ளை யாராமே.

பிள்ளை யாருக்கு ஆனைமுகம்.
-----முருக னுக்கோ ஆறுமுகம்.
கொள்ளை அழகு இருவருமே.
-----குறும்பு செய்வதில் குறைவில்லை.





நல்ல பிள்ளைகள் இருவருமே
-----நன்றாய் நாளும் விளையாட
செல்லப்   பிராணி கள்இரண்டை
-----வாகன மாகப் பெற்றாராம்.







முருகனுக்கு மயில் பறவை
-----மூத்த வனுக்கோ மூஞ்சூறு
இருவரும் அவைமேல் ஏறிக்கொண்டு
-----ஓடி ஆடி மகிழ்வாராம்.







ஒருநாள் சிவனின் வீட்டிற்கு
-----நாரத முனிவர் வந்தாராம்.
பெரிய மாம்பழம் ஒன்றினையே
-----சிவபெரு மானிடம் தந்தாராம்.

"இந்தப் பழமொரு சிறந்த பழம்
-----மந்திர சக்திகள் உள்ளபழம்
இந்தப் பழத்தை உண்ணுபவர்
-----எல்லா நலமும் பெறுவாரே.

ஆனால்   ஒருவர் மட்டும்தான்
-----இந்தப் பழத்தை சாப்பிடலாம்.
இருவர் இதனை சாப்பிட்டால்
-----மந்திர சக்திகள் மறைந்துவிடும்."

என்று நாரதர் சொன்னவுடன்
-----இரண்டு பிள்ளையும் ஓடிவந்து
"எனக்கு வேண்டும் இந்தப்பழம்"
 -----என்றே தந்தையைக் கேட்டார்கள்.

முதலில் பிறந்த மூத்தவன்நான்
-----அதனால் எனக்கே தருகவென
மோதகப் பிரியன் யானைமுகன்
-----வாதம் செய்து சாதித்தான் .

சின்னப் பிள்ளை செல்லம் நான்.
-----அதனால் மந்திர மாம்பழத்தை
என்னிட மேதர வேண்டுமென்று
-----ஆறுமுகத்தான்  அடம் பிடித்தான்.




குழந்தைகளே,
இந்தப் போட்டியை சிவனும் பார்வதியும் எப்படி சமாளித்தார்கள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
























































2 comments:

  1. Very good poem for children to read and understand.

    ReplyDelete
  2. மிகமிக எளிய முறையில் கூறப்பட்டிருப்பது அருமை. நாரதரை குறிப்பிடுகையில் பொதுவாக அவரை பற்றி நையாண்டியுடன் கூறுவதை தவிர்த்து விவரித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. நீ இதுவரை பாலருக்கு வரைந்துள்ள கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டால் ........ புத்தகம் படிக்கும் பழக்கமும் வளர ஏதுவாகும் .

    ReplyDelete