Search This Blog

Apr 27, 2020

வாழ்க்கையின் நிதர்சனங்கள் !

வாழ்க்கையின் நிதர்சனங்கள் ! 

இந்தக்  கவிதை வடிவக் கதையைப் படியுங்கள்!
பின் சிந்தியுங்கள்.!

என்னதான் நம் சிந்தனைகள் உயரப் பறந்தாலும் , செயல்கள் அவற்றை  முழுதும் சார்ந்து இருப்பதில்லை!


இதுதான்  நிதர்சனம்!


அன்புடன் 


ரமேஷ் 



விடியற் காலை எந்தன்  கனவில் 
----------கடவுள் வந்தாராம்.
அடியவன் எனக்கு இருகர முயர்த்தி 
----------ஆசிகள் அளித்தாராம் 

"அன்பா உந்தன் பக்தியி னால்நான் 
----------மிகவும் மகிழ்கின் றேன் 
என்ன வேண்டுமென நீயெனைக்  கேட்டால் 
----------வரமொன் றளித்திடுவேன் "

என்றவர் சொன்னதும் எதைக்கேட் பதுவென 
----------எனக்குத் தோன்றவில்லை .
எனினும் சிற்சில நிமிட நேரங்கள் 
-----------சிந்தித் தேஉரைத்தேன் .

"தங்கவே வீடும்  வங்கிப் பணமும், 
----------தங்கம் வெள்ளியுடன்  
பங்கம் இல்லா வாழ்க்கை நடத்த 
----------அனைத்தும் அளித்துவிட்டாய் .

எல்லாப் பொருளும் எந்தன் ஒருவன் 
----------தேவைக்கும் மேலாக 
உள்ளது; அதனால் பணம் பொருள் எதையும் 
----------உன்னிடம் நான்வேண்டேன் .

அத்தனை சுகமும் மொத்தமா யிருந்தும் 
----------ஒருகுறை உண்டெனக்கு.
சுத்தமாய் மனதில் அமைதியே இல்லை, 
----------அதைநீ அளித்திடுவாய்! "

எனநான் உரைத்ததை இறைவனும் 
----------கேட்டு இவ்வாறே உரைத்தான்  
' உனக்கு வேண்டும்  உள்ள அமைதியை 
----------நிச்சயம் அளித்திடுவேன்.

ஆனால் அதன்முன் நிபந்தனை ஒன்றை 
----------நானும் விதித்திடுவேன் .
தேவைக் கதிகமாய் நானுனக் களித்த 
----------செல்வம் மொத்தத் தில் 

வேண்டிய அளவை மட்டும் விட்டு 
----------மிகுதியை எடுத்திடுவேன்  
வேண்டும் அமைதியை அதற்குப் பதிலாய் 
----------உனக்கே அளித்திடுவேன்"

இதனைக் கேட்டு என்ன சொல்வதென 
----------பதைத்தே போய்விட்டேன் .
பதிலைக் கேட்க  இறைவனும் சிறிது 
----------நேரம் பொறுத்திருந் தான்.

மனதில் அமைதி வேண்டு மென்றாலும் 
----------ஆசை விடவில்லை! 
எனது எனது எனநான் சேர்த்ததை   
----------இழந்திட மனதில்லை!

இரண்டும் வேண்டும் என்றே இறைவனைக் 
----------கேட்கத் தோன்றியது.
இறைவனும் சிரித்து என்மன மறிந்து 
----------இயலா ததுவென்றான்.

சொல்வது என்ன என்றே இதயம் 
----------குழம்பி  நிற்கையிலே 
நல்ல வேளையாய் கனவும் கலைந்து 
----------நானும் விழித்திட்டேன் .

இந்தக் கனவு இன்னும் ஒருமுறை 
----------எனக்கு வர வேண்டாம்!
வந்தது உனக்கு என்றால் அதற்கு 
----------உன்பதில் எதுவாகும் ?





.






4 comments:

  1. Yes Ramesh! Our heart and head are often out of synch! Mostly skewed in favour of material
    wealth... but would Covid 19 drive us to prograde mental orbit??

    ReplyDelete
  2. நல்ல கவிதை . மனித மனம் ஆசையை விடாது

    ReplyDelete
  3. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    வாரிவாரி வழங்கும்போது
    வள்ளலாகலாம்.
    செய்வன திருந்தச்செய்கிறாய்
    பின் ஏனிந்த கலக்கம்?
    மயக்கம் வேண்டாம்.தயக்கம் தீரும்.
    அமைதி பெருவாய்.

    ReplyDelete
  4. Our dilemma is correctly portrayed. No one is exception.

    ReplyDelete