Search This Blog

Oct 23, 2023

நவராத்திரி- ஒன்பதாம் நாள்



நவராத்திரி- ஒன்பதாம் நாள் 



 


சித்திகள் எட்டையும் சிவனுக்கு அருளியபின் 

-----அவனுருவில் பாதி யானாள் 

முத்தேவர் முத்தேவி யர்களை சிருட்டித்த 

------சித்தாத்ரி தேவித் தாயே.


விட்டுணி* வின்துணைவி செல்வப் பொருள்தலைவி 

-----இலக்குமி என்னும் தேவி 

மொட்டவிழ்த்த தாமரை முழுமலர் மேலமர்ந்து 

-----அருள்புரியும் அலைமகள் இவள் 


சித்தன் பித்தன் நீறணிக் கடவுளெனப் 

-----பலபெயர் கொண்ட ஈசற் 

குற்றதோர் மனைவியாய் பனிமலை மேலமர்ந்து

------அருள்புரியும் மலைமகள் இவள் 


நான்முகத்தி னன்கிழத்தி ஞானங்க ளின்இறைவி

----- நன்னூலின்  தலைவி வாணி 

வெண்ணாடை யையுடுத்து வீணையக் கரமேந்தி 

-----அருள்புரியும் கலைமகள் இவள்


அலைமகள் மலைமகள் கலைமகள் என்றுபல 

-----உருவங்கள்  எடுத்த இறைவி

உலகையெலாம் காத்துப்பல நலங்களால் நிறைக்கவே 

-----தலைவணங்கி வேண்டிப் பணிவோம் 

* விட்டுணு=விஷ்ணு 

நிறைவு

 

சைலபுத் திரிபிரம்ம சாரிணி சந்திர 

-----காந்தை குஷ்மாண் டனி

ஸ்கந்த மாதாகார்த்தி யாயினி காலாத்ரி 

-----கௌரிமா சித்தாத் த்திரி 

என்றநவ தேவியரின் சரிதத்தை என்கவிதை

-----மூலமே எடுத்துரைத் தேன் 

இன்னும்பல நற்கவிதை நான்புனைந்து படைத்திடவே 

-----தேவியருள் தரவேண்டு வேன். 

   

 



     


1 comment: