Search This Blog

May 4, 2020

மீனாட்சி கல்யாணம்

மீனாட்சி கல்யாணம் 

இன்று மீனாட்சி கல்யாணத் திருநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொண்டாடப்படும் நாள்.
இந்த நாளில் இது குறித்து , மின்னாட்சியின் அன்னையின் திருமணம் பற்றி முன்னர் எழுதி பதிவு செய்த திருவிளையாடல் புராணப் பாடல் பதிவுகளின் சுருக்கங்களை பதிவு செய்கிறேன்,
அனைவருக்கும் அன்னை அருள் உரித்தாகுக!
அன்புடன் 
ரமேஷ் 

பி.கு :
இது குறித்த முழுப் பதிவுகளையும் கீழ்கண்ட இணைப்புகளில் பார்க்கலாம் 

https://kanithottam.blogspot.com/2018/02/4.html
https://kanithottam.blogspot.com/2018/02/5.html
https://kanithottam.blogspot.com/2018/02/6.html
https://kanithottam.blogspot.com/2018/03/7.html





( இந்த ஓவியம் shaivam.org இணையதளத்திலிருந்து நன்றியோடு எடுக்கப்பட்டுள்ளது)


மீனாட்சி கல்யாணப் படலம்

மலயத் துவசன்மகள் மீனாட்சி அவன்பின்னே அரியணையில் ஏறி யமர்ந்து 
சிலகாலம் செல்லுமுன்  புவியாளும் பிறவரசை சமர்செய்து வென்ற பின்னர் 
கைலயத் தையும்வெல்ல விரைகையில்  ஈசனின் கண்பட்டு மார்பின் மூன்றாம் 
முலைமறைய மாகேசன் மீனாட்சி கரம்பிடுத்து மதுரையில் மணம்  புரிந் தான்   


பாடற்பொருள் 

மன்னன் மலையத்வஜனுக்குப் பின்பு , தடாதகை அரியணையில் அமர்ந்து   அனைத்து  மன்னர்களையும் போரில் வென்றாள் . ,பின்பு கைலையத்தையும் வெல்ல எண்ணிப்  படையுடன் சென்றாள் . அப்போது  , சிவபெருமான் வெளியில் வந்து புன்னகையுடன் அவளை நோக்கிய நேரத்தில், அவளது மூன்றாம் முலை மறைந்தது. அவரே தன மணாளன் என்று அறிந்து நாணத்தால் தலை குனிந்த தடாதகை என்னும் மீனாட்சியை, சிவபெருமான் மதுரையில் மணந்த நிகழ்வு,  மீனாட்சி திருமணப் படலத்தில்  கூறப்பட்டுள்ளது.

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 

முனிவரும் தேவர்களும்  அன்னை  மணக்கோலம்   கண்டு  களித்தபின்னர்   
இனிதாய் விருந்துண்ணும்  முன்னமே  கண்குளிர நாதனின்  நடம்காணவே    
விரும்பி வேண்டிடவே  வெள்ளியம் பலமீதில்     நந்திமத் தளமடிக்க 
திருமால் இடக்கையிட தேவரும்  பூச்சொரிய  பரமனும்  நடமாடினான்.

இடக்கை = இடது கையால் அடிக்கப்படும் ஒரு சிறிய தோல் கருவி 

பாடற்பொருள் :

மீனாட்சி சிவபெருமானை மணந்த திருக்கோலத்தை கண்டு மகிழ்ந்த முனிவர்களும்  , தேவர்களும் , மணவிருந்துண்ணச் செல்லுமுன்பாக , சிவபெருமானின் நடனத்தைக் காண விழைந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் , நந்தி தேவர் மத்தளம் இசைக்க , விஷ்ணு இடுகையை ஒலிக்க  வெள்ளியம்பலத்தில் திருநடனம் ஆடினார் . அச்சமயம் தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

குண்டோதரானுக்கு  அன்னமிட்ட படலம்


விருந்தினர்   எல்லோரும்    விருந்துண்ட    பின்னரும்   பெருமளவு  மிகுந்த   படியால்
வருந்திடும்   மீனாட்சி   யினைநோக்கி   சிரித்துசிவன்   பெருத்ததன்   கணத்தை   அழைத்து
கருத்தகுண்   டோதரனின்   வயிற்றிலே   வடவைத்தீ   ஏற்றிப்பெறும் பசியைத்   தூண்ட 
இருக்கும்   உணவையெலாம்   கொஞ்சமும்   மிஞ்சாமலே    மொத்தமும்  தின்று   தீர்த்தான்
                                                               
