Search This Blog

Nov 15, 2016

தெரிவதும் தெரியாததும்

தெரிவதும் தெரியாததும் 

எனக்கு சமீபத்தில் வந்த ஒரு "வாட்ஸ்அப் " செய்தி   இது.
 

"முந்திக்கொண்ட  முதல் செங்கல் , 
கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும்
காத்திருந்த கடைசி செங்கல்தான் கலசம் தொடும் !
சாதிக்க பொறுமை மிக மிக அவசியம் ! "

என்னுடைய கருத்து இதிலிருந்து சிறிது மாறுபடுகிறது.

 பல சமயங்களில் , வெற்றிக்குப் பின்னணியில் நிற்கும் பல நிகழ்வுகளும், மனிதர்களும் வெளிஉலகுக்குத் தெரிவதில்லை. 
இது பற்றி ஒரு சிறு பாடல்.

அன்புடன்

ரமேஷ்


 

தெரிவதும் தெரியாததும் 


சுடர்விட்டு எரியும்திரி நுனியின் பின்னே 
அடியில்நெய்  ஏந்திநிற்கும் அகலும் உண்டு.

படர்ந்துபல கிளைகள்கொண்ட மரத்தின் அடியே
திடமாக அதைநிறுத்தும் வேர்கள் உண்டு.

இடரின்றி வாழ்கின்ற குடும்பத் தடியில்
கடன்பட்டும் காக்கின்ற தந்தை உண்டு.

ஆளாகி அரசாளும் பிள்ளை பின்னே
மாளாது உழைத்தவோர் தாயும் உண்டு.

கொடியேற்றி மின்னுகின்ற கலசம் நிற்றல்
அடித்தளத்தில் புதைந்திருக்கும் கல்லால் அன்றோ?

வானெட்டும் பெரும்புக ழடைந்த பின்னும் -
ஏணியாய் இருந்தவரை மறத்தல் நன்றோ?

வெளியிலே அழகாக வெளிச்சம் போட்டு
பளிங்குபோல் ஒளிர்கின்ற   பொருள்கள் அடியில்

ஒளிந்தொண்டிக் கிடக்கின்ற உண்மை உன்டு. 
தெளிவோடு அவ்வுண்மை கண்டு உணர்வோம்.

2 comments: