எந்தன் மகனே கோவிந்தா-----
இது தேர்தல் நேரம். இந்த வாரத்திறுதியில் தமிழகத்தில் தேர்தல்.
இந்தத் தருணத்தில், பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிப் பதித்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஓட்டுப் போடப் போகும் ஒரு தந்தை தன் மகனுக்கு தேர்தலைப் பற்றி சொல்லித் தருவதாக எழுதினேன்.
எவ்வளவு ஆண்டுகள் ஆனால் என்ன? நிலமை அதேதான்!
இதோ அந்தப் பாடல்.
அன்புடன்
ரமேஷ்
மகன்
அப்பா இந்தக் காலையிலே
---எங்கே நீயும் போகின்றாய்?
நானும் கூட வரலாமோ?
--- வீட்டில் பொழுதே போகலையே
தந்தை
எந்தன் மகனே கோவிந்தா, நான்
---ஓட்டுப் போடப் போகின்றேன்
வந்தால் நீயும் என்னுடனே
---இடைஞ்ச லாக இருந்திடுமே.
மகன்
இடைஞ்சல் எதுவும் செய்யாமல் நான்
---நல்ல பையனாய் இருக்கின்றேன்
முடியா தென்று சொல்லாதே !
---மீண்டும் கெஞ்சிக் கேட்கின்றேன்.
தந்தை
சரிதான், என்னுடன் நீயும் வா ;
---நாளை இந்நாட்டின் தலைவன் நீ ..
தேர்தல் பற்றி தெரிந்துகொள்ள
-----பாடம் உனக்கே சொல்வேன்நான்.
மகன்
தேர்தல் என்றால் என்னப்பா?
----புரியும் படியே சொல்நீயே!
தந்தை
சேரர், பாண்டியர் சோழரென
---மன்னர் இருந்தது அக்காலம்.
யாரும் மன்னர் ஆகிடலாம்
----இதுதான் குடியர சுக்காலம்.
நாமோர் பெரிய குடியரசு;
----நாட்டின் மன்னர் நாம்தானே!.
நம்மில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து
---தேர்தலில் மந்திரி ஆக்கிடுவோம்.
மகன்
மன்னர்கள் ஆட்சி செய்கையிலே
---கப்பம் கேட்பார் எனக்கேட்டேன் ;
மந்திரி ஒருவர் வந்தபின்னே
---அவர்க்கும் கப்பம் கட்டணுமோ ?
தந்தை
காரியம் நமக்கு நடக்குமுன்னே,
----கப்பம் நிச்சயம் கட்டணுமே..
இப்போ இதற்கு பெயர்மாற்றி
----லஞ்சம் என்றே வெச்சாச்சு.
மகன்
மன்னர் ஆட்சி மட்டும்தான்
---தலைமுறை தோறும் தொடருமென்பார்
மந்திரி இவர்கள் ஆட்சியுமே
---தலைமுறை ஆகத் தொடர்வதென்ன?
தந்தை
தந்தை தாத்தா முன்னோர்கள்
---ஊழல் செய்து குவித்தபணம்
இருக்கும் வரையில் தேர்தலிலே
---இவர்கள் தோற்க வழியில்லை.
மகன்
ஓட்டுப் போடும் இடத்தைநாம்
---சாவடி என்பது எதனாலே?
தந்தை
தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு
---வந்தபின் அடுத்த தேர்தல்வரை
ஓட்டுப் போட்ட மக்களையே
---"சாவ டிக்கிறார்" அதனாலே.
மகன்
எனக்கும் ஓட்டுப் போட்டிடவே
---ஆசை, அருமை அப்பாவே .
எப்போ நானும் போட்டிடலாம் ?
----பதிலைச் சொல்நீ இப்போதே
தந்தை
அவசரம் வேண்டாம், இதற்குள்ளே !
----அன்பு மகனே கோவிந்தா.
அகவை பதினெட் டெட்டிடுவாய் ,
-------சட்டம் இதுவே பொறுத்திடுவாய் .
மகன்
பதினெண் வயது வேண்டுவது
----நாட்டில் நிலவும் சட்டமென்றால்
எதனால் இந்த சட்டதிட்டம்?
----எனக்கதை நீயே சொல்வாயா?
தந்தை
ஓட்டுப் போடணும் என்றாலே
-----முழுதாய் முட்டாள் ஆகணுமாம்.
முழுதும் முட்டாள் ஆகிடவே
-----பதினெட் டாண்டுகள் பிடித்திடுமே!.
மகன்
ஆகா ! அடுத்த தேர்தலுக்குள்
-----பதினெண் வயதை எட்டிடிடுவேன்
முழுவதும் முட்டாள் ஆகிவிட்டு
-----ஒட்டு உரிமையைப் பெற்றிடுவேன்.
We decide every 5 years who will loot us for next 5 years, as per Gnani, the writer.
ReplyDeleteThanks for your comments, Annonymus.
Deleteசாவடி சாவ டிக்கிறார் அருமை. பல ஆண்டுகள் கழிந்தும் படிப்பறிவு உலக ஞானம் அதிகரித்தும் மக்கள் வோட்டளிப்பதில் முட்டாள்களாக சாதி வெறியர்களாக இருப்பது வருந்தத்தக்கது
ReplyDeleteஎன்று தெளியும் இம்முட்டாள்தனம்😥
பாராட்டுக்கு மிக்க நன்றி, சுந்தரேஷ்.
Deletewell said sir and hope all in our group all falls in the elite batch of f...
ReplyDeleteThanks, GRC
DeleteExcellent!
ReplyDeleteVery relevant
ReplyDeleteThanks, BV
Delete