பறக்கும் சீக்கியன் மில்கா சிங்
1947 ம் ஆண்டு பாரதம் இரண்டாகப் பிளவுபட்டபோது நடந்த மதப் படுகொலைகளில் தன் பெற்றோர்களையும், கூடப் பிறந்தோரையும் பலிகொடுத்தவர் மில்கா சிங்.
" நீயாவது ஒடித்த தப்பிவிடு, மில்கா" என்று கதறிய தந்தையின் குரலுக்கு கட்டுப்பட்டு, இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து தப்பி ஓடி ஒரு அகதியாக டெல்லி வந்தடைந்தார். பல தோல்விகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அவரது ஒட்டப்பந்தயத் திறமையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றார்.
ஆசிய மற்றும் (பிரிட்டிஷ்) குடியரசு நாடுகளுக்கான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்த அவர் , ரோம் நகரில் நடந்த 400 மீட்டர் பந்தயத்தில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார்.
சென்ற வாரம் , ஜூன் 18ம் நாள்,கோவிட கொடுநோயின் தாக்கத்தால் உயிரிழந்தார் மில்கா சிங்க்.
இந்தியத் தடகளத் தடத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவரது வாழ்க்கை "ஒடு மில்கா ஓடு" (Bhaag, Milkaa, Bhaag) என்ற ஒரு திரைப்படமாக வடிக்கப்பட்டது. அனைவரும் பார்த்து பெருமிதம் அடைய வேண்டிய ஒரு படம்.
அவரை வணங்கி எழுதிய ஒரு சிறு பாடல், இதோ!
அன்புடன்
ரமேஷ்
பறக்கும் சீக்கியன் மில்கா சிங்
பாடுபட்டு தனைவளர்த்த பெற்றோரைப் பறிகொடுத்து
கூடப் பிறந்தபல சோதரரைப் பலிகொடுத்து
"ஓடு மில்கா ஓடு " வென்ற தந்தைகுரல் செவிமெடுத்து
நாடுவிட்டு ஓடிவந்து நிலம்விட்டுப் புலம்பெயர்ந்து
தடைபலவைத் தகர்த்தெறிந்து பலதடகளப் போட்டிகளில்
ஓடுவதே உயிர்மூச்சாய்க் கொண்டவனே! கொண்டையனே!
பஞ்சாப்பின் சிங்கமகன், பறக்கின்ற சீக்கியனே!
நெஞ்சை நிமிர்த்தி நம்நாட்டோர் நடக்குமுகம்
பஞ்சாய்ப் பறந்தோடி பதக்கம்பல பெற்றவனே!
விஞ்சஉன்னை யாரும்இல்லை தடகளத்தின் தலைமகன் நீ!
மஞ்சம்ஒன்று தேடிஅதில் நீண்டநேரம் நிம்மதியாய்
துஞ்ச இன்று சென்றாயோ , ஓடிக்களைத்த பின்னே ?
ஓடிக் களைத்த பின்னே உறங்கச் சென்றாலும்
நீடித்து நிலைத்திருப்பாய் எம்மனதில் நீயென்றும்!