Search This Blog

Apr 8, 2020

மன அமைதி

மன அமைதி

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

கோவில் சென்றேன் கும்பிட்டு வந்தேன்
நாவால் மந்திரம் ஓதி முயன்றேன்
பாவால் பாடித் துதித்துப் பார்த்தேன்
பூவால் பூசைகள் செய்யவும் செய்தேன்
தாவித் தாவிக் குதித்தே ஓடும்
பாவி மனதெதிலும் நிலைப்பது இல்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

புத்தகம் பலவும் புரட்டிப் படித்தேன்
வித்தகர் பலரிடம் விளக்கம் கேட்டேன்
மெத்தனம் விட்டு காலையில் எழுந்து
சத்தம் சிறிதும் இல்லா வேளையில்
நித்தமும் தியானம் செய்ய முயன்றேன்
சித்தம் எதிலும் நிலைத்திட வில்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

கண்களை மூடிக் காட்சிகள் மறைத்தேன்
செவிகளை மூடி சத்தம் தவிர்த்தேன்
ஏறுதல் ஆறுதல் ஊறுதல் பழகி*
நாசியின் மூலம் ஸ்வாசம் செய்தேன்
வாயினை  மூடி வார்த்தைகள் விடுத்தேன்
ஆயினும் அமைதி அகப்பட வில்லை

----------விளக்கை ஏற்றினேன் ஒளிவரவில்லை 
----------விழுந்து எழுந்தேன் வழிபடவில்லை 

என்னையே  மூடி எதுவும் மனதில்
நில்லா திருக்கும் நிர்மல நிலையை
என்று அடைவேன் எப்போ(து) உய்வேன்?
அன்றே அடைவேன் பிறவிப் பயனை !

* ஏறுதல், ஆறுதல், ஊறுதல் = மூச்சை உள்ளிழுத்தல், தங்கவைத்தல், வெளிவிடுதல் 


 

4 comments:

  1. The reality in most minds is well put. Great. NRS

    ReplyDelete
  2. உண்மை அறிந்தபின் ஞானம் வரும் .மனம் ஒன்றுபடும்.பிறவி பயன் கிட்டும்

    ReplyDelete