Search This Blog

Oct 20, 2023

நவராத்திரி - ஆறாம் நாள்

நவராத்திரி - ஆறாம் நாள்


இந்த ஆறாம் நாளன்று தேவியை காத்யாயனி , மகிஷாசுரமர்த்தினி , துர்க்கை  என்னும் பெயர்களில் வழிபடுவோம். 

துர்கையின் அவதாரம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதி பதித்த ஒரு பாடலை இங்கே கொடுத்திருக்கிறேன்.

இதனோடு பாடலின் ஒலிவடிவத்தையும் கொடுத்திருக்கிறேன்.

படித்தும், கேட்டும் தேவியின் அருள் பெறுவீர்களாக!

அன்புடன் 

ரமேஷ் 


 




துர்க்கை அவதரித்தல்
முக்கண்ணன் முகமளித்தான்;  காலனும் குழல்தந்தான்.
அக்கினியும்  அவள்மூன்று கண்ணா யினான்  
நீள்நாசி  திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும் 
அஷ்டவசு தேவர்கை   விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும்  வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும்  அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள் !
 *-திருவுக்கு அரசன்= குபேரன்
** - மண்ணரசி = பூமாதேவி 
துர்க்கையின் படைக்கோலம்
திருமாலின் சக்கரம் ஒருகரத்திலே
திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே
இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்
தந்ததைக்  கொண்டனள்  ஒருகையிலே
வாயுதே வன்தந்த  வில்ம்புகள்
ஆயுதமாய்  ஏந்தினாள் ஒருகையிலே 
காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்
சூலியவள்  சூடினாள்  இருகரங்களில்.
மகிஷாசுர வதம்
உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்
செந்தழலோன் சீற்றமதைக்  கண்களில்  ஏற்றினள்
இமயவான் அளித்தஅரி  மாமீது ஏறினள்
சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைத்தனள்
துதி
எருதுருக் கொண்டமகி ஷாசுரன்  செருக்கறுத்து 
பொருதவன் சிரம்கொய்த துர்கா தேவியை  
கருத்திலே   நிறுத்திநவ நாட்கள்  நோன்பிருந்து 
கரம்கூப்பி  வணங்கித் தொழுவோம்.



No comments:

Post a Comment