Search This Blog

Oct 16, 2017

காளிங்க நர்த்தனம்-

 காளிங்க நர்த்தனம் -

தீபாவளி நெருங்கும்போது, நரகாசுகரை அழித்து தீபாவளிக்குக்  காரணமான கண்ணனைப் பற்றி ஒரு பாட்டு.
இது குழந்தைகளுக்கான கண்ணன் பாட்டு.
காளிங்க நர்த்தனத்தைப் பற்றியது.
குழந்தைகளும் ( நீங்களும்) ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்!
முடிந்த அளவு சுலபமான , சிறுவர்களுக்குப் புரியக்கூடிய, வார்த்தைகளையே உபயோகித்திருக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துகளையும் , திருத்தங்களையும் அறிய ஆவல். பகிர்ந்துகொள்ளவும்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்


அன்புடன்
ரமேஷ்









ஆயர்பாடி கோகுலத்தில் யமுனையாற்றின் கரையிலே
மாயக்கண்ணன் நண்பருடன் ஓடிவிளை யாடுறான்.
நதியிலோடும்  நீரிலிறங்கி  நீந்திவிளை யாடுறார்
குதித்துகுதித்து கூத்தடித்து கும்மாளந்தான் போடுறார்.

ஆத்தங்கரை  புல்வெளியில் மாட்டுக்கூட்டம்  மேயுது
மாடுகளின் மடியிலிருந்து பால்சுரந்து வழியுது
பூத்துக்குலுங்கும்  நந்தவனச் செடியின்  பூக்கள்வாசமே
காற்றில்மிதந்து கமகமவென மூக்கினிலே ஏறுது

சின்னக்கண்ணன் குழலெடுத்து கானங்களை இசைக்கிறான்
கண்ணைமூடி அனைவருமே தலையைஆட்டி ரசிக்கிறார்.
வண்ணப்பூக்கள் தொடுத்துமாலை கோபியர்கள் கட்டியே
கண்ணனுக்குப் போட்டுஅவன் அழகினையே ரசிக்கிறார்.

கடலைநோக்கி அமைதியாக யமுனைநதி ஓடுது
திடீரென்று டமாலென்ற பெரியசத்தம் கேட்குது
அடியில்நதியில் படுத்துக்கிடந்த பத்துத்தலை பாம்பொன்று
படமெடுத்து தலையைத்தூக்கி புஸ்புஸ்என்று சீறுது

வாலைச்சுழற்றி  நீரிலடித்து அட்டகாசம் செய்யுது.
அலைகள்போல நீரெழும்பி  கரைபுரண்டு ஓடுது.
நாலுபுறமும் தலையைச்சுற்றி  நீளமான நாக்கையே
நீட்டிக்கொடிய விஷத்தினையே நாற்புறமும் கக்குது.

பதறிப்பயந்து போனமக்கள் கூட்டமங்கு  மிங்குமாய்
சிதறியோடி செய்வதென்ன வென்றுதிகைத்து நிற்கிறார்.
கதறியழுது ஓடிச்சென்று கண்ணன் காலில் விழுகிறார்.
உதவிசெய்வாய் உயிர்காப்பாய் என்றுகூறி அழுகிறார்.

கருணைகொண்ட கண்ணனும் கோகுலத்தைக் காக்கவே
விரைந்துநதியில் இறங்கியே பாம்புடன் போராடினான்
வெருண்டெழுந்து உருண்டகண்ணை திறந்துபார்த்த  நாகமும்
சுருண்டவாலால் கண்ணனை சுற்றிநெருக்கப்  பார்த்ததே

தந்திரமாய் அப்பிடியில்  தப்பிவிட்ட  கண்ணனோ
பந்துபோல்  குதித்துஅந்த பாம்பின் தலைமேல்  ஏறினான்.    .
தன்னிரண்டு கால்களால் ஓங்கிஓங்கி மிதித்தபின்
தந்தனத்தோம் என்றுஅதன்  தலைமேல்நடன மாடினான்.

தலைவலியைத் தாங்காத நாகம் போரில்  தோற்றது
தலைகள்பத்தும் குனிந்துவணங்கி தலைகனத்தை விடுத்தது
தலைவனொருவன்   அனைவருக்கும் கண்ணன்என்று ஏற்றது
வாலைச்சுருட்டி  வைத்துக்கொண்டு வந்தவழி சென்றது.

கரையிலிருந்த  கோகுலத்தார் கைகள்தட்டி மகிழ்ந்தனர்
கரங்கள்கூப்பி சிரங்கள்தாழ்த்தி கண்ணனையே வணங்கினர்
காளிங்கன் மேலேறி நடமாடிய கண்ணனை
ஆலிங்கனம் செய்தணைத்து பெற்றோரும் வாழ்த்தினர் .






























2 comments:

  1. Good episode for Children to understand and sing !
    I always admire your simple lyrics !

    ReplyDelete
  2. Glad you liked it.
    I hope many Children get to read / hear it.

    ReplyDelete