ஈசாவாஸ்ய உபநிஷத் - அறிமுகம்
இதை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னால் , இது எப்படி எனக்கு அறிமுகமானது என்பதை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.
நான் பணிசெய்துகொண்டிருக்கும்போது, ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள நேர்ந்தது. அதன் பெயர் ஈசாவாஸ்யா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட். பல புதுமையான தொழில் நுட்பங்களின் மூலம் மிக அதிக அளவில் ஆற்றல் குறைக்கும் (energy saving) பல கருவிகளை அவர்கள் செய்வதாக அறிந்து, அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அப்போது, இந்த பெயரை வைத்த காரணத்தை கேட்டு அறிந்தபோதுதான் , ஈசாவாஸ்ய உபநிஷத்தைப் பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் பயன்படுத்தும் பல தொழில் நுட்பங்களின் அடிப்படை நம் வேதங்களிலும் , உபநிஷத்துக்களிலும் இருப்பதாகவும், அவர்கள் கூறியது வியப்பை அளித்தது. அந்த நிறுவனத்தின் மூத்த பொறியாளர்கள் அனைவரும் , நமது வேதங்களிலும் , உபநிஷத்துக்களிலும் புலமை பெற்றவர்களாக இருப்பதை அறிந்தேன். ஒரு குருகுலம் போன்ற ஒரு அமைப்புடன் ஒரே வீட்டில் தங்கி அவர்கள் கடமை ஆற்றுவது எனக்கு வியப்பை ஊட்டியது.
அந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளுக்கு, வேதங்களும், உபநிஷத்துக்களும் நேரடியாக எந்த அளவில் பயன்பட்டன என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்களும் அதை எனக்கு உணர்த்தவில்லை. அந்தக் கண்டுபிடுப்புகளையும், கருவிகளையும் நான் பயன் படுத்தினேனா என்பது வேறு விஷயம். ஆனால் , இது இந்த உபநிஷத்தை பற்றிய எனது ஆவலைத் தூண்டியது. அதன் விளைவாக , இந்த உபநிஷத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.
ஈசாவாஸ்ய உபநிஷத் என்பது 18 முக்கியமான உபநிஷத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவைகளுள்ளே , சிறிய உபநிஷத்து இதுதான். 18 ஸ்லோகங்கள் அடங்கியது.
உபநிஷத்துகள் வேதங்களின் சாராம்சம். உட்பொருளை புரிந்து கொள்ளுவது மிகக் கடினம்.ஆனாலும் இதை முதன்முதலாகப் படிப்பவர்களும் புரிந்து கொள்ளுமாறு ஒரு மொழிபெயர்ப்பு எனக்கு கிடைத்தது. இது , சுவாமி ஆசுதோஷானந்தர் விளக்கத்துடன் , ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பித்த ஒரு சிறு நூல் *. இதனுடன் கூட , இந்த உபநிஷத்தைப் பற்றிய வேறு சில பதிப்புகளையும் படித்தேன். இவைகளை "தமிழ்க் கவிதை வடிவில் வடித்தால் என்ன ? " என்று ஒரு எண்ணம் தோன்றியது. அதன் விளைவே இது.
மேற்கூறிய நூலுடன், திரு.குருபரானந்தரின் விளக்கவுரை ,( இணைய தளத்தில் உள்ளது ) இவற்றை மூலமாக வைத்து புனைந்து இருக்கிறேன்.
ஆன்மீகத்தில் முதல் படியைக்கூடக் கடக்காத ஒருவனான நான் இந்த முயற்ச்சியில் ஈடுபடுவது சரியா என்ற ஒரு கேள்வி பல மாதங்களாக என்னைக் குடைந்து கொண்டு இருந்தது. என்றாலும், ஒரு அசட்டுத் துணிவுடன் இதைப் பதிப்பிக்கப் போகிறேன்.
இதை உபநிஷத்தின் சாந்தி ஸ்லோகத்துடன் ஆரம்பிக்கிறேன். ( இது மட்டும் ஏற்கனவே "முழுமையின் வடிவம் " என்ற தலைப்பில் பதிப்பித்து இருக்கிறேன். )
மற்றவை வரும் பல பதிவுகளில்.
குறை இருப்பின் பொறுத்திடுக!
தொடர்ந்து படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
ரமேஷ்
சாந்தி ஸ்லோகம்
சாந்தி ஸ்லோகம்
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே I
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே II
ஓம் சாந்தி சாந்தி சாந்தி: II
பொருள்
இறைவன் முழுமையானவர்.
இந்த உலகம் முழுமையானது.
முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியது. முழுமையிலுருந்து முழுமையை எடுத்த பின்னும் முழுமையே எஞ்சியுள்ளது.
பாடல்
முழுமையின் வடிவம் இறையவனே !
இறைவன் படைத்தது இவ்வுலகே!
முழுமையி லிருந்து முளைத்ததனால்- இவ்
வுலகும் முழுமைத் தன்மையதே !
முழுமையி லிருந்து முழுமைதனை
முழுதாய் எடுத்து முடித்தாலும்
பழுதில் லாமல் மிஞ்சுவதும்
முழுமை என்றே உணர்வாயே !
* - reference : ஈசாவாஸ்ய உபநிஷதம் - ஒளிக்கு அப்பால் - published by Sri Ramakrishna madam, Mylapore, Chennai -4