Search This Blog

May 31, 2020

படிக்கப்படும் புத்தகங்கள் -- கொரானா பாசிடிவ் -2

 படிக்கப்படும்  புத்தகங்கள் -- கொரானா பாசிடிவ் -2

சென்னையில் ஜூன்  மாதக் கடைசி வரை வீட்டடைப்பு என்று உறுதியாகிவிட்டது!

இதற்கு முன் பல்வேறு புத்தகக் காட்சிகளில் வாங்கப்பட்டு இன்னும்  படிக்கப்படாத 
- ஏன், பிரிக்கவும் படாத - புத்தங்கள் பல, புதுப் புத்தகங்களுக்கே உரிய வாசனையுடன் என் வீட்டில் இருப்பது போல், உங்கள் எல்லார்  வீட்டிலும் நிச்சயமாக இருக்கும்!

அவற்றைப் படித்து முடிக்க ஒரு வாய்ப்பு, இந்த இறுதி வீட்டடிப்பில் கொரானா தந்திருக்கிறது.

இது மற்றொரு கொரானா பாசிட்டிவ்!

வாய்ப்பை நழுவிடாமல் புத்தகங்களை படித்துப் பயனடையுங்கள்!



அன்புடன் 
ரமேஷ் 

கொரானா பாசிடிவ் -3


காலை தொடங்கி மாலை வரையில்
வேலையில் மட்டும்  மூளையைச் செலுத்தி
நாளை நாமிதைப்  படிக்க லாமென
மூலையில் குவித்த புத்தகம் எடுத்து
காலைக்  கால்மேல் போட்டு அமர்ந்து
தாளைப்  புரட்டி  தடவிக் கொடுத்து

ஒட்டி இருக்கும்  தாள்களின் ஊடே 
சுட்டு  விரலினை  மெல்ல நுழைத்து
பக்கங்கள் ஏதும் கிழியா வண்ணம்
அக்கறை யோடு பிரித்து விலக்கி
பத்தினிப் புத்தகப் பக்கங்கள் பரப்பும்
அத் தனி மணத்தை நாசியில்  நுகர்ந்து

சூலை*  மாதம் தடைகள் விலகி                           * July
ஆலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்
வேளை  வருமுன் படித்து முடிக்க
காலத் தடைகள் எதுவுமின் றில்லை!
வீட்டில்  நம்மைப் பூட்டிய  வியாதியால் 
விளையும்  நன்மையில் இதுவும் ஒன்றே!







 

May 30, 2020

கற்பது யார் - கொரானா பாசிடிவ் -1

கற்பது யார் ?- கொரானா பாசிடிவ் -1


ஒவ்வொருவரும் தாம் "கொரானா பாசிடிவா?, நெகட்டிவா?" என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் , இந்தக் கொரானாவால் சில பாசிடிவ்களும் நிகழ்கின்றன என்று ஒத்துக்க கொள்ளத்தான் வேண்டும்!

அப்படி ஒரு பாசிடிவ்,  இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


கற்பது யார் ?






பள்ளியின்   புத்தகப் பக்கம்  பிரித்துத்தம்
பிள்ளைக்கு   பாடம் படிக்கையிலே   - உள்ளபடி
கற்பதுயார் பிள்ளைகளா ? இல்லையவர் பெற்றோரே
கற்கின்றார் பாசப்பா டம்! 
                                        
                                                                                           (இருவிகற்ப நேரிசை வெண்பா)

May 20, 2020

தடைகளை உடை!

தடைகளை உடை!

இன்றைய இந்து நாளிதழலில் புகைப்படத்தோடு வெளியிடப்பட்ட செய்தி  இது!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றி போடப்பட்டுள்ள தடைகளை உடைத்து உள்ளே செல்கிறார்கள் வாகன ஓட்டிகள்!

"தடைகளை உடைத்திட கொதித்தெழு" என்று கூறியதை இப்படியா செயல் படுத்த வேண்டும்?



வேதனையுடன்

ரமேஷ்






தடைகளை உடை!

கொடுநோய்ப்  பிடியில் கட்டுண் டோரை 
-----தனிமைப் படுத்த  கெடையால்* ஒருதடை!
பரவும் நோயைக் கட்டுப் படுத்த
-----அரசினர் நிறுவிய ஒருசிறு மிடைமடை*!


