Search This Blog

Feb 22, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 12, 13 & 14

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 12,  13 & 14

இந்தப் பதிவில் 12,13,14 செய்யுள்களைப் பதிவு செய்கிறேன். இவை சென்ற இரு பதிவுகளில் விளக்கிய 9,10,11 செய்யுள்களுக்கு இணையானவை. முந்தைய செய்யுள்கள் செயல், த்யானம் என்ற இருவகை வழிபாடுகளையும்  அவற்றின் இணைப்பையும்  விளக்கின. இந்த மூன்று செய்யுள்கள், அதை போன்று உருவ  வழிபாடு, அருவ  வழிபாடு ஆகிவற்றின் தன்மைகள், வேறுபாடுகள், இணைப்புகள்  ஆகிவற்றை விளக்குகின்றன.

அன்புடன் 

ரமேஷ் 






மொழிபெயர்ப்பு  : *

யார் அரூபமாய் கடவுளை  வழிபடுகிறார்களோ , அவர்கள் காரிருளில் மூழ்குகிறார்கள். உருவமாய் வழிபடுவோர் , அதனினும் கொடிய இருளில் உழல்கிறார்கள்.

 இது பற்றி எங்களுக்கு விளக்கிய மகான்கள் " உருவ வழிபாட்டால்  கிடைக்கும் பலன் ஒருவிதமானது ; அருவ வழிபாட்டால்  கிடைக்கும் பலன் வேறு விதமானது " என்று கூறினார்கள். 

அருவ  வழிபாடு, உருவ வழிபாடு இரண்டையும் சேர்த்து யார் அறிகிறானோ, அவன் உருவ வழிபாட்டால் மரணத்தைக் கடந்து, அருவ  வழிபாட்டால் இறைவா நிலையை அடைகிறான்.

Translation  : **

In dark night live those for whom the Lord
Is transcendent only.; in night darker still,
For whom he is immanent only.
But those for whom he is transcendent 
And immanent,  cross the sea of death 
With the immanent and enter into 
Immortality with the transcendent.
So we have heard from the wise.

விளக்கம் :*

தோற்றம் உள்ள நிலை , தோற்றம் இல்லாத நிலை, இரண்டிலும் இறைவனை வழிபடலாம். முதலாவது நிலை எளிதில் சாத்தியமானது. இரண்டாவது நிலை அவ்வளவு  சுலபமானது அல்ல; மிகுந்த உயரிய நிலையில் இருப்போருக்கே உரியது. தகுதியின்றி அம்முறையில் ஈடுபடுபவர், தங்களைத் தானே ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். 

எனவே, மன இயல்புக்கு ஏற்ப , ஒரு தெய்வத்தை வழிபட ஆரம்பித்து , ஆன்மீகத்தில் முன்னேறி, மரணத்துக்கு காரணமான வினைப்பயன்களில் இருந்து விடுபடுகிறோம். இதன் பிறகே, இறைவனை உருவமற்ற நிலையில் வழிபடுவதற்காக தகுதியைப் பெறுகிறோம். இந்தத் தகுதியுடன் , அருவ வழிபாட்டில் ஈடுபட்டு, இறைவா நிலையை அடைகிறோம். 


பாடல்:

இறைவனை உருவமாய்ப் பலர் தொழுவார்
          அருவமாய் அவனைப் பிறர் தொழுவார்
உருவாய்த்  தொழுதல் முதற்படியே
          அருவாய் உணர்தல் அதன்பின்னே

ஒன்றை விலக்கி வேறொன்றை
           மட்டும் செய்தால் பயனில்லை
என்றே உரைத்தனர் சான்றோரே !
           நன்றாய் அதனை உணர்ந்திடுவோம் .

உருவிலன், குணமிலன் என்றாலும்
           கருதி அவனை வணங்கிடவே
உருவம் ஒன்று உண்டானால்
           உதவிடும் என்று உணர்ந்ததனால்

சக்தி ,திருமால், சிவன் என்று
           பற்பல உருவம் படைத்துப்பின்
பக்தியை அவ்வவ் உருவின்பால்
            ஒருமுகப் படுத்தித் தொழுதனரே!

உருவம் பற்பல என்றாலும்
            உள்ளுறை உட்பொருள் ஒன்றென்றே
அறிந்து உணர்ந்த தன்பின்னே
            அருவமாய் அவனை அறிவாரே!

உருவமாய் அவனை வழிபட்டே
          மரணக்  கடலைக் கடந்திடுவார்.
அருவமாய்  அதன்பின் வழிபட்டே
          அமரத்துவத்தை அடைந்திடுவார்.

உருவ அருவ  வழிபாடு
          இரண்டும் வேறு வேறல்ல
முறையாய் ஒன்றன் பின்னொன்றாய்
          இணைத்தே இறைவன் அடிசேர்வோம்.


*- Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam


**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books

No comments:

Post a Comment