Search This Blog

Oct 31, 2023

முகங்கள்

இந்தப் பாடலுக்கு முன்னுரை தேவை இல்லை!

அன்புடன் 

ரமேஷ் 

முகங்கள் 




உனக்கென்று ஓர் முகம் உறவுக்கு ஓர்முகம் 

ஊராருக் கெனவேறு பலமுகம் 

மனையாளுக் கொருமுகம் மக்கட்கு ஒருமுகம்

தனியாக ஒவ்வொருவர்க் கொருமுகம்   

  

அனல்கக்கி தணல்வீசும் சினமுகம்  

மகிழ்வோடு முறுவலிக்கும்   மலர்முகம் 

தனவானுக் கோர்முகம் தரித்திரர்க் கோர்முகம்

இனங்கண்டு கணப்பொழுதில்  மாறும்.   


கணக்கின்ற பலமுகம் ஊரார் உலகுக்கு 

உருவாக்கி உலவவே விட்டேன் 

எனக்கென்று என்னோடு ஜனித்திருந்த தனிமுகத்தை 

எங்கயோ நான்தொலைத்து விட்டேன் 


வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு முகங்களை 

அணிந்தே உலவுகிற தாலே 

எவ்வா றிருக்கும் என்முகம் என்றே 

என்றோ நான் மறந்து விட்டேன் 


கனக்கின்ற மனதோடு கேட்கிறேன் அம்முகத்தை 

கண்டவர் யாரேனும்  உண்டோ?

அனுதாபம் என்மேல் கொண்டம் முகத்தை 

அடையாளம் காட்டவே வேண்டும்!

 



Oct 23, 2023

நவராத்திரி- ஒன்பதாம் நாள்



நவராத்திரி- ஒன்பதாம் நாள் 



 


சித்திகள் எட்டையும் சிவனுக்கு அருளியபின் 

-----அவனுருவில் பாதி யானாள் 

முத்தேவர் முத்தேவி யர்களை சிருட்டித்த 

------சித்தாத்ரி தேவித் தாயே.


விட்டுணி* வின்துணைவி செல்வப் பொருள்தலைவி 

-----இலக்குமி என்னும் தேவி 

மொட்டவிழ்த்த தாமரை முழுமலர் மேலமர்ந்து 

-----அருள்புரியும் அலைமகள் இவள் 


சித்தன் பித்தன் நீறணிக் கடவுளெனப் 

-----பலபெயர் கொண்ட ஈசற் 

குற்றதோர் மனைவியாய் பனிமலை மேலமர்ந்து

------அருள்புரியும் மலைமகள் இவள் 


நான்முகத்தி னன்கிழத்தி ஞானங்க ளின்இறைவி

----- நன்னூலின்  தலைவி வாணி 

வெண்ணாடை யையுடுத்து வீணையக் கரமேந்தி 

-----அருள்புரியும் கலைமகள் இவள்


அலைமகள் மலைமகள் கலைமகள் என்றுபல 

-----உருவங்கள்  எடுத்த இறைவி

உலகையெலாம் காத்துப்பல நலங்களால் நிறைக்கவே 

-----தலைவணங்கி வேண்டிப் பணிவோம் 

* விட்டுணு=விஷ்ணு 

நிறைவு

 

சைலபுத் திரிபிரம்ம சாரிணி சந்திர 

-----காந்தை குஷ்மாண் டனி

ஸ்கந்த மாதாகார்த்தி யாயினி காலாத்ரி 

-----கௌரிமா சித்தாத் த்திரி 

என்றநவ தேவியரின் சரிதத்தை என்கவிதை

-----மூலமே எடுத்துரைத் தேன் 

இன்னும்பல நற்கவிதை நான்புனைந்து படைத்திடவே 

-----தேவியருள் தரவேண்டு வேன். 

   

 



     


Oct 22, 2023

நவராத்திரி- எட்டாம் நாள்

நவராத்திரி- எட்டாம் நாள்



 

வெண்சங்கம், வெண்ணிலவைப் பழிக்கின்ற நிறமுடையாள்

வெண்மைநிற எருதின்மேல் அமர்ந்தருள்வாள்  கௌரித்தாய். 

பண்புநெறி, நல்லொழுக்கம், அருள், கருணைக் கரசியிவள் 

இன்றிவளைத்  தொழுதே நாம் ஆன்மஞானம் அடைந்திடுவோம்.   