சென்னை வீதியில் முன்னே போகுது
-----தடைகளை உடைத்து,  தமிழ ரின்படை!
"தொல்லை கொடுக்கும் இத்தடை ஏனோ ?
-----இல்லை பயம்"எனத் தட்டி யேதொடை!

(இவர்) நோயை விற்கும்  நடமா டும்கடை!
-----கிருமியைக் கொன்றிட   இதுதா னாவிடை?  
பிடித்து இவர்களை நைய வேபுடை!
-----சிலநா ளேனும் சிறையுள் ளேஅடை  !

*- கெடை = மூங்கில் 
* மிடை = நெருக்கம் ; மிடைமடை = நெருக்கத்தடை 

May 16, 2020

நீள்நெடும் நடைப் பயணம்

நீள்நெடும் நடைப் பயணம் 

கோவிட் தீ நுண்மியின் தாக்கத்தால் வெளிமாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்து வாழும் வழி தெரியாமல் தவிக்கிறார்கள். வீடு செல்ல வாகன வசதிகள் ஏதுமின்றி, நடைப்பயணமாகவே  தத்தம் ஊர்களுக்கு செல்லும் பரிதாப நிலமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் . இது விரைவில் மாறுமா ?

ரமேஷ்






நீர்மட்டம்  நிலத்தடியே   வறண்டிட்ட நிலையாலே
நீர்விட்டு நிலமுழுது வாழ்ந்திருந்த மக்கள் பலர்
சோறிட்டு சொந்தங்களை வாழ்விக்கும் வழிதேடி
வேர்விட்டு வாழ்ந்திருந்த ஊர்விட்டு வெளிச்சென்று
சேர்ந்திட்ட பெருநகரில் சிறுதொழில்கள் செய்துவர,

ஆர்த்திட்டு மேலெழுந்த ஆழியன்ன கோவிடென்று
பேரிட்ட பெருநோயின் தாக்கத்தால் தொழிலிடங்கள்
மூடிட்ட தால்மாத வருமான மேயின்றி
சேர்த்திட்ட சிறுதொகையும் கரைந்திட்ட காரணத்தால்
சோர்ந்திட்ட மக்கள்என் செய்வதென அறியாமல்
சேர்ந்திட்டு எழுப்பும்குரல் செவிடர்செவிச் சங்காக

யாரிட்ட பிச்சையையும் எதிர்நோக்கி நிற்காமல்
தாரிட்ட சாலையிலே தகிக்கின்ற தணல்வெயிலில்
போரிட்டு நடக்குமிவர் போய்வீடு சேர்வாரே?

பாதிப்  பாதையிலே  நீரின்றி உணவின்றி
நடக்கவும் முடியாமல் நாதியின்றிச் சாவாரோ?

சாலை ஓரத்திலே  களைப்புடனே  உறங்குகையில்
விரைந்துவரும் வாகனங்கள் இவருயிரைக் குடித்திடுமோ?

தண்ட வாளத்தையே தலையணையாய் வைத்திவர்கள்
கண்ணயரும் நேரத்திலே விண்ணுலகம் சேர்வாரோ ?

வீடுபோய்ச் சேர்ந்தாலும் விடுபடுமோ வாட்டங்கள் ?
விடுகதையாய்ப் போனயிவர் வாழ்வுக்கோர்   விடிவுண்டோ  ?







May 12, 2020

செவிலியர் தினம்

பிளாரென்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாள் செவிலியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் அவர்கள் சேவைகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வழியாக ஒரு பாடல்!

அன்புடன்
ரமேஷ்



செவிலியர் தினம்

வெள்ளை உடையணிந்து வைத்திய சாலைகளில்   
பறந்து பணிபுரியும் காரிகைகள்! 
அன்பே இறையென்று அகிலம்  அறியும்வண்ணம்   
உரத்து உரைக்கின்ற பேரிகைகள் !

விளக்கைக்  கையேந்தி களத்தில் வலம் வந்த 
நங்கை நைட்டிங்கேல் வாரிசுகள்!
எடுக்க எடுக்கவே என்றும் குறையாது 
கொடுக்கும் கருணை வாரிதிகள்!

கொள்ளை நோய்தம்மை கொல்லும் என்றறிந்தும் 
கருணை ஊற்றெடுக்கும் ஊருணிகள்! 
நோய்வாய்ப் பட்டோர் நன்கு நலமடைய 
தலையா யதான  காரணிகள் !