                                                                                                    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடற்பொருள் :

வந்த விருந்தினர் அனைவரும் வயிறார உண்டு சென்றபின்னும், சமைக்கப்பட்ட உணவு வகைகள், பெருமளவில் மிகுந்துவிட்ட படியால்,   தடாதகைப் பிராட்டியார்  வருத்தமுற்றாள். இது கண்ட சிவபெருமான் தன கணங்களில் ஒருவனும், பெருத்த வயிறோடும் ,  கரிய நிறத்தோடும்  காணப்படுவனுமான குண்டோதரன் என்பானை வரவழைத்து , அவனது வயிற்றிலே பசியைப் பெருக்கும் வடவைத்தீயை ஏற்றி, அவனுக்கு உணவு படைக்குமாறு பணித்தார். பெரும் பசியால் பிணிக்கப்பட்ட குண்டோதரனும் அங்கு இருக்கும் எல்லா வகை உணவுகளையும் தின்று தீர்த்தான்.

அன்னக்குழியும் வையையை அழைத்த படலம்


வருத்தவை  வெந்தவை அனைத்தையும் விழுங்கியும் பசியுமே தீராததால்    
பெருத்தவோர்  குழியிலே தருவித்த தயிரன்னம் தனையுண்டு தீர்த்தபிறகு   
செரிக்கவே குடிக்கநீர் குறைந்ததால் துடிக்குமவன் தாகம்  அடங்கவேண்டி 
விரித்த சடையிலே  தரித்த கங்கையை வைகையாய் கொண்டுவந்தான்

                                                                                                   (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
                                                                                                                              
பாடற்பொருள் 

சமைக்கப்பட்டிருந்த அத்தனை உணவு வகைகளையும் , மீதி இல்லாமல்  அள்ளி உண்ட பின்னும் , குண்டோதரனின் பசி தீராததால் , சிவபெருமான் ஒரு பெரிய குழி ஒன்றை உண்டாக்கி அதைத்  தயிரன்னத்தால் நிரப்பினார். அதை உண்டு பசியடங்கிய குண்டோதரன் , உணவை ஜீரணம் செய்ய ,நீர்நிலைகளில் இருந்த அத்தனை நீரையும் பருகியபின்னும் ,  தாகம்  அடங்காது தவித்தான். அப்போது சிவபெருமான் ஆணையின் பேரில்  அவர்  தலையில் இருக்கும் கங்கை நதி வைகை நதியாக உருவெடுத்து அங்கு வந்தது. அந்த நீரைப் பருகி குண்டோதரன் தாகம் தணிந்தான்.











Apr 28, 2020

ஜெய ஜெய சங்கர ! - ஒரு மறுபதிவு.


ஜெய ஜெய சங்கர ! - ஒரு மறுபதிவு.

இன்று சங்கர ஜெயந்தி - 
ஆதி சங்கரர் அவதரித்த நாள்!
சில வருடங்களுக்கு முன் எழுதிப் பதித்த  இந்தப்  பாடலை  மீண்டும் பதிப்பிக்கிறேன்!

அன்புடன் 
ரமேஷ் 




வரைந்தவர் : ரமேஷ் 



நிறைநீர்   நெற்றியன்    மறைஉரை   பெற்றியன்
பிறைமுடி   தரித்தவனின்   பெயர்பெற்றவன்.
சிறுபரு   வத்திலே உறவுகள் அறுத்துப்பின்
துறவறம்   பூண்டிட்ட   முனிபுங்கவன் .


ஆத்மாக்கள்  பரமனும்   ஜீவனும்   ஒன்றென்ற
அத்வைத   தத்வத்தை   போதித்தவன் .
பௌத்தரையும்   ஜைனரையும்  வாதித்து  வென்றதால்
இந்துமத  மேன்மையை  சாதித்தவன் .


வேதங்கள்   அறிந்ததன்  சாரங்களைப்  பிழிந்து
கீதகோ  விந்தமாய்  கற்பித்தவன் .
காதங்க  ளைக்கடந்து  நாடெங்கி  லும்நடந்து
சங்கர   மடம்நான்கை   நிறுவிட்டவன் .