Oct 21, 2023

நவராத்திரி - ஏழாம் நாள்

 நவராத்திரி - ஏழாம் நாள் 


கருத்த உடலும் விரித்த தலையும் 

-----சினத்தை சிந்தும் சிவந்த விழியும் 

இரத்த பீஜனின்* இரத்தத் துளிகள் 

-----சிறிதும்  தரையில் சிந்தா வண்ணம்

உறிஞ்சி உதிரம் குடித்த இதழ்களும் 

-----மின்னலை மாலையாய் அணிந்த கழுத்தும் 

கருத்தபம்** மீது அமர்ந்து சமர்செ(ய்)ய

-----கூன்வாள்*** வச்சிரம்*** ஏந்திய கரங்களும்

கொண்டே இன்றைய ஏழாம் நாளில் 

-----எழுந்து அருளும் கொற்றவைத் தாயை 

வேண்டி வணங்கி அவளருள் பெறுவோம்;

-----கேட்கும் வரங்கள் கொடுப்பாள் அவளே!  

* இரத்தபீஜன் என்னும் அரக்கன் அவன் தரையில் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும்  மீண்டும் ஓர் அரக்கனாக உருவெடுக்கும் என்ற வரத்தைப் பெற்றவன். அதனால் காளி அவனை வாதம் செய்த பிறகு  ரத்தத்துளிகள் கீழே விழாமல் தன்  இதழால் உறிஞ்சி உண்டாள் என்பது ஐதீகம்.

** கர்த்தபம் = கழுதை

*** கூன்வாள் = scimitar, cleaver  வச்சிரம் = வஜ்ராயுதம் 




Oct 20, 2023

நவராத்திரி - ஆறாம் நாள்

நவராத்திரி - ஆறாம் நாள்


இந்த ஆறாம் நாளன்று தேவியை காத்யாயனி , மகிஷாசுரமர்த்தினி , துர்க்கை  என்னும் பெயர்களில் வழிபடுவோம். 

துர்கையின் அவதாரம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதி பதித்த ஒரு பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன்.

இதனோடு பாடலின் ஒலிவடிவத்தையும் கொடுத்திருக்கிறேன்.

படித்தும், கேட்டும் தேவியின் அருள் பெறுவீர்களாக!

அன்புடன் 

ரமேஷ் 


 




துர்க்கை அவதரித்தல்
முக்கண்ணன் முகமளித்தான்;  காலனும் குழல்தந்தான்.
அக்கினியும்  அவள்மூன்று கண்ணா யினான்  
நீள்நாசி  திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும் 
அஷ்டவசு தேவர்கை   விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும்  வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும்  அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள் !
 *-திருவுக்கு அரசன்= குபேரன்
** - மண்ணரசி = பூமாதேவி 
துர்க்கையின் படைக்கோலம்
திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே
திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே
இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்
தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே
வாயுதே வன்தந்த  வில்ம்புகள்
ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 
காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்
சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.
மகிஷாசுர வதம்
உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்
செந்தழலோன் சீற்றமதைக்  கண்களில்  ஏற்றினள்
இமயவான் அளித்தஅரி  மாமீது ஏறினள்
சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைத்தனள்
துதி
எருதுருக் கொண்டமகி ஷாசுரன்  செருக்கறுத்து 
பொருதவன் சிரம்கொய்த துர்கா தேவியை  
கருத்திலே   நிறுத்திநவ நாட்கள்  நோன்பிருந்து 
கரம்கூப்பி  வணங்கித் தொழுவோம்.



நவராத்திரி- ஐந்தாம் நாள்

நவராத்திரி- ஐந்தாம் நாள் 



தான்கொடுத்த வேலெடுத்து தாரகனைக் கொன்று 

வான்புகழை வென்றமகன்  கந்தனது பெயரியினையே  

தன்பெயரின் முன்னாலே  சேர்த்துவைத்து  மகிழ்ந்தவளே  

ஐந்தாம்நாள் அருள்புரிவாள்   ஸ்கந்தத்தாய் வடிவத்தில்.


தொண்டாற்றும் அடியார்க்கு அருள்கின்ற  கரமொன்று 

வண்டூரும் கமலமலர் ஏற்றிருக்கும்  கரமிரண்டு

கண்டோர்க்கு தாயன்பை தெரிவிக்கும் முகமாக 

தன்மகனை மடியிருத்தி அணைக்கின்ற கரமொன்று 


சிங்கமொன்றின் மேலமர்ந்து சங்கடங்கள் தீர்ப்பவளை 

பங்கயத்தின் மேலமர்ந்து* மங்களங்கள் தருபவளை 

இங்குமங்கும் பாயும்மனம்  தங்கவைக்கும் தூயவளை 

சங்கரனின்  மனைவி(ஸ்)கந்தத் தாயினையே  வணங்கிடுவோம்.


