Search This Blog

Feb 4, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - -9&10

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் எண்கள்  -9&10

இந்தப் பதிவை நீங்கள் படிக்குமுன் சில குறிப்புகள் :

1. உபநிடதச் செய்யுள்கள் மிகவும் சுருக்கமானவை.  இவைகளை விளக்கும்போது , முக்கியமாக, தமிழ்ப்பாடல் வடிவில் எல்லோருக்கும் புரியும்படி எழுதும்போது , இந்த அளவு சுருக்க இயலாது என்பதால் , இரண்டு வரி செய்யுள்களின் தமிழ்ப் பாடல் வடிவம், பல வரிகளாக நீள்வதை (என்னால்)தவிர்க்க  முடியவில்லை. 
2. இந்த இருவரிச் செய்யுள்களில்  பொதிந்துள்ள உண்மைகளை , பலரும் பலவிதமாக ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள். அதனால், கீழே கூறப்பட்ட தமிழ்-ஆங்கில  மொழிபெயர்ப்புகளிலும் , பாடல் வடிவிலும் மேலாக நோக்குகையில் சில மாறுபாடுகள் தென்படலாம். ஆனால் ஆழ்ந்து  நோக்கினால் உட்பொருள் ஒன்றே!
3. இந்தப் பதிவிலிருந்து, நண்பர் T.S. வெங்கடராமன் ஆலோசனைப்படி, செய்யுள்களின் தேவநாகரி வடிவத்தையும் பதிந்திருக்கிறேன். இது சரியாக செய்யுள்களைப் படிப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 

9
     

மொழிபெயர்ப்பு   *
             யார் உயர்நோக்கமின்றி கர்மங்களை  மட்டும் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் அடர்ந்த இருளில் மூழ்குகிறார்கள்.
             யார் தகுதி பெறுமுன் , தியானத்தில் மட்டும் ஈடுபடுகிறார்களோ, அவர்கள் அதைவிட அதிகமான இருளில் மூழ்கித் துன்புறுகிறார்கள்.


10
மொழிபெயர்ப்பு   *
                    இது பற்றி எங்களுக்கு விளக்கிய மகான்கள் " தியானத்தினால் கிடைக்கும் பலன் ஒருவிதமானது ; செயல்களால் கிடைக்கும் பலன் வேறு விதமானது " என்று கூறினார்கள்.

English Translation **

In Dark night live those for whom
The world without alone is real ; 
In night Darker still , (live those)
For whom the world within alone is real. 
The first leads to a life of action, 
The second to a life of meditation

பாடல்

வேதனை தருமிவ் வாழ்க்கைச்சுழல்  
          விடுதலை வேண்டி விழைவோர்க்கு 
சாதனை முறைகள் இரண்டுண்டு ;
          சொன்னார் இதைநம் முன்னோரே!

தானம் ,தபஜபம் சேவையெனும்
          கடமைகள் செய்வது ஒருபகுதி.
தியானம் செய்து இறைவனுடன் 
          இரண்டறக்  கலப்பது ஒருபகுதி ;

செய்யும் செயல்களின் விளைவாக
          வருவது ஒருவகைப் பயனென்றால்
உயரிய தியானம்  அளிக்கும்பலன்
          வேறெனச் சொன்னார் சான்றோரே !

ஒன்றை விலக்கி மற்றொன்றை
          மட்டும் செய்யும் மாந்தரெலாம்
என்றும் இருண்ட காரிருளை
          விட்டே விலகுதல் அரிதாமே!

*     Isavasya Upanishadam - Swami Asuthoshaalandha - published by Sri Ramakrishna Madam
**- The Upanishads, Eknath Easwaran , Published by Penguin Books



No comments:

Post a Comment