புன்னகை யைப்பூட்டி  பொறுமை மிகக்காட்டி 
என்றும் பணிபுரியும் பூரணிகள்!
மன்றில் இவர்போல மனித ருண்டோசொல்? 
இங்கிவர்க் கில்லை ஓரிணைகள்!




May 8, 2020

சித்திரையின் முழு நிலவு

சித்திரையின் முழு நிலவு 

நேற்று சித்திரா பௌர்ணமி!

இந்த நாளில்  மாடியில் அமர்ந்து  நிலவின் அழகை ரசிக்காமல் அலைபேசியில் வரும் அலம்பல்களிலேயே  ஆழ்ந்திருக்கும்  மனிதர்களும் இருக்கிறார்கள்!

இவர்களைப் பற்றி இரு பாடல்கள்!

ஒன்று - வசனவழிக் குறும்பாடல் 
இரண்டு - மரபு வழிப் பாடல் 

எது பிடிக்கிறதோ, எடுத்துக்கொள்ளுங்களேன்!

அன்புடன்
ரமேஷ்





பாடல் ஒன்று

சித்திரா பௌர்ணமி 
மொட்டை மாடி 
விரிந்த வானம்
வட்ட நிலா
வீசும் தண்ணொளி  

----கையில் அலைபேசி !

பாடல் இரண்டு 

மொத்தமாக முழுவானை குத்தகைக்கு எடுத்திட்டு 
அத்தரியின் புத்திரனும்* சித்திரையின் பௌர்ணமியில் 
எத்திரையும் இல்லாமல் முத்திரையைப் பதிக்கையிலே 
சித்தத்தைச் சொக்கவைக்கும் பால்நிலவைப் பார்க்காமல் 
இத்தரைமேல் வாழுகின்ற பித்தர்கள் சிலபேரோ 
தத்தமது வீடுகளின் மாடிகளி லேயமர்ந்து 

விலைகொடுத்தும் கிடைக்காத நிலவழகை  நோக்காமல் 
அலைபேசி அலம்பல்களை அலுக்காமல் அலசுகிறார்!

  * புராணக் கதைகளின்படி  சந்திரன் அத்திரி என்ற முனிவரது புத்திரன். 

May 7, 2020

திறப்பு விழா

திறப்பு விழா 


இன்றைய செய்தி - 

இன்று திறக்கவிருக்கும் டாஸ்மாக் கடைகள் வாழை மரம், மாவிலைத்தோரணங்கள் கட்டி நன்கு அலங்கரிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் விளங்குகின்றன. 

நாளை முதல் கூட்டம் அலைமோதப் போகிறது. 
குடிமக்கள் போதையில் மிதக்கப் போகிறார்கள்.

பக்கத்தில் மிளகாய்ப் பஜ்ஜி, மசால் வடை  கடைகள்தான்  மிச்சம்!
அதையும் அரசே திறந்து வைக்கலாமே!
கஜானா இன்னும் கொஞ்சம் நிரம்பும்!

இல்லாவிட்டால் , இவைகள்  இலவச இணைப்பாக அம்மா உணவகத்தில் கொடுக்கப்படுமோ?

இது பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 





திறப்பு விழா
(photo in THE HINDU today)


வாழ்வைக்  குலைத்திடும்  போதை மதுக்கடைக்கு  
வாழைக் குலையோடு மாவிலையில்   தோரணங்கள் 
தாழைச் சரம்சூட்டி    தூப தீபங்களுடன் 
நூழை* வாயிலிலே நீர்தெளித்துக் கோலமிட்டு 
ஏழாம் தேதியின்று  அரசும்  அதனுடைய  
பேழை நிரம்பவேண்டி  பூட்டைத் திறக்கின்றார்!  
கூழை மட்டும்உண்டு குடும்பம் நடத்துகின்ற 
ஏழை பாழைகளின் பீழைகளை** எண்ணாது 
ஊழோடும் உயிரோடும்  ஆடுமிந்த ஆட்டத்தால் 
பாழாகும் நாட்டுக்கு பாதுகாப்பு முண்டோ சொல் ?