பங்கயத்தின் மேலமர்ந்து* =ஸ்கந்தமாதாவை தாமரை மேலமர்ந்திருக்கும் பத்மலட்சுமி ஆகவும் சித்தரிப்பது உண்டு,

  








   

 

Oct 18, 2023

நவராத்திரி- நான்காம் நாள்

நவராத்திரி- நான்காம் நாள் 

 




கருமையும் வெறுமையும் எங்கும் இருக்கையில்

இருளை நீக்கிய ஒளி அவளே 

அண்ட பேரண்டம் விண்மீன் மண்டலம் 

அனைத்தையும் ஆக்கிய அன்னையிவள் 

முகத்தில் பூத்த முறுவலின் மூலம் 

சகங்கள் அனைத்தையும் சிருஷ்டித்தாள் 

ஆதி சக்தியின் அம்ச மானவள் 

சோதி மயமாய் ஜொலித்திடுவாள்

மகா காளியுடன் மஹா லட்சுமி 

மகா சரஸ்வதி தேவியரை 

இடக்கண் வலக்கண் நெற்றிக் கண்களின் 

கடைக்கண் பார்வையால் படைத்திட்டாள் 

மிருகா திபதியாம்  அரிமா மீது 

அமர்ந்து அன்பர்க் கருள் புரிவாள்

சித்திகள் எட்டும் நிதிகள் ஒன்பதும் 

சித்திக்கும் அவள் அருளாலே 

பூசணிக் காயெனும் பொருளைக்  கொண்ட 

குசுமாண்டா எனும் தேவி இவள்

நான்காம் நாளின் நாயகி இவளை 

நோன்புகள் நோற்று  வணங்கிடுவோம். 

  

 

Oct 17, 2023

நவராத்திரி - மூன்றாம் நாள்

 நவராத்திரி - மூன்றாம் நாள் 



திரிசூலம், செண்டு,வாள் கமண்டலங் களை 

-----இடப்பக்கக் கைகளிலே ஏந்தி இருப்பாள்.

விரிகமலம், ஜபமாலை, வில்லம்புடன் 

-----மணியொன்றைத் தாங்கிடுவாள்  வலக்கரங்க ளில்

பரிவிரக்கம் கருணை காட்டும்   வரதமுத்திரை 

-----  காட்டிடுவாள் அடியார்க்கோர் இடதுகரத் தால்

வருகின்ற அடியவரை அணைத்து அபயம் 

-----தருகின்ற முத்திரையோர் வலக்கரத் திலே.

வரிப்புலியை அரியணையாய் அமைத்து அதன்மேல் 

-----அமர்ந்து அருள் புரிந்திடுவாள் அனவரதமுமே 

 

நெற்றியிலே சொலிக்கின்ற பிறைச்  சந்திரன்- கூட 

-----வெற்றியொலி எழுப்பிகின்ற காண்டா மணி 

பெற்றதனால் சந்திரகண்டா என்னும்- பெயர்

----- கொண்டவளை நாள்மூன்றில்  கொண்டா டிடுவோம் 

 

Oct 16, 2023

நவராத்திரி இரண்டாம் நாள்

நவராத்திரி இரண்டாம் நாள்


இன்று நவராத்திரியின் இரண்டாம் நாள்.இந்த நாளன்று தேவியைத்  துறவுக்கோலத்தில் வழிபடுவர். 

ஒருகையில் ருத்ராட்சத்திர மாலையை ஏந்தி, மறுகையில் கமண்டலத்துடன் , துறவைக் குறிக்கும் வெண்ணிற ஆடையை அணிந்து காட்சி தரும் தேவியை, பிரம்மச்சாரிணி என்றழைத்து வணங்குவர். 

இது பற்றி ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: நவராத்திரியின் போது நாளுக்கொரு ஒரு பாடல் எழுதிப்  பதிக்க முயன்றாலும்,இந்த நவராத்திரிப் பாடல் பதிவு பற்றிய தகவலை   தினமும் எனது பகிர்வுப் பட்டியலில் இருக்கும் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதை,  தற்காலிமாக , இன்று முதல் நவராத்திரி முடியும் வரை, நிறுத்திக்கொள்கிறேன். பதிவை www.kanithottam.blogspot.com இணையத்தில் படிக்கலாம். நன்றி. 



 




துறவெனும் அறம்பூண்ட அடையாளமாய் 

(உ)ருத்ராட்சத் தவமாலை ஒருகையிலே!

