Search This Blog

Nov 11, 2016

சிவனை நினை

சிவனை நினை 

நமக்கு துன்பம் வரும் சமயங்களில் மட்டுமே இறைவனை நினைப்போம்.  மகிழ்ச்சியுடன் சுகங்களை அனுபவிக்கும் போது இவை அனைத்தையும் நமக்கு அளித்த ஈசனை நன்றியுடன் நினைப்பவர் சிலரே! 
இது மனித இயல்பு. 
எப்போதும் இறைவனை நினைத்து, நல்லவை செய்து, அல்லவை  அறுத்து,  நல்வினைப் பயன் சேர்ப்போம்.
வரும் சனிக்கிழமை பிரதோஷம். சிவனைத் துதித்து எழுதப்பட்ட இப்பாடலை இந்த சமயத்தில் பதிப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அன்புடன் 

ரமேஷ்  

பி.கு : இதற்கு முன், சென்ற ஆண்டு நான் எழுதிய "சிவபதிகத்தை கீழ்வரும் இணைப்பில் காணலாம்.
http://kanithottam.blogspot.com/2016/02/blog-post_6.html

 
இளமை செல்வம் மனைவி மக்கள் எண்ணிலாத இன்பங்கள்
வளமை மிக்க வாழ்க்கை பெற்று வாழுகின்ற மனிதரே!
சுவைத்து இவற்றை சுகமடைந்து தினமும் வாழும் போதிலே
கவை^ யும் கூட இவைகள் தந்த ஈசனை நினைக்கிலீர்!

தீயை யொத்த சுடுசுரத்தில் வாடு கின்ற போதிலும்
நோயில் உடலும் நனி*நலிந்து நைந்து கிடக்கும் போதிலும்
பாயில்  உன்னைப்  படுக்கவைத்துப்  பதறு  கின்ற போதிலும்
வாயில் இறைவன் நாமத்தையே முணு முணுத்தல் போதுமோ?

அவனி எங்கும் நிறைந்து காணும் அத்தனைப் பொருள்களும்
அவன் இயக்கி ஆட்டி வைக்கும் பொருளேயென் றறிந்திடு
சிவசிவயென  சிந்தை நிறுத்தி காலை மாலைப் பொழுதிலே
அவனின்  நாமம் தினம் தினமும் தவறிடாமல் சொல்லிடு.

எமதுஎமது என்று வேண்டி பணம் பொருள்கள் அனைத்தையும்
குமித்து வைத்துக் கனக்குப் போட்டு களிப்படையும் மாந்தரே!
எமனும் எருமை வாகனத்தில் அமர்ந்து உம்மை அழைக்கிற
சமயமிவை  கூட வாரா! வருவது வினைப்  பயன்களே!

சுவரில்அடித்த பந்துஒன்று திரும்பிநம்மைச் சேரும்போல்
எவரும் செய்யும் செய்வினையின் பயனும் திரும்பி வந்திடும்.
தவறு எதுவும் செய்திடாமல்  நன்று என்றும் செய்விரேல்
பவ*பயங்கள் முற்றும் நீங்கிப் பரமன் அடியை  அடைவீரே!.

                                                   
கவை^ = concern,
நனி*    = greatly , மிகுந்து
பவ*      = birth, பிறப்பு  

No comments:

Post a Comment