புலையன்   உருவில்வந்த   மலையன்  கண்திறக்க
மாநீஷ   பஞ்சகப்  பாப்புனைந்தவன் .
கைலயங்   கிரிசென்று   ஈசனைப்   பூசித்து
சௌந்தர்ய   லகிரியைப்    பெற்றிட்டவன் .


காஞ்சிபுரி   வந்திருந்து   காமாட்சி   யைத்தொழுது
கோவிலில்   ஸ்ரீசக்ரம்   ஸ்தாபித்தவன் .
சர்வங்க்ய   பீடத்தில்   குருவாக   வந்தமர்ந்து
அடியார்கள்   மனமெங்கும்   வ்யாபித்தவன்.

பாமரர்க்கும்   புரியும்வண்ணம்  பக்தித்   தோத்திரங்கள்
பாவடிவில்   பண்ணுடன்   புனைந்திட்டவன் .
நேமமிகு   பண்டிதரும்   படித்தறிந்து   பண்படவே
பாஷ்யங்கள்  பலப்பலவும்   தந்திட்டவன் .

தாமரைக்  கண்ணினள்  காமாட்சி அருள்பெற்று
காமகோடி   மடம்   உருவாக்கினான் .
நாமெல்லாம்  சேமமுற   நல்வழிகள்   காட்டியபின் 
மோட்சபுரி   காஞ்சியிலே  சித்தியடைந்தான்.

Apr 27, 2020

வாழ்க்கையின் நிதர்சனங்கள் !

வாழ்க்கையின் நிதர்சனங்கள் ! 

இந்தக்  கவிதை வடிவக் கதையைப் படியுங்கள்!
பின் சிந்தியுங்கள்.!

என்னதான் நம் சிந்தனைகள் உயரப் பறந்தாலும் , செயல்கள் அவற்றை  முழுதும் சார்ந்து இருப்பதில்லை!


இதுதான்  நிதர்சனம்!


அன்புடன் 


ரமேஷ் 



விடியற் காலை எந்தன்  கனவில் 
----------கடவுள் வந்தாராம்.
அடியவன் எனக்கு இருகர முயர்த்தி 
----------ஆசிகள் அளித்தாராம் 

"அன்பா உந்தன் பக்தியி னால்நான் 
----------மிகவும் மகிழ்கின் றேன் 
என்ன வேண்டுமென நீயெனைக்  கேட்டால் 
----------வரமொன் றளித்திடுவேன் "

என்றவர் சொன்னதும் எதைக்கேட் பதுவென 
----------எனக்குத் தோன்றவில்லை .
எனினும் சிற்சில நிமிட நேரங்கள் 
-----------சிந்தித் தேஉரைத்தேன் .

"தங்கவே வீடும்  வங்கிப் பணமும், 
----------தங்கம் வெள்ளியுடன்  
பங்கம் இல்லா வாழ்க்கை நடத்த 
----------அனைத்தும் அளித்துவிட்டாய் .

எல்லாப் பொருளும் எந்தன் ஒருவன் 
----------தேவைக்கும் மேலாக 
உள்ளது; அதனால் பணம் பொருள் எதையும் 
----------உன்னிடம் நான்வேண்டேன் .

அத்தனை சுகமும் மொத்தமா யிருந்தும் 
----------ஒருகுறை உண்டெனக்கு.
சுத்தமாய் மனதில் அமைதியே இல்லை, 
----------அதைநீ அளித்திடுவாய்! "

எனநான் உரைத்ததை இறைவனும் 
----------கேட்டு இவ்வாறே உரைத்தான்  
' உனக்கு வேண்டும்  உள்ள அமைதியை 
----------நிச்சயம் அளித்திடுவேன்.

ஆனால் அதன்முன் நிபந்தனை ஒன்றை 
----------நானும் விதித்திடுவேன் .
தேவைக் கதிகமாய் நானுனக் களித்த 
----------செல்வம் மொத்தத் தில் 

வேண்டிய அளவை மட்டும் விட்டு 
----------மிகுதியை எடுத்திடுவேன்  
வேண்டும் அமைதியை அதற்குப் பதிலாய் 
----------உனக்கே அளித்திடுவேன்"

இதனைக் கேட்டு என்ன சொல்வதென 
----------பதைத்தே போய்விட்டேன் .
பதிலைக் கேட்க  இறைவனும் சிறிது 
----------நேரம் பொறுத்திருந் தான்.

மனதில் அமைதி வேண்டு மென்றாலும் 
----------ஆசை விடவில்லை! 
எனது எனது எனநான் சேர்த்ததை   
----------இழந்திட மனதில்லை!

இரண்டும் வேண்டும் என்றே இறைவனைக் 
----------கேட்கத் தோன்றியது.
இறைவனும் சிரித்து என்மன மறிந்து 
----------இயலா ததுவென்றான்.

சொல்வது என்ன என்றே இதயம் 
----------குழம்பி  நிற்கையிலே 
நல்ல வேளையாய் கனவும் கலைந்து 
----------நானும் விழித்திட்டேன் .

இந்தக் கனவு இன்னும் ஒருமுறை 
----------எனக்கு வர வேண்டாம்!
வந்தது உனக்கு என்றால் அதற்கு 
----------உன்பதில் எதுவாகும் ?





.






Apr 21, 2020

கொரானா கவிதை - 13- தேவை -- தொடர்ந்து கவனம்

கொரானா கவிதை - 13

தொற்று நோய் பரவும் வேகத்தைக் கணிக்க  R0 என்ற ஒரு விகிதத்தை பயன்படுத்துகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் , இது ஒன்றுக்கு குறைவாக இருந்தால் நோய் பரவுதல் தடுக்கப்பட்டு விட்டது  பொருள்.
ஒன்றுக்கு மேல் இருந்தால், நோய் பரவிக்கொண்டிருக்கிறது என்று பொருள். எவ்வளவுக்கு எவ்வளவு ஒன்றுக்கு மேல் இருக்கிறதோ, அவ்வளவு நோய்  பரவும் வேகம் அதிகம் என்று கொள்ளலாம்.
ஆரம்பத்தில் இந்தியாவில் 1.75 ஆக இருந்த இந்த விகிதம், ஏப்ரல் 16 ல் 1.55 ஆகக்  குறைந்து இருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
இது மற்ற பல நாடுகளை விட குறைவாக உள்ள விகிதம்!
தொடரும் ஊரடைப்பால் , இது இன்னும் குறையலாம்!
ஆனால் இதை எண்ணி நாம் கவனக் குறைவாக  ஆகிவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் முகமாக ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 

தேவை -- தொடர்ந்து கவனம்

( "தான தான தான தான தான தான தானனா " என்ற மெட்டில் படித்தல் சிறப்பு )

ஆ(ர்)ரு  நாட்டு*  என்ற  விகிதம்  இன்று  இந்தி  யாவிலே
வேறு   நாட்டை  விடவும்  மிகவும் குறைந்த  தாக  இருப்பினும்
ஊரு  அடங்கு  உத்  தரவை மாற்றி  விலக்கும்  பொழுதிலே
தாறு மாறாய் எகிரிப் போக வாய்ப்பு நிறைய உள்ளதால்

தூரம் காக்கும் விதி  முறையை தூரத்  தூக்கிப்  போடாதே!
காரு பஸ்ஸு  ரயிலி  லேறி  ஊர் முழுதும்  சுத்தாதே!
கறியும்  காயும்  வாங்க  வேண்டி  கோயம்  பேடு  போகாதே!
எரிந்து கொண்டு  இருக்கும்  நெருப்பில் எண்ணையை  நீ  ஊற்றாதே!

முறைமை**  ஏற்று    நிறைய   நாட்கள் இன்னும்  இருத்தல்  தேவையே!
பொறுமை யோடு  இருத்தல்  நீங்கள்  செய்யும்  பெரிய  சேவையே!

* ஆர்(ரு) நாட்(டு) = R nought , R0 = தொற்று னாய் பரவும் வேகத்தைக் குறிக்கும் விகிதம்
** முறைமை = அரச நீதி, ஒழுக்கம் 

Apr 20, 2020

பிரதோஷப் பாடல் - 32

பிரதோஷப்  பாடல் - 32

திருவலிதாயம் 








இறைவன் - ஸ்ரீ வலிதாய நாதர், ஸ்ரீ வாலீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ தாயம்மை, ஸ்ரீ ஜகதாம்பிகை
தீர்த்தம் - பரத்வாஜ தீர்த்தம்
தல விருட்சம் - பாதிரி, சரக்கொன்றை

இன்றைய  பிரதோஷப் பாடல் சென்னைக்கு அருகே இருக்கும்  பாடியில் அமைந்திருக்கும் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பற்றியது.
என்னுடைய பிரதோஷப்  பாடல்களை தவறாமல் படித்து ஊக்குவித்து வரும் கல்லூரி  நண்பர் ராமகிருஷ்ணனின் தூண்டுதலால் இந்தத் தலத்தைப் பற்றிய தகவல்களை படித்தறிந்து எழுதிய பாடல் இது.