மறுகையில் நீர்நிறைக் கண்டிகை*யுடன் 

அறவி**யரின் வெண்ணிற ஆடையுடுத்தாள்.

செறிவான ஓர்முகச் சிந்தனையுடன் 

பிரம்மத்தை மனதிருத்தி தவம்செய்வதால் 

ப்ரம்மச்  சாரிணியாய்ப்  பெயர்கொண்டவள்.

இரண்டாம் நாளின்று  இவளையெண்ணி 

கரும வினையனைத்தும் களைவதற்கு  

சரணடை வோம்திருப்  பாதங்களில்.

* கண்டிகை = கமண்டலம் 

** அறவி = பெண் துறவி 



நவராத்திரி- முதலாம் நாள்

 

நவராத்திரி- முதலாம் நாள் 

இன்று நவராத்திரியின் முதலாம் நாள். இந்நாள் அன்று தேவியை சைலபுத்தரியாக வழி படுவர். திரிசூலம், தாமரை இவைகளை இரு கரங்களிலும் ஏந்தி,வெள்ளை நிற எருதின் மேல் அமர்ந்து, செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து அருள் புரியும் தேவியை வணங்கி இன்றைய நவராத்திரிப் பாடல்.

தேவியின் அருளால் வரும் எட்டு நாட்களிலும், அந்த அந்த நாட்களில் அவள் திருக்கோலம் பற்றி ஒவ்வோர் பாடல் எழுதிப் பதிக்க முயல்வேன். 

அன்புடன் 

ரமேஷ்.





மலையரசன் மகளாக அவதரித்த தால் 

சைலபுத்தி திரியென்று பெயர்கொண்ட வள்

திரிசூலம் ஒருகையில் விரிகமலம் மறுகையில் 

தரித்தே திரிலோகம் காக்கின்ற வள்

வெண்ணெருதின்   மேலேறி வீற்றிருப்ப வள்

தண்கருணை இருவிழியால் தருகின்றவள் 

செம்மஞ்சள் நிறவாடை உடுத்திருப்ப வள்

கும்பிட்ட பேருக்கு அருள் செய்பவள் 

ஒம்பதுநாள்* பண்டிகையின் முதல்நா ளிலே 

நம்பியே அவள்தாளைத் தொழுதேத் துவோம்  


*ஒன்பது நாள்

Oct 8, 2023

கொலம்பஸ் தினம்

கொலம்பஸ் தினம்

நாளை அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப்படுகிறது . 531 ஆண்டுகளுக்கு முன்,  அக்டோபர் 13-ம் தேதி அன்று , கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்ததாக சரித்திரம் கூறுகிறது. இந்த நாளை நினைவு கூறுவதே இந்த கொலம்பஸ் தினக் கொண்டாட்டம், ஒவ்வொரு வருடமும், அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது முழு அமெரிக்க நாடும் விடுதலைக் கோலம் பூண்டிருக்கும்!

இத்தாலியிலிருந்து  கொலம்பஸ் தன்  கடல் பிரயாணத்தைத் தொடங்கியபோது அவர் இந்தியாவுக்கு வருவதாகத் திட்டமிட்டே புறப்பட்டார். ஆனால் வழி தவறிய கடல் பயணத்தின் முடிவில் அவர் அமெரிக்கா வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.   "இந்தியா பிடிக்கப் போய் அமெரிக்காவாக முடிந்தது" என்று கூறலாமோ? ( வேறு ஒரு பழமொழி உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!),

இன்று நம்மில் பலருடைய வாரிசுகளும், மற்ற நெருங்கிய உறவுகளும்  அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து  வந்து வசித்து வருகிறார்கள்.  இந்த கொலம்பஸ் தினத்தன்று,  அவர்களுடைய அமெரிக்கக் கனவுகள் முழுதும் பலிக்க  வாழ்த்துக் கூறும் வகையில் ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ் 






ஐந்நூற்று முப்பத்தி ஓராண்டு முன்னாலே 

இந்தியா செல்லவே  இத்தாலி யில்கிளம்பி

சந்தேக மேயின்றி  கப்பலேறி  யக்கொலம்பஸ்

வந்தடைந்த நாடோ ,  அடடா,   அமெரிக்கா !  


அந்நாளின்  ஆண்டு நிறைவினைக் கொண்டாடும்

இந்நாள் , புலம்பெயர்ந் திங்குவாழ்  பாரதத்தின்  

சொந்தங்கள் யாவரும் பல்நலங்கள்  பெற்றிடவே

வந்துரைப்பேன் வாழ்த்துக்கள் நான்! 

( பஃறொடை வெண்பா)