நூழை வாயில் = குறுகிய நுழை வாயில் 
** பீழைகள் = பீடைகள், துன்பங்கள் 

May 6, 2020

நம் நாட்டுக் குடிமக்கள்

நம் நாட்டுக் "குடி"மக்கள் 


கர்நாடகா , ஆந்திர மாநிலங்களில் சாராய விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது. தமிழ் நாட்டிலும் 7-ம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்படும்.

ஆனாலும்  அதுவரை கூடப் பொறுத்திருக்காமல், மாநில எல்லைப்பகுதிகளில் வசிப்போர், தடையையும் மீறி முண்டி அடித்துக்கொண்டு மது வாங்க எல்லை தாண்டிய படங்களை தொலைக்காட்சியில் கண்டு களித்தோம்!

7 ஆம் தேதி முதல் என்ன  நடக்கும் ?

ஒரு கையால்  அரசு தரும் உதவிப் பணத்தை  வாங்கி, மறு  கையால் அதை மதுக் கடைகளுக்குத் தாரை வார்க்கத்தான் போகிறார்கள்.

அன்புடன் 
ரமேஷ் 



வறுமைக் கோட்டின் கீழே 
-----வாடிடும் மக்கட் கெல்லாம் 
அரசினர் அவ்வப்  போது 
-----அளித்திடும் சிறுதொகை தன்னை 
வரிசையில் நின்று வாங்கி 
------வந்த பணத் தொகையுடனே  
திரும்பியே சென்று வீட்டோர்   
-------தேவையைத்  தீர்த்தி டாமல் 
விறுவிறு என்று ஓடி
------கிறுகிறு பானம்  வாங்க
வேறுஓர் வரிசையில் நிற்பார்! 
-----என்றிவர் திருந்து வாரோ! 

May 4, 2020

மீனாட்சி கல்யாணம்

மீனாட்சி கல்யாணம் 

இன்று மீனாட்சி கல்யாணத் திருநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொண்டாடப்படும் நாள்.
இந்த நாளில் இது குறித்து , மின்னாட்சியின் அன்னையின் திருமணம் பற்றி முன்னர் எழுதி பதிவு செய்த திருவிளையாடல் புராணப் பாடல் பதிவுகளின் சுருக்கங்களை பதிவு செய்கிறேன்,
அனைவருக்கும் அன்னை அருள் உரித்தாகுக!
அன்புடன் 
ரமேஷ் 

பி.கு :
இது குறித்த முழுப் பதிவுகளையும் கீழ்கண்ட இணைப்புகளில் பார்க்கலாம் 

https://kanithottam.blogspot.com/2018/02/4.html
https://kanithottam.blogspot.com/2018/02/5.html
https://kanithottam.blogspot.com/2018/02/6.html
https://kanithottam.blogspot.com/2018/03/7.html





( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)


மீனாட்சி கல்யாணப் படலம்

மலயத் துவசன்மகள் மீனாட்சி அவன்பின்னே அரியணையில் ஏறி யமர்ந்து 
சிலகாலம் செல்லுமுன்  புவியாளும் பிறவரசை சமர்செய்து வென்ற பின்னர் 
கைலயத் தையும்வெல்ல விரைகையில்  ஈசனின் கண்பட்டு மார்பின் மூன்றாம் 
முலைமறைய மாகேசன் மீனாட்சி கரம்பிடுத்து மதுரையில் மணம்  புரிந் தான்   


பாடற்பொருள் 

மன்னன் மலையத்வஜனுக்குப் பின்பு , தடாதகை அரியணையில் அமர்ந்து   அனைத்து  மன்னர்களையும் போரில் வென்றாள் . ,பின்பு கைலையத்தையும் வெல்ல எண்ணிப்  படையுடன் சென்றாள் . அப்போது  , சிவபெருமான் வெளியில் வந்து புன்னகையுடன் அவளை நோக்கிய நேரத்தில், அவளது மூன்றாம் முலை மறைந்தது. அவரே தன மணாளன் என்று அறிந்து நாணத்தால் தலை குனிந்த தடாதகை என்னும் மீனாட்சியை, சிவபெருமான் மதுரையில் மணந்த நிகழ்வு,  மீனாட்சி திருமணப் படலத்தில்  கூறப்பட்டுள்ளது.

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 

முனிவரும் தேவர்களும்  அன்னை  மணக்கோலம்   கண்டு  களித்தபின்னர்   
இனிதாய் விருந்துண்ணும்  முன்னமே  கண்குளிர நாதனின்  நடம்காணவே    
விரும்பி வேண்டிடவே  வெள்ளியம் பலமீதில்     நந்திமத் தளமடிக்க 
திருமால் இடக்கையிட தேவரும்  பூச்சொரிய  பரமனும்  நடமாடினான்.

இடக்கை = இடது கையால் அடிக்கப்படும் ஒரு சிறிய தோல் கருவி 

பாடற்பொருள் :

மீனாட்சி சிவபெருமானை மணந்த திருக்கோலத்தை கண்டு மகிழ்ந்த முனிவர்களும்  , தேவர்களும் , மணவிருந்துண்ணச் செல்லுமுன்பாக , சிவபெருமானின் நடனத்தைக் காண விழைந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் , நந்தி தேவர் மத்தளம் இசைக்க , விஷ்ணு இடுகையை ஒலிக்க  வெள்ளியம்பலத்தில் திருநடனம் ஆடினார் . அச்சமயம் தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

குண்டோதரானுக்கு  அன்னமிட்ட படலம்


விருந்தினர்   எல்லோரும்    விருந்துண்ட    பின்னரும்   பெருமளவு  மிகுந்த   படியால்
வருந்திடும்   மீனாட்சி   யினைநோக்கி   சிரித்துசிவன்   பெருத்ததன்   கணத்தை   அழைத்து
கருத்தகுண்   டோதரனின்   வயிற்றிலே   வடவைத்தீ   ஏற்றிப்பெறும் பசியைத்   தூண்ட 
இருக்கும்   உணவையெலாம்   கொஞ்சமும்   மிஞ்சாமலே    மொத்தமும்  தின்று   தீர்த்தான்
                                                               
                                                                                                    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடற்பொருள் :

வந்த விருந்தினர் அனைவரும் வயிறார உண்டு சென்றபின்னும், சமைக்கப்பட்ட உணவு வகைகள், பெருமளவில் மிகுந்துவிட்ட படியால்,   தடாதகைப் பிராட்டியார்  வருத்தமுற்றாள். இது கண்ட சிவபெருமான் தன கணங்களில் ஒருவனும், பெருத்த வயிறோடும் ,  கரிய நிறத்தோடும்  காணப்படுவனுமான குண்டோதரன் என்பானை வரவழைத்து , அவனது வயிற்றிலே பசியைப் பெருக்கும் வடவைத்தீயை ஏற்றி, அவனுக்கு உணவு படைக்குமாறு பணித்தார். பெரும் பசியால் பிணிக்கப்பட்ட குண்டோதரனும் அங்கு இருக்கும் எல்லா வகை உணவுகளையும் தின்று தீர்த்தான்.

அன்னக்குழியும் வையையை அழைத்த படலம்


வருத்தவை  வெந்தவை அனைத்தையும் விழுங்கியும் பசியுமே தீராததால்    
பெருத்தவோர்  குழியிலே தருவித்த தயிரன்னம் தனையுண்டு தீர்த்தபிறகு   
செரிக்கவே குடிக்கநீர் குறைந்ததால் துடிக்குமவன் தாகம்  அடங்கவேண்டி 
விரித்த சடையிலே  தரித்த கங்கையை வைகையாய் கொண்டுவந்தான்

                                                                                                   (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
                                                                                                                              
பாடற்பொருள் 

சமைக்கப்பட்டிருந்த அத்தனை உணவு வகைகளையும் , மீதி இல்லாமல்  அள்ளி உண்ட பின்னும் , குண்டோதரனின் பசி தீராததால் , சிவபெருமான் ஒரு பெரிய குழி ஒன்றை உண்டாக்கி அதைத்  தயிரன்னத்தால் நிரப்பினார். அதை உண்டு பசியடங்கிய குண்டோதரன் , உணவை ஜீரணம் செய்ய ,நீர்நிலைகளில் இருந்த அத்தனை நீரையும் பருகியபின்னும் ,  தாகம்  அடங்காது தவித்தான். அப்போது சிவபெருமான் ஆணையின் பேரில்  அவர்  தலையில் இருக்கும் கங்கை நதி வைகை நதியாக உருவெடுத்து அங்கு வந்தது. அந்த நீரைப் பருகி குண்டோதரன் தாகம் தணிந்தான்.