ஜெய ஜெய சங்கர ! - ஒரு மறுபதிவு.
இன்று சங்கர ஜெயந்தி -
ஆதி சங்கரர் அவதரித்த நாள்!
சில வருடங்களுக்கு முன் எழுதிப் பதித்த இந்தப் பாடலை மீண்டும் பதிப்பிக்கிறேன்!
அன்புடன்
ரமேஷ்
வரைந்தவர் : ரமேஷ் |
நிறைநீர் நெற்றியன் மறைஉரை பெற்றியன்
பிறைமுடி தரித்தவனின் பெயர்பெற்றவன்.
சிறுபரு வத்திலே உறவுகள் அறுத்துப்பின்
துறவறம் பூண்டிட்ட முனிபுங்கவன் .
ஆத்மாக்கள் பரமனும் ஜீவனும் ஒன்றென்ற
அத்வைத தத்வத்தை போதித்தவன் .
பௌத்தரையும் ஜைனரையும் வாதித்து வென்றதால்
இந்துமத மேன்மையை சாதித்தவன் .
வேதங்கள் அறிந்ததன் சாரங்களைப் பிழிந்து
கீதகோ விந்தமாய் கற்பித்தவன் .
காதங்க ளைக்கடந்து நாடெங்கி லும்நடந்து
சங்கர மடம்நான்கை நிறுவிட்டவன் .
புலையன் உருவில்வந்த மலையன் கண்திறக்க
மாநீஷ பஞ்சகப் பாப்புனைந்தவன் .
கைலயங் கிரிசென்று ஈசனைப் பூசித்து
சௌந்தர்ய லகிரியைப் பெற்றிட்டவன் .
காஞ்சிபுரி வந்திருந்து காமாட்சி யைத்தொழுது
கோவிலில் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்தவன் .
சர்வங்க்ய பீடத்தில் குருவாக வந்தமர்ந்து
அடியார்கள் மனமெங்கும் வ்யாபித்தவன்.
பாமரர்க்கும் புரியும்வண்ணம் பக்தித் தோத்திரங்கள்
பாவடிவில் பண்ணுடன் புனைந்திட்டவன் .
நேமமிகு பண்டிதரும் படித்தறிந்து பண்படவே
பாஷ்யங்கள் பலப்பலவும் தந்திட்டவன் .
தாமரைக் கண்ணினள் காமாட்சி அருள்பெற்று
காமகோடி மடம் உருவாக்கினான் .
நாமெல்லாம் சேமமுற நல்வழிகள் காட்டியபின்
மோட்சபுரி காஞ்சியிலே சித்தியடைந்தான்.