வலியன் என்று கூறப்படும் கரிக்குருவியாக உருவெடுத்து , இந்தத்  தளத்தில் இறைவனை வழிபட்டு பரத்துவாச முனிவர் சாபவிமோசனம் அடைந்ததால் இன்திருவலிதாயம் என்ற பெயரைப் பெற்றது.

இது பற்றிய முழு தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்.


இதுபோல திருவிளையாடல் புராணத்தில் கரிக்குருவி ஒன்றுக்கு இறைவன் அருளிய வேறு ஓர் கதையும் உண்டு! 

அது பற்றிய பாடல் பின்னொரு நாளில்.

அன்புடன் 

ரமேஷ் 


திருவலிதாயத் தலப் பாடல்

பிருஹஸ்பதி பெற்றமகன் பரத்து வாசன்
----------பிரம்மனிடம் தான்பெற்ற சாபம் ஏற்று
கருநிறச் சிறுபறவை வலியன் என்னும்
----------கரிக்குருவி உருவெடுத் திவ்வுலகை  அடைந்து
வருடம்பல  உருண்டோடிச் சென்ற பின்னே
----------இத்தலத் தேயுறையும் இறையருளி  னால்
உருமாறி உய்ததால் இத்தல முமே
----------திருவலி தாயமெனப் பெயர்பெற்ற தாம் 

Apr 19, 2020

வியாபார தந்திரம் ?--கொரானா கவிதை - 12

வியாபார தந்திரம் ?

கொரானா கவிதை - 12

சிறுவயத்தில் நான் பார்த்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
அந்தப் படம் "சபாஷ் மீனா".
இந்த வயதொத்த அனைவரும் அதை பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அந்தப் படத்தில் வேலையில்லாத கதாநாயகன் , பைழைக்க ஒரு நூதனமான வழியொன்றைக் 
கடைப்பிடிக்கிறான்.
அவனுடைய கூட்டாளி முதலில் சென்று கல்லெறிந்து வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை 
உடைத்துவிட்டு ஓடி விடுவான்.
சற்று நேரம் கழித்து கதாநாயகன் வந்து அதை பழுது பார்த்து பணம் சம்பாதிப்பான்.
கீழ்க்கண்ட செய்தியைப் படித்தவுடன், எனக்கு இந்தப் படம்தான் நினைவுக்கு வந்தது!

செய்தி :
கொரானா னாய் பரவுதலைத் தடுக்க முகமூடி, உடற்கவசங்கள் முதலிய பாதுகாப்புப் 
பொருள்களும், நோய்  உண்டா எனக் கண்டுபிடிக்கும் சோதனைக்கு கருவிகளும் 
மிகப்பெரிய அளவில் சீனாவில் இருந்து வாங்கப்படுகின்றன.
இதுகுறித்து ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் 

பாடல் :

இலவசமாய் நோயொன்றை ஏற்றுமதி செய்தவனே
பலகோடி முகமூடி உடற்கவசம் இவற்றுடனே 
இலட்சக் கணக்கினிலே  சோதனைக்  கருவிகளை
விலைக்கு விற்கிறான் பார்.

  

Apr 16, 2020

புன்னகை நோய் ! -கொரானா கவிதை 11

புன்னகை என்னும்  ஒரு தொற்று நோய் - 
புன்னகையும் ஒரு தொற்று நோய்தான்!
எதிரே வருபவர் , தெரிந்தவராயினும் சரி  , தெரியாதவராயினும் சரி , பார்த்து ஒரு புன்னகையை வீசுங்கள்! நிச்சயம் அது அவர் முகத்திலும் தொற்றிக் கொள்ளும். 

அன்புடன் 

ரமேஷ் 


கிட்டே  வந்து தொட்டால் மட்டும் 
தொற்றும் நோயை முற்றும் விலக்கி 
எட்ட இருந்தே தொற்றிக்  கொள்ளும் 
புன்னகை நோயைப் பரப்பி  வளர்ப்போம்.