Search This Blog

Oct 28, 2017

தீபாவளியும் சுற்றுச்சூழலும்

தீபாவளியும் சுற்றுச்சூழலும் 

இது குழந்தைகளுக்காக ( சிறுவர்-சிறுமியர்களுக்காக?) நான் எழுதிய தீபாவளிப்  பாட்டு. 
அளவோடு வெடிகள் வெடித்து சுற்றுப்புறச்ச சூழ்நிலையைக் காப்பாற்ற அவர்களுக்கு ஒரு அறிவுறுத்தல்!
சற்று நாள் கழித்து வந்தாலும் நலன் பயக்கும் என்று நம்புகிறேன்.

அன்புடன் 
ரமேஷ் 

தீபாவளியும் சுற்றுச்சூழலும் 




விடியற்காலை குளித்தபின்பு  கடவுளை வணங்கியே
மடித்துவைத்த புதியஆடை   உடுத்தியதன் பின்னரே
பிடித்தஇனிப்பு காரவகை பட்சணங்கள் பலவிதம்
கடித்துநொறுக்கி மூக்குமுட்ட உண்டுவிட்ட பின்னரே

சாக்குமூட்டை நிறையவாங்கி  வைத்தவெடிகள் வெடிக்கையில்

கேக்கும்சத்தம் காற்றில்வந்து  காதில்முட்டி முழங்குது.
ராக்கட்டுகள் வானம்முட்டும் தூரம்மட்டும் பறக்குது
தீயைக்கக்கும்  வாணவெடிகள் வர்ணஜாலம் புரியுது.

வெடித்துமுடித்து ஓய்ந்தபின்பு  தெருவில்சென்று நிற்கையில்
வெடிக்கும்போது   வெளியில்வந்த புகையும்எங்கும் சூழ்ந்ததால்
கண்எரிந்து  கண்ணீரும்   பொலபொலவெனக்  கொட்டுது.
கொடியநெடியும்   மூக்கில்ஏறி   மூச்சுமுட்டிப் போகுது

காற்றைஉள் ளிழுக்கும்போது  கலந்துமிதக்கும் துகள்கள்நம்

காற்றுப்பையுள்  போய்நுழைந்து   நுண்துளைகளை அடைத்திடும்.
சுற்றுப்புறச் சூழ்நிலையும் சீர்குலைந்து போவதால்
மற்றும்வேறு  பின்விளைவுகள் மேலும்மேலும் நிகழுமே .

பட்சணங்கள் தின்னும்போது மகிழ்ச்சியாக  இருப்பினும்
உட்கொண்டது   அதிகமென்றால்  வயிற்றுவலியும் வந்திடும்.
பட்டாசுகள்   வெடிக்கும்போது பரவசமாய்  இருப்பினும்
கட்டுக்குள்   இல்லையெனில் கொடியவிளைவு தொடர்ந்திடும்..

ஆதலினால் குழந்தைகளே தீபாவளி நாளிலே

மிதமான அளவோடு வெடிகளை வெடியுங்கள்
சுற்றுப்புறச்  சூழலுக்கு சேதங்களைக்  குறையுங்கள்
கற்றஇந்தப் பாடத்தையே மற்றவர்க்கும் கூறுங்கள்!











No comments:

Post